Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
பழைய சீர்திருத்தப் பெருமைகளை மட்டும் பேசிப் பயனில்லை!

வி.என்.முரளி

புரோகமன கலா சாகித்ய சங்கம் என்பது கேரளத்தின் முற்போக்குக் கலை - இலக்கிய சங்கமாகும். இதன் பொதுச் செயலாளர் வி.என்.முரளி. அண்மையில் தமுஎசவின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த இவரை செம்மலர் சார்பில் சந்தித்த போது....

செம்மலர்: மலையாள முற்போக்கு இலக்கிய உலகம் குறித்துச் சொல்லுங்கள்...

முரளி: கேரளத்தில் முற்போக்கு இலக்கிய இயக்கம் வலுவான அடித்தளம் கொண்டதாக உள்ளது. தொடக்க கால கட்டத்தில் அது பெரிய எதிர்ப்பை எதிர்கொண்டே வளர வேண்டியிருந்தது. 1937-ல் முற்போக்கு இலக்கிய அமைப்பு கேரளத்தில் உருவானது. அப்போது அதன் பெயர் ``ஜீவல் சாகித்ய சங்கடன்'' (ஜீவ இலக்கிய சங்கம்) என்பதாக இருந்தது. அப்போது அகில இந்திய அளவில் உருவாகியிருந்த முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் தாக்கத்தில் உருவானதுதான் இந்த கேரள சங்கம். 1935-ல் பாரிசில் உருவான சர்வதேச சங்கத்தின் தாக்கத்தால் இவை எல்லாம் நம் மண்ணில் உருவானது. அப்போது அது மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்தது. மலையாள இலக்கிய விமர்சகர் சஞ்சயன் என்பவர் அப்போது கடுமையாக எழுதுவார். அவர் சொல்வார், ``முற்போக்கு இலக்கியவாதிகளுக்கு மூளை இல்லை, மாறாக வயிறு மட்டுமே உண்டு'' என்று. காரணம், அவர்கள் மனிதர்களின் பசி, பட்டினி, வறுமை குறித்து மட்டுமே பேசுகிறார்கள். எனவே அவர்களுக்கு வயிறு மட்டும்தான் இருக்கிறது என்பது அவர் போன்றவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. மனிதனின் பிரதான உறுப்பு அவர்களுக்கு வயிறு மட்டும்தான் என்று கேலி பேசினார்கள். முற்போக்காளர்கள் வயிற்றையே மூளையாக நினைத்துக் கொள்பவர்கள் என்று சொன்னார்கள்.

மலையாளத்தில் குட்டி கிருஷ்ணமாரார் என்றொரு பிரபலமான விமர்சகர் இருந்தார். ``ஐம்பது பைசா வைத்திருப்பவனை ஒரு ரூபாய் உள்ளவனுக்கு எதிராகத் தூண்டி விடுவதே இவர்கள் வேலை" என்று இந்த மாரார் எழுதினார். இப்படிப்பட்ட பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் முற்போக்கு இலக்கியம் வளர வேண்டியிருந்தது. தகழி, கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி போன்ற பல எழுத்தாளர்கள் நாவல், நாடகத்துறை சார்ந்தவர்கள், அதேபோல வி.டி.பட்டதிரிபாடு போன்றவர்கள் எழுதிய நாடகங்கள் என்று சமுதாய உணர்வுள்ள பெரிய இயக்கமாக மலையாளத்தில் முப்பதுகளில், நாற்பதுகளில் இந்த இயக்கம் வளர்ந்தது. அவ்வாறு வளர்ந்து முற்போக்கு இலக்கியத்திற்கானதொரு வலுவான இடம் மலையாள இலக்கியத்தில் உண்டானது.

