Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
குறும்படம்

இப்படிக்கு பேராண்டி...
மேலாண்மை பொன்னுச்சாமி

‘பூங்கா’ என்ற குறுந்திரைப் படத்தின் மூலமாக பணக்காரப் பெற்றோரின் பாசப்பரிவுக்கும் கவனிப்புக்கும் ஏங்கித் தவித்து ஏமாறுகிற சிறுமியின் ஏக்கம், தனது பாசத்தையும் பரிவையும் எதன் மீதெல்லாம் படர விட்டது என்பதை நெஞ்சைத் தொடும் விதமாக வடிமைத்துப் அளித்த தாண்டவக்கோன், தாத்தா-பாட்டிக்கு ஏங்குகிற பேரன் களின் மன உலகத் தவிப்புகளையும், புறஉலகச் செயல் பாடுகளையும் நுட்பமான கவிதையாகப் படைத்தளித் திருக்கிறார், இப்படிக்கு பேராண்டி என்ற 45 நிமிடக் குறுந்திரைப் படத்தின் மூலமாக.

முந்தைய படைப்பைவிட இதில் தொழில்நுட்ப நேர்த்தி கைகூடி வந்திருக்கிறது. அழுத்த மான கதையை எடுத்துக் கொண்டு, அதை அற்புதமான திரைக்கதை யாக சம்பவ அடுக்குகள் பின்னி, தனித்துவக்குணம் படைத்த பாத்திரங்களையும் செதுக்கி... அதற்கான உயிர்ப்பையும் வழங்கியிருக்கிறார். குறுந்திரைப்படம் பார்க்கிற மனசுகள் ஈரவிழிகiளால் கணத்துப் போகின் றன.

காலடிக் கல்லை எத்திக் கொண்டே போகும் சிறுவன், மதிய உணவைக் கொட்டிவிட... அப்பாவின் சீற்றமும், அம்மாவின் கொதிப்பும் நினைவில் வந்து குலைநடுங்க வைக்க... புதிய கன்று ஊன்றுகிற தோட்டக்காரத் தாத்தா ஓடிவந்து ஆறுதல் சொல்கிறார். ‘செய்த தப்புக்கு அழாதே. பாடம் படிச்சுக்கோ’ என்கிறார். ‘தாத்தாக்கள் பிள்ளைகளின் மன உலக நுட்பங்களை உணர்ந்தவர் கள். இங்கிதமானவர்கள். இதம் தருகிறவர்கள்’ என்பதை உணர்த்திவிடுகிற காட்சி.

ஓரு பள்ளியின் வகுப்பு. பொது அறிவுப்பாடம். தாத்தா பாட்டியின் குணம்பற்றி டீச்சர் கேட்க, எல்லாக் குழந்தைகளும் ஆசை ஆசையாக தமது அனுபவங் களைச் சொல்ல.... ‘யார் யார் வீட்டில் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு மொத்த வகுப்பே மௌனமாகிறது. ஒரு சமுதாய விமர்சனமே இந்த மௌனத்தில் கூச்சலிடுகிறது.

அவசர யுகத்தில் குடும்பங்களுக்குள் தாத்தா பாட்டி களுக்கான இடம் இல்லாமல் போய்விடுகிறது. பாசம், தார்மீகம், மனிதநேயம் என்ற எந்த உணர்வுக்கும் இடமில்லாமல், தாத்தா-பாட்டிகள் அனாதைகளாக்கப் படுகின்றனர். பேராண்டிகளிடமிருந்து கத்தரித்து, தனித் தொதுக்கப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு பாட்டிகளின் பாசம், தாத்தாவின் பரிவு கிட்டாமலேயே போய் விடுகிறது.

தாத்தா -பாட்டிக்காக ஏங்குகிற இரு பேராண்டிகள் .அப்பாவிடம் சொல்லப் போனால் ‘பாடத்தைப் படி’ என்று துரத்துகிறார். அம்மாவிடம் சொல்லப் போனால்... செத்துப் போவதாக மிரட்டுகிறாள்.

பாவம், பேராண்டிகளுக்கு ஏக்கம். ஆசை. ஆவல்.

போன் பண்ணலாம். புதிய நம்பர் இல்லை. அந்த அளவுக்கு உறவு பழையதாகி விட்டது. பிள்ளைகளாகக் கடிதம் எழுதுகின்றனர்.

