Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008


திரைப்பட விமர்சனம் : சத்யம்
- ஸ்ரீரசா

துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி, அவருக்கு உந்துதல் தந்த இன்னொரு போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி வில்லன்கள். மோதல், கொலை, குண்டு வெடிப்பு, கண்டுபிடிப்பு, ஜெயில், அதிகாரம், ஆணவம், பழிவாங்குதல், பழி தீர்த்தல்..... அப்புறம் கடமையுணர்வு, இதற்கிடையில் காதல், காதலியுடன் கனவு மற்றும் நனவுப் பாடல், அம்மா, பாசம், உருக்கம், வில்லன்களால் அம்மா கொலை செய்யப்படுதல்... இன்னும் சலிக்காமல் தமிழ்ச் சினிமாவில் - சரியாய்ச் சொன்னால் இந்திய வெகுஜன சினிமாவில் இத்தகைய கதைகளை எடுத்துத் தள்ளுகிறார்கள்.

தமிழ், இந்திய வெகுஜன சினிமாவின் அதி மசாலாக் கலப்பில், சினிமா, கலை மற்றும் ரசிகர்களின் ரசனையை மலினமாகக் கருதி ஏமாற்றும் விதத்தில் அமைந்த வினோத உருவக் கட்டமைப்பில் பொருத்துவதற்கு இத்தகைய கள்ளன் போலீஸ் கதைகள் மீண்டும் மீண்டும் உதவுகின்றன.

ஜி.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், ஏ.ராஜசேகர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விஷால் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும், கோட்டா சீனிவாசராவ் மற்றும் உபேந்திரா எதிர்நிலை நாயகர்களாகவும் நடித்து வெளிவந்துள்ள இந்தப் படமும் அதே கள்ளன்- போலீஸ் கதைதான். கதையின் நாயகன் சத்யத்திற்குக் கனவு நாயகனாக இருந்த போலீஸ் அதிகாரி உபேந்திராவே அரசியல்வாதிகளின் சூழ்ச்சி வலைக்குத் தாக்குப் பிடிக்காமல் அவர் தனி வழியில் பழி தீர்க்கக் கிளம்ப, நடைபெறும் தொடர் கொலைகளை ஆயும் சத்யம், ஆய்வு முடிவில் உபேந்திராவைக் கண்டு பிடித்து அதிர, பின்னர் அவர் மீதே பழி விழ, வழக்கமான தமிழ்ச் சினிமாவின் நாயகத்தன சாகசங்களோடு படம் முடிகிறது. நமது காதுகளில் குண்டு மழை, கண்களில் கொலைகளின் துரத்தல், என்கவுண்டர் பயம், போலீஸ் துறையும், அரசியல்வாதிகளும் மட்டுமே நிறைந்த புறச்சூழல். பாவம் படத்தில் வரும் நாயகி உள்ளிட்ட பெண்கள் போல ரசிகர்களும் திரையின் விளிம்பில் நின்று கள்ளன் போலீஸ் விளையாட்டைத் துயரத்தோடு ரசிக்க வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றையும் விட இத்தகைய படங்கள் ரசிக மனங்களில் கட்டமைக்கும் உளவியல் ரொம்பவும் முக்கியமானது. அரசு அதிகாரம் குறித்த பயத்தையும், அதற்குள் கட்டுண்டு பயந்து அடங்கிக்கிடக்குமாறு பார்வையாளனின் உளவியலுக்கு மறைமுகமாக மற்றும் நேரடியான போதனைகள் செய்வதையும் இத்தகைய படங்கள் வலுவாக முன்னிறுத்துகின்றன. மேலும் அரசியல்வாதிகள் முதலான அதிகாரவர்க்கத் தினர் செய்யும் ஜனவிரோதச் செயல்களை, சர்வ சக்தி நிறைந்த கடவுள் போல ஒரு வீரன் வந்து தடுத்து நிறுத்திவிடுவான். அதற்கெதிராய் மக்கள் இணைந்து ஒன்றும் செய்யத் தேவையில்லை என்று தெளிவாகப் போதிக்கின்றன. நாளைக்கு இத்தகைய கதைநாயகர்களின் சந்தை மதிப்பு ஏறி, ரசிகர் எண்ணிக்கை கூடும் போது, அளவு மாற்றம் குண மாற்றம் என்பதற்கு ஏற்ப அவர் தமிழ்ச் சமூகத்தின் அரசியலிலும் தம்மை நாயகனாக உயர்த்திக் கொள்ளும் சாகசங்களில் ஈடுபடுவார். அத்தகைய சாகச நாயகர்களைத்தான் தமிழ்ச் சமூகம் ஏற்கெனவே பலரை உற்பத்தி செய்து வழிபட்டுக் கொண்டிருக்கிறதே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com