Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
சிறுகதை

காத்து மாறி அடிக்குது
மதுரை நம்பி

தலைமையகத்திலிருந்து திரும்பிய தலைமைக் காவலர் சொன்ன தகவலால் அந்தக் கிளைச் சிறைக் காவலர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். நீண்ட நாட்களாக அந்த கிளைச் சிறைக்கு கண்காணிப்பாளர் நியமிக்கப்படாமல் இருந்ததினால் மேலதிகாரியின் கண் காணிப்பு இல்லாமல் காவலர்கள் இவ்வளவுநாள் பணி செய்தது முதலில் சந்தோஷமாக நாட் கள் போய்க் கொண்டிருந்தது. அதுவே பின்னாளில் சில சங்கடங்களையும், ஒருவித சலிப் பையும் ஏற்படுத்தியது.

“எந்த அதிகாரி வரப்போகிறாரோ, எப்படி நிர்வாகம் இருக்குமோ” என்ற பதைபதைப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போல் இருந்தது அந்த தகவல். தமிழ்ச்செல்வன்தான் சப் ஜெயிலுக்கு சூப்பிரண்ட்டண்டாக வரப்போகிறார் என்றதும் நிம்மதி அடைந்திருந்தனர். ஏறக் குறைய எல்லா காலவர்களும் அவரை நன்கு அறிந்திருந்தனர். காவலர் இளங்கோ அவரைப் பற்றி கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்து வைத்திருந்தார்.

“அவருக்கு இந்தப் பக்கம்தான் ஏதோ சொந்த ஊருன்னு சொன்னாரு. வேலைக்கு சேர்ந்த பிறகு இப்பத்தான் சொந்த மாவட்டத்துக்கே வாராரு” என்றார் இளங்கோ.

“மெட்ராசு ஜெயில்ல இவர் பேர கேட்டா எந்த தாதாவும் அடங்கிடுவான். சென்ட்ரல் ஜெயில்ல சூப்பிரண்டு, ஜெயிலர் கிட்ட அலட்சியமா பேசுற ரவுடிககூட இந்த அதிரடி தமிழ்ச் செல்வன் சார் கிட்ட அடக்கி வாசிப்பானுக. எவனாவது எகிறி பேசுனா அடி பொளந்துருவாரு” சென்னையிலிருந்து சமீபத்தில் மாறுதலில் வந்த காவலர் சொன்னார்.

கோயம்புத்தூர் ஜெயில்ல தீவிரவாதிங்க லாக்கப்புக்குள்ள போக முடியாதுன்னு சூப்பிரண்ட்டுகிட்ட தகராறு செய்துகிட்டு இருந்தானுங்க. எந்த நேரத்துல எதுவும் நடக்கலாங்கிற சூழ்நிலை. காவலர்கள் எல்லாம் பெரிய பெரிய லத்திகளுடன் அந்த பிளாக் முன்னால திரண்டிருந்தாங்க. அதிகாரிகள் கெஞ்சியும் பார்த்தாங்க, மிரட்டியும் பார்த்தாங்க. அவனுக கேக்கிற மாதிரி தெரியல. அப்பதான் வேகவேகமாக அந்த இடத்திற்கு தமிழ்ச்செல்வன் சார் வந்தாரு. அவரைவிட பெரிய அதிகாரிங்க எல்லாம் அங்க இருந்தாலும் அவர் வந்ததும் காவலர் கிட்ட ஒரு தீ பரவுன மாதிரி ஒரு பரபரப்பு. தமிழ்ச்செல்வன் சார் அவனுக கிட்ட பேசினாரு. அதுக்கு பிறகுதான் ஒரு வழியா, சார் நாங்க சூப்பிரண்டு, ஜெயிலர் வார்த்தைகள நம்பல, ஒங்க வார்த்தைகளுக்குத்தான் மதிப்பு கொடுத்து இப்ப நாங்க போறோம். எங்க பிரச் சனைக்கு நாளைக்கு முடிவு தெரிஞ்சாகனும்னு சொல்லிவிட்டு லாக்கப்புக்குள்ள போனா னுங்க. கோவை சிறை அனுபவத்தை நினைவு படுத்தினார் ஒரு காவலர்.

