Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
அக்டோபர் 2008
இளமதி பதில்கள்

எம்.தனபாலன், ஈரோடு

இலக்கிய, இலக்கணங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழறிஞர்கள் தமிழுக்குச் சேவை செய்கிறார்கள். படித்த ஒரு சாமான்யத் தமிழனின் தமிழ்ச்சேவை பற்றிச் சொல்லுங்களேன்?

எழுத்துப்பிழை, சொற்பிழை, வாக்கியப்பிழை ஏதும் இல்லாமல் தமிழ்மொழியை இலக்கணச் சுத்தத்துடன் எழுதுவதும், அவ்வாறு எழுத அக்கறையுடன் முயற்சி செய்வதும் படித்த ஒரு சாமான்யத் தமிழனின் தமிழ்ச் சேவைதான்! செம்மொழித் தமிழைச் செம்மையுற எழுதுவதும் தமிழுக்குச் செய்யும் சேவைதானே?



க. பா.குணசேகரன், கொடுமுடி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பிரச்சாரக் கவிஞன் என்று என் நண்பர் கூறுகிறார்...

இவ்வாறு சொல்வது கூட ஒரு பிரச்சாரம்தான். பிரச்சாரம் இல்லாத இலக்கியம் ஏது? இலக்கியங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு கருத்தை, நோக்கத்தை, கொள்கையை, போதனையை... அல்லது இவை ஏதும் இல்லாவிட்டாலும் ஒரு சேதியையாவது சொல்லிக் கொண்டு தான் பிறக்கின்றன - பிறந்திருக்கின்றன. அந்த இலக்கியம் சொல்வது முற்போக்கானதா, மனித நேயமிக்கதா அல்லது பிற்போக்கானதா - இவற்றைத் தாங்கி வரும் அந்தப் படைப்பு கலைத்தரத்துடன் வெளிப்பட்டுள்ளதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். ‘வேண்டாம் இது பிரச்சாரம் என்று சொன்னால் எதுவுமே மிஞ்சாது! சொல்லப் போனால், குறியீடு, கூடார்த்தம் என்று சொல்லிக் கொண்டு பிறக்கும் வக்கிர பாலியல், மன உளைவுக் கவிதைகள் உள்பட மிஞ்சாது!

“காடு வெளஞ்சென்னா மச்சான் - நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்” என்ற விரக்தி மனசுக்கு நம்பிக்கையூட்டி, “காடு வெளயட்டும் பெண்ணே - நமக்குக் காலம் இருக்குது பின்னே” என்று சொன்னவன் மக்கள் கவி பட்டுக்கோட்டை. முற்போக்கான கருத்து உள்ளடக்கமும், அதைச் சொல்வதில் கவித்துவ நேர்த்தியும் கொண்ட இத்தகைய பாடல்கள் - கவிதைகள் வெறும் பிரச்சாரம் என்றால்.. இத்தகைய பிரச்சாரம் இன்று மக்களுக்கு நிறைய தேவை!



பி.கே. பானுமதி, கொடைக்கானல்

அறிவியலும் தொழில்நுட்பமும் மிக வேகமாய் வளர்ந்து வரும் சூழலில் அழகியலாகிய கவிதைக்கு எதிர்காலம் உண்டா?

கவிதைக்கு எதிர்காலமும் உண்டு; எல்லா காலமும் உண்டு. அறிவியல் - தொழில்நுட்ப வெள்ளத்தில் கவிதை விருட்சம் அடித்துச் செல்லப்பட்டு விடாது! அறிவியலும் அழகியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மனிதனுக்கு அறிவியல் மனசு இருப்பது போல் அழகியல் மனசும் உள்ளது. அறிவியலாளர்கள் கூட கவிதை வடித்திருக்கிறார்கள். நிலவுக்கு ‘ராக்கெட்’ விட்ட விஞ்ஞானிகளும் அந்தக் குளிர் பால்நிலாவின் ஒளியில் மனம் சொக்கியிருப்பார்கள். அந்த ரசனை உள்ளம்தான் கவிதையின் ஊற்று. நாளை கவிதையின் வடிவம் மாறலாமேயன்றி கவிதை இலக்கியம் என்பது நிலைபேறு பெற்றதாய் வாழும்! அறிவியல், தொழில் நுட்ப வேக முன்னேற்றத்துடன் சேர்ந்து கவிதையின் பயணமும் தொடரும்.



