Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
வேண்டாமணி
விபிலா

திடீரென்று அந்தக் கதவு விசாலமாய் விரிந்து வழியைவிட்டது. அதன் முன்பு நின்ற அந்தப் பெண் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த மாதிரியான கதவுகளை அவள் அதற்கு முன் பார்த்ததும் இல்லை. கணப்பொழுதில் மிரண்டு பின்வாங்கினாள். கதவு மூடிக்கொண்டு விட்டது.

அது மும்பை விமானத்தளத்தின் பன்னாட்டு முனைய முகப்பு வாயில். தூரத்தில் நின்று கொஞ்சநேரம் சுதாரித்துக் கொண்டு பார்த்தாள். புரிந்தது. யாராவது கதவின் முன்பு போய் நின்றால் திறந்து கொள்கிறது. அவர் தாண்டிச் சென்றதும் மூடிக்கொள்கிறது.

அப்பாடா! அவ்வளவுதானா? உள்ளே போனாள். அண்மையில்தான் அவளுக்குத் திருமணம் முடிந்திருந்தது. துபாயில் பணிபுரியும் கணவனோடு குடித்தனம் செய்ய அவள் இப்போது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள். தனியான பயணம்.... விமானப்பயணம்.... வெளிநாட்டுக்குப் பயணம். இதுவரை சந்தித்திராத புது வகையான விஷயங்கள் எல்லாம் மனத்துக்குள் பலவாறான உணர்ச்சிகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் சிலீரென்று கண்ணில் பட்ட விசாலமான கூடத்தையும் பலவிதமான மனிதர்களையும் விசித்திரமாகப் பார்க்கத் துவங்கினாள். சந்தோஷமாயும் இருந்தது, திகிலாயும் இருந்தது.

அவள் அப்பா மதுரைக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிக்கூட வாத்தியார். சுயகட்டுப்பாடு மிக்க அவர் மாணவர்களை வழிநடத்துவதில் மற்ற வாத்தியார்களுக்கு முன்மாதிரியானவர். அவருடைய மாணவர்கள் யாரும் சோடைபோனது கிடையாது. யாராவது ஒரு பையன் தடுமாறினால் ‘அவருடைய மாணவனா நீ’ என்று வினோதமாய்ப் பார்க்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர். அவருக்குத் தோதான அவர் மனைவி. சந்தோஷமான அந்தக் குடும்பத்தை மிகப்பெரிய ஆதங்கம் ஒன்று துயரமாகவே துரத்திக் கொண்டிருந்தது. அது ஆண்பிள்ளை இல்லையே என்ற கவலைதான்!

அவர் என்ன செய்வார் பாவம்! அடுத்தது ஆணாகத்தான் இருக்கும் என்று நம்பி நம்பியே ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளிவிட்டார். கடைசியாக ஒரு முயற்சி செய்துவிடலாம் என்று பார்த்ததில் அதுவும் பெண்ணாகி விட்டது. பிரசவத்தன்று மருத்துவச்சி, தாயையும் குழந்தையையும் உயிருடன் பிரித்தெடுக்கப் போராடிக் கொண்டிருக்க சாத்திய கதவுக்கு வெளியே கூடத்தில் கும்பலாகப் பெண்கள் கசகசத்துக் கொண்டிருந்தார்கள். வாத்தியார் மட்டும் பையனாகப் பிறக்க வேண்டுமே என்று கண்ட கண்ட கடவுள்களை எல்லாம் மனத்துக்குள் வேண்டிக் கொண்டிருந்தார்.

வீல் என்ற சத்தம் சுவரைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது. அந்த இடத்தின் சூழ்நிலை மாறிப்போனது. ஆனாலும் மர்மம் அவிழவில்லை. பிறந்தது ஆணா..? பெண்ணா..?

கொஞ்சநேரம் கழித்து மருத்துவச்சி “வாத்தியாரய்யா உங்களுக்கு வேண்டாமணி பிறந்திருக்கிறாள்” என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்தாள். பெண்கள் கூட்டம் பெருங்குரலெடுத்துச் சிரித்தது. வாத்தியார் முகம் மட்டும் கொஞ்சம் இருண்டது போலானாலும் ஓர் அசட்டுச் சிரிப்பின் மூலம் மறைக்க முயன்றார். ‘எதுவானால் என்ன? குழந்தை குழந்தை தானே” என்று சொன்னார். மருத்துவச்சிக்குச் சொன்னாரா அல்லது அவருக்கே சொல்லிக் கொண்டாரா என்பது அவருக்கேகூட புரிந்திருக்கவில்லை. வேண்டாமணி என்று பரிகாசமாக அந்த மருத்துவச்சி சொன்னதே அந்த குழந்தையின் பெயராக நிலைத்துவிட்டது.