இதேபோல் வேலூர், கடலூர், சேலம் என எல்லா சிறைகளிலும், காவலர்கள் மத்தியிலும், கைதிகள் மத்தியிலும் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு மரியாதை இருந்தது. அவரது துணிச்சலும், அதிரடி நடவடிக்கைகளும்தான் அவரது புகழுக்கு காரணம் என காவலர்களும், அதிகாரி களும் நம்பினர். அவரும்கூட அப்படித்தான் நினைத்துக் கொள்வார். ஆனால், அவரது கர சேவை மட்டும் அதற்கு காரணம் அல்ல, கை சுத்தமும்தான் காரணம் என்பதை கைதிகள் தெரிந்து வைத்திருந்தனர். நேர்மைக்கும், திறமைக்கும் அங்கீகாரமாக கிடைத்தது அந்த மரியாதை.

தமிழ்ச்செல்வன் இயல்பாகவே கம்பீரகமாகத்தான் இருப்பார். உதடுகளுக்கு மேல் குறுக லாகவும், இரு கன்னங்களிலும் நிறைந்திருக்குமாறு அகலமாகவும், பெரிய மீசை வைத்திருப்பார். அவர் முகத்தில் அந்த மீசை இல்லாமல் இருப்பதே அழகாக இருக்கும். ஆனால், மீசை மீது அவருக்கு ஏனோ அலாதிபிரியம்.

காக்கி உடையில் அவரைப் போல மிடுக்காக இருக்க வேண்டும் என்பதற்காகவே சில அதிகாரிகள் அவர் துணிவாங்கும் கடையில் அதே துணி எடுத்து அவர் தைக் கும் கடையில் கொடுத்து அவருக்கு தைத்தது போலவே தனக்கும் வேண்டும் என்று அளவு கொடுத்து தைத்தாலும் அணிந்து பார்த் தால் அந்த அழகு வருவதில்லை. உடற்பயிற்சி ஏதும் செய்யாத தங்களது சோம்பேறித்தனத்தை மறந்து டெய்லரை கோபித்துக் கொள்வார்கள்.

உயர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள்கூட முதல் முறை யாக அவரைப் பார்த்ததும் அந்தஸ்தை மறந்து அவர்களா கவே சல்யூட் அடிப்பதும் உண்டு. சீருடையில் அப்படி சிங்கம் போல சிலிர்த்து நிற்பார்.

தமிழ்ச்செல்வன் அஸிஸ் டெண்ட் ஜெயிலராக பணியில் சேர்ந்த புதிதில் கைதிகளை கண் மூடித்தனமாக அடித்துக் கொண்டிருந்தார். அனுபவம் கூடக்கூட அதையெல்லாம் குறைத்துக் கொண்டார். விதி முறைகளுக்கு புறம்பாக அத்து மீறுதல், பணியாளர்களை மிரட்டு தல் போன்ற அடங்கா பிடாரி களை மட்டும் ஒற்றை மனிதராக அடக்கிக் காட்டுவார். இப்படிப் பட்ட அதிகாரிகளிடம் பணி செய் வதை கௌரவமாக கருதினர் காவலர்கள்.

காவலர் இளங்கோ “கள்ளச் சாராயமும், ரௌடியிசமுமாக இருக்கிற இந்த ஊரு ஜெயிலுக்கு அவர மாதிரி அதிகாரிதான் லாயக்கு” என்றார். இப்படியாக அவர் பராக்கிரமங்களை பேசி பேசி ஓய்ந்து முடிந்து ஒரு வாரத் திற்கு பிறகுதான் தமிழ்ச்செல்வன் பணியில் வந்து சேர்ந்தார்.