தாத்தா - பாட்டி சம்பந்தப்பட்ட படங்கள் பரணில் கிடக்கிறதாக தகவல். அதைஎடுக்கிற முயற்சியில் பிள்ளைகளுக்கு விபத்து. மருத்துவமனை!

மருத்துவமனைக்கு வருகிற ரெங்கசாமி மூலம் தாத்தா -பாட்டிக்குத் தகவல் தெரிகிறது.

‘பேரன்கள் மருத்துவமனையில்’

திரும்பிவந்த கடிதம் தந்தை தாமோதரனுக்கு பிள்ளைகளின் மன உலகத்தவிப்பைச் சொல்கிறது.

கதை கேட்ட பிள்ளைகளுக்கு, கதைப் புத்தகம் வாங்கித் தந்ததற்காக குற்ற உணர்ச்சி கொள்கிற தாமோதரன்.

கதைகேட்ட பிள்ளைகள்.. கதையா கேட்கிறது? தகப் பனின் கதகதப்பான வருடலையும், பரிவையும் கொஞ்சிக் கொஞ்சிச் சொல்கிற கதைகளையுமல்லவா கேட்கிறது?

‘இனிய சொற்களையே பேசு’ என்று ட்யூஷன் வகுப்பு நடந்துகிற டீச்சர், காமிக்ஸ் படிக்க ஆசைப்படுகிற மகளிடம் டான்ஸ் கற்றுக் கொள்ள வற்புறுத்த... கடின சொற்களால் மிரட்ட.....

‘காமிக்ஸ் படித்தால் ஓவியப் பழக்கம் வரும்’ என்று தந்தை சொல்ல... விருப்பமில்லாத விஷயத்தை பிள்ளை களிடம் கட்டாயமாக திணிக்கிற படாடோபம் கூர்மை யாக விமர்சிக்கப்படுகிறது.

பிள்ளைகள் தாத்தா - பாட்டிகளைப் பார்க்க தவிப் பதை அறிகிற அம்மாவும் நெகிழ்கிறாள்.

நெஞ்சுவலி வந்த தாத்தா, டாக்டரைப் பார்க்கிறார்.

தாத்தா - பாட்டியைப் பார்க்க குடும்பத்துடன் காரில் போகிற போது, தாத்தா செத்து விடுவதாகவும், புதைக் கப்பட்டதாகவும் வருகிற காட்சி நம்மை பதைக்க வைக்கிறது.

நல்ல வேளை, கனவு. ஆனால், ‘காலைக் கனவு பலிக்குமோ’ என்ற நம்பிக்கை. பதற்றம்.

கதவு தட்டப்படுகிற சத்தம்.

திறந்தால்-

பேராண்டிகளைப் பார்க்க வீடு தேடி வந்து விட்ட தாத்தா - பாட்டி.

அழுத்தமான கதையை உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளாக்கி... நெகிழ்ச்சிமயமாக படமாக்கியிருக் கிறார் தாண்டவக்கோன். டாக்டராக ஒரு காட்சியில் வருகிறார்.

பேராண்டிகளாக வருவது அவரது மகன்கள். பேராண்டிகளின் அம்மாவாக அவரது மனைவி.

தாத்தா- பாட்டிகளாக தமுஎச மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஈஸ்வரனும், அவரது துணைவி யாரும். நன்றாக நடித்துள்ளனர்.

காதல்-வன்முறை-ஆபாசம்-அடித்தடி-ஆஸ்திரே லியா என்று சீரழிந்து வருகிற தமிழ்ச் சினிமாக்களுக்கு அசலான மாற்றுச் சினிமா என்பது இம்மாதிரியான குறுந் திரைப்படங்கள்தான்.

தாண்டவக்கோன் நெகிழ்ச்சிமயமான காட்சிகளின் மூலமாக மனித உறவுகளின் சிதைவுகளையும், குடும்பம் என்கிற அமைப்பின் உள்பலவீனங்களையும் ஒரு சமூகக் கோபத்துடன் அழகாக முன்வைத்திருக்கிற ‘இப்படிக்கு பேராண்டி’ மாற்றுச் சினிமாவுக்கான போற்றுதலுக்குரிய முயற்சியாகும்.

‘பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்’

-என்கிறார் பட்டுக்கோட்டை.

உண்மைதான்.... இது போன்ற மாற்றுச்சினிமா சி.டி.க் களை வாங்குவதன் மூலம் காட்டுகிற ஆதரவுதான்.. பொல்லாத தமிழ்ச்சினிமாவை சொல்லாமல் திருந்த வைக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com