இன்று நமது முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கு அந்தளவு எதிர்ப்பென்பது இல்லை. அதுதான் இந்த இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி. ஆரம்பத்தில் அதற்கிருந்த எல்லாவித எதிர்ப்புகளையும் அது வெற்றி கொண்டிருக்கிறது. எழுத்து எதுவானாலும், ரசனை எதுவானாலும் அவை எல்லாம் சமூகம் சார்ந்த இயக்கம்தான் என்று நிறுவுவதற்கான வலிமை நமக்கு இன்று கிட்டியுள்ளது. முன்னர் ஒரு படைப்பு மட்டுமே பேசப்பட்டது. இன்று அதன் முன்னும், பின்னுமுள்ள பின்புலங்கள், அது உருவானதன் பின்னணியோடு அதனை நோக்கும் வழமையும் முற்போக்கு இயக்கத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டது. எழுத்துக்கும் அதன் கால, தேச, வர்த்தமானப் பொருத்தப்பாடுகளுக்குமான உறவைப் பார்க்க வேண்டிய அவசியத்தை முற்போக்காளர்களே °தாபித்தார்கள். அவர்களே இப்படிப்பட்டதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படைப்பு எதுவானாலும் அதன் சமூக செயல்பாடு குறித்த விஷயத்தில் இன்று விவாதத்திற்கு இடமில்லை. சமூகம் என்பது ஒரு வர்க்க சமூகமாக இருக்கிறது. இருப்போரையம், இல்லாதோரையும் அது கொண்டிருக்கிறது. படைப்பாளி இதில் எவர் பக்கம்? பெருவாரியாய் படைப்பாளிகள் ஏதுமற்ற ஏழை ஜனங்களின் பக்கம் நிற்க வேண்டுமென்று முற்போக்கு இலக்கிய இயக்கம்தான் அறைகூவிற்று.

அறுபதுகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய இலக்கியத்தில் நவீனத்துவம் என்பது ஆக்னிகதா பிர°தானம் என்று முன்னுக்கு வந்தது. இது ஒரு அராஜகவாதம், அரசியல் மறுப்பு வாதம், சமூக உணர்வு இல்லாத போக்கு என்று உருவான எல்லா இலக்கியப் போக்குகளையும் தீரத்தோடு எதிர் கொண்டு, அவற்றைத் தோற்கடித்தது முற்போக்கு இலக்கிய இயக்கமாகும்.

அன்றைய முற்போக்கு இலக்கிய சங்கத்தின் பெயர் ``தேசாபிமானி °டடி சர்க்கிள்'' (தேசாபிமானி வாசகர் வட்டம்) ஆகும். அது எண்பதுகளில் - மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், 1981-ல் அது முற்போக்குக் கலை -இலக்கிய சங்கமாக மாறியது. இதன் தலைவராக வைலோபுள்ளி ஸ்ரீதரமேனன் இருந்தார். அவர் மிகவும் பிரபலமான கவிஞர். சமூக அக்கறைமிக்க படைப்புகளை இச்சங்கம் உருவாக்கியது. எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம் என்று இச்சங்கம் வலியுறுத்தியது. இந்த சமூகப் பொறுப்பை இன்னுமொரு படி உயர்த்தி அதனை ஒரு அரசியல் பொறுப்புணர்வாக அபிவிருத்தி செய்ய வலியுறுத்தியது. ஆக `ஒரு எழுத்தாளர் பொறுப்புள்ள எழுத்தாளராகத் தன்னை ஆக்கிக் கொள்க; சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளராக வளருக; அதன் தொடர்ச்சியாக அரசியல் பொறுப்புணர்வுள்ள படைப்பாளியாக உயருக!' என்று வலியுறுத்தியது. ஒரு பிரச்சனைக்குச் சரியான தீர்வு சொல்லும் வகையில் படைப்பாளி மாற வேண்டும் என்றது. அரசியல் என்பது தேசத்தைக் குறித்தான ஒரு அக்கறைப்பூர்வமான கவலை என்பதாகும். எனவே, அரசியல் என்பது அவசியமானது. இலக்கியம் என்பதே ஒரு (கிருஷ்ட ராஷ்ட்ரீயப் பிரவர்த்தனம்) அரசியல் பணிதான். அந்த விதமான சிந்தனைகளை இலக்கியத்தில் கொண்டு வருவதற்கு முற்போக்கு இலக்கிய இயக்கம் கேரளத்தில் முயன்றது.

செம்மலர்: முற்போக்கு இலக்கிய இயக்கம் தற்போது அங்கே மேற்கொண்டு வரும் பணிகள் பற்றிச் சொல்லுங்களேன்...