அவர் முகத்தில் பெரிய மாற்றம் இருந்தது. மிரளச் செய்யும் மீசை. வடிவம் மாறியிருந்தது. முன்பு மீசைக்குள் முகத்தைத் தேட வேண்டியிருந்தது. இப்போது முகத்தில் மீசையைத் தேட வேண்டியிருந்தது. அது இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதே தெரியாமல் மெலிதாக நறுக்கப் பட்டிருந்தது. ஐந்து வருடங்கள் கழித்து பார்த்தபோதும் பத்து வயது குறைந்ததுபோல இருந்தார். தமிழ்நாட்டில் எல்லா மத்திய சிறைகளுக்கும் பந்தாடப்பட்டு இப்போதுதான் சொந்த மாவட் டத்துக்கு வந்து சேர்ந்திருக்கின் றார். அதுகூட சொந்த விருப்பத் தில் அல்ல தானாகவே அமைந்து விட்டது.

நல்லதாக ஒரு வீடு வாட கைக்கு பார்த்துக் கொடுத்தார் இளங்கோ. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவரது மகனை பள்ளி யிலும் சேர்த்துவிட்டார் இளங் கோ, மட்டும் அல்ல இன்னும் சில காவலர்களும் சின்ன சின்ன உதவிகள் செய்தனர்.

கிளைச்சிறையில் கைதிகள் எண்ணிக்கை கொஞ்சம் கூடுத லாக இருந்தது. அந்த தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த டீக்கடையில் இந்த வார முதல் மரியாதை சப்ஜெயிலுக்கு இருந் தது. அந்த மரியாதை அடிக்கடி மாறும். சில நாட்கள் பத்திர அலுவலகத்திற்கும், சில நாட்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற் கும், சில நாட்கள் கோர்ட்டுக் கும், என வியாபாரத்தை பொறுத்து மரியாதை மாறிக் கொண்டிருக்கும். பக்கத்து ஊர் பஞ்சாயத்து தலைவர் கைதாகி வந்ததிலிருந்து அந்த வளாகத் தில் கூட்டம் குறைவில்லாமல் இருந்தது.

பஞ்சாயத்து தலைவர் இருக் கும் செல்லுக்கு முன் சிகரெட் துண்டுகளும், பீடித் துண்டு களும், வாழைப்பழம், ஆரஞ்சு பழத் தோல்களுமாக கிடந்தன. காவலர் இளங்கோ நேராக அந்த செல்லுக்கு முன் பாக போய், “வராண்டாவை இப்படி குப்ப கிடங்கா ஆக்கிட் டியே, இத எல்லாம் ஓரமா போடக் கூடாதா? பீடி. சிகரெட் மறைச்சு குடிக் காம எங்க முன்னாலயே புகைய விடுற. இது எல்லாம் நல்லா இல்ல பார்த்துக்கோ” என்று அதட்டினார்.

“இத எங்கயா போடச் சொல் லுற, நாங்க பீடி, சிகரெட் குடிச் சுட்டு இருந்தா நீ கண்டுக்காம போக வேண்டியதுதான” செல் லுக்குள் இருந்து திமிரான குரல் வந்தது. இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத இளங்கோ,

“ஏய் நீ ஒன்னோட சுண் டைக்காய் கிராமத்துக்குத்தான் பிரசிடெண்ட். பிரசிடெண்ட் ஆப் இந்தியா இல்ல, நாக்க அடக்கிப் பேசு, இல்ல மரியாதை கெட்டுடும்.”

“நீ சாதாரண கான்ஸ்டபிள் தான் கலெக்டர் இல்ல, ஒன்னால என்னய்யா செய்ய முடியும்?”. கோபமாய் அதிர்ந்தது குரல். சத்தம் கண்காணிப்பாளர் அறை வரை கேட்டது. அலுவலகத்தி லிருந்து வேகமாய் வந்தார் கண்காணிப்பாளர். பிளாக் சாவியையும், லத்திகளையும் எடுத்துக் கொண்டு சேர்ந் தனர் காவலர்கள்.

“கைதியா ஜெயில்ல இருக்கிற நெனப்பு இல்லாம பேசுற, வெளிய வாய்யா” சாவியை வாங்கி பூட்டை திறக்க முயன்ற இளங் கோவை தடுத்து நிறுத்தினார் கண்காணிப்பாளர். பிரசி டெண்ட் மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஆனால் அலட்சிய மாய் உட்கார்ந்து இருந்தார்.

