Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
ரஷ்ய நவீன இலக்கியவாதி
சிங்கிஸ் ஐத்மதேவ்
எஸ். ராமகிருஷ்ணன்

பிரபல ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மதேவ் 2008 ஜூன் மாதம் பத்தாம் தேதி இறந்து விட்டார் என்ற தகவல் மிகத் தாமதமாக நேற்றிரவு தான் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து தெரிந்து கொள்ள நேர்ந்தது. சமீபத்தில் இறந்து போன ரஷ்ய எழுத்தாளர் சோல்சனிட்சென் இறப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் சிறு பத்திரிகை கவனம் ஐத்மதேவிற்குக் கிடைக்கவில்லை. காரணம் சோல்சனிட்சென் சர்ச்சைக்கு உள்ளானவர். அமெரிக்க ஊடகங்களுக்கு நன்றாக அறிமுகமானவர். ஐத்மதேவ் தீவிரமான படைப்பாளி. நான் அறிந்தவரை, மத்திய ஆசியாவின் கலாச்சாரத்தை எழுதிய மிக முக்கிய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மதேவ்.

டால்ஸ்டாய், த°தாயெவ்ஸ்கி, கோகல் துர்கனேவ், செகாவ், கார்க்கி, லெர்மென் தேவ் என்று ருஷ்ய செவ்விலக்கியவாதிகள் அறிமுகமான அளவு ரஷ்ய இலக்கியத்தின் சமகால படைப்புகள் நமக்கு அறிமுகமாகவில்லை. ரஷ்ய நவீன இலக்கியவாதிகளாக அறியப்பட்டவர்களில் சிங்கிஸ் ஐத்மதேவ்தான் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டவர். இவரது முக்கிய நாவல்களான முதல் ஆசிரியர், குல்சாரி, ஜமீலா, அன்னைவயல், லாரி டிரைவரின் கதை போன்ற யாவும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை மிகுந்த வரவேற்பு பெற்றவை. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசிற்கு அவரை கிர்கி°தானிய அரசு சிபாரிசு செய்துள்ளது.

எண்பதுகளின் துவக்கத்தில் நவீன இலக்கியத்தின் மீது விருப்பம் கொண்டவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது அவர்கள் பேச்சில் ஒருமுறையாவது சிங்கிஸ் ஐத்மதேவ் பற்றிய குறிப்பு இடம் பெறும். அந்த அளவு தமிழ்ச் சூழலில் அவரது பாதிப்பு ஆழமானதாக இருந்தது.

ரஷ்ய இலக்கிய இதழ் ஒன்றில் வெளியான சிங்கிஸ் ஐத்மதேவின் சிறுகதையிலிருந்து அவரை தேடி வாசிக்கத் துவங்கினேன். அந்த நாட்களில் ருஷ்ய இலக்கியம் தந்த உத்வேகத்தில் ரஷ்ய மொழி கற்றுக் கொள்வது என்று இலவசமாக ரஷ்ய மொழி கற்றுத் தரும் இஸ் கஸ் அமைப்பில் வாரம் இரண்டு நாள் வகுப்பில் கலந்து கொண்டிருந்தேன்.

ரஷ்ய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரே ஆசை. தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு நாவலையாவது மூல பாஷையில் வாசித்துவிட வேண்டும் என்பது தான். இரண்டு மாதப் பயிற்சியின் பலனாக தஸ்தாயெவ்ஸ்கி என்ற பெயரை வாசிக்கும் அளவிற்கு ரஷ்ய மொழி பழகியிருந்தேன்.

மொழி கற்றுக் கொள்வதற்காக தனியான இசைத்தட்டுகள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் அகராதிகள் தந்திருந்தார்கள். அந்த இசைதட்டு களோடு.சைகோவ்ஸ்கியின் இசைத்தட்டு ஒன்று எனக்கு வந்து சேர்ந்திருந்தது. என்னவென்று புரியாமலே பல நாட்கள் சைக்கோவ்ஸ்கியை கேட்ட ஆரம்பித்தேன். அது ஒரு மயக்கம். தெருவில் நடமாட்டம் அற்றுப்போன பகல் பொழுதில் வேம்புகூட காற்றசைவின்றி ஒடுங்கி நிற்கும்போது அறையில் பழைய கிராம போனை சுழல விட்டு அதன்வழியே சைக்கோவ்ஸ்கியின் சங்கீதத்தை கேட்பது விசித்திரமாக இருக்கும்.