எஸ்.பழனிச்சாமி, திருச்சி - 3

திபெத் என்ற ஒரு மாபெரும் தேசத்தையே தங்களுடையது என்று சொல்லிப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் சீனாவுக்கு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்குத் தகுதியுண்டா என்று எழுத்தாளர் சாருநிவேதிதா கேட்டுள்ளாரே?

ஆமாம்! அவர் எழுதி, பத்திரிகையொன்றில் வெளிவந்துள்ள கட்டுரையில்தான் இப்படியொரு அபத்தமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் இந்த மனிதர். அவரின் அதே கட்டுரையில் இப்படியும் எழுதியிருக்கிறார்: ‘திபெத் காரணமாகவும், உள்நாட்டில் அடிப்படை மனித உரிமைகள் இல்லாததன் காரணமாகவும் உலக அளவில் சரிந்துவிட்ட தனது இமேஜைக் கட்டி எழுப்பும் காரணத்திற்காகவே சீனா இந்த ஒலிம்பிக்கைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது’. ஆகா! என்னே கண்டுபிடிப்பு! சோசலிச நாடு ஒன்றைக் குறிவைத்து இப்படி அவதூறுகள் பொழிவது என்பது ஒன்றும் புதிதல்ல. அதையேதான் சாருநிவேதிதாவும் செய்துள்ளார். 100 கோடி மக்கள் தொகையைத் தாண்டி விட்ட இந்தியா ஒரே ஒரு தங்கம்தான் வாங்கியிருக்கிறது என்பதற்கு நமது நாட்டில் எங்கும் வியாபித்திருக்கும் ஊழலே காரணம் என்கிறார் இவர்.



அப்படியென்றால் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களைக் குவித்து முதலிடத்தில் வந்து, தலைநிமிர்ந்து நிற்கும் சீனாவில் இந்தியா போன்றதொரு ஊழல் நிலைமை இல்லை என்பதுதானே பொருள். இதை ஏன் இவரால் பாராட்டி ஒரு வரி சேர்க்க முடியவில்லை. இவருக்குத் தெரியாது என்பதல்ல... நல்ல விஷயம் என்றால் அதை மூடி மறைக்கிறார் என்பதுதான் உண்மை. இவருக்குச் சரியான சாட்டையடிபோல அதே இதழின் தலையங்கத்தில் அதன் ஆசிரியர் இப்படிச் சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. வெறும் சர்வாதிகாரத்தில் மட்டும் வளர்ச்சியைக் கொண்டு வருவது சாத்தியமல்ல, உலகின் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு தனது வளங்களையும் ஆற்றல்களையும் எவ்வாறு திட்டமிட்ட வகையில் முறையாகப் பயன்படுத்தியது என்பதைக் கற்றுக் கொள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏராளமான பாடங்கள் இருக்கின்றன’- இது எப்படி இருக்கு?



கிருஷ்ணமூர்த்தி,தென்காசி

‘உயிர்மை’யில் வந்த வ.மு.கோமுவின் சிறுகதையைப் படித்தீர்களா?

இலக்கியம் என்பது வாழ்க்கையின் சகல பகுதியினரையும் பதிவு செய்வதற்குத் தயங்காத ஒன்றுதான். பாலியல் தொழிலாளி பற்றிய படைப்பென்றாலும் அது அத்தொழிலில் தள்ளப்பட்ட பெண்களின் மீது வாசகனுக்கு ஒரு அனுதாபத்தினையோ அல்லது இப்படிப்பட்ட தொழில் நடக்கக் காரணமாக இருக்கிற இந்த சமுதாயத்தின் மீது ஒரு கோபத்தினையோ ஏற்படுத்த வேண்டும். மாறாக அவலம் நிறைந்த ஒரு வாழ்க்கையைச் சித்தரிக்கிறேன் என்று வேஷம் கட்டிக் கொண்டு கீழ்த்தரமான கிளுகிளு சமாச்சாரத்தை அவிழ்த்து விடக் கூடாது. வ.மு.கோமு இப்படியொரு காரியத்தைத் தான் செய்திருக்கிறார். சாக்கடையை பேனாவில் நிரப்பிக் கொண்டு எழுத வருபவர்களை என்னவென்பது? இந்த லட்சணத்தில் இவர்களைப் போன்றவர்கள்தான் முற்போக்காளர்களைப் பார்த்துப் பகடிகள் பேசுகின்றனர்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com