பக்கத்து செல்லில் இருந்த இரண்டு கைதிகளை திறந்து வெளியே கூப்பிட்டு குப்பை களை அள்ளச் சொன்னார் கண் காணிப்பாளர். இளங்கோவைப் பார்த்து “ஏன் இத பெருசு பண் றீங்க, கோபப்படாதீங்க” என சொல்லிக் கொண்டே, லத்தி களுடன் தயார் நிலையில் இருந்த காவலர்களையும் அழைத்து வந்து விட்டார். வெற்றிப் புன்ன கையில், பிரசிடென்டும் அவரது சகாக்களும் இருக்க வெறுப்பும் ஏமாற்றமுமாக திரும்பினர் காவலர்கள். அதிரடி தமிழ்ச் செல்வன் எப்படி அமைதிப் புறா வாக மாறினார் என ஆச்சர்யப் பட்டனர் காவலர்கள்.

கண்காணிப்பாளர் எழுத்து வேலைகள் முடித்து அலுவலகத் திலிருந்து வெளியே வந்து வராண்டா பகுதிக்கு வந்தார். தலைமைக் காவலர் அவரது மேஜையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். எழுந்து கண் காணிப்பாளருக்கு ஒரு சல்யூட் அடித்தார். அவரை உட்கார்ந்து எழுதச் சொல்லிவிட்டு மேஜை மீது இருந்த பதிவேடுகளை சுவர் ஓரமாக தள்ளி வைத்துவிட்டு மேஜை மீது ஒரு எக்கு எக்கி உட் கார்ந்து கொண்டார். எழுந்து நின்றிருந்த காவலர்களை மீண் டும் அதே நீள பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டு, அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார் கண்காணிப்பாளர்.

வழக்கம் போலவே இரவு நேரத்திற்கான உணவு மாலை நேரத்திலேயே சமையலறையி லிருந்து எடுத்து வரப்பட்டது. மற்ற காவலர்கள் கண்காணிப் பாளருடன் பேச்சில் ஆர்வமாய் இருந்ததால சமையலறைக் காவலரே பிளாக் சாவியை எடுத்து காண்காணிப்பாளரிடம் சொல்லிவிட்டு கைதிகள் இருக் கும் ஒவ்வொரு அறையாக திறந்து கொண்டு சென்றார். கண் காணிப்பாளர் மேஜை மீது உட்கார்ந்தவாறே சிகரெட் புகை பக்கவாட்டில் பரவாமல் இருக்க புகையை மேல்நோக்கி ஊதிக் கொண்டே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

ஒவ்வொரு செல்லிலிருந்தும் வெளியே வந்த கைதிகள் வராண்டா வழியாக வந்து வளாகத்திற்கு போய்க் கொண் டிருந்தனர். கடைசி அறையிலி ருந்து பஞ்சாயத்து தலைவரும், அவரது பரிவாரங்களும் வந்துகொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தும், பார்க் காததுபோல சிகரெட்டை அணைத்துவிட்டு மேஜையிலி ருந்து இறங்கி நின்று கொண் டார். கண்காணிப்பாளரின் செயல் குழப்பமாக இருந்தாலும், அதை கவனிக்காததுபோல காவலர்கள் எழுந்து உணவு மரி மாறும் வளாகத்திற்குள் போய் நின்று கொண்டனர்.

மற்ற கைதிகள் எல்லாம் சத்து ணவு ஆயாவுக்கு பயப்படும் பிள்ளைகள் போல வரிசையாக அமைதியாக உட்கார்ந்து சாப் பிட்டுக் கொண்டிருந்தனர். பஞ் சாயத்து தலைவர் அங்கே நாட் டாமை நாற்காலிபோல அமைந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொள்ள அவரது ஆட்கள் அவருக்கு முன் பாக ஒழுங்கற்ற முறையில் உட் கார்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தனர்.

