Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
கண்ணா

தேனி சீருடையான்

இன்றுடன் ஏழு நாட்கள் முடிந்துவிட்டன. வருத்தங்களையும், சோகங்களையும் சுமந்து சுமந்து மனசு மரத்துப்போனது. இன்னும் அவன் அழுது கொண்டிருக்கிறான். பிஞ்சுக் குழந்தையின் பிஞ்சுக்குரல் அழுகையின் அதிர்வுகளால் வீர்யம் குன்றிப் போனது. குழந்தைக்கான எல்லையைத் தாண்டித் துடிதுடித்தது தொண்டைக் குரல்.

ஆண்டவா! என்ன இது சோதனை? பெரியவர்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத வேதனையின் பிரம்மாண்டத்தை அந்தப் பிஞ்சு உடம்பு தாங்கிக் கொண்டிருக்கிறதே!

சிஸ்டர் வந்தார். “இன்னும் அழுகுறானா?” என்று கேட்டு விட்டு “கர்த்தர் காப்பாத்துவார்” என்றார். தன் நெஞ்சில் சிலுவைக் குறி வைத்துக் கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போனார். ஏசு கிறிஸ்துவிடம் ஆழ்ந்த பாசமும் நம்பிக்கையும் கொண்டவர். எந்த நோயாளியாக இருந்தாலும் சொஸ்தப்பட வேண்டும் என்று ஸ்தோத்திரம் பண்ணுவார். அது காசு பணம் வாங்காமல் சேவை செய்கிற கிறிஸ்துவ மருத்துவமனை. பக்கத்துப் படுக்கைக் குழந்தைகள் எல்லாம் இவன் அழுவதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன.

அந்த வார்டில் இருந்த எல்லாக் குழந்தைகளின் தாய்மார்களும் வாயாறினர் “இந்த மாதிரி அழுகய என்னக்யும் கண்டதில்ல” என்றனர். எல்லாரும் கிட்டத்தில் வந்து “கண்ணா” என்று கூப்பிட்டு, நெஞ்சில் கைவைத்துப் பார்த்துச் சென்றனர்.

நானும், என் மாமியாரும் இருமருங்கும் அமர்ந்து அழுதோம். அவன் அழுகையின் ஊடே என் விசும்பல் சத்தம் அமுங்கிப் போனது. மாமியார் சூரிய திசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார். “பேரன் உடம்பு குணமாகி அழுகைய நிறுத்திட்டா. மாரியாத்தாளுக்கு பத்தொம்பது அடுக்கு தீச்சட்டி எடுக்குறேன்; கண்ணத் தொற கடவுளே!”

“இரத்தம், சிறுநீர், சளி எல்லாம் சோதித்து விட்டு கிருமி ஏதும் அட்டாக் ஆகல” என்றார் மருத்துவர். என்ன நோய் என்று அவரால் கணிக்க முடியவில்லை. ஒவ்வோர் அழுகையின் போதும் ஐந்து சொட்டு தூக்க மருந்து ஊற்றி அமைதி காக்கச் செய்தார். ஒவ்வொரு தூக்கத்துக்குப் பின்னும் அலறல் கூடுதலாய் இருந்தது. அருந்திய தாய்ப்பால், வாந்தி, கழிச்சல் என்று கழிவுகளாய் வெளியேறியது. தாய்ப்பால் அருந்த மறுத்த போது, சங்கில் பீச்சி வம்படியாய் ஊட்டி விட்டேன்.

கூலி வேலைக் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவள் நான். மாமாவும் அத்தானும் நாலு நாட்களாய் வேலைக்குப் போகவில்லை. கந்தெடுத்து செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இலவச ஆஸ்பத்திரி என்பதால் மருத்துவச் செலவு இல்லாமல் போய்விட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு துரைமார்கள், அவர்கள் நாட்டில் வசூல் செய்து இதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது அஞ்சு, பத்து என்று வாங்கிக் கொண்டிருந்த குறத்திமார்கள்கூட பொடியன் அழுவதைப் பார்த்து, அனுதாபப்பட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஏழைபாழைகளுக்கு ஓசி மருத்துவத்தைத் தொடங்கி வைத்த புண்ணிவான்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

அதோ! அழத் தொடங்கிவிட்டான். கணவரும், மாமாவும் தூக்கித் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தார்கள். வில்லாய் வளைந்து வீறிட்டு அழுதான்.

“என் உயிரை எடுத்துக் கொண்டு பிள்ளை உயிரைக் கொடுத்துவிடு யமதர்மராஜா” என்று புலம்பிய போது அத்தை ஆறுதல் கூறினார்.

பேய், பூதம், பிசாசு பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. பயம் இல்லை என்றும் சொல்லத்தான் வேண்டும். என் அப்பத்தாவோ, அம்மச்சியோ எனக்குப் பேய்க்கதை சொன்னதில்லை. பெண்டு பிள்ளைகளைக் கடத்திப் போகும் கொள்ளையர்களிடமிருந்து சமயோசிதமாய்த் தப்பித்து வரும் மாதர் கதைகளைச் சொல்லித்தந்தார்கள்.