காற்றில் எப்போதும் புழுதியேறிய கிராமத்தின் தெருவில் சைக்கோவ்ஸ்கி வழிந்து ஒடிக் கொண்டிருப்பார். தெரு நாய்கள்கூட அந்த இசைக்கு பழகியிருந்தன. சங்கீதம் கோடை யின் உக்கிரமான மழையைப்போல பொழிய துவங்கி அறையில் நிரம்பி ஜன்னல் தாண்டி வழிய துவங்கும். மழைக்குப் பின்பாக காளான்கள் முளைப்பதுபோல இசை முடிந்த பிறகு மனதில் புதையுண்டிருந்த ஏதேதோ நினைவுகள் பீறிடத் துவங்கும்.
மூன்று மாத காலம் ரஷ்ய மொழி கற்றுக் கொள்வதற்குள் ரஷ்ய மொழி கற்றுத்தந்த ஆசிரியர் இடம் மாறிப் போய்விட்டார். புதிதாக ஆசிரியர் இல்லாமல் போனதால் அப்படியே ரஷ்யமொழி வகுப்பு பாதியில் முடிந்தது.

அந்த நாட்களில் ஐத்மத்தேவை தொடர்ந்து வாசிக்கத் துவங்கினேன். அவரை கார்க்கியோடு ஒப்பிடலாம். ஆனால் கார்க்கியிட மிருந்த நாடோடித்தனம் இவரிடம் குறைவு. அடித்தட்டு மக்களின் மனவுலகை துல்லியமாக பதிவு செய்தவர் கார்க்கி. ஐத்மதேவிடமிருந்தது டால்ஸ்டாயின் தொடர்ச்சி. ஐத்மதேவின் புதிதாக கதை சொல்லும் முறையும் நுட்பமான விவரணைகளையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, முதல் ஆசிரியன் படித்து முடித்த பிறகு பல நாட்கள் அதிலிருந்து மீள முடியாமலிருந்தேன். அப்படியான ஆசிரியர்களை எனக்கு தெரியும்.

ரஷ்யாவில் கம்யூனிச அரசு அமைந்த பிறகு நிலங்கள் பொதுவாக்கப்பட்டு கூட்டுப் பண்ணைகள் உருவாகின. கம்யூனிசம் உருவாக்க விரும்பும் மாற்றங்கள் குறித்து கிராமப்புற மக்கள் வரை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி கம்யூன் ஒரு ஆளை கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறது. அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே இந்த நாவல். அற்புதமாக எழுதப்பட்டு நாவலது. முதல் ஆசிரியனை பின்னாளில் ரஷ்ய திரைப்படமாகவும் பார்த்தேன். ஆனால் நாவல் அளவு என்னால் படத்தில் ஒன்றிப்போக முடியவில்லை. அந்த நாவல் என்னை ஆழமாகப் பாதித்தது.

அதன் தொடர்ச்சியாக ஐமீலாவைப் படிக்கத் துவங்கினேன். சமகால நாவல்களில் முக்கியமான காதல் கதை இதுவே என்பேன். ரஷ்ய இலக்கியத்தில் தனித்துவமான காதல் கதைகள் நிறைய இருக்கின்றன. அதில் எனக்கு மிகவும் பிடித்தது தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள். அதுபோல துர்கனேவின் ஆஸ்யா, செகாவின் டார்லிங். இந்த வரிசையில் ஜமீலாவை சேர்த்துக் கொள்ளலாம். ஜமீலா திருமணமான பெண்ணிற்கு வரும் காதலைச் சொல்கிறது. இசையும் காதலும் ஒன்று சேர்ந்த நாவலது.

