Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
ஆசிரியர் பக்கங்கள்

அமெரிக்காவின் அராஜகம்

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமெரிக்க விமானப்படை பாகிஸ்தானியப் பகுதியில் குண்டு வீசித்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கனிலுள்ள அமெரிக்க தளங்களிலிருந்து விமானப்படை பறந்துவந்து தாக்குகிறது. பாகிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் இருப்பதாய்க் கூறித் தாக்கி வருகிறது.

பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரம் அழிந்து மக்களாட்சி மலர்ந்துள்ள வேளையில் அமெரிக்கா தாக்குதலில் இறங்கியுள்ளதை பாகிஸ்தான் அரசு கண்டித்துள்ளது. ஆனால், அமெரிக்கா எந்த நாட்டிற்குள்ளும் பயங்கரவாதிகளுக்கெதிராக நாங்கள் தாக்குதல் தொடுப்போம் என்று திமிராய்ப் பேசுகிறது. பாகிஸ்தானிய அரசு தனது எல்லைக்குள் அத்துமீறி அமெரிக்கப் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று அறிவித்து எல்லைக்கு ஏராளமான படைகளை அனுப்பியுள்ளது.

நீண்ட காலம் அமெரிக்கப் பிடியில் இயங்கிய பாகிஸ்தானில் அடுத்து என்ன நிகழப் போகிறதோ என்று பாக். மக்கள் கோபமும் கவலையும் அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் வீழ்ந்த மனிதர்கள்

நேபாளத்திலிருந்து வரும் கோசி நதி அங்குள்ள அணையை உடைத்துக் கொண்டு பீகாருக்குள் அத்துமீறிப் பாய்ந்தது. வரலாறு காணாத வகையில் முப்பது லட்சம் மக்கள் தங்கள் வீடு வாசல் கால்நடைகளை இழந்து ஏதுமற்றவர்களாகித் தவிக்கிறார்கள். 1875, 1940க்குப் பிறகு ஏற்பட்ட பெரு வெள்ளம் இது.

வழக்கம்போல் மாநில அரசும் மத்திய அரசும் சோத்துப் பொட்டலங்களைக் கொடுத்து கண்துடைப்பு நிவாரண வேலைகளைச் செய்தனர். ஆனால் நதியின் சீற்றத்தால் நிர்மூலமாகிப் போன மக்கள் தங்கள் வாழ்வை மீண்டும் எப்படித் துவங்கப் போகிறார்கள்? விடை காண முடியாத கேள்வி இது.

இந்தியாவில்தான் ஆண்டுதோறும் விவசாயிகள் ஒருபுறம் வறட்சியாலும், மறுபுறம் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு அழிகிறார்கள். சீனாவின் துயரம் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட மஞ்சள் நதியை அங்குள்ள கம்யூனிஸ்ட்ஆட்சி தேவையான அணைகளைக் கட்டிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆனால், இங்கோ ஆட்சியாளர்கள் வெள்ள நிவாரண நிதியிலும், வறட்சி நிவாரண நிதியிலும் பங்கு போடுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

மன்மோகன் சிங் துரோகம்

மன்மோகன்சிங் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவுக்கு அடகு வைத்ததை அமெரிக்காவே அம்பலப்படுத்தியது. ஜார்ஜ் புஷ் இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு எழுதிய கடிதம் மூலம் இது அம்பலமாகி விட்டது. தொடர்ந்து அணுசக்தி எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகளின் (NSG) ஆறு நிபந்தனைகளையும் இந்தியா ஏற்றுள்ளது. கூடவே பிரணாப் முகர்ஜி அணுகுண்டு வெடிப்பு சோதனையில் ஈடுபடமாட்டோம், சுயகட்டுப்பாட்டுடன் இருப்போம் என்று அறிவித்திருக்கிறார். ஆனாலும் என்.எஸ்.ஜி நாடுகள் எந்த நேரத்திலும் இந்தியாவுக்குத் தங்கள் எரிபொருள் சப்ளையை நிறுத்த முடியும். சோனியாவும், மன்மோகனும் சேர்ந்து இந்தியாவை அமெரிக்கா வுக்கு அடகு வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் கார்ட்டெல் கம்பெனிகள் இந்தியாவைக் கொள்ளையடிக்க வரப் போகின்றன. இதை எதிர்ப்பதற்கு இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகளை விட்டால் நாதியில்லை.

