Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
ஒருநாள் கிழிந்தது

உஷாதீபன்

நாலு கிலோ கோதுமை இந்தப் பையில.... இது ரசப் பொடிக்கு.. அரைச்சு வைக்கிறீங்களா?”

- கேட்டவாறே உள்ளே நுழையப் போன அவனை ஓடிவந்து வாசலிலேயே தடுத்து “சரி ஸார்....” என்றவாறே வாங்கிக் கொண்டான் அவன்.

“எப்போ வரட்டும்?” என்று வழக்கமாகக் கேட்பதுதான் அன்று கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. மேற்கொண்டு கேள்விக் குறியோடு இவன் முகத்தைப் பார்த்தவாறே நின்றிருந்தான்.

நிலைமையைப் புரிந்து கொண்ட இவன் “வர்றேன்....” என்று விட்டுக் கிளம்பினான்.

எப்பொழுது போகிறது, எப்பொழுது வருகிறது என்று யாருக்கும் தெரியாது. தினசரியில் ஒரு நேரம் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தக் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மிகச் சரியாகப் போய்க் கொண்டிருந்தது.

அது போகவும், போய்க் கொண்டிருந்தது. அதற்குத்தான் இப்போது நேரம் காலம் இல்லை.

கிளம்பும்போது இவன் பார்வை மாவு மில்லின் உள்ளே பரவியது. இடதுபுறம் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு இயந்திரங்கள் நிற்கும். ஒன்று மாவு அரைக்க, இன்னொன்று காரப் பொடிகள் அரைக்க. உள்ளே பரவி யிருந்த இருட்டுக்குள் அவை சரியாகத் தெரியவில்லை.

வாசலில் வரிசை போடப்பட்டிருந்தது. இவன் கொடுத்ததை வரிசையில் கொண்டு வைத்திருந்தான் அவன். என்னதான் பழகியவன், தெரிந்தவன் என்றாலும் தொழில் தர்மம் என்பது வேறுதானே? தன்னைப் போலத் தானே மற்றவர்களும் பழக்கம் அவனுக்கு.

“நாளைக்குப் பையன் வர்றான்... அவசரம்னு சொல்லிக் கொடுங்க.. அப்பத்தான் வரிசைல வைக்காம உள்ளே தனியா வச்சிருந்து அரைச்சுக் கொடுப்பான்....”

வீட்டிற்குத் திரும்பியவுடன் சாந்தா கண்டிப்பாய்க் கேட்பாள்.

“சொல்லிக் கொடுத்தீங்களா...?”

இதையெல்லாம் சொல்வது போலவா அங்கு நிலைமை உள்ளது? அவனே பாவமாய் நின்று கொண் டிருக்கிறான். இன்னிக்குப்பொழப்பு என்னாவப் போகுதோ? என்று. இதில் எனக்கு மட்டும், எனக்கு மட்டும் என்று சொல்வது சாத்தியமா? நியாயம்தான் ஆகுமா?

பெண்களுக்கு ஆனாலும், ஆத்திரம் ஜாஸ்திதான். இந்த ஆத்திரம் “தன் காரியக் கெட்டி” என்ற வகை சார்ந்தது. வீட்டுச் சூழலையே வெளிச் சூழலாகவும் நினைப்பது! தன் வீடு, தன் பிள்ளை, தன் குடும்பம்... என்கிற காரிய சாத்தியச் சிந்தனை.

இவன் வண்டியை எடுக்கும்போது அவன் “வாங்க ஸார்....” என்று விடை கொடுத்தான்.

“போயிட்டு வாங்க... முடிச்சு வைக்கிறேன்...” என்று பொருள் அதற்கு.

பெரும்பாலான கடைகள் அடைத்திருந்தன. ஒன்றி ரண்டு டீக்கடைகளைத் தவிர ஏதாவது பந்த்தோ என்பது போல.

“கரன்ட்டோ இல்ல.... உள்ளே இருட்டு... வெந்து தணியுது.. என்னத்தக் கடையைத் தெறந்து என்னத்தை வியாபாரத்தப்பண்ணி... ? ரெண்டு மணிக்கு மேலதான்...”