அண்ட்ரண்டாப் பட்சி, ராக்காச்சி, துடிதுடிக்க வைக்கும் பிசாசு, நாக்குத் தள்ளிச் சாக வைக்கும் சாலிமர முனியப்பன் போன்ற பயமுறுத்தும் கதைகளை நான் கேட்டறிந்ததில்லை. அதனால் பேய் பயமோ, நம்பிக்கையோ என்னிடம் அண்டவில்லை.

“பேய்க்கும் பாக்கணும்; நோய்க்கும் பாக்கணும்; மந்திரிச்சுட்டு வருவமா?” என்றார் அத்தை.

அத்தை மேல் அனுதாபம் உண்டானது. பத்தாம்பசலித்தனத்திலிருந்து அவர்களால் மீடேற முடியவில்லை. அவர்கள் வாழ்ந்த விதம் அப்படி. ஆனாலும் குழந்தை நலம் பெற வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாய் இருந்தது. எனக்கும் அதேதான். பெரும்பாறை ஒன்றில் முட்டிக் கொண்டு செத்துப்போனால் மகன் பிழைப்பான் என்று எந்த வன தேவதையாவது வாக்குக் கொடுத்தால் அதையும் நான் செய்யத் தயார். “மந்திரிக்கணும்” என்ற அத்தையின் ஆசையை எதிர்க்காதவளாய் இருந்தேன். அது மட்டமல்ல அதன் மூலம் மகன் குணமடைந்து அழுகையை நிறுத்த மாட்டானா என்ற நப்பாசையும் இருந்தது.

முதலில் அல்லா கோயிலுக்கு மந்திரிக்கப் போனோம். மாலை 6 மணித் தொழுகை முடிந்து அஸரத் வெளியே வந்தார். அவரை எதிர்பார்த்து பத்துப் பதினைந்து பேர் குழந்தைகளோடு காத்திருந்தனர். நில்லாமல் அழுது கொண்டிருந்த என் மகனை முதலில் தூக்கி வரச் சொன்னார். இமையை விரித்து விழிப்படலத்தைப் பார்த்துவிட்டு “சைத்தான் ஊடாடி இருக்கான்”என்றார். டம்ளரில் தண்ணீர் எடுத்துக் குரான் மந்திரம் ஓதிக் கொடுத்தார். மூன்று வேளை சங்கில் ஊட்டும்படிக் கூறினார். ஐந்து ரூபாய் மட்டும் காணிக்கை பெற்றுக் கொண்டார்.

ஆஸ்பத்திரியில் இருந்தபடியேதான் மந்திரிக்கப் போனோம். டாக்டர் விஸிட் வராத நேரமாய்ப் பார்த்து அந்த வேலையைச் செய்தோம். உள் நோயாளிகள் வெளியே செல்லக் கூடாது என்ற விதியை மீறி நர்ஸ் எங்களை அனுமதித்தார். குழந்தையின் வீறிடல் அவரைச் சலனப்படுத்திவிட்டது.

பள்ளிவாசலின் புனித நீர் அருந்தியும், அவன் அழுகை நிற்கவில்லை. தொடர்ச்சியான அழுகை! கத்திக் கத்தி தொண்டை புண்ணாகிப் போனதை அவன் குரல் அதிர்வில் இருந்து புரிந்து கொண்டேன்.

மறுநாள் மாலை அடுத்த கிராமத்தில் இருந்த பொதர வண்ணாரிடம் மந்திரிக்கப் போனோம். வீச்சரிவாளோடு நின்ற சாமிப் படம் முன் பத்திக் குச்சி பொருத்தினான். வெற்றிலையில் மை தடவி அருகில் வைத்தான். நிறை செம்பு நீரெடுத்து சூடம் பொருத்தி மிதக்க விட்டான். “சித்திரபுத்திர அய்யா, ஒங்கணக்கக் கொஞ்சம் சரி பாருய்யா” என்று கையெடுத்துக் கும்பிட்டான். சூடம் அமந்ததும் செம்பு நீரை அள்ளிக் குழந்தையின் முகத்தில் சடீரென அடித்தான். உலுக்கி விழுந்து முகம் சுருக்கித் திரும்பியது குழந்தை. இதோடு அழுகை நின்றுவிடும் என நானாகக் கற்பனை செய்தேன். தோளில்கிடந்த அழுக்குத் துண்டால் மந்திரித்து விட்டு ஐந்து ரூபாய் காணிக்கை வாங்கிக் கொண்டான்.

அன்று தூக்க மருந்து கொடுக்காமல் கொஞ்ச நேரம் தூங்கினான். கணவருக்கும், மாமாவுக்கும் ஏக சந்தோஷம். “நாளைல இருந்து வேலக்கிப் போயிற வேண்டியதுதான்,” பெருமிதத்தோடு சொன்னார் மாமா! ஆனால் தூக்கம் கலைந்த போது பைய ஆரம்பித்து வேகமெடுத்து அழுதான்.

எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து போன நிலையில் நெஞ்சு ஜிவ்வென வலித்தது. ஆஸ்பத்திரி மதிலில் முட்டி முட்டி அழுதேன். வார்டில் இருந்த எல்லாப் பெண்களும் என்னை அனுதாபத்தோடு நோக்கினர். அன்றுதான் சேர்ந்திருந்த ஒருத்தி என்னிடம் கேட்டாள். “சீரடிச்சிருக்கான்னு பாத்தீங்களா?”

அந்தக் கேள்வி என்னில் எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. இவன் பிறந்த பிறகு நானும் கணவரும் பெரும்பாலும் ஒதுங்கியே வாழ்ந்தோம். ஒரே ஒரு நாள் உணர்ச்சி வசப்பட்ட போது குழந்தையிடம் இருந்து வெகுதூரம் விலகிக் கூடினோம். அந்த வாசம் அவனை அண்டியிருக்காது என்றே கருதினேன்.

“இதுக்கும் பாத்திருவமே” என்றுஅத்தை சொன்ன போது என்னால் நிராகரிக்க முடியவில்லை.

அடுத்த நாள் அந்த கிராமத்தை நோக்கி ஓடினோம் கிராமங்கள் மனித வாழ்விடங்கள் மட்டுமில்லை, மூலிகை வைத்திய சாலைகளும் கூட! தண்டட்டி அணிந்த நரைப்பருவக் கிழவி ஒருத்தி, எங்களை இன்முகத்தோடு வரவேற்றார். பொக்கைவாய் திறந்து சிவப்பு நிறத்தில் சிரித்தார்.

“எத்தன நாளாச்சு?”

“பத்து நாள்!”

“யே யாத்தீ! நெஞ்சு வரண்டு ரத்தம் சுண்டிப் போச்சே; அறிவிருக்கா ஒங்களுக்கு? இன்னம் ஒரு நா தாம்சம் பண்ணி இருந்தா யேமன் பாசக் கயிற வீசி இருப்பான்.”

குழந்தையின் வலது கையை எடுத்து முகர்ந்து பார்த்தார். “வாட கூடுதலா இருக்கு: இத்தன நாள் என்ன பண்ணுனீக?”

“சின்னஞ்சிறுசுகன்னாலும் சுத்தபத்தமாத்தான் இருந்துச்சுக: அதான் சீரடிக்கும்குற ஆவுகம் இல்லாம ஆஸ்பத்திர்க்கிப் போயிட்டோம்.” மென்மையாய்ப் பேசினார் அத்தை!

“ஒனக்குக் கூரு இருக்கா? “அத்தையைத் திட்டினார் கிழவி. “அடுத்த வீடு, எதுத்த வீடு, பக்கத்து வீடெல்லாம் சுத்தமா இருக்குன்னு கண்டியா?” அந்தக் கேள்வியின் நியாயத்தை என்னால் புரிய முடிந்தது. நான் கூடிக் களித்த அந்தத் தருணத்தில்கூட அவன் தாக்குண்டிருக்கலாம். குற்ற உணர்வு என்னை வருத்தியது. “சரி, சரி: ஒன்னும் வருத்தப்பட வேண்டியதில்ல மூணே நாள்ல சரிப்படுத் திடலாம்.”

பேசிக் கொண்டே ஏதோ ஒரு விருட்சத்தின் வேரை, நீரில் நனைத்துக் கல்லில் உரசினார். துவையல் பதத்தில் வழித்து எடுத்து அமிர்த பாலில் கலந்து ஒரு சங்கு ஊட்டச் சொன்னார். பச்சை இலை ஒன்றைத் துணியில் முடிந்து கையில் கட்டி விட்டார். அந்த வேரை அத்தையிடம் தந்து மூன்று வேளை உரசி ஊற்றச் சொன்னார். அரசம் பட்டையைப் பொடி பண்ணி உடம்பில் தேய்த்துக் குளிப் பாட்டும்படிக் கூறினார்.

“நம்ம நாட்டு நோவுக்கு நம்ம மருந்துதான் குடுக்கணும். இங்கிலீஸ் வைத்தியத்த நம்புனா, பிள்ளையப் பறி குடுத்துட்டுப் போக வேண்டியதுதான்”.

அவர் சொன்னபடிச் செய்தோம். இரண்டாம் நாள் மென்மையாய்ச் சிரிக்க ஆரம்பித்தான். ஏழேழு உலகமும் எல்லையற்ற வான்வெளியும் என் குதூகலத்தின் உறை விடங்களாய் நின்று பிரகாசித்தன. “கண்ணாஆ” - என் இதயத்தின் ஈரம் தோய்ந்த குரல், தொலை தூர முகடுகளில் முட்டி எதிரொலித்தது. இந்நாட்டு நோய்க்கான வைத்திய மூலிகைகள் நிறைந்து வழிந்த முகடுகள் அவை!

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com