முரளி: வகுப்புவாத எதிர்ப்பினை தற்போது முற்போக்கு இலக்கிய இயக்கம் முக்கியப் பணியாகக் கொண்டுள்ளது. சிறுபான்மை இனத்துக்கு எதிரான கொலை பாதகங்களை எதிர்த்து, பயங்கரவாதத்தை எதிர்த்து கலைப்படைப்புகளிலும், கவிதை, நாடக வடிவங்களிலும், மேடைகளிலும் நாங்கள் ஒருமித்து முழங்கி வருகிறோம். இப்போது ஒரிசாவில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்தும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். முன்பு குஜராத் கலவரம் நடந்த போதும் நாங்கள் இலக்கியப் படைப்புகள் வாயிலாக எங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தோம். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் எங்களின் இயக்கத்துக்குத் தலைவர். ஒரிசாவில் நடப்பது சிறுபான்மை கிறி°துவர்களுக்கெதிரான இனப்படுகொலைதான். கிறி°தவ மதத்தைத் தழுவியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மறு மதமாற்றம் செய்கிற ஒரு முயற்சிதான் இது. இதனை ஊடகங்களில் மதமாற்றம் குறித்த பிரச்சனை என்று சொல்கிறார்கள். இது ஒரு பாசி°ட் தந்திரமாகும். சங் பரிவார் இந்த மறுமதமாற்றத்தை `கர் வாப்ப°' என்றழைக்கிறது. இதற்கு `வீடு, திரும்புதல்' என்று பொருள். `வீடு என்றால் அது இந்துத்துவா. நாற்பதினாயிரம் ஆதிவாசி கிறி°தவர்களை அவர்கள் இவ்வாறு மறுமத மாற்றம் செய்திருக்கிறார்கள். எங்களுடைய அச்சமெல்லாம் இந்த `வீடு திரும்புதல்' இயக்கம் தமிழ்நாட்டுக்கோ, கேரளத்துக்கோ வந்தால் என்னாவது என்பதுதான். கேரளத்தில் 46 சதவீதம் பேர் சிறுபான்மையினர். ஏறக்குறைய இந்துக்களுக்குச் சமமாக இ°லாமியர்களும், கிறி°தவர்களும் உள்ளனர். இந்த `வீடு திரும்புதல்' இயக்கம் மிகவும் ஆபத்தானதாகும். சிறுபான்மையினர்களைப் பார்த்து அவர்கள் `நீங்கள் இந்துவாக மாறுங்கள் அல்லது மரணத்தைத் தழுவுங்கள்' என்றுதான் சொல்லாமல் சொல்கிறார்கள். ஒரிசாவில் கிறி°தவ தேவாலயங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக்கியிருக்கின்றனர். சிலுவைகளை அகற்றி விட்டு அந்த இடத்தில் காவிக் கொடிகளைக் கட்டி வைத்தனர். இன்னமும் பல தேவாலயங்களில் அங்கே அந்தக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. கலவரம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்த பின் நாங்கள் அங்கே சென்று பார்த்தோம். கொடிகள் பறந்து கொண்டு தானிருந்தன. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை காரணம், அங்கே சட்டம், ஒழுங்கு என்பதே இல்லை; சட்டத்தின் ஆட்சியே இல்லை. சங் பரிவார் கூட்டம்தான் எல்லாவற்றிலும் சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறது. எனவே, நாங்கள் எங்கள் மாநிலத்தில் மதவெறிக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேருவோம் என்று முழங்கி வருகிறோம். மத நம்பிக்கையுள்ள ஒரு சாதாரண மனிதர் வகுப்புவாதியல்ல, மத நம்பிக்கை என்பதும், வகுப்புவாதம் அல்ல. மாறாக, வகுப்புவாதி என்பவன் யார் என்று கேட்டால், மதத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பிடிக்க முயலுபவன் வகுப்புவாதியாவான்; மதவெறியைத் தூண்டி விட்டு அதனால் ஆட்சிக்கு வர நினைப்பவன் மதவாதி+ வகுப்புவாதியாவான். அவனைத் தனிமைப்படுத்துவதற்காக மத நம்பிக்கையாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களும், மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து நிற்கும் சக்திமிக்க ஒரு பண்பாட்டு இயக்கத்தை உருவாக்க கேரளத்தில் முற்போக்குக் கலை - இலக்கிய சங்கம் பெரு முயற்சி எடுத்து வருகிறது. அத்துடன் தீவிரவாதம், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்க எண்ணும் ஏகாதிபத்திய சதிகள் இவை எல்லாவற்றுக்கும் எதிராக மக்கள் இன்னும் வீறு கொண்டு எழுவதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். வகுப்புவாத யுத்தத்தில் மக்கள் பலியாகி விடக்கூடாது என்பதே நம்முடைய கவலையாக இருக்கிறது. மும்பை குண்டுவெடிப்பின் போது, நம்முடைய உணர்வு இப்படித்தான் இருந்தது.