பல பேர் சமீபமாக இந்த நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள். இவனே வீட்டில் இருந்து புண்ணிய மில்லை என்றுதான் கிளம்பியிருந்தான். நூலகம், அஞ்சலகம், வங்கிப் பணி என்று சில வேலைகளைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறியாயிற்று.

போய்விட்டுத் திரும்பும்போது மணி மூன்றரை நெருங்கும். கரன்ட் வரச் சரியாயிருக்கும். வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு மாவு அரைக்க உட்கார வேண்டியதுதான். அது அவன் வழக்கமான பணி.

“உளுந்து நல்லாப் பொங்கி வரணுமாக்கும்.... பிறகுதான் வழிக்கணும்...” ஒவ்வொரு முறையும் இந்தப் பாட்டைப் பாடி விடுவாள் சாந்தா.

“எனக்கென்ன தெரியாதா? புதுசாச் சொல்றே? இன்னிக்கு நேத்திக்கா அரைக்கிறேன். கடந்த மூணு வருஷமா நாந்தான் செய்திட்டிருக்கேன். இன்னும் சொல்றதை விடமாட்டேங்கிறே நீ?”

“அப்போ என்ன அர்த்தம்? இன்னும் சரியா வரலேங் கிறதுதானே? அப்பத்தான் மாவு காணும்... இட்லியும் பூவா இருக்கும்... அதைத் தெரிஞ்சிக்குங்க....”

எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் இந்தப் பெண்களுக்கு ஏனோ திருப்திப் படவே மாட்டேனென் கிறது. அவர்கள் சொல்வதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரி, சரி என்று கேட்க ஆரம்பித்தோ மானால் கழுத்தில் கலப்பையைக் கட்டி உழுது விடுவார்கள் போலிருக்கிறதே? சமையலறைக்கு அவர்கள்தன் பிர தானம் என்பதைக் காலம் காலமாய் நிறுவியிருக்கிறோ மில்லையா? அது அவர்களின் ரத்தத்தோடு ஊறிப் போய்க் கிடக்கிறது. அந்த கௌரவத்தை லேசில் விட்டுக் கொடுக்க அவர்களும் தயாரில்லை போலும்...!

இன்று காலை கூட குக்கரில் சாதம் வைத்து ஒரே ஒரு காய்தானே இருக்கிறது என்று இருந்த புடலங்காயை விறு விறுவென்று நறுக்கி பொரித்த கூட்டுப் பண்ணி இறக்கி யாயிற்று.

“அப்பாடீ....! இவ்வளவு உரப்பா?” என்றாள் சாந்தா.

தான் படுக்கையைவிட்டு எழும் முன் இந்தப் பயல் சமையலையே முடித்து விட்டானே என்ற பொறாமையோ என்னவோ?

“கொஞ்சம் உப்பு, உரப்பு, புளிப்பு தூக்கலாத்தாண்டி இருக்கணும்.... அப்பத்தான் வச்ச காய்கறி உள்ளே இழுக்கும்... இல்லன்னா மிஞ்சிப் போகுமாக்கும்...!

“அது சரி... கழுத வயசாச்சு.. இன்னும் நாக்கு ருசி போகலை! உப்பு, புளிப்பெல்லாம் குறைக்கப் பழகிக்குங்க....”

“நளபாகம்னு தானேடீ சொல்லி வச்சிருக்கான்..... ஆம்பிளைங்க செய்தா அப்படித்தான் வெடிப்பா இருக் கும்...”

சமீபத்தில் விழா நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. பல வியாபார ஸ்தலங்களில் வணிக வளாகங்களில் ஜெனரேட்டர்கள் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருந்தன. அந்த அசுர சத்தங்கள் அந்தப் பகுதியின் அமைதியையே கெடுத்து சாலைப் பகுதியில் புகையைக் கிளப்பி சுற்றுப் புறத்தையே மாசுபடுத்திக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாது ஜனம்பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. அவரவர் பிழைப்பைப் பார்த்தாக வேண்டுமே? எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் போயாக வேண்டும் என்ற சகிப்புத் தன்மையோடு ஊரும் உலகமும் இயங்கிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது. அதனாலேயே எல்லாமும் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருப்பதுபோல தோற்றமளிக்கிறதோ என்று நினைத்தான்.