இந்தியாவில் ஏராளமாகக் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு அணுசக்தியை உருவாக்கலாம் என்று கூறிய முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமும் அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலாய்ப் பறக்கிறார். குமரி மாவட்டத்தில் தோரியம் கலந்த மணலை வைகுண்டராஜன் என்பவர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாய்ப் புகார் எழுந்தது. ஆட்சி மாறினாலும் அவரது கைங்கரியம் தொடருவதாகவே தகவல். கிடைத்தவரை ஆதாயம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாயிருக்கிறார்கள் என்பதையே அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது. இப்படி நாட்டையே அமெரிக்காவுக்கு அடகு வைப்பது சாமானிய மக்களுக்கு ஒன்றும் புரியாது என்பது மத்திய அரசுக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட்.

பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது

பிஜேபி ஆளும் மாநிலங்களில் மதவெறி பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள தற்போதைய நிலையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சில நகரங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். அதிலும் தலைநகரில் ஐந்து இடங்களில் குண்டுகள் வெடித்து 24 பேர் கொலையுண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். டில்லி மக்கள் குடல் பதறி வாழ வேண்டிய நிலை.

பயங்கரவாதிகளை வெறும் தீவிரவாதிகளாகவே பார்க்கும் மத்திய அரசும், உளவுத்துறையும் பரிதாபமாக பல்லை இளித்து நிற்கிறார்கள். அவர்களின் தலைநகரமே குண்டு வெடிப்பில் சிதறினாலும் கவலையின்றி வாழ்கிறார்கள். ஏனெனில் சாகிறவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தானே. அவர்கள் வீட்டுப் பெண்டு பிள்ளைகள் பாதுகாப்பாகப் பத்திரமாக இருக்கிறார்களே, அது போதாதா? உளவுத்துறையும் காவல்துறையும் அப்பாவி மக்கள் என்றால் புடைத்தெடுப்பதும், பயங்கரவாதிகளைக் கணக்கிலெடுக்காமல் விடுவதும் ஏன்? காரணமென்ன? ஆளுவோரின் அலட்சியமே.

குஜராத் வழியில் ஒரிசா

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முதலில் சிவில் சமூகத்தை (குடிமக்கள்)க் கைப்பற்ற வேண்டுமென்பது பாசிஸ்டுகளின் திட்டமாகும். இது இட்லர் காலத்தில் அவனால் தோற்றுவிக்கப்பட்டது. அதையே இந்திய மண்ணில் ஆர்.எஸ்.எஸ். தனது சங்பரிவாரங்கள் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கென மதவெறிக் கலவரங்களை நடத்தி குஜராத்தில் வெற்றி கண்டது. இதற்கென மோடி ஆட்சி அரசு எந்திரம் முழுவதையும் பயன்படுத்தியது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் சூழலில் அடுத்து ஒரிசாவைக் கைப்பற்றும் நோக்கத்துடன் களமிறங்கி அரசு எந்திரத்தின் உதவியோடு கிறிஸ்தவ மக்களைத்தாக்கிக் கொலை செய்து வருகிறது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து முஸ்லிம்களை நர வேட்டையாடியது. ஒரிசாவில் கந்தமால் பகுதியில் லட்சுமணானந்தா என்ற சாமியார் கொலை செய்யப்பட்டதைக் காரணமாக்கி கிறிஸ்தவர்களை நரவேட்டையாடி வருகிறது. இதன் மூலம் இந்துக் குடிமக்களை முழுமையாகக் கைப்பற்ற முயற்சிக்கிறது. மத்திய அரசு வழக்கம் போல் வேடிக்கை பார்க்கிறது.

பாசிஸ்ட்டுகள் எப்போதும் ஒரு பயங்கரத்தை நிகழ்த்தி விட்டு பழியைத் தங்கள் எதிரிகள் மீது சுமத்துவார்கள். இட்லர் ரீச்டாக் மாளிகையைத் தனது ஆட்களை விட்டுக் கொளுத்திவிட்டு பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தினான். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு மோடியின் சதி என்பது பின்பு அம்பலமானது. ஒரிசா கொலை மீதும் சந்தேகம் வருகிறது. ஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் பிஜேபி ஆட்சி நடப்பதால் அங்கும் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் நாமக்கல் அருகே ஒத்திகையைத் துவக்கியுள்ளனர்.

மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு இந்தச் சதிகளை முறியடிக்காவிட்டால் மதவெறியர்களின் கை ஓங்கும் அபாயம் தொடர்கிறது.

ஈராக் - அமெரிக்கா முகத்தில் கரி

அமெரிக்காவுக்குக் கேடுகாலம் பலவழிகளிலும் வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க வங்கிகள் தரைமட்டமாகி வருகின்றன. அமெரிக்க இன்சூரன்சுக் கம்பெனிகள் திவாலாகி வருகின்றன. ஈராக் எண்ணை வளத்தைக் கொள்ளையடிக்க ஜார்ஜ் புஷ் அங்கு லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து நாட்டையே கைப்பற்றினான். ஷியா - சன்னி பிரிவு மக்களை மோதவிட்டு அந்நாட்டு அதிபர் சதாம் உசேனைத் தூக்கிலிட்டுக் கொன்றான். பின்பு ஷியா பிரிவினரின் பொம்மை ஆட்சியை உருவாக்கினான். ஆனால் பொம்மைக்கு உயிர் வந்து விட்டது!

தற்போதைய ஈராக்கிய அரசு அமெரிக்க ராணுவம் 2009ல் நகரங்களை விட்டு வெளியேற வேண்டுமென்றும், 2011ல் முழுமையாக வெளியேறி விடவேண்டுமென்றும் கூறிவிட்டது. 28.8.2008-ல் சீன அரசுடன் ஈராக் அரசு ஒரு ஒப்பந்தம் செய்து விட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 3 பில்லியன் டாலர்களாகும். பாக்தாத் நகருக்குத் தென்கிழக்கில் 160 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அதாப் எண்ணெய் வயலை சீனாவிடம் வழங்கியுள்ளது. தினசரி 25,000 பீப்பாய் எண்ணெய் எடுத்து ஈராக்கில் 1320 மெகாவாட் மின்உற்பத்திக்கு உதவ வேண்டும் என்று ஆரம்பிக்கிறது ஒப்பந்தம். இது மேலும் தொடரும். மேலும், தனது அண்டை நாடான ஈரானுடன் நல்லுறவைப் பேணும் நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளது. அமெரிக்க ராணுவத் தந்திரங்கள் தோல்வியடைந்து பெர்சிய வளைகுடா பிராந்தியத்திலிருந்து அது விரட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஜார்ஜியா - புதின் எச்சரிக்கை

அமெரிக்கத் தூண்டுதலின் பேரில் ஜார்ஜியா தெற்கு ஒசெட்டியா மீது படையெடுத்தது. ரஷ்யா போரில் இறங்கி இரு தினங்களிலேயே ஜார்ஜிய ராணுவத்தை விரட்டி தெற்கு ஒசெட்டியாவைக் காப்பாற்றியது. மேலும் தெற்கு ஒசெட்டியாவையும், அப்ராசியாவையும் தனி நாடுகளாக அங்கீகரித்தது.

சோவியத் யூனியன் சிதறிய பின் ரஷ்யாவில் இணைந்திருந்த நாடுகளை அமெரிக்கா தனது ராணுவக் கூட்டாளிகளாக்கியது. ஜார்ஜியா அதில் ஒன்றாகும். அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஏவுகணைகள், ஆயுதங்களை ஜார்ஜியாவுக்கு ஏற்றிச் சென்றன. ரஷ்யப் பிரதமர் புதின் அமெரிக்காவை வன்மையாகக் கண்டனம் செய்ததோடு ஜார்ஜிய அதிபர் சார்கோசியை ஒரு புத்திசுவாதீனமற்றவன் என்று வர்ணித்தார்.

ரஷ்யாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் ஏவுகணை வளையத்தை நாங்கள் நினைத்தால் அரை நொடியில் தகர்த்து விடுவோம் என்று ரஷ்ய அதிபர் மெத்வதேவ் மிரட்டியுள்ளார். இது அமெரிக்காவுக்குச் சரியான ஆப்பு என்று பல நாடுகள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

- செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com