Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
அஞ்சலி : பி.ஆர்.சி.

கட்சிக் கல்வியைக் கலையாகப் பயிற்றுவித்த தலைவர்!
ப.முருகன்

ஐந்தாறு வயதில் மலையாள தேசத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமை கண்டு மனம் நொந்தவர் 1952-53ல் தந்தை பெரியாரைச் சந்தித்து மகிழ்ந்தவர்.

பதினாறு வயதினிலே ‘பாட்டாளி வர்க்கப்பாதை’ எனும் கம்யூனிஸ்ட் கட்சியின் ரகசிய ஏட்டை படித்து மார்க்சிய ஆதரவாளர் ஆனவர். பின்னர் மாணவர் இயக்கத் தலைவராக, வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். நாடு விடுதலையானவுடன் அதே கல்லூரி விழாவுக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.

இத்தகைய சிறப்புகள் அமையப்பெற்ற தலைவராக விளங்கியவர் யார்?

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய தோழர் பி.ராமச்சந்திரன்.

1925ல் பிறந்து 63 ஆண்டுகள் இயக்கப் பணியாற்றி 83 வயதில் 2008 ஜூலை 8 அன்று இயற்கை எய்தினார் தோழர் பிஆர்சி.

கட்சியின் வரலாற்றை எழுதுவதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் ஒருவராக இடம் பெற்றார். அதற்கு அவரது மார்க்சிய கல்விஞானமும் அதை கட்சி அணிகளுக்கும் இளைஞர், மாணவர்களுக்கும் எடுத்துரைப்பதில் பெற்றிருந்த ஆழ்ந்த அனுபவமும் காரணமாக இருந்தது என்றால் மிகையல்ல.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாணவப் பருவத்திலேயே அகில இந்திய மாணவர் சங்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றார். இளம் கம்யூனிஸ்ட் தலைவர் சுப்பிரமணிய சர்மாவின் அறிமுகம் அவரை மார்க்சியப் பாதையில் பயணிக்கச் செய்தது.

அக்காலத்திய நிலைமைப்படி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் வார ஏடு பிரபாதம், ஆங்கில ஏடு நேஷனல் ஃபிரண்ட் ஆகியவற்றைப் படித்ததுடன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் ரகசிய ஏடு - பாட்டாளி வர்க்கப் பாதை வாசிக்கலானார். அத்துடன் பல்வேறு மார்க்சிய நூல்கள் அறிமுகமாயின.

1941 துவக்கத்தில் ஏழுபேர் கொண்ட கட்சி கிளையை அமைத்தார். அதன் சார்பாக தலைச்சேரி கடற்கரையில் பொதுக்கூட்டம் நடத்தி அதில் முதன்முதலாகப் பேசவும் செய்தார். அன்று முதல் இறுதிக் காலம்வரை மார்க்சியக் கல்வி, அரசியல் பற்றி பேசவும் எழுதவும் செய்தார்.

இந்தக் காலத்தில்தான் சென்னை சதி வழக்கு விசாரணை நடந்தது. அதைப் பற்றி விடாமல் படித்தார். 1942ல் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தார். அங்கு கட்சிக்கிளை அமைத்தார்.

‘ஸ்டூடண்ட்’ பத்திரிகை விற்கும் பொறுப்பு தரப் பட்டது. இந்நிலையில் 1943ல் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை மாணவர் சங்க அலுவலகச் செயலாளரானார். பின்னர் சங்கத்துக்கே செயலாளரானார். 1946ல் இந்திய தேசிய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட அடக்கு முறைக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதையடுத்துக் கல்லூரியிலிருந்து 15 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. 1947ல் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு இஎம்எஸ், என்.கே.கிருஷ்ணன், எம்.ஆர். வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், கே.முத்தையா, ஐ.மாயாண்டி பாரதி, நாகிரெட்டி, பிரசாதராவ் போன்றோருடன் சிறையில் இருந்தார். ஆகஸ்ட் 12ல் விடுதலை செய்யப் பட்டார். சுதந்திரத்தையொட்டி அதன்பிறகு தான் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டார். அந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கட்சி மாநாட்டில் சென்னை மாவட்டச் செயலாளரானார். 1948ல் கல்கத்தாவில் நடந்த 2வது அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாக பங் கேற்றார். இந்தக் காலத்தில் கட்சி தடை செய்யப் பட்டதால் ரயில்வே தொழிலாளிகளிடையே வேலை செய்தார். அந்தக் காலத்தில் கைது, சிறை, விடுதலை, மீண்டும் கைது, சிறை என்று ஓடியது காலம்.

1950 மே - ல் ஜாமீனில் வெளிவந்து தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். அங்கிருந்து அவரை தோழர் பி.ராமமூர்த்தி ரயில்வே தொழிற்சங்க வேலைக்காக திருச்சிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் திருச்சியே நிரந்தரமானது. கல்யாணம் அங்கேதான் நடந்தது. பல் வேறு சங்கங்களின் தலைவரானார். 1951ல் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளரானார். அடுத்து கட்சி பிரிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக செயல் பட்டார். மாநிலக்குழு உறுப்பினரானார். அவசர நிலைக் காலத்தில் தலைமறைவாக செயல்பட்டார். பின்னர் மாநில செயற்குழு, 1985ல் மத்தியக்குழு, 89ல் மத்திய செயற்குழு 92ல் தலைமைக்குழு என்று பதவி உயர்வு தொடர்ந்தது. அதன் ஒரு பகுதியாகவே கட்சி யின் வரலாற்றை எழுதும் குழுவில் ஒருவராகவும் இடம் பெற்றார். அந்தக்குழு எழுதிய ஒரு நூலை மதுரை யில் 2006ல் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்டபோது அதை ஏற்றுக் கொள்ளும் பெருமையும் பெற்றார்.

தோழர் பி.ஆர்.சி.யின் பொதுவான பணியாக அமைந்தது மாணவர், வாலிபர் இயக்கத்தை கட்டுவது, விரிவுபடுத்துவது. அத்துடன் கட்சிக்கல்வியை கலை யாகப் பயிற்றுவித்தார். இன்றைய நடுத்தர வயது கட்சித் தோழர்களில் பெரும்பாலோர் அவரது வகுப்பில் பங் கெடுக்காமல் இருந்திருக்க முடியாது.

மாணவர் சங்கத்துக்கு வட்ட அளவில் குழுக்கள் ஏற் படுத்துவது, பள்ளி, கல்லூரி அளவில் இயக்கம் நடத்து வது எனும் நடைமுறையை அவர்தான உருவாக்கினார். அது நல்ல பலனைத் தந்தது.

வாலிபர் சங்கத்தை வலுப்படுத்துவது, பரவலாக்கு வது என்பதற்காக 1978ல் வேலை கொடு அல்லது சோறு போடு என்ற முழக்கத்துடன் சைக்கிள் பேரணி நடத்தப் பட்டது.

இந்த இயக்கம் வாலிபர் சங்கத்துக்கு நற்பெயர் பெற்றுத் தந்தது. வேலையில்லாக்கால நிவாரணம் அதன் பிறகுதான் வழங்கப்பட்டது.

அவரது எளிமையும் கனிவான அணுகுமுறையும் இளம் தோழர்களை அவர்பால் ஈர்த்தது. காட்சிக்கு எளியராக கண்ணுக்கு இனியராக விளங்கிய அவரது சிரித்த முகம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந் திருக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com