அஞ்சலகத்திற்குள் நுழைந்தபோது அவ்வளவு கூட்டம் இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கும் கரன்ட் இல்லாமலிருந்தது. கணினி இயக்கமின்றிக் காத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் பணியாளர் உள்பட, வாசலில் வண்டி நிப்பாட்டத் துளி இடமில்லை.

“என் வண்டிய எவனோ லவுட்டிட்டான் சார்...” அங்குமிங்குமாய்ப் பரபரத்துக் கொண்டிருந்த ஒருவர் இவனைப் பார்த்துச் சொன்னார். திருடிட்டான் என்பதைத் தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று ஒரு நிமிடம் கழித்துத்தான் புரிந்தது இவனுக்கு. எத்தனையோ பேர் அங்கிருக்க, அவர் இவனைப் பார்த்துச் சொன்னது எதற்காக என்று புரியவில்லை. சொல்ல வேண்டும் என்று தோன்றிய முகமாய்த் தெரிந்ததோ என்னவோ?

“எங்க வச்சீங்க...?”

“இங்கதான் சார்... இப்டி....”கையைக் காண்பித்தார் அவர்.

“பூட்டினீங்களா?” இவன் அடுத்த கேள்வி போட்டான்.

“அதெல்லாம் ஒரு பூட்டா சார்... படக்குன்னு இழுத்துறுவானுங்க... உள்ள போயிட்டு வந்திருவோமுன்னு பார்வையா வச்சிட்டுப் போனது. நிமிஷத்துல காணல.. அருமையான ராலே வண்டி சார்...”

அப்பொழுதுதான் தொலைந்தது சைக்கிள் என்று தெரிந்தது. இந்தக்காலத்தில் சைக்கிள் கூடத் திருடுகிறார் களா என்ன? “பூட்டினேன்” என்று அவர் உறுதிப் படுத்தாதது இவனைச் சங்கடப்படுத்தியது. தொலைத்து நிற்பவரிடம் “நீங்க கவனமாப் பூட்டியிருக்கணுமில்ல...?” என்று குத்திக் காட்டி எப்படிச் சொல்வது? நிகழ்வே அவருக்கு அதை உணர்த்தியிருக்குமே?

அவர் முகமும், அதில் படிந்திருக்கும் சோகமும், இன்று பூராவும் தன்னைச் சங்கடப் படுத்தும், அந்தக் கூட்டத்தில் யாரென்று கேட்பது? எங்கென்று தேடுவது? இப்படி ஒரு மனிதனின் நஷ்டத்தை உணராமல் வாகனங் களும் மனிதர்களும் வழக்கம் போல பரபரத்துக் கொண்டி ருந்தன.

வரிசை நீண்டிருந்தது. அன்று ஓய்வூதியம் வழங்கும் நாள் என்பது அப்பொழுதுதான் உறைத்தது. எப்பொழுதுமே அந்த நாளைத் தவிர்த்து விடுவதுதான். கூட்டம் எக்கச் சக்கமாய் இருக்கும். குறைந்தது ரெண்டு மணி நேரமாவது ஆகும். மற்ற காரியங்களெல்லாம் தடைபட்டுப் போகும்.

