Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
கந்தர்வன் நினைவு - தமுஎச சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுபெற்ற சிறுகதை
தாத்தாவின் டைரிக் குறிப்புகள்
ச.சுப்பாராவ்

diary "காலையில் இருந்து மனதிற்குள் ஒரே பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வாக்கிங் போய்விட்டு வரும் வழியில் ஒரு டீக்கடையில் பாடிக்கொண்டிருந்தது. மலையோரம் மயிலே.. விளையாடும் குயிலே.. மயில், குயில் என்று சாதாரண வார்த்தைகள் என்றாலும் சுத்தமான கல்யாணி. மலேசியா வாசுதேவன் கூட யார் ஜனாகியா என்று தெரியவில்லை. மலேசியா ரொம்ப சாதாரணமாகப் பாடுகிறான். பாடகி, கல்யாணியின் அத்தனை அழகோடும், குழைவோடும் பாடுகிறாள். பாடகர்களை அவர்களது லிமிட்டேஷனுக்குள் அற்புதமாகப் பாடவைப்பதில் இளையராஜா உண்மையிலேயே பெரிய ஆள்தான்.

டைரியை மூடிவைத்து அந்த பாடலை மனதுக்குள் ஓடவைத்தேன். தினமும் ஏதேனும் ஒரு சானலில் ஏதேனும் ஒரு வேளையில் ஒலிக்கும் பாடல்தான் அது. ஒரு இடத்தில் 'நீ ஒரு காதல் சங்கீதம்', வேறொரு இடத்தில் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' சாயல்கள் அடிக்கும் பாட்டு, தாத்தா ஆச்சரியப்படுத்துகிறார். அவர் வயதிற்கு சினிமா பாட்டிற்கு ராகம் கண்டுபிடித்து டைரியில் குறித்து வைத்திருக்கிறார்.

'என்னடா, பழைய குப்பை எல்லாம் கிளறி படிக்க ஆரம்பிச்சாச்சா?' என்றாள் அம்மா, கிச்சனில் இருந்து. போன மாதம் மதுரைக்கு பூர்வீக வீட்டிற்குப் போன போது எடுத்து வந்தது. அட்டைப் பெட்டிநிறைய பழைய டைரிகள், பேப்பர் கட்டிங்குகள், புத்தகங்கள். ஒரு அறையில் எல்லா சமான்களையும் போட்டு பூட்டிவைத்து, பாக்கி வீடு முழுவதையும் வாடகைக்கு விட்டிருந்தோம். என் வேலை காரணமாக இனி மதுரையில் வசிக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியானதும், வீட்டை காலி செய்யச் சொல்லி, வீட்டை விற்று, தேவையற்ற சாமான்களை சந்தையில் விற்று (நானறிந்த மதுரையின் ஞாயிற்றுக்கிழமை சந்தை பெரும்பாலும் காய்கறி கடைகளும், சிலபழைய இரும்பு சாமான் கடைகளும் இருந்த இடம், இப்போது வெறும் பழைய இரும்பு சாமான்கள் கடைகள் மட்டுமே) பாக்கியை இங்கு கட்டித் தூக்கிவந்தோம்.

ஜூலை 11, 1839 மேன்மைதாங்கிய விக்டோரியா மகாராணி ஸ்காட்லாந்திலுள்ள தனது அச்சகத்தாருக்குத் தந்த உரிமைகளின் பேரிலும், ஜூன் 10, 1943, ஆறாம் ஜார்ஜ் மன்னரிட்ட உத்தரவின் பேரிலும், வில்லியம் காலின்ஸ், சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டினால் நியூபிரிவியர் எழுத்துருவில், ஆக்டவோ சைசில் ஜூலை 17, 1943ல் எடின் பர்க்கில் அச்சடிக்கப்பட்ட ஆயிரம் பைபிள்களில் (பழைய, புதிய ஏற்பாடுகள் இரண்டும் சேர்ந்தது) ஒன்று தாத்தாவின் பெட்டியில் இருந்தது.

1939 ஜூன் 4 அன்று வாங்கிய ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முழுத்தொகுப்பு-டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ் மேன், அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிட் சேர்ந்து வெளியிட்டது. லண்டன், 50, பழைய பெய்லி தெருவில் உள்ள பிளாக்கி அண்டு சன்ஸ் லிட் 1932ல் வெளியிட்ட 19ம் நூற்றாண்டின் சிறந்த ஆங்கிலச் சிறுகதைகளின் தொகுப்பு.

லண்டன், 295, ரீஜெண்ட் தெருவிலுள்ள பூஸி அண்டு ஹாக்ஸ் லிட் வெளியிட்ட மேற்கத்திய சஞ்கீத பாலபாடம், விலை 216-பவுண்ட், ஷில்லிங்கில் போலும்.

14-4-1975 ராக்ஷஸ வருஷம், சித்திரை மாதம் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா வெளியிட்ட ஸ்ரீ மஹாபாரதத்தின் ஆதிபர்வம்- 684 பக்கங்கள், முன் பக்கத்தில் ஸம்பாதகர்கள்-புரிசை நடாதூர் கிருஷ்ணமாசாரியர், திருக்கள்ளம் நரஸிம்ஹ-ராகவாசாரியர் என்று போட்டிருந்தது. சென்னை, அபிராமபுரம், 7, டாக்டர் ரங்காச்சாரி ரோடில் உள்ள ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா ஆபீசிலிருந்து தாத்தா வாங்கியிருக்கிறார்.

திருவிதாங்கூர்ப் பல்கலை மன்றத்து முன்னைத் தமிழ்ப் பேராசிரியர் இராமநாதபுரம் ராவ்ஸாகிப் மு.இராகவையங்கார் எழுதிய இலக்கியக் கட்டுரைகள். விலை ரூ.2-8-0. 1952ல் முதல் பதிப்பு, 54ல் இரண்டாம் பதிப்பு. 1955ல் மீண்டும் ஒரு பதிப்பு, தாத்தா வாங்கிய புத்தகம்.

பச்சையப்பர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ந.சஞ்சீவி எம்.ஏ. எழுதிய சங்ககாலச் சான்றோர்கள் -மே 1958ன் மூன்றாம் பதிப்பு - பாரி நிலையம் வெளியீடு - விலை ரூ.2-0-0.

1926-36 சென்னை ஸர்வகலாசாலைத் தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியரும், 1936-46 சென்னை ஸர்வகலா சாலைத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும், 1951-54 திருவிதாங்கூர