Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
காங்கிரீட் மனசு
பாளையம் சையத்

helper_lady பாழாய்ப் போன பவர் கட் வந்தாலும் வந்தது அரை வயிற்றுக் கஞ்சியிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. பசியால் துடிக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது மாரியம்மா நெஞ்சில் நெருப்பு பற்றிக் கொண்டது. அவள் வழக்கமாக எண்ணெய் மில்லில் வேலைக்குப் போய் வருவாள். தினமும் ஐம்பது ரூபாய் கூலி கிடைத்தது. கஞ்சியோ கூழோ அரை வயிறாவது நிறைந்தது. வாரத்தில் ஆறு நாட்களும் வேலை இருக்கும். பண்டிகை காலங்களில் ஞாயிற்றுக் கிழமையிலும் கூட முதலாளி வேலைக்கு வரச் சொல்வார். உடல் அலுத்து சோர்வு தட்டி ஓய்வுக்குத் தங்கினாலும் கூட முதலாளி பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் வேலைக்கு ஆஜராகி விடுவாள். ஞாயிற்றுக்கிழமை லீவு நாள் நான் வேலைக்கு வரமாட்டேன் என்று முறுக்கிக் கொண்டால் நாற்பது ரூபாய் கூலிக்கு மாரடிக்க வேறு கூலி ஆட்கள் தயாராக இருந்தனர். எனவே, மாரியம்மா உடம்பு அசதியையும் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்று விடுவாள்.

“நாம என்ன தொரை மார்க கம்பெனியிலா வேல பாக்குறோம். லீவெல்லாம் பாத்தா நம்ப பொழப்பு நாறிடும்”

மாரியம்மா சொல்வதைக் கேட்டு அவள் மதனி முனியம்மா ஆதங்கப்படுவாள். முனியம்மா காங்கிரீட் வேலைக்கு போவாள். அவளுக்கு நல்ல திடகாத்திரமான உடல் வாகு. மேஸ்திரி ஞானக்கண்ணு ரொம்பவும் கறார் பேர்வழி. காங்கிரீட் வேலைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் சைட்டுக்கு வந்து விட வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாய் இருப்பான். சாக்குப் போக்கு சமாதானங்கள் அவனிடம் எடுபடாது. சும்மா சொல்லக் கூடாது. உடலை வருத்தி வேலை வாங்கினாலும் அதற்குத் தக்க கூலியையும் கொடுத்துவிடுவான். அவனுடன் காங்கிரீட் வேலைக்குப் போய் வந்தால் குறைந்தது நூற்றம்பது ரூபாய் கிடைக்கும். ஒரு வாரம் வேலை பார்ப்பதும் சரி. அந்த ஒருநாள் வேலைக்குப் போய் வருவதும் சரி. உடம் பெல்லாம் வலி எடுத்து முழி பிதுங்கிப் போகும். நாதியற்ற வளுக்கு வேறு கதி இல்லை என்று கஷ்டத்தை எல்லாம் ஏற்றுக் கொண்டு பழகிப் போனாள்.

பலகை அடித்து கம்பி கட்டியிருக்கும் அந்தரத்தில் மாங்கு மாங்கு என்று சட்டியில் தலைச் சுமையாக காங்கிரீட்டைச் சுமந்து கொண்டு ஓடி ஓடிச் சென்று கொட்ட வேண்டும். வேகாத வெயிலில் உடம்பெல்லாம் எரியும். தலைச்சுமை கழுத்தை அழுத்தும். சட்டி யிலிருந்து வழியும் சிமென்ட் சாறு உடம்பில் ஒழுகி நமச்சல் கொடுக்கும். காங்கிரீட் சட்டியைச் சுமந்து கொண்டு மெதுவாக நடந்தால் மேஸ்திரி கத்துவான்.

“என்னபுள்ள நெலவுல நாட்டியமாடுதியா? உஷ்ணத்தின் உச்சியில் பொங்கிப் பிரவாகமெடுக்கும் சூரியனின் கதிர் சுள்ளென்று கருப்புத் தோலில் ஊடுருவி மேனியெங்கும் நெருப்பு பூ சூடியது போல முள்ளாய்க் குத்தும். அந்த ஆக்ரோஷ உஷ்ணத்தின் ஆக்கிரமிப்பு மேஸ்திரிக்கு நிலவின் குளிராய் கண்ணுக்குத் தெரியும். வாயை மூடிக் கொள்ள வேண்டும். பதில் பேசினால் மேஸ்திரிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும்.