அப்படியே வெளியேறினான். வீட்டில் செலவுக்குப் பணமில்லை என்பது நினைவுக்கு வந்தது. வங்கியிலாவது கூட்டம் குறைவாகவிருக்கிறதா பார்ப்போம் என்று புறப்பட்டான். எவ்வளவு பணம் இருப்பில் இருக்கும் என்று தெரியவில்லை. குறைந்தது ஆயிரம் ரூபாயாவது இருக்க வேண்டும் என்பது விதி. குறைந்தால் அபராதம். கேட்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. இயந்திரம் அதுவாகவே கழித்து விடுகிறது. நவீன அறிவியல் தொழில் நுட்பத்தோடு அறிவிப்பில்லாத நவீன நஷ்டங்களும், மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிக் கொண்டு விட்டன. தவிர்க்க முடியாமலும், எதிர்ப்புத் தெரிவித்துப் பலனில்லையென்றும் தவித்துப் போய்க் கிடக்கிறார்கள். என்ன, ஏது. எதற்காக என்று தெரியாமலேயே ஒரு மூத்த தலைமுறை இவற்றிலெல்லாம் பின் தங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. பக்கத்துச் சந்தில் ஓரமாக வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பியபோது அங்கே விட்டுச் செல்வது பாதுகாப்பா என்ற நினைப்பு எழுந்தது. நிறைய வண்டிகள் நின்றனதான். அந்த வங்கிக்கு வருபவர்கள் அங்கேதான் நிறுத்துகிறார்கள். அருகிலுள்ள கடைக்காரர்களும் அங்கேதான். ஒருமுறை அங்கே நிறுத்தி வண்டியை எடுத்தபோது, பக்கத்து வண்டியில் இடித்து, ஒன்றன்பின் ஒன்றாக எல்லா வண்டிகளும் கீழே சரிந்துவிட்டன. யாரும் பார்க்கும் முன்பாக ஒவ்வொன்றாய் எடுத்து நிறுத்தி பெரும் அவஸ்தைப் பட்டுப்போனான். இவன் வண்டியை மட்டும் எடுத்துக் கொண்டு நகர்ந்திருக்கலாம்தான். மனசு கேட்கவில்லை. இப்பொழுது இப்படித் தனியே நிறுத்துவது சரியா என்று தோன்றியது. வசதியாய் நிறுத்தி, திருடிக் கொண்டு போ என்று சொல்வது போலிருந்தது.

இன்றைய வெளிச் சூழல் இம்மாதிரிப் பல சந்தேகங் களைத் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன. எங்கும் எதிலும் ஒரு நம்பிக்கையற்ற தன்மை, எப்படியிருந்தாலும் என்ன, எதைச் செய்தால் என்ன, என்ற தைரியத்தில், நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு இப்படியெல்லாமுமே மிகவும் குறைந்து பட்டுக் கிடப்பதாய்த் தோன்றியது.

வங்கியில் சம்பளப் பணம் இன்னும் கணக்கில் ஏறாதது ஏமாற்றத்தைத் தந்தது. அதை நினைத்துக் கொண்டு தான் வந்தது. சமீப காலமான இந்த நடைமுறை பலவித சிரமங்களைத் தோற்றுவித்தன. ஒன்பது அல்லது பதினைந்து ஸ்தானங்களைக் கொண்ட வங்கிக் கணக்கு எண்ணில் ஒரு எண் மாறினாலும் போச்சு! அவரவர் சேமிப்பு வங்கிக் கணக்கில் பணம் ஏறாது.

ஏறலை, ஏறலை என்று நான்கைந்து தரம் வங்கிக்கு அலைந்து பிறகு அந்தத் தவறு உணர்ந்து, எங்கே நடந்த தவறு, என்ன அதற்குத் தீர்வு என்று கண்டுபிடித்து சரி செய்து, கடைசியில் சம்பளப் பணத்தைக் கண்ணில் பார்ப்பதற்குள் ஓம்பாடு எம்பாடு ஆகிப் போகிறது. குறைந்தது பத்து நாட்களாவது வேண்டும் இந்த நடவடிக்கைகள் முடிய. இந்தப் பத்து நாட்களுக்குள் வீட்டில் சமாளிப்பது யார்? எப்படி? இந்தக் கேள்வி களுக்கெல்லாம் இன்று வரை பதில் இல்லை. கணினிதான் ஆனாலும் மனிதன் இயக்குவதுதானே அது? மனிதர்கள் கையை வைக்கும் எல்லாவற்றிலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்குமோ என்னவோ? விஞ்ஞான உலகின் தொழில்நுட்ப மாற்றங்களைக் காலத்திற்கேற்ப ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமெனினும் இந்த நடைமுறைக் குறைபாடுகளை இல்லாமல் பண்ணுவது யார்? அதுவும் மனுஷன்தானே செய்தாக வேண்டும். ஆக அடிப்படை யான விழுமியங்கள் அழியாமல் இருந்தால் தானே இவையெல்லாம் சாத்தியம். என்னென்னவோ நினைக்கத் தலைப்பட்டான்.