சூடானைப் போல, லெபனானைப் போல, தற்போது இராக்கைப் போல, ஒரு இனத்திற்கெதிரான யுத்தததில் நம்முடைய தேசமும் வீழ்ந்து விடக்கூடாது என்பதே நமது கவலை. இராக்கில் பத்து லட்சம் மக்கள் இதுவரையில் மரித்துள்ளனர். பண்டிட் ஜவகர்லால் நேரு மதச்சார்பற்ற ஒரு தலைவர். அவர் ஒரு முறை கவலையுடன் இப்படிச் சொன்னார்:

``இந்தக் கலவரங்களினால் இந்தியா செத்தால் யார்தான் பிறகு வாழ்வது? இந்தியா வாழ வேண்டும் என்று நாம் விரும்பினால் பிறகு யாருக்காக இந்த மரணங்கள்?'' என்று கேட்டார். எனவே, இந்தியா இறந்து போகாது காக்கப்படவே எங்களது மதச்சார்பற்ற இந்த இயக்கங்கள். வகுப்புவாதிகளைத் தனிமைப்படுத்தவே நாங்கள் பெருமுயற்சி செய்கிறோம். நம் முன்னோர்கள் ஏற்படுத்திச் சென்றிருக்கும் மறுமலர்ச்சிகளின், சமூக சீர்திருத்தங்களின் மதிப்பீடுகளின் மீது பாசி°ட்டுகள் தாக்குதல் தொடுத்து வரும் சமயம் இது. இதனை எதிர் கொள்ள நாம் நமது பழைய சீர்திருத்த மதிப்பீடுகளின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இன்று நமக்குத் தேவை இரண்டாவது சீர்திருத்த இயக்கம். பாசி°ட்டுகள் முன்வைக்கும் வகுப்புவாத அடிப்படையிலான மறு சிந்தனைகளுக்கு எதிரான புதிய மறுமலர்ச்சி சிந்தனைகள் என்றே நாங்கள் முழங்குகிறோம். கேரளத்தின் சமூக சீர்திருத்த சிந்தனையாளர் ஸ்ரீநாராயண குரு முன்பு சொல்வார். ``இனி நமக்குத் தேவை ஆலயங்களல்ல, கல்விச் சாலைகள்தான்'' என்பார். ``புதிய சர°வதி ஆலயங்களே நமக்குத் தேவை'' என்பார். அவரது சீர்திருத்த இயக்கம் கேரளத்தில் பெரிய தாக்கங்களை அன்று ஏற்படுத்தியது. ஆனால், இன்று மதவாதிகள் பள்ளிக்கூடங்களை கோவில்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளில் கடவுள் வணக்கம் தொடங்கி, பல்வேறு மத நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். ஆதாரங்களற்ற மற்றும் தவறான ஆதாரங்களுடன் கூடிய மூட நம்பிக்கைகளைப் பள்ளிகளில் பரப்புகிறார்கள். எனவே, கேரளத்தின் முற்போக்கு இயக்கமென்பது இதற்கு எதிராக, இப்போது போராடுவதையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது.

செம்மலர்: படைப்புகளின் வாயிலாக மட்டுமே இந்தப் போராட்டத்தை நடத்துகிறீர்களா அல்லது களத்திலிறங்கி வேறு ஏதேனும் இயக்கங்களையும் மேற்கொள்கிறீர்களா?

முரளி: ஆமாம். ஒரு மிகப்பெரிய பண்பாட்டு நடைப்பயணத்தை இதற்காக அண்மையில் நடத்தியிருக்கிறோம். மாநிலந்தழுவிய இந்தப் பயணம் 14 நாட்கள் நடத்தப்பட்டது. கேரளத்தின் 14 மாவட்டங்களையும் அது சென்றடைந்தது. மாநிலம் முழுவதும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் நாங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம். ஆயிரமாயிரம் மக்களை நாங்கள் தினமும் சந்தித்தோம். அவர்களோடு உரையாடினோம்.

செம்மலர்: இந்தப் பயணத்தில் எத்தனை பேர் பங்கேற்றனர்?