அதன்பிறகு அன்னை வயலை வாசித்தேன். ஜமீலாவோடு ஒப்பிடும்போது அன்னை வயல் ஒரு குறுநாவலே. யுத்த பின்புலத்தில் எழுதப்பட்டது. நான் வாசித்த வரையில் சிங்கிஸ் ஐத்மதேவின் உயர் சாதனை என்று குல்சாரியைச் சொல்வேன். பேர்வெல் குல்சாரி என்று ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம் இரண்டு பதிப்புகளையும் வாசித்திருக்கிறேன். நவீன ரஷ்ய நாவல்களில் முக்கியமானது குல்சாரி.
ஐத்மதேவ் மத்திய ஆசிய நிலவியலில் வாழ்ந்த மனிதர்களின் கதையைத்தான் எழுதுகிறார். குறிப்பாக, கிர்கிஸ்ய மனிதர்கள் எந்த அளவு மரபில் ஊறியவர்கள். அவர்களை புத்துலக சிந்தனைகள் எப்படி மாற்றுகின்றன. நவீனமாற்றங்களை வரவேற்று அவர்கள் எப்படி நகர்மயமாக முயற்சி செய்தார்கள் என்பது அவரது கதைகளின் மையசரடாக வெளிப்படுகிறது.

குல்சாரி நாவல் நகரில் வாழும் தன் மகன் மனைவியின் பேச்சை கேட்டுக் கொண்டு தன்னை அவமதிப்பாக உணரும் தனாபாய் என்ற முதியவர் மகனோடு வாழ விருப்பமற்று தன் சொந்த கிராமத்தை நோக்கி குதிரையில் திரும்ப முயற்சிக்கிறார். அவரது கிராமம் °டெப்பி புல்வெளியினுள் உள்ளது. இந்த பயணத்தின் ஊடாக அவருக்கு பழைய நினைவுகள் பீறிடுகின்றன.

நீண்ட பயணம். தனிமை, களைப்பு மற்றும் வயதான தன்மை இதனால் அவரும் குதிரையும் பாதிக்கப்படுகிறார்கள். பலவருடமாக துள்ளித் திரிந்த குதிரை தள்ளாடுகிறது. எப்படி யும் வழியில் இறந்து போய்விடும் என்பதை உணர்ந்த முதியவர் குதிரையோடு தன் கடந்தகால நினைவுகளை பேசத் துவங்கு கிறார். அவரது வாழ்வு குதிரையின் வாழ்வும் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்திருப்பதை நாவல் விவரிக்கிறது.

ஒரு கிராமத்து விவசாயியாகத் தன் வாழ்வைத் துவக்கிய தனபாய் என்னபாடுகளை அடைந்தார், எப்படி அதிலிருந்து தன்னை வளர்த்து கொண்டார் என்பதை விரிவாகப் பேசுகிறது நாவல். இதில் கிர்கிஸ்னுக்குள் அக்டோபர் புரட்சியின் விளைவுகள் ஏற்பட்டது. அதை அவர் எதிர்கொண்ட விதம் மற்றும் கம்யூனிச சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு உறுப்பினராகியது, அதிலிருந்து அவர் நீக்கப்பட்டது. வாழ்வில் தான் கண்டு அடைந்த உண்மைகளுடன் வாழ முற்படுவது என்று ஒரு மனிதனின் அகபுற சிக்கல்களை நாவல் விவாதிக்கிறது.

ஐத்மதேவின் நாவல்களில் வரும் பெண்கள் தைரியசாலிகள். அவர்கள் வாழ்வை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். முன் உணர்ந்து கொள்கிறார்கள். அதன் மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களின் இயல்பான மனவெழுச்சிகள் முக்கியமானவை. கல்வி கிடைக்காத சமூக சூழலிலிருந்து விடுபடும் பெண்கள் எப்படி சுயசிந்தனை மிக்கவர்களாக செயல்படுகிறார்கள் என்பதை அவரது கதைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. நாட்டார் மரபிசையும் நினைவுகளாகத் தேங்கி நிற்கும் பழங்கதைகளும் படைப்பின் ஊடாக வெளிப்படுகின்றன.

