Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
மக்கள் கலைஞன் பாய்ஜூபி

சுந்தா

மக்கள் வரலாறு தனக்கென தத்தெடுத்துக் கொண்ட கவிஞர்களில் ஒருவர்தான் ‘பாய் ஜுயி’.

‘நான் இறந்த பின்னும் எனது இதயந்தான் வரும் பல தலைமுறை மக்களோடும் உறவு கொண்டிருக்கும்’ என்று எழுதியவர். அவர் வாழும் காலத்திலேயே அவருடைய பாடல்கள் ஊர்ச்சுவர்களிலும் ஆலயச் சுவர்களிலும் எழுதப்பட்டன. ஆட்சியாளர்கள் அவரைப் புறக்கணித்தனர். எனினும் மக்கள் அவரைத் தங்களது கவிஞராக வரித்துக் கொண்டனர். அடித்தள மக்கள் மட்டுமல்லாது உயர் அலுவலர் களில் ஒரு பகுதியினரும் அவரது கவிதைகளுக்கு பக்தர்கள் ஆனார்கள்.

சீன மண்ணில் ஷெங் ஷோ வின் சிற்றூர்ப் பகுதியான ஃசின் ஷெங் என்னுமிடத்தில் கி.பி. 772ல் ‘பாய் ஜுயி’ பிறந்தார். கி.பி. 846 வரை வாழ்ந்தார். படித்த ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். 12வயது முதற்கொண்டே பாடல்களை இயற்றும் திறன் கொண்டிருந்தார். சம காலத்தவரான பெருங்கவிஞர் யுவான் சென் னுடன் இணைந்து செயல்பட்டார். இவர்கள் தங்களுக்கென ஓர் உன்னதமான கவிதை நடையினையும் நோக்கத்தினையும் கொண்டிருந்தனர்.

பாய்ஜுயியின் பாடல்கள் எளிமையானவை; அதே போழ்து ஆழமானவை. சிக்கலற்றவை. அதிக படிப்பறிவில்லாத பெரும்பகுதி மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தவை. தனது பாடல் வரிகளை குடியானவப் பெண்களிடம் படித்துக் காட்டுவாராம். அவர் தனது வேலைக்காரர்களிடமும் படித்துக் காட்டுவாராம். எந்த வரியிலாவது அவர்களுக்குப் புரியாமல் போனால், தான் ஒரு பெருங்கவிஞன் என்கிற ஆணவமின்றியும் தயக்கமின்றியும் உடனே திருத்துவாராம். யாருக்காக பாடல்களை எழுதினாரோ அப்பிரிவு மக்களுக்கு தமது பாடல்கள் போய்ச் சேருவதில் கவனமாக இருந்துள்ளார். இத்தகைய கவனத்தில், இலக்கியம் குறித்த இவருடைய நோக்கம் அடங்கியுள்ளது. இலக்கியம் என்பது வரும் தலைமுறைக்கும் சேவை செய்ய வேண்டும் என்றும் பொதுவாழ்வில் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கருதியவர். பாய்ஜுயி இதனை மறைக்காது வெளிப்படையாகக் கூறியவர். யுவான் சென்னுக்கு எழுதிய கடிதத்தில் இலக்கியத்தின் நோக்கத்தினை அழகுறக் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 822ல் ஹாங்சோவ் பிரதேசத்திற்கு ஆளுநராக ஆனவர். ஆனாலும் எளிய மக்களின் மீதான தனது ஆதரவை தொடர்ந்து பின்பற்றியவர்.

போர் வெறியைக் கண்டித்தும், வரிச்சுமையை எதிர்த்தும் அரசவை ஆடம்பரங்களை வெறுத்தும், உயர் அலுவலர்களின் அத்துமீறலையும் ஒடுக்குமுறைகளையும் தாக்கியும் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை அற்புதமாக விவரித்தன அவருடைய கவிதைகள். ஜென் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்த பாய்ஜுயி முற்பிறவியில் தான் ஒரு கவிஞனாகத்தான் இருந்தேன் என்று சொல்லிக் கொண்டதுண்டு. எனினும் சமூகத்தில் நிலவும் இரு வேறுபட்ட உலகை மனசாட்சியோடு உறுதிபடச் சித்தரித்தார். யதார்த்தவாத அணுகுமுறை இதற்கு உதவியது.