இப்போது என்ன செய்வது என்ற நிகழ்வுலக யோசனை கடைசியில் மண்டையைக் குடைந்தது. எவ் வளவு பணம் கைவசம் இருக்கிறது. என்று பார்த்தான். சாந்தா அரிசி வாங்கி வரச் சொன்னது நினைவுக்கு வந்தது. அஞ்சலகம் அருகேயுள்ள அரிசி ஆலைக்குத் திரும்பப் போக வேண்டும். மாதாந்திர சிறு சேமிப்புப் பணம் செலுத்தியிருந்தால் இப்பொழுது அரிசிக்குத் திண்டாட்டம். நல்லவேளை என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான்.

அரிசி ஆலையில் ஆளே இல்லை. எப்பொழுதும் நாலைந்து பேராவது வாங்கிக் கொண்டிருப்பார்கள்.! என்னவாயிற்று? சந்தேகத்தோடேயே நுழைந்தான்.

புதிதாக விலைப் பட்டியல் ஒன்று தொங்கியது அங்கே. “மின் உற்பத்தி பாதிப்பினால் அரிசி விலை கடும் உயர்வு....” - காலையில் செய்தி படித்திருந்தது சட்டென்று நினைவுக்கு வந்து பயமுறுத்தியது.

ரூபாய் பதின்மூன்றுக்கு விற்ற இட்லி அரிசி பதினெட்டு என்று போட்டிருந்தது. பத்தொன்பதுக்கு விற்ற சாப்பாட்டு அரிசி இன்று இருபத்தொன்பது! இவனுக்கு விலையைப் பார்க்க வயிற்றைக் கலக்கியது. பத்து கிலோ வாங்கினால் நூற்றித் தொண்ணூறு ஆகும் இடத்தில் இன்று இருநூற்றுத் தொண்ணூறு!! நூறு ரூபாய் கூட ஆகிறது. மாதம் இருபது கிலோ செலவாகிறதென்றால் ரூபாய் இருநூறு கூட அழ வேண்டும். என்ன வயிற்றெரிச்சல்? இப்படியே ஒவ்வொன்றும் கூடிக் கொண்டே போனால் ஒரு சாதாரணன் என்னதான் செய்வது?

எப்படித்தான் சமாளிப்பது? பிரமிப்பாய் இருந்தது இவனுக்கு.

“இருபது ரூபாய்க்குள் என்ன அரிசி இருக்கிறது என்று கேட்டான். அதில் ஒரு பத்து கிலோ என்று சொல்லி வாங்கிக் கொண்டான். மனதுக்குள் சாந்தா என்ன சொல்வாளோ என்ற சந்தேகம் வேறு எழுந்தது. “சாதம் குழையாம இருக்குமா, கேட்டீங்களா?”

“நியூஸ் பேப்பரை நிறுத்திடுங்க...” நேற்று அவள் சொன்னது.

“ஆமா, அதுலதான் வந்திடுதாக்கும் எல்லா நஷ்டமும்...?” என்றான் இவன்.

“பின்ன? நூறு ரூபா மிச்சமாகுமில்ல...? டி.வி. நியூஸ் தான் கேட்குறீங்கல்ல...? அது போதும்... இந்தப் பாழாப் போன அரசியல்... அடிதடி, வெட்டு, குத்து.... இதுகளை விலாவாரியாப் படிக்காட்டா என்ன? குடியா முழுகிடும்...?”

“எனக்கிருக்கிற ஒரே பொழுது போக்கு அது ஒண்ணுதான்... நானென்ன சினிமா, டிராமான்னா அலையறேன்... சின்ன வயசிலேயிருந்து அப்படி ஒரு பழக்கம்... காலைல எழுந்தவுடனே அச்சு மை மூக்குல ஏற அதைப் படிச்சாகணும்... இது உனக்குப் பிடிக்கலயா?”

“பிடிக்காம இல்லீங்க.. இந்த அரசியல் சாக்கடையை வெறுமே கேட்டாப் போதாதான்னுதான் சொல்ல வந்தேன்... நடக்குறது அத்தனையும் தப்பு...! எதுக்கு அநாவசியமா அதை வரி விடாமப் படிச்சு மனசை வேறே கெடுத்திட்டு?”