தனிநபர்களின் வாழ்வோடு பிரிக்க முடியாதபடி தேசத்தின் சரித்திரமும் நினைவுகளும் கலந்திருக்கின்றன. மனித உறவுகள் பொய்த்துப்போன சூழலில் வாழ்வை முன்செலுத்த இன்றும் நம்பிக்கை தருவதாக இருப்பது நிலமும் நிலப்பரப்பும்தான். எல்லா வலிகளுக்கும் வேதனைகளுக்கும் மாற்றாக நினைவுகள் மட்டுமே துணைநிற்கின்றன.

இயற்கை மனிதர்களால் ஒரு போதும் வெல்ல முடியாதது. அதைப் புரிந்து கொள்ளாமல் இயற்கையை சீரழிக்கிறோம் நாம், இவையே ஐத்மதேவின் படைப்புகளில் திரும்பத் திரும்ப வரும் முக்கிய அம்சங்கள். ஸ்டெப்பி புல்வெளியும் அதன் பிரம்மாண்டத்தையும் கோகலை போல எழுதி யவர்கள் எவருமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் குறிப்பாக, தாரஸ் புல்பா என்ற நாவல் அளவிற்கு நிகராக ஸ்டெப்பியை வேறு எவரும் எழுதிவிட முடியாது என்றிருந்த எனக்கு ஐத்மதேவ் ஸ்டெப்பியை எழுதிய விதம் வியப்படைய செய்தது. அதிலும் ஒரு கிழவனும் குதிரையும் மட்டுமே கடந்துசெல்லும் பிரம்மாண்டமான அந்த பெருவெளியும் சாவின் முன்னால் அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கமும் கடந்த கால நினைவுகளும் அற்புதமானவை.

குதிரைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு விசித்திரமானது. குதிரை வெறும் வளர்ப்பு பிராணியல்ல. அதே நேரம் வெகு மூர்க்கமானதும் அல்ல. குதிரை பயணத்திற்கான தோழன் என்பதில் துவங்கி மெல்ல அந்தரங்கமான ஸ்நேகம் கொண்டு விடுவதை பலரது குறிப்புகளிலும் வாசிக்க முடிந்திருக்கிறது.

தமிழில் குதிரைகளைப் பற்றிய கதைகள் குறைவு. ஆனால் உலக இலக்கியத்தில் குதிரைகளை முன்னிறுத்திய கதைகள் என்றே தனியாக நூறு கதைகள் எடுக்கலாம். அவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக மகனைப் பறிகொடுத்த துக்கத்தை குதிரையோடு பகிர்ந்து கொள்ளும் குதிரை வண்டிக்காரனைப் பற்றிய செகாவின் கதை முக்கியமானது.

ருஷ்ய இலக்கியத்தின் பிரதான ஓசையே குதிரைகளின் காலடிச் சப்தம் தான். தேவால யமணிகளும் குதிரைகளின் காலடி ஓசையும், எளிய மனிதர்களின் கண்ணீரும், வேசைகளின் தூக்கமற்ற இரவுகளும், பகட்டான விருந்துகளும், பனிநிரம்பிய நிலப்பரப்பும், சுயஅடையாளம் குறித்த தேடுதல் கொண்ட மனிதர் களும் தான் ருஷ்ய இலக்கியத்தின் பிரதான அம்சங்கள். ருஷ்ய இலக்கியம் தனக்கென தனியான வாசனை கொண்டது. அதை வாசிக்கையில் உணர முடியும். அதிலும் தஸ்தாயெவ்ஸ்கி போன்றவர்கள் காட்டும் ரஷ்ய உலகம் இருளும் அகநெருக்கடியும் விசும்பலும் நிரம்பியது.