85ம் ஆண்டில் பதவி இறக்கம் செய்யப்பட்டு சியு சியாங் பகுதிக்கு அனுப்பப்படுகிறார். இதற்காக இவர் உள்ளம் நொந்தாரில்லை. உயர் அலுவலர்களின் அதிகார மமதையினையும், மக்களை அவர்கள் கசக்கிப் பிழிவதை யும் கண்டு வெறுத்துப் பேசினார்.

20ம் நூற்றாண்டு அறிந்த சிலிதேசத்து மாகவிஞர் பாப்லோ நெருடா நமது நினைவிற்கு வருகிறார். பாப்லே நெருடாவும் உயர் பதவிகளை வகித்தவர். ஆனால் ஏழை, மக்களே, உழைப்பாளிகளே அவருடைய இதயத்தில் வாழ்ந்தவர்கள். 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாய்ஜுயியும் அரசுப் பதவிகள்பல வகித்தாலும் எளிய மக்களைத் தம் இதயத்தில் ஏந்தினார்.

அரசு அலுவலரான தனது தானியக் களஞ்சியத்தில் தானியங்கள் குவிந்துள்ளன. மாலைக்குளிருக்கு கனப்பு போட ஏராளமான எரிபொருள் உள்ளது. உள்ளீடு தைத்த தலையணி செவிகளின் மேலே கவிந்து கதகதப்பைத் தந்து கொண்டிருக்கிறது. மெல்லிய பட்டுப்போர்வை இரண்டு அவருடைய உடலைச் சுற்றியுள்ளது. இன்னொரு புறத்திலோ கொடுமையாக உள்ள இந்த உறைபனியால் ஏழையின் வண்டிச் சக்கரம் உடைந்து போகிறது. எளிய மக்கள் பசியில் இளைத்திருக்கிறார்கள். எந்த வீட்டிலும் புகை எழும்பவில்லை. அடுக்களை தூர்ந்து போயுள்ளது. இவ்விதமாய் தாம் காணும் சமூக நிலையைக் கண்ணீர் தளும்பக் கூறிவிட்டு பாடலின் இறுதி வரிகளில் இத்தகைய முரணான வாழ்க்கை நிலைகண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறுகிறார். இதில் அவருடைய தனித்துவமிக்க மனித நேயம் வெளிப்படுகிறது.

“என்னைப் போல் நன்றாய்

உண்டு உடுத்தி வாழ்வோர்

நூற்றினுக்கும் ஒருவர் என்பதற்கும் கீழே.

இந்நிலையில்

நான் எவ்வாறு நாணமின்றி இருப்பது...”

இன்னும் ஒருபடி மேலே சென்று இன்னொரு பாடலில் “உழைக்காமல் இருக்கும் நாம் சகல வசதிகளோடு வாழ்கிறோம். ஆனால் வயலில் உழைக்கின்றவர்கள் பட்டினியால் வாடுகிறார்களே” என்று வருத்தமடைகிறார். அரசு, வரி என்னும் கொள்ளை மூலம் வாழ்வைப் பறிப்பதையும் பாடல்களாக வடிக்கிறார்.

“உழவன் தனது மல்பெரி மரங்களை

வரிகட்டுவதற்காய் விற்றுத் தீர்த்தான்

வரும் ஆண்டிற்கு உணவும் உடையும் தனக்கு

எங்கிருந்து வருமென அறியான் அவனே.”

வரியின் கொடுமையினை இவ்வளவு அழுத்தமாகச் சித்தரித்துக் காட்டிய பாய்ஜுயி, அதிகாரிகளின் அட்டூழியங்களை உண்மை பிசகாமல் பாடிச் செல்கிறார். இத்தகைய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நிச்சயமாக மனிதர்கள் இல்லையென்ற முடிவிற்கும் வருகிறார்

“அதிகாரிகள்தாம் கொடிய ஓநாய்கள்

மக்களின் சதையைப் பிய்த்திடும் கொடியவர்

பல்லும் நகமும் இல்லாமல் பிறந்தாலும்

நெஞ்சத்தில் ஓநாய் இயல்பினைக் கொண்டவர்.”