பொறுப்புள்ள குடும்பத் தலைவன்.. நல்ல மனைவி... நல்ல குடும்பம்... வேண்டாமணி படித்து முடிப்பதற்கு முன்பே ஐந்து பெண்களும் கல்யாணமாகி வரிசையாக புக்ககம் போய் விட்டார்கள். பெண் பிள்ளைகளைப் பெற்றதற்காக ஏன் இவ்வளவு கவலைப்பட்டோம் என்று நினைக்கையில் வாத்தியாருக்கு உள்ளுக்குள் அவமானமாகத்தான் இருந்தது.

திடீரென்று ஒரு நாள் வேண்டாமணியைப் பெண் கேட்டு வந்தார்கள் துபாய் மாப்பிள்ளை! கல்யாணத்துக்காகவே லீவு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான். கல்யாணம் முடிந்ததும் துபாய்க்குப் போய் மூன்று மாதங்களில் எல்லா ஏற்பாடுகளையும் சட்டப்படி முடித்துக் கொண்டு மனைவியை வரவழைத்துக் கொள்வான். அதுவரை பெண் தாய் வீட்டில் இருந்தால்கூட சம்மதம்தான் என்று ஏகத்துக்கும் நம்பிக்கையுடன் பேசினார்கள். பையன் அழகாய் பொறுப்பானவனாய் இருந்தான். தன்னம்பிக்கையுடன் பேசினான். எல்லா விஷயங்களையும் நேரான கோணத்திலேயே அவன் அணுகிய விதம் எல்லாருக்கும் பிடித்துப் போயிற்று. நல்ல குடும்பம் வேறு. பிரச்சனையே இல்லை. தலையை ஆட்டினார்கள். கல்யாணம் முடிந்தது.

லீவு முடிவதற்குள் துபாய்க்குப் போன பையன் சொன்னபடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். விசாவையும் மும்பையில் இருந்து துபாய்க்குப் பயணம் செய்வதற்கான டிக்கெட்டையும் அனுப்பி வைத்தான். பாஸ்போர்ட் இங்கேயே வாங்கியாகி விட்டது. குறிப்பிட்ட தேதியில் துபாயில் போய் இறங்கியதும் அங்கே கணவன் காத்திருப்பான். கவலைப்படுவதற்கு ஒரு சின்ன விஷயம்கூட இல்லாமல் எல்லாம் அந்தக் கடவுளின் கிருபையால் நல்லபடியாக முடிந்துவிட்டது. வேண்டாமணி இன்னும் சில மணி நேரங்களில் கிளம்ப இருக்கிற விமானத்துக்காகக் காத்திருக்கிறாள்.

விசாலமான அந்த கூடத்தில் ஆங்காங்கே வரிசை வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. விமானத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது. தள்ளுவண்டிகளில் பெரிய பெரிய பைகளை ஆளுயரத்துக்கு அடுக்கிக் கொண்டு வகை வகையான மனிதர்கள் எளிதாகப் போய்க் கொண்டிருந்தார்கள். மதுரைப் பக்கத்து முகங்களை மட்டுமே பார்த்துப் பழகியிருந்த வேண்டாமணிக்கு யார் எந்த நாட்டுக்காரர்; எந்த மொழி பேசக்கூடியவர் என்பதெல்லாம் தெரியவில்லை. துபாய் விமானத்துக்காக கணிசமான தமிழர்கள் காத்திருந்தார்கள் என்று கண்டு கொண்டாள். கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. பிரான்ஸ் நாட்டுக்குப் போகிற விமானத்துக்காக புதுச்சேரிக்காரர்கள் நிறைய பேர் மதுரை ஜங்க்ஷனில் மக்கள் நடமாடுவதுபோல் சகஜமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். இதுநாள்வரை, தான் மட்டுமே கிணற்றுத் தவளையாக வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று வேண்டாமணிக்கு உறைத்தது.

தன்னையே நம்ப முடியாதவளாய் வெளியே காட்டிக் கொள்ள முடியாத குதூகலிப்பும் பரபரப்பும் நாடி நரம்புகள் முழுதும் வியாபித்திருக்க வேண்டாமணி அங்கே நடக்கிற சம்பவங்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள். திடுமென பக்கத்து நாற்காலியில் இருந்து ஒரு மூதாட்டியின் தமிழ்க்குரல் ஒலித்தது. யார் யாரோ வருவதும் உட்காருவதும் எழுந்து போவதுமாய் இருந்தார்கள். இந்த மூதாட்டி எப்போது வந்து பக்கத்தில் உட்கார்ந்தாள் என்று வேண்டாமணி கவனிக்கவில்லை.