இளங்கோ உள்ளிட்ட காவலர் கள் அதனை சகித்துக் கொள்ள சிரமப்பட்டனர். கண்காணிப் பாளர் வந்து ஒரு பார்வை பார்த்து விட்டு அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

கிளைச்சிறை வளாகத்திற்கு கல்லூரி மாணவர்கள்போல் இருந்த சில இளைஞர்கள் வந்தி ருந்தனர். அவர்களின் கைகளில் நவீன வடிவமைப்புடன் இருந்த சில புத்தகங்களும், நாளிதழ், டைரி, நோட்டீஸ் கட்டுகள் என வைத்திருந்தனர். அவர்கள் ஏதோ அமைப்பை சேர்ந்தவர் கள்போல் காணப்பட்டனர். வாயில் காவலர் அவர்களை எச்சரிக்கையுடன் விசாரித்தார். கண்காணிப்பாளரை பார்க்க வந்ததாக சொன்னார்கள்.

கண்காணிப்பாளர் அவர்களை உள்ளே அனுப்பு மாறு உத்தரவிட்டார். சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்தவர் களை சிநேக பாவத்துடன் வரவேற்றார் கண்காணிப்பாளர்.

“சார் உங்கள மீச இல்லாம பார்க்க அடையாளமே தெரியலயே சார்” என்றார் ஒரு இளைஞர்.

“நீங்களும் தான் எல்லாம் பெரிய மனுஷங்களா ஆகிட்டீங் களே, நாலஞ்சு வருஷத்துல எவ் வளவு வளர்ந்துட்டீங்க!”

எல்லோரையும் உட்கார சொல்லிவிட்டு ஒரு காவலரிடம் தேநீர் வாங்கி வரச் சொன்னார்.

குறுந்தாடியுடன் இருந்த இளைஞர் ஒரு நோட்டீசை எடுத்து தமிழ்ச் செல்வனிடம் கொடுத் தார். அதை மேலோட்டமாக வாசித்தார் தமிழ்ச்செல்வன். அதில் இருந்த விஷயங்களை ஆளுக்கொருவராக விளக்கிக் கொண்டிருந்தனர். அவர்களது வார்த்தைகளில் அறிவு ஜீவித் தனமும் போர்க்குணமும் வெளிப் படுவதைக் கூர்ந்து கவனித்தார் தமிழ்ச்செல்வன்.

தேநீர் கொண்டு வந்த சிறுவ னுடன் உள்ளே நுழைந்த இளங் கோவை தனியாக அழைத்து காதில் ஏதோ சொல்ல அவர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை கண்காணிப் பாளரிடம் கையூட்டு கொடுப்பது போல் ரகசியமாக கொடுத்தார். ரசீது புத்தகத்தை தயாராக வைத்திருந்தவரிடம் அதை வாங்கிய தமிழ்ச்செல்வன் அடிக் கட்டையில் எழுதப்பட்டிருந்த தொகைகளை ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு ரசீதை கிழித்து எடுத்துக் கொண்டு 500 ரூபாய் தாளை ரசீது புத்தகத்தில் வைத்துக் கொடுத்தார். வந்தவர் களின் முகங்களில் திருப்தியின் பிரதிபலிப்பு.

விடைபெறும் போது ஒரு இளைஞன் “மீசதான் சார் உங் களுக்கும், உங்க உடுப்புக்கும் கம்பீரம். அடுத்த தடவ நீங்க ஊருக்கு வரும் போது முன்ன வச்சிருந்த மாதிரியே வச்சிகிட்டு வாங்க சார்” என்றான். ஒரு சிறு புன்வறுவலுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார் தமிழ்ச் செல்வன்.

இரவுப் பணிக்கு வந்த காவலர்கள் கண்காணிப்பாள ருக்கு சல்யூட் அடித்துவிட்டு வந் தனர். பகல் பணி முடித்த காவலர் கள் ஒவ்வொருவராக சல்யூட் அடித்துவிட்டு புறப்பட்டனர். முன்னதாக வெளியேறிய காவலர் இளங்கோ ஓய்வறைக்குச் சென்று காக்கி உடை களைந்து கலர் உடை அணிந்து வந்து கிளைச்சிறை வாசலில் கண் காணிப்பாளருக்காக காத்துக் கொண்டிருந்தார். கண்காணிப் பாளர் அவர் அறையிலேயே உடையை மாற்றிக் கொண்டு வந்தார்.