சிங்கிஸ் ஐத்மதேவ் ரஷ்ய மொழியில் எழுதியபோதும் அவரது நினைவுகள் முழுவதும் கிர்கிஸ்தானிய நிலப்பரப்பும் அதன் வாழ்வின் மீதே கவிந்திருக்கிறது. அதன் நாட்டார் கதைமரபு அவரது கதைகளில் வலியுறுத்தப்படுகிறது. ஆடுகள் கிர்கிஸ்தானிய கலாச்சாரத்தில் மிக முக்கியமானவை. குறிப்பாக பலியாடு ஒரு புனித சின்னம். அதுபோல அவரது நாவலில் ரஷ்ய சட்டங்களுக்கு பலியான குறியீடு போல பயன்படுத்தபட்டுள்ளது.

அதுபோலவே கிர்கிஸ்தானிய விளையாட்டான புஷ்காஸி பற்றி விரிவாக ஐத்மதேவ் எழுதியிருக்கிறார். இந்த விளையாட்டில் இரண்டு குழுக்கள் குதிரைகளில் எதிரெதிராக வந்து ஒருவரோடு மற்றவர் சவுக்கால் அடித்து சண்டையிட்டு நடுவில் வைக்கப்பட்டிருந்த ஆட்டின் தலையை கைப்பற்றிக் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு வீர விளையாட்டு. மரபான இந்த விளையாட்டு ஐத்மதேவ் நாவலில் பல இடங்களில் இடம் பெற்றிருக்கின்றது

தமிழில் ராதுகா பதிப்பகத்தால் ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட ஐத்மதேவின் நாவல்கள் தமிழில் சிறந்த வாசக கவனத்திற்கு உள்ளாகியது. குல்சாரியும் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இப்படம் கிராண்ட் பிரிக்ஸ் விருதுபெற்றுள்ளது. இயக்குனரும், நடிகருமான பொன் வண்ணன் ஐத்மதேவின் தீவிர ரசிகர். இவர் தனது திரைப்படங்களுக்கு கூட அன்னை வயல், ஜமீலா என்று பெயரிட்டுள்ளார். அந்த அளவு தமிழ் வாசகர்களிடம் ஐத்மதேவின் நேரடியான பாதிப்பு இருந்தது

சிங்கிஸ் ஐத்மதேவ் கால்நடை மருத்துவம் படித்தவர். சில ஆண்டுகாலம் ரஷ்யாவின் பிராவ்தா இதழில் பணியாற்றியிருக்கிறார். பிறகு கிர்கிஸ்தானிய தூதுவராக பல ஆண்டு காலம் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றியுள்ளார். இவரது மகன் கிர்கிஸ்தானிய அமைச்சரவையில் இடம் பெற்றவர். இலக்கியப் பங்களிப்பிற்காக லெனின் விருது பெற்றவர் ஐத்மதேவ்.

இவரது முக்கிய படைப்புகள் :

Face to Face (1957),
Jamila (1958)
The First Teacher (1962)
The Camel Eye (1960)
Farewell, Gulsary (1966)
Red Apple (1964)
The White Ship (1970)
The Soldier?s Son (1971)
Early Cranes (1975)
Plebald Dog Running Along the Shore (1977)
The Day Lasts More Than A Hundred Years (1980)
The Dreams of a She-Wolf (1990)
The Scaffold (1988)
The Mark of Cassandra (1995)

குல்சாரியைப் படித்து முடிக்கும் எவரும் அதன்பிறகு குதிரையை ஒரு மிருகம் என்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அந்த அளவு ஆழமான பாதிப்பை வாசகனிடம் உருவாக்கிய ஐத்மதேவ் விடைபெற்றுச் சென்று விட்டார். எங்கோ அவர் அறிந்திராத தமிழ் மொழியில் அவரை வாசித்த பல நூறு வாசகர்களில் ஒருவனாக அவரது மரணத்துயரை பகிர்ந்து கொண்டு சொல்கிறேன்.

போய்வாருங்கள் ஐத்மதேவ். உங்களது ஐமீலாவும் குல்சாரியும் உள்ளவரை நீங்கள் உலகெங்கும் இருப்பீர்கள். குதிரைகளுடன் பேசத் தெரிந்த அற்புதமான மனிதன் நீங்கள். அது எங்கள் நினைவில் அப்படியே இருக்கிறது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com