தலைச்சுமையுடன் நடந்து வரும் போது மிகவும் கவனமாக வர வேண்டும். இலேசாகத் தடுமாறினாலும் மின்சார வயர்களுக்காகப் போட்டிருக்கும் பிளாஸ்டிக் குழாய் நொறுங்கி விடும். எஞ்ஜினீயருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். வாய்க்கு வந்த படி ஏசுவார். மானம் போய்விடும். கவனம் பிசகினால் நீண்டு கொண்டிருக்கும் இரும்புக் கம்பி காலைப் பதம் பார்த்துவிடும். சுமையிலும் நடையிலும் நிதானமும் வேண்டும். சுறுசுறுப்பும் வேண்டும். அத்தனையும் முனியம்மாவுக்கு நன்கு பழகிப் போய்விட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் குறைந்தபட்சம் வேலை இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வாரம் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் கூலி பார்த்து விடுவாள். சில வீட்டுக்காரர்கள் காங்கிரீட் போடும்போது வயிறுநிறைய சாப்பாடும் கொடுப்பார்கள். ஆனாலும் வீட்டுக்காரரின் சாப்பாட்டை எல்லாம் எதிர்பார்த்து போக முடியாது. வழக்கம்போல பழையதைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவாள். சாப்பாடு கிடைத்தால் பழையதைப் பத்திரப்படுத்தி ராத்திரிக்கு வைத்துக் கொள்வாள்.

மதனி மாரியம்மா வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதைக் கண்டு முனியம்மா மனசு கேட்கவில்லை. மதனி வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு பசியைப் பொறுத்துக் கொள்வாள். பாவம்! வளரும் பிள்ளைகளின் வயிற்றை வண்ணான் துறையிலா காயப்போட முடியும்? அதுக முகத்தைப் பார்க்க முனியம்மாவுக்குச் சகிக்கவில்லை. மாரியம்மாவுக்கு காங்கிரீட் வேலை புதிது அல்ல. அவளும் முன்பு இந்த வேலைக்குச் சென்றவள்தான். மூன்றாவது குழந்தை பெற்ற பிறகு அவளால் அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. அவள் உடம்பு நல்ல ஊத்தம் போட்டுவிட்டது. கனத்த சரீரத்துடன் காங்கிரீட்டைச் சுமந்து கொண்டு கம்பிப் பலகையில் நடக்க கஷ்டமாக இருந்தது. ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டு வேலை செய்தால் அவளுக்குத் தலைசுற்றியது. எனவே, கூலி குறைவானாலும் பரவாயில்லை என்று எண்ணெய் மில் வேலையைச் செய்து வந்தாள். அது அவளுக்கு இலேசாக இருந்தது. வாரக் கூலி குறைவாகக் கிடைத்தாலும் உடம்பை வருத்திக் கொண்டு வேலை செய்ய வேண்டியதில்லை. காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குப் போக வேண்டும். நிலக்கடலை மூடை களைப் பிரித்து கடலையைக் களத்து மேட்டில் காயப் போட வேண்டும். துணைக்கு வேலை செய்ய ஆட்கள் இருப்பார்கள். களத்து மேட்டில் கடலையைப் பரப்பி விட்டு பறவைகள் அண்டாமல் அணுகாமல் தேமே என காவல் காக்க வேண்டும். முதலாளி இடைஇடையே ஏதாவது சின்னச் சின்ன வேலைகள் ஏவுவார். மாலை வெயில் மங்கி வரும்போது காய்ந்த கடலையை மூடை யில் கட்டி வைத்தால் போதும். இருட்டுவதற்கு முன்பாக வீடு வந்து விடுவாள். மில் வேலை அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால் காங்கிரீட் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டாள். ஆனால், இப்போது மின் வெட்டு காரணமாக மில் சரியாக இயங்கவில்லை. முன்பு போல அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. பட்டினியும் பசியுமாக குழந்தை களுடன் அல்லல் பட்டாள். காங்கிரீட் வேலைக்குப் போகக் கூடாது என்ற அவள் முடிவு பிரசவ வைராக்கிய மாகி விட்டது.

“மதனி நாளக்கி ஒரு காங்கிரீட் இருக்கு. மேஸ்திரி ஒரு பொம்பள ஆள் வேணும்னாரு எனக்கு ஒன் நெனப்பு வந்துச்சு. நான் ஆள் கூட்டியாரேன்னு சொல்லிட் டேன்” - மதனி கூறியதைக் கேட்டதும் மாரியம்மாவுக்கு கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது. ஆனாலும் வேலையை நினைக்கும்போது கஷ்டமாக இருந்தது. மீண்டும் காங்கிரீட் வேலைக்குப் போக வேண்டிய நிலை வந்து விட்டதே என்று மனம் வருந்தினாள்.