முரளி: இந்தப் பயணத்தில் 25 கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களோடு முற்போக்கு கலை - இலக்கிய சங்கத்தின் தலைவர்கள் 7 பேர் கலந்து கொண்டனர். மலையாளத்தில் பிரபலமான கவிஞர் சுகுதமாரி. அவர் எழுதிய அற்புதமானதொரு உணர்ச்சிக்கவிதை, `காந்தாரி விலாபம்' என்பது. போர்க்களத்தில் தன் உறவினர்களையெல்லாம் இழந்த காந்தாரி அவர்களை நினைத்து அழுது புலம்புவதாக உள்ள கவிதை அது. அதில் தாய்மார்கள் மரித்துக் கிடக்கும் தங்களின் மகன்களுக்காகக் கதறி அழுவதாக வரும். அது நம்முடைய மனசுகளை உலுக்குவதாக இருக்கும். அதனை இந்தப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டோம். அது நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. இந்த வகையில், பாசி°ட்டுகள் கொலை பாதகச் செயல்களையே தீர்வாகப் பார்க்கிற நிலையில், கலைஞர்களாகிய நாங்கள் கொலை பாதகங்களுக்கே தீர்வு காண விரும்புகிறோம். இந்த வேறுபாடு கவனிக்கத்தக்கது.

செம்மலர்: பிரபல ஆவணப்பட இயக்குநர் ராஜேஷ் சர்மாவின் `இறுதித் தீர்வு' குறித்துச் சொல்லுங்கள்...

முரளி: ராஜேஷ் சர்மா கேரளத்தின் பிரபல ஆவணப்பட இயக்குநர். அவர் குஜராத் கலவரத்தை அடிப்படையாக வைத்து `இறுதித் தீர்வு' எனும் ஆவணப் படத்தை எடுத்தார். `இறுதித் தீர்வு' என்பது ஹிட்லரின் வார்த்தை. ஹிட்லரின் இறுதித் தீர்வு என்பது சம்பந்தப்பட்டவர்களைக் கொன்று விடுவது தான். அதே சொல்லைத்தான் ராஜேஷ் சர்மாவும் பயன்படுத்தினார். ஆனால், ஒரு பாசி°ட்டின் கண்ணோட்டமும், ஒரு கலைஞனின் கண்ணோட்டமும் வேறு வேறானதாக அமைந்தது. குஜராத் படுகொலைகள் நிகழ்ந்து விட்ட பின்னர் ராஜேஷ் சர்மா கேட்கிறார். இதற்கு இறுதித் தீர்வு என்ன என்று? அதுதான் கலைஞனின் மனசு. ஒரு இந்துத்துவாவாதி `ஷூட்' என்று சொல்வதற்கும் பாலு மகேந்திரா `ஷூட்' என்பதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா? அதுபோலத்தான். ஒரு பிரச்சனைக்குக் கொலை என்பது இறுதித் தீர்வாகாது அல்லவா? அதே சமயம் கொலை பாதகங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதுதானே இறுதித் தீர்வாக இருக்க முடியும்?

செம்மலர்: உங்கள் நடைப்பயணம் எப்படித் திட்டமிடப்பட்டிருந்தது?

முரளி: 14 நாட்கள், 14 மாவட்டங்கள் என்று சொன்னேன். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு நாள் என்று திட்டமிட்டுக் கொண்டு அதன்படி இந்த இயக்கத்தை நடத்தினோம். ஒரு மாவட்டத்தில் முக்கியமான நான்கு இடங்களில் எங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில் வீதி நாடகங்கள், பாடல்கள், உரை என்று பலவும் கலந்திருந்தன.

செம்மலர்: இந்தப் பிரச்சனைகள் எவ்வாறு மலையாள சிறுகதைகளில், கவிதைகளில் இன்னுமுள்ள படைப்புகளிலெல்லாம் பிரதிபலிக்கின்றன?

முரளி: இந்தப் பிரச்சனைகள் மலையாள இலக்கியங்களில் நிறையவே தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளில் இவை கையாளப்படுகின்றன. முக்கியமாக கவிதைகளிலும் , சிறுகதைகளிலும் இவை பிரதானமாக இடம் பெறுகின்றன. முகுந்தனைப் போன்ற பிரபலமான நாவலாசிரியர்கள் இந்தப் பிரச்சனைகளைக் கையாளுகிறார்கள். குறிப்பாக, அவரின் சமீபத்திய நாவலான ``ப்ரவாசம்.'' அது தங்களின் சொந்த மண்ணை விட்டு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் துயரங்களைச் சொல்லும் நாவல். அதே போல சச்சிதானந்தன் போன்ற கவிஞர்கள், சுகுதகுமாரி, ஓ.என்.வி.குரூப் போன்ற சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்கள், இவர்களெல்லாரும் மலையாள இலக்கியங்களில் இந்தப் பிரச்சனைகளை முன்வைக்கிறார்கள். அதே போல வீதி நாடகங்களில் இவை உள்ளடக்கமாகியிருக்கின்றன.