“அரசியல்னா நீ ஏன் இந்தக் கட்சி அரசியலை மட்டும் பார்க்கிறே? நம்ம வாழ்க்கையே அரசியல்தாண்டீ? அன்றாட வாழ்க்கைல ஒவ்வொரு நடவடிக்கைலயும் அரசியல் கலந்து தான் இருக்கு. அதைப் புரிஞ்சிக்கோ.. இந்த உலகத்துல எங்கேயோ நடக்குற சில நல்லவைகளைத் தெரிஞ்சிக்கிறதுக்கும், நடக்கக் கூடாதது நடந்திட்டிருக்கு பாரு அதைப் புரிஞ்சிக்கிறதுக்கும், என்ன மாதிரியெல்லாம் நாம இருக்கக் கூடாதுன்னு உணர்ந்துக்கிறதுக்கும், நம்மைப் பாதுகாத்துக்கிறதுக்கும்கூடன்னு நாம இந்தச் செய்திகளை ஒண்ணுவிடாமப் படிச்சித்தான் ஆகணும்...! இல்லன்னா உலக நடைமுறைகளிலேர்ந்து நாம அந்நியப்பட்டுப் போவோம்...” இவன் பதிலுக்கு அவள் ஒன்றுமே சொல்லாதது இவனுக்குள் பெருமிதத்தை ஏற்படுத்தியிருந்தது.

சொல்ல வேண்டியதை, அவசியமானதை, அதன் பக்குவத்தோடு எடுத்துப் பதமாய் முன்வைத்தால் சரியாய்த்தான் போய்ச் சேரும் என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.

கொஞ்சூண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டான். ருசி வேறுபட்டிருப்பதாய்த் தோன்றியது. மட்டமான அரிசியைக் கொடுத்து விட்டானோ? எதை என்ன ரகம் என்று சொல்லி விற்கிறார்கள்? எவனுக்குத் தெரியும்? அவன் கொடுத்ததுதான், வாங்கியதுதான்.. பாலிஷ் பண்ணிய அரிசி என்கிறார்களே, சமீபமாய்.. அதாயிருக்குமோ? அரை இருட்டுக்குள் நின்று வாங்கியதில் தராதரம் தெரியவில்லை. இருட்டில் நடக்கும் எல்லாமுமே தப்புதான் போலிருக்கிறது.

அப்பாவி ஜனங்களில் தானும் ஒருவனாய் நின்று புலம்புவதுபோல ஒரு பிரமை.

மாவு மில்லை அடைந்தபோது அங்கே அதே பழைய இருட்டுதான் வரவேற்றது.

“இன்னைக்குக் கரண்ட் வராதாமே சார்... ஏதோ பராமரிப்புப் பணிங்கிறாங்க...?” சொல்லிக் கொண்டே பக்கத்து டீக்கடையிலிருந்து வந்தான் அந்த ஆள். தினசரி அணைப்புக்குப் பதிலா இப்படி ஒரு பெயரா? என்றான் இவன்.

வரிசை அப்படியே இருந்தது. எடுத்துக் கொண்டு போய் விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். பிறகு வந்தால் கடைசிக்குப் போய்விடும். யோசித்தவாறே நின்றான்.

அடிக்கும் வெய்யிலுக்கு அந்த வேப்ப மரத்தடி பெருத்த ஆசுவாசமாயிருந்தது. ஊசியாய் இறங்கியதுவெய்யில். இன்று நிச்சயம் மழை வரும் என்று தோன்றியது.

“சார்... பொழுது போயிடுச்சி.. இனிமே சாயங்காலம் கரண்ட் வந்தாலும் ஆறு மணிக்கு மேலே அரைக்க முடியாது. இன்னைக்கு பொழப்பு அவளவுதான் சார்....”

அவன் குரலில் இருந்த சங்கடம் இவனை உறுத்தியது. “அய்யய்ய.. அப்புறம்...?” என்றான் அவனைப் பார்த்து.

“ஒரு நூறு ரூபா இருந்தாக் கொடுங்க சார்... பிறகு கழிச்சிக்கிடலாம்....”

ஒரு நிமிடம் யோசித்தான்இவன். வேற என்ன முக்கியச் செலவுகள் என்று உணர எடுத்துக் கொண்ட நேரம் அது. அரிசி வாங்கியதில் நூறு மிச்சப்படுத்தியது உள்ளதே?