“என்ன மதனி யோசிக்கிறே. சின்ன காங்கிரீட் தான். வீட்டுக்காரர் துபாய்ல இருக்காராம். சீக்கிரம் முடிஞ்சிடும். சித்தி புள்ளைகள பாத்துக்கு வாங்க”

முனியம்மா கூறியது சற்று தைரியமாக இருந்தது. ஒருநாள் வேலைக்குப் போனால் கூட நூற்றம்பது ரூபாய் கூலி கிடைக்கும். கூலிப் பணத்தைக் கொண்டு அரிசி வாங்கி விடலாம். புள்ளைங்களுக்கு ருசியாக கொடுக்க முடியவில்லை என்றாலும் வயிறார கொடுக்கலாம். அதனை நினைக்கும் போது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

“சரி மதனி நான் வாரேன்” என்றாள். வீட்டில் டப்பாவில் அடித்தட்டிக் கிடந்த கேப்பையைக் கிளறி குழந்தைகளுக்குக் கொடுத்தாள்.

“அம்மா தெனமும் கேப்பை தானா? அரிசி சோறு தின்ன ஆசையா இருக்கும்மா”

மூத்தவள் சிணுங்கினாள். மாரியம்மா மனசு அறுத்தது. வலுவில் சிரிப்பை வரவழைத்து,

“நாளைக்கு நம்ம வூட்ல சுடச் சுட சோறு பொங்கிக் கருவாட்டுக் கொழம்பு வச்சி தாரேன். விடியும் போது நான் அத்தை கூட காங்கிரீட் வேலைக்குப் போயிடுவேன். சித்தி வூட்ல இருங்க. பாப்பாவ பாத்துக்க. சாயந்தரம் வந்து சோறு பொங்கித் தாரேன்.”

அம்மா கூறியதைக் கேட்ட அந்தப் பிஞ்சு மனசில் கருவாட்டுக் குழம்பு வாசனை மணக்கத்துவங்கியது. அந்த மணத்துடனே பிள்ளைகள் உறங்கிப் போயின.

“மதனி கௌம்பு. ஏழே முக்கா பஸ்ஸ புடிச்சா தான் ஒன்பது மணிக்குள்ளார போய்ச் சேர முடியும்.”

தூக்குவாளியுடன் காலையிலேயே முனியம்மா வந்து கூப்பிட்டாள். மாரியம்மா தனது மதனி கையில் இருந்த தூக்குவாளியை மாறி மாறிப் பார்த்தாள்.

“என்ன பாக்குறே இதுல இருக்குற பழயதை நாம பகிர்ந்து தின்னலாம் கௌம்பு” என்று அவசரப்படுத்தினாள். அரக்க பறக்க பஸ் பிடித்து வேலை செய்ய வேண்டிய இடத்துக்கு வந்து சேர நேரம் சரியாக இருந்தது.

மேஸ்திரி ஞானக்கண்ணு, மாரியம்மாவைப் பார்த்ததும் புருவங்களை உயர்த்தி, “மில்லு வேல என்னாச்சு?” என்று நக்கலாகக் கேட்டான்.

“பவர் கட்டுனால வேல சரியா கெடைக்கல்லே”

“சரி சரி மச மசன்னு நிக்காம வந்தமா ஆளுக்கு ஒரு வேலைய செஞ்சமான்னு ஜோலிய ஆரம்பியுங்க”