1200 ஆண்டுகட்குமுன்பே மனித உரிமை குறித்து பாய்ஜுயி பாடல் புனைந்துள்ளார். அதுவும் மிக நுட்பமாக அமைத்துள்ளார். டாசவ் நகரக் குள்ளர்கள் என்கிற கவிதை அற்புதமான வரலாற்றுப் பதிவாக உள்ளது. டாசவ் நகரில் 3 அடிக்கும் குறைவான உயரமுள்ள குள்ளர்கள் இருந்தார்கள். இவர்கள் அரண்மனைக்கு அடிமைகளாக அனுப்பப்பட்டார்கள். பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றும் உள்ளம் கொண்ட பாய்ஜுயி இதற்காக வருந்தினார்.

“டாசவ் நகரம் குள்ள மனிதரைப்

பெற்றெடுத்ததே அன்றி

அடிமைக் குள்ளரை அந்நகரந்தான்

பெற்றெடுக்கவில்லை”

என்று மனம் குமுறினார்.

“செல்வருக்கும் ஏழைகளுக்கும்

தக்கது என்பதுவும் தவறு என்பதுவும்

வெவ்வேறு பொருளெனவே விளங்குவதாகும்”

-இப்படிப் பளிச்சென வெவ்வேறு வர்க்க நலன்கள் குறித்தும் அவற்றிற்கான வெவ்வேறு நெறிகள் குறித்தும் தெளிவுபட எழுதினார்.

“காட்டுவாத்தே! காட்டுவாத்தே!

எங்கு செல்கிறாய் என்பதைக் கூறு!

வடமேற்குத் திசைக்குச் சென்று விடாதே!

முடிவேதுமின்றி நெடும்போர் செய்வோர்

தங்களின் உணவைத் தீர்த்தனர்காண்!



உன்னைக் கண்டால் தங்கள்அம்பால்

வீழ்த்தி உனைத் தின்றிடுவாரே!

உன் சிறகுகள் அனைத்தும் பறித்து

தங்கள் அம்புறாத் தூணியில் பொருத்தி

அழகில் பூரிப்பார் அவரே1"

- என்று போர் வெறியையும் போரின் கொடுமையையும் சொல்லி எச்சரித்தார்.

போருக்கு எதிராக அவரின் கவிக்குரல் ஒலித்தது. பாடல்கள் பரந்துபட்ட அனுபவமாகவே வெளிப்படுகின்றன. பிளவுபட்ட சமூகத்தில் ஏழை - பணக்காரர்களுக்கு இடையேயான மோதல் என்பது இருந்து கொண்டே இருக்கிறது என்கிற உண்மை இலக்கிய அனுபவமாகக் கிடைக்கிறது. எளிமையான வரிகளில் ஆழ்ந்த பொருளைத் தருகிறார்.

ஏழைகளுக்காக இரங்குகிற, அவர்களுக்கு ஆதரவான சிந்தனைகளைக் கொண்டிருந்த பாய்ஜுயியின் பாடல்கள் பலவும் இன்றும் நமக்கு வியப்பைத் தருகின்றன.

ஒடுக்குமுறை மற்றும் ஏழ்மைக்கு எதிரான பாடல்கள் எல்லாக் காலத்திலும் எல்லா மண்ணிலும் எழுந்திருக்கின்றன. 9ம் நூற்றாண்டின் மிகப் பெரும் கவிஞராகிய பாய்ஜுயி இலக்கிய ஆளுமையிலும் எளிய மக்கள் ஆதரவு நோக்கிலும் ஒரு மகத்தான கவிஞர்தான்.

ஆதாரம் : கவிஞர் தமிழன்பன்ப.முத்துச்சாமி

மொழிபெயர்த்த ‘சீனக் கவிஞர் பாய்ஜுயி கவிதைகள்’ நூல் மற்றும் இணையதளத் தகவல்கள்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com