செம்மலர்: இந்துத்துவவாதிகள் பண்பாட்டுத் தளத்தை நோக்கியே தங்களின் தாக்குதலைத் தொடுக்கின்றனர். பண்பாட்டு இயக்கத்தில் இயங்குகிற நீங்கள் இதனை எப்படி மக்களிடம் அம்பலப்படுத்துகிறீர்கள்?

முரளி: இந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகள் இப்போது கேரளத்தில் அதிகரித்து வருகிறது. மக்களை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், பிரிக்கிற வேலையை அவர்கள் செய்கின்றனர். நாங்கள் சங் பரிவாரின் கொள்கையை மக்களிடையே அம்பலப்படுத்துகிறோம். அவர்களின் முக்கியக் கொள்கை என்பது கலாச்சார தேசியவாதம் என்பது. அது இந்து ராஷ்டிரம் என்பதல்லாமல் வேறல்ல. நாங்கள் அதனை எதிர்க்கிறோம். கலாச்சார தேசியவாதத்திற்குப் பதிலாக நாங்கள் தேசிய கலாச்சாரத்தைப் பரிந்துரைக்கிறோம். கலாச்சார தேசியவாதம் என்பது ஆபத்தானது, ஏனென்றால், இந்தியாவின் பூர்வகுடிகள் இந்துக்கள் என்கின்றது இந்துத்துவா. எனவே, இந்தியாவின் பண்பாடு என்பது இந்துப் பண்பாடுதான் என்று கூறுகிறது. இது ஒரு வரலாற்றுப் புரட்டு. ஏனென்றால், இந்தியாவில் இந்துக்களின் பண்பாடு மாத்திரமல்ல, சமணர்களின், பௌத்தர்களின், பார்சிகளின், இ°லாமியர், கிறி°தவர் ஆகிய இவர்கள் எல்லோரின் பங்களிப்பும் சேர்ந்தது தான் இந்தியப் பண்பாடு ஆகும்.

எனவே, மத நம்பிக்கைகளையும் அரசாங்கத்தையும் பிரித்துப் பார்க்க நாம் அறிய வேண்டும். நம்பிக்கை என்பது நமது தனிப்பட்ட விஷயம். ஆனால், நமது பண்பாடு என்பது மதச்சார்பற்றது. எனவே, நாம் நம்பிக்கையையும், பண்பாட்டையுமே பிரித்துப் பார்க்க அறிய வேண்டும். இதை மக்களிடம் எல்லா வழிகளிலும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கும் பெரும் பணி நமக்கு உள்ளது. இதை உணர்ந்து நாங்கள் செயல்படுகிறோம். எனினும் இந்த கலாச்சார தேசியவாதம் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அது ஒரு ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் திட்டம். காரணம், இந்து தேசம் என்று சொன்னால் மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்தியாவில் 85 கோடிப்பேர் இந்துக்கள்தான். இவர்களெல்லாரும் வகுப்புவாதிகள் அல்ல. சங் பரிவார்தான் வகுப்புவாத சக்திகளாகும். அவை 34 அமைப்புகளாகச் செயல்படுகின்றன. இந்த அமைப்புகளின் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் 55 லட்சம் பேர்தான். ஆக, இவர்களே வகுப்புவாதிகளாவர். இந்த 55 லட்சம் பேரே ஒட்டுமொத்த 85 கோடி பேர்களின் சார்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு இந்த அதிகாரத்தை எவர் கொடுத்தது என்ற கேள்வியை மக்கள் முன்னே வைக்கிறோம். அது போலவே சிறுபான்மை சமூகத்தின் சார்பில் இயங்க சிறுபான்மை அடிப்படை வசதிகளுக்கும் எவரும் அதிகாரம் தரவில்லையே? ஆக, எல்லா மத நம்பிக்கையுள்ள மக்கள் திரளிலிருந்தும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்துச் செயல்படுவதே மிகவும் முக்கியமாக நாங்கள் கருதுகிறோம். `அடிப்படைவாதிகளைத் தனிமைப்படுத்துவோம், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுதிரட்டுவோம்' என்பதே எங்களின் இன்றைய குரல்.

-சந்திப்பு: சோழ.நாகராஜன்

படங்கள்: சூர்யா'.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com