அந்த வளாகத்தை விட்டு உடனே கிளம்பாமல் இன்னும் பரபரப்பாக இயங்கிக் கொண் டிருந்த தாலுகா அலுவலகத்தை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் “அய்யா, இன்னைக்கி நீங்க நடந்துக்கிட்டது சரியில்லைன்னு, காவலர்கள் நினைக்கிறாங் கய்யா”. தயக்கத்துடன் ஆரம் பித்தவர் தைரியமாக சொல்லி முடித்தார்.

“ஏன் என்ன விஷயம்.”

“கள்ளச்சாராய கேசுல வந்து எங்க கிட்ட அடி வாங்குன வன் இப்ப பிரசிடெண்டா ஆகிட்டான்னு மரியாத இல்லாம பேசுறான். நீங்க வந்த வேகத் துக்கு ஒரு பிடி பிடிப்பீங்கன்னு பார்த்தா நீங்க பேசாம வந்திட்டீங் களே அய்யா.”

இதை கொஞ்சமும் எதிர்பார்க் காத தமிழ்ச்செல்வன் மெதுவாக நடந்து கொண்டே சிறிய மௌனத் திற்குப் பிறகு சொல்ல துவங்கி னார்.

“ஒங்ககிட்ட சொல்லறதுல தப்பு இல்லன்னு நெனைக்கிறேன். அவன் ஊருல தான் எங்க தங்கச் சிய கட்டி கொடுத்திருக்கோம். அஞ்சு வருஷத்துக்கு முன்னால தங்கச்சியோட வளகாப்புக்கு அங்க போயிருந்தேன். அடுத்த நாள் என் தங்கச்சியோட மாம னாரை கூப்பிட்டு ஊர்க் காரங்க ஒன் சொந்தக்காரங்க கிட்ட இந்த ஊருல எப்படி நடந்திக் கிறனும்னு சொல்லறதில்லையா, அந்த மீசைக்காரன வரச் சொல்லி எங்கள பயமுறுத்திப் பார்க்குறியா? இந்த ஊருக்கு வந்தா அப்படியெல்லாம் மீச வச்சிக்கிட்டு வரக்கூடாதுன்னு சொல்லி வை. அவன் பெரிய அதிகாரி மயிரா இருந்தா, அந்த ஊருல இருக்ட்டும்லே! இந்த ஊருக்கு நாங்கதான்ல அதிகா ரிங்க. சொல்லி வைனு மெரட்டி ருக்காங்க. அப்படி மெரட்டின வங்கள்ல இந்த பிரசி டென்ட்டும் ஒருத்தன். அப்ப அவன் பிரசி டென்டா இல்ல. மெரட்டினவங் கள்ல நெறைய பேரு என்னையவிட பெரிய மீசை யெல்லாம் வச்சிருந்தாங்களாம்.”

இதை கேட்டிருக்கக் கூடா தோ என சங்கடப்பட்டார் இளங் கோ, ஆனால் தமிழ்ச் செல்வன் உணர்ச்சியுடன் மேலும் தொடர்ந் தார்.

“அந்த ஊரு டீ கடையில் போயி எங்க ஜாதிக்காரங்க பெஞ்சுல உட்காரவும் முடியாது. பொது டீ கிளாஸ்ல டீ குடிக்க வும் முடியாது. நான் போனப்ப எங்க ஆளுங்களே என்ன டீ கடை பக்கம் போக வேண்டாம்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அந்த ஊருல அப்ப எதுத்துக் கேக்க ஒருத்தரும் இல்லை. நானும் அதை சகிச்சிக்கிட்டு இருக்க வேண்டியதாகிடுச்சு.”

“இப்ப நெலம மாறிக்கிட்டு வருது. இன்னக்கி வந்த பசங்க தான் அந்த ஊருல எதுத்து போராடி இருக்காங்க. சீக்கிரம் இதுக்கு முடிவு கட்டுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு.”

‘தமிழ்நாடு பூரா பெயரெடுத்த அதிரடி தமிழ்ச்செல் வனுக்குமா இந்த நெலம’ இளங் கோவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com