“இந்தாங்க.. பிடிங்க..” என்றவாறே எடுத்து நீட்டினான்.

“அடுத்தடுத்து கழிச்சிக்கிடுவோம் சார்....” என்றான் அவன்.

“ரைட்டு... கரண்ட் வந்தவுடனே முதல்ல எனக்கு அரைச்சுக் கொடுத்திடுங்க.. பிறகு வர்றேன்....” என்றுவிட்டுக் கிளம்பினான். குரலில் அவனையறியாமல் ஒரு உரிமை புகுந்து கொண்டிருந்தது.

செய்த உதவிக்கு ஈடாக, வரிசையைக் கணக்கிடாமல் எனக்கு முதலில் என்று சொன்னது கூட ஒரு வகையில் தவறுதான்.

அன்றைய நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக மனதில் தோன்றின. திட்டமிட்டப்படி எதுவுமே நடக்கவில்லை. சிறுசிறு வேலைகள்கூடக் கெட்டு விட்டன. நாளும் பொழுதும் நம் கையில் இல்லையோ? அவனவனுக்கு அவனவன் காரியங்கள் பெரிதுதானே?

வீட்டிற்கு வந்தபோது “மாவு என்னாச்சு...?” என்றாள் சாந்தா.

“இங்கமாதிரி அங்கயும் கரண்ட் இல்ல...” என்றான் இவன். இதற்குள் “ராஜாமணி சார் உங்களுக்கு ஃபோன்...” எதிர்வீட்டுக்காரர் கத்தினார். ஓடினான் இவன்.

“வணக்கம் சார்.... நா செல்லமுத்து ஓ.ஏ. பேசுறேன்....” எதிர்முனையில் குரல் கேட்டது.

அப்பொழுதுதான் இவனுக்கே ஞாபகம் வந்தது. “அடடே மறந்திட்டனே.. இதோ வந்துட்டேயிருக்கேன்... ஆபீஸ்லயே இருங்க...” என்றவாறே ஃபோனை வைத்தான்.

“ரொம் நன்றி சார்... என்னால அடிக்கடி உங்களுக்குச் சிரமம்...”

“பரவால்ல... எப்பயோ ஒரு வாட்டி தானே....” என்றார் அவர்.

“ஒரு மணி நேரத்துல திரும்பிடுறேன்... கரண்ட் வந்தா உளுந்தைப் போடு... அதுக்குள்ள வந்திடுவேன்...” - பரபரக்கச் சொல்லிவிட்டு வண்டியை எடுத்தான் மீண்டும்.

வானம் முட்டிக் கொண்டு வந்தது. கருத்த மேகங்கள் அடர்த்தியாகத் திரள ஆரம்பித்திருந்தன. செல்லமுத்து பியூன் தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருந்ததும் கருப்பை விலக்கல் ஆபரேஷனுக்காக அவர் முன்பணம் விண்ணப்பித்திருந்ததும், “திங்கட்கிழமை பில் பிரசன்ட் பண்ணிருவோம், கவலைப் படாதீங்க... நான் டிரஷரில் சொல்லி வாங்கித்தர்றே.ன்..” என்று வாக்களித்திருந்ததும்... எப்படி இதை மறந்து போனோம் என்று வெட்கமாயிருந்தது இவனுக்கு. ஒரு நாளைய யதார்த்த நடைமுறைகள் அன்றைய சூழலினால் எத்தனை பாதிப்புக்குள்ளாகின்றன...?

பட்டியலும், கணினியில்தானே தயாரித்தாக வேண்டும். அலுவலகத்தில் கரண்ட் இருக்குமா? தவிப்போடு வண்டியைக் கிளப்பினான். கலவரத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள் சாந்தா. “மழைக்குள்ள திரும்பிடுங்க...” என்றாள். தெருத் திரும்புகையில் அது அவன் காதில் விழுந்ததா தெரியவில்லை. இப்படி மதியச் சாப்பாடு கூடச் சாப்பிடாமல் ஓடுகிறானே என்பதும் அப்பொழுதுதான் அவளுக்கே மனதில் தோன்ற, தெருவையே வெறிக்கப் பார்த்தவாறு செய்வதறியாது சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com