கேள்விப் பார்வையோடு அந்த அம்மையாரை நோக்கித் திரும்பினாள். சுமார் ஐம்பத்தைந்து வயது இருக்கும். சுமாரான ஆடை அணிந்திருந்தாள். அரைகுறையாக நரைத்திருந்த தலை கலைந்திருந்தது. முகத்தில் சோகம் கப்பி இருந்தது. விமானத்தளத்துக்குள் வந்து பிச்சை கேட்க வாய்ப்பில்லை. குழப்பத்துடன் மூதாட்டியைப் பார்த்தாள்.

“எந்த நாட்டுக்குப் போற தாயீ?”

“துபாய்க்கு”

கடவுளா பாத்து உன்ன எனக்கு அடையாளம் காட்டி இருக்கான் ஆத்தா! துபாய்ல என் மக... உன் வயசுதான் இருக்கும் தாயி.... போன வருஷம்தான் கல்யாணம் ஆகி துபாய்க்குப் போனா... நேத்து சாயங்காலம் முதல் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி கொண்டு போயிருக்காங்க... என்னவோ பெரிய சிக்கலாயிருச்சாம். தேவையான மருந்து அங்கே இல்லையாம். இன்னைக்கு ராத்திரிக்குள்ளே மருந்து கிடைக்கலன்னா பொண்ண காப்பாத்த முடியாதுன்னு சொல்றாங்களாம் ராசாத்தி...” சொல்லிக் கொண்டே வரும் போது தாள முடியாத துயரத்தோடு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

இந்த கதையைக் கேட்பதா வேண்டாமா என்று முடிவு செய்யத் தெரியவில்லை. தன் தாயின் வயதுள்ள ஒரு மூதாட்டி தன் பெண்ணைக் கட்டிக் கொடுத்து அவள் இப்போது துபாயில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறாள். அவளைக் காப்பாற்றக்கூடிய மருந்து பம்பாயில் இருக்கிறது. அடுத்த வருஷம் அந்த பெண் போலவே தானும் மருத்துவமனையில் இருக்க நேரலாம். ஆனால் இப்போது தன்னால் ஆகப்போவது என்ன? அந்த மூதாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பாடாக மூக்கைச் சிந்தி முந்தானையில் துடைத்துக் கொண்டு அழுகையை நிறுத்தினாள். மறுபடி பேச ஆரம்பித்தாள்.

“இந்த பையில அந்த மருந்து இருக்கு தாயி! காதுல மூக்குல இருந்ததை எல்லாம் கழட்டியும் காசு தேறல... மேக்கொண்டு கடன வாங்கி இந்த மருந்த தேத்திப்புட்டேன்... இத நானே கொண்டு போக வசதி இல்ல.... வுடவும் மாட்டாங்க! சின்ன பை தான் ஆத்தா! இத கையிலேயே வச்சிருந்து துபாய் போய் நீ எறங்கினதும் என் மருமகன் வந்து வாங்கிக்குவாரு... என் பொண்ணு மாதிரியே இருக்கிற தாயி.. இந்த உதவிய மட்டும் செஞ்சியானா ஒரு உசுர காப்பாத்துன புண்ணியம் உனக்குக் கிடைக்கும்” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பையை அவள் கைகளில் வைத்தாள். வேண்டாமணிக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது. சரி என்று சொல்லவோ, முடியாது என்று மறுக்கவோ முடியவில்லை.

“அது சரி உங்க மருமகன் யாருன்னு எனக்குத் தெரியாதே”

“பொண்டாட்டி உசுர காப்பாத்தணும்ங்கற வெறியிலே கண்டிப்பா அவர் வருவாரு ஆத்தா!”

“ஒருவேள உங்க மருமகனால என்ன பாக்க முடியலேன்னா...?”

“யாருமே வந்து வாங்கலைன்னா குப்பைல போட்டுட்டு நீபாட்டுக்கு போய்க்கிட்டே இரு... என் மகளுக்கு கடவுள் விதிச்ச கெடு இன்னியோட முடிஞ்சதுன்னு எடுத்துக்கறேன்” சொல்லிக் கொண்டே மறுபடியும் கண்களைத் துடைத்துக் கொண்டாள். வேண்டாமணிக்கு அதற்கு மேலும் மறுதலிக்க முடியவில்லை. ஒரு சின்ன பைதான். கையிலேயே கொண்டு போய்விடலாம். மூதாட்டிக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள்.