மாரியம்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரீட் சட்டியைச் சுமக்கத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டாள். ஆம்பிளை ஆட்கள் சாரம் கட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர். மாரியம்மாவும், முனியம்மாவும் பெரிய பனங்கட்டையை சாரத்துக்குத் தூக்கி வந்தனர். பழைய சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி சாரக் கம்பை அதில் நிறுத்தினார்கள். குறுக்கும் நெடுக்குமாக சவுக்குக் கம்புகளைக் கொடுத்துக் கயிற்றால் நன்கு இறுக்கிக் கட்டினார்கள். அரைமணி நேரத்தில் சாரம் கட்டும் வேலை முடிந்து விட்டது. எப்போது கரன்ட் போகும், எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் வீட்டுக்காரர் முன் ஜாக்கிரதையாக நான்கு பெரிய டிரம்களை வாடகைக்கு எடுத்து தண்ணீரை நிரப்பி வைத்திருந்தார். சல்லிக்கல் மலை போலக் குவிந்து கிடந்ததைக் கண்டு மாரியம்மா மலைத்தாள். கலவை மிஷினை வாகாக அருகில் கொண்டு வந்து வேலைக்குத் தோதுவாக நிறுத்தினார்கள். மாரியம்மா கையில் மடித்துக் கொண்டு வந்த பழைய சபாரி சட்டையை நன்கு உதறி மேலுக்கு அணிந்து கொண்டாள். அழுக்கு பிடித்த குற்றால சீசன் துண்டை தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு மேலே ஏறினாள். பத்து மணி வெயில் பம்பரமாகச் சுழன்றடித்தது. மருந்துக்குக் கூட காற்று வீசவில்லை. உடம்பு முழுக்கப் புழுங்கியது. காங்கிரீட் கலவையைக் கீழேயிருந்து ஒருவன் சட்டியில் தூக்கிக் கொடுக்க சாரத்தில் நின்ற பாண்டி சட்டியைக் கைமாற்றி மேலே கொடுத்தான். காங்கிரீட் நிறைந்த சட்டியைச் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக வேலை துவங்கியது. மாரியம்மாவுக்கு வியர்த்துக் கொட்டியது. நீண்ட இடைவெளி ஏற்பட்டதால் வேலை கஷ்டமாகத் தெரிந்தது. கனத்த உடம்பையும் தூக்கிக் கொண்டு சட்டியுடன் நடக்க மிகவும் சிரமப்பட்டாள். கஷ்டத்தையும் சிரமத்தையும் நினைத்தால் பிள்ளைகளின் வயிற்றுக்கு அல்லவா கஷ்டமாகி விடும். சாயங்காலம் வேலை முடித்து கிடைக்கும் கூலியை நினைத்துக் கொண்டு மளமளவென்று சட்டியை நிறைத்து கம்பிப் பலகையில் காங்கிரீட்டை கொட்டினாள்.

வெயிலுக்கு இதமாக வீட்டுக்காரர் குளிர்பானம் கரைத்து வேலை ஆட்களுக்குக் கொடுத்தார். மேலே வந்து ஆட்களின் தலையை எண்ணிக் கொண்டு போனார்.

“வீட்டுக்காரர் தலையை எண்ணுகிறாரே. ஆள் கணக்குக்கா கூலி கொடுக்கப்போறார். காங்கிரீட் வேலைக்கு சதுர அடிக்கு தானே கூலி கொடுப்பாக” மாரியம்மா புரியாமல் மதனியிடம் கேட்டாள். “தெரியல்லே புள்ளே. நமக்கெதுக்கு அதெல்லாம்” என்று முனியம்மா பேச்சை சுருக்கிக் கொண்டாள். இருவரும் காங்கிரீட் சட்டியுடன் பலகை தடதடக்க ஓடிக் கொண்டிருந்தனர். மதிய உணவுக்காக மேஸ்திரி எல்லோரையும் கீழே இறங்கி வரச் சொன்னான். காங்கிரீட் வேலை பாதிக்கு மேல் முடிந்திருந்தது.

“மதனி எறங்கு சாப்பாட்டுக்கு அப்புறம்தான் இனி வேல”

முனியம்மாவுடன் அவளும் கீழே இறங்கி வந்தாள். கை, கால்களை கழுவிக் கொண்டாள். கட்டிடத்தின் கீழ்தளத்தில் வாசனை மூக்கைத் துளைத்தது. இதுபோன்று வேலை செய்யும் இடங்களில் பழையது வாசனையைக் கண்டு பழகிப்போன மாரியம்மாவுக்கு அந்த வாசனை புதிதாக இருந்தது.

“போங்க உள்ளே போய் ஒரு புடி புடிங்க” மேஸ்திரி சிரித்துக் கொண்டே சொன்னான். முனியம்மா விபரம் தெரியாமல் விழித்தாள். “என்ன பாக்குறே வீட்டுக்காரர் நம்ம எல்லாத்துக்கும் சாப்புட பிரியாணி குடுத்திருக்கார்”

பாண்டி பொட்டலங்களைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். மாரியம்மா பிரியாணி பொட்டலத்தை வாங்கி வாசனையை முகர்ந்து பார்த்தாள். கும் என வாசனை தூக்கியது. நாக்கு, பொட்டலத்தைப் பிரித்து பிரியாணியை ருசிக்க ஏங்கியது. வாயில் எச்சில் ஊறியது. பொட்டலத்தை வாங்கிச் சென்றவர்கள் பிரித்து நன்றாக ருசித்துச் சாப்பிட்டனர். அவளுக்கும் தின்ன ஆசையாக இருந்தது. வீட்டில் பிள்ளைகளை நினைத்த போது நெஞ்சில் ஈரம் சுரந்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். தூக்குப் போணியைத் திறந்து பழையதைக் குடித்தாள். பொட்டலத்தை பிள்ளைகளுக்காகப் பத்திரப்படுத்திக் கொண்டு மீண்டும் காங்கிரீட் சுமக்க மேலே ஏறினாள். மனசு இலேசாக இருந்தது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com