சடங்குகள் முடிந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பிய விமானம் இரண்டரை மணிநேரத்தில் அவர்களை துபாய் விமான தளத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது. கொண்டு வந்த பெரிய பெரிய பைகள் எல்லாம் கன்வேயர் பெல்ட்டில் வெளியே தள்ளி விடுவார்கள். அங்கே போய் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன்பு கஸ்டம்ஸ் நடைமுறை முடிய வேண்டும். பயணிகள் வரிசையாய் நின்றார்கள். அவர்களில் ஒருத்தியாக வேண்டாமணியும்! அந்த மருந்து பையை வாங்க வேண்டியவன் தன்னை எங்கே பார்ப்பான் என்பது தெரியாததால் அதை நன்றாக மற்றவர் பார்வையில் படும்படி வைத்திருந்தாள். பாவம்! பிரசவத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிற ஓர் இளம் பெண்! அதுவும் தன்னைப் போன்றவள். மகத்தான ஓர் உதவியைச் செய்யப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது.

அதைவிட அவளுடைய ஆசைக் கணவன் இன்னும் சற்று நேரத்தில் கண்ணில் படப் போகிறான். ஆகாயத்தில் இறகு கட்டிப் பறப்பது போலிருந்தது..

அவளுடைய முறை வந்தது.

ஒரேயொரு சிறிய பை மட்டும் வைத்திருக்கிற தன்னை வெளியே அனுப்ப அதிக நேரம் ஆகாது.

விறைப்பான உடையணிந்த அந்த கஸ்டம்ஸ்காரர் அந்த பையை வாங்கி அதனுள் கையை விட்டார். அதில்ம் இருந்த பொருள் அவருடைய கையோடு வந்தது. அவர் முகம் பிரகாசமாயிற்று. வேண்டாமணியை ஓரம் கட்டினார்கள்.

“இது என்ன தெரியுமா?”

“மருந்து... ஒரு மூதாட்டி இதை தன் மருமகனிடம் கொடுக்குமாறு கெஞ்சினார்” இலேசாய் திகில் தொற்றியது.

“இதற்கு முன் அந்த மூதாட்டியைத் தெரியுமா?”

“இல்லை” அவ்வளவு நல்லவளாகத் தெரிந்தாளே அவளை ஏன் விசாரிக்கிறார்கள்? இரத்த ஓட்டம் அதிகமாயிற்று.

“இந்தப் பையை உன்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு போகப் போகிறவனைத் தெரியுமா?”

“தெரியாது.... கண்ணில்படுமாறு வைத்துக் கொண்டு போனால் அவனே வந்து வாங்கிக் கொள்வான் என்று சொன்னாள்” நா வறண்டு விட்டது. தனக்கு ஏதோ ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதாகப்பட்டது. படபடப்பு அதிகமாகியது.

“முட்டாள் பெண்ணே! இந்தியாவில் இருந்து நீ இந்தப் பையில் கொண்டு வந்தது ஹெராயின்....போதைப்பொருள். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ளது..... துபாய் சட்டப்படி நீ இப்போது ஒரு குற்றவாளி. உன்னைக் கைது செய்கிறோம்.” ஏற்கெனவே அரை மயக்க நிலைக்குப் போய் இருந்த வேண்டாமணி சுருண்டு கீழே விழுந்தாள்.

காவலர்கள் வந்தார்கள். மருத்துவக் குழு வந்தது. முதலுதவி சிகிச்சை நடந்தது. கொஞ்சம் தேறி உட்கார்ந்தாள். வெளியில் காத்திருக்கும் தன் கணவனுக்குத் தகவல் தர கேட்டுக் கொண்டாள்.

வேண்டாமணி வேனில் ஏற்றப்பட்டாள். பக்கத்தில் இருந்த காவல்காரர் கொஞ்சம் மனசு இளகியவர் போல! “இதே குற்றத்தை ஆண் செய்திருந்தால் துபாய் சட்டப்படி சிரச்சேதம்தான்! நீ பெண்ணாக இருப்பதால் தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்காது. தைரியமாய் இரு”.

அடுத்த நாளே விசாரணை துவங்கியது. பிசிறே இல்லாத வழக்கு. கனத்துக் கொழுத்திருந்த அந்த நீதிபதி, குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த வேண்டாமணியைக் கூர்மையாகப் பார்த்தார். திடீரென்று அவர் கண்களில் கரிசனம் தோன்றியது. “பெண் என்பதால் உன் மீது கருணை கொண்டு இருபத்து எட்டு ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கிறேன்”.

மீண்டும் வேண்டாமணி வேனில்! அழுது புலம்பியவாறே அவள் கணவன் பின்னாலேயே ஓடி வந்தான்.

இருபத்து எட்டு ஆண்டு சிறை வாழ்க்கைக்காக வேண்டாமணியை ஏற்றிக் கொண்ட அந்த வேன் சீறிப் பாய்ந்தது. ஜன்னல் வழியே பார்த்த வேண்டாமணியின் கண்களில் அவள் கணவன் புள்ளியாகி மறைந்து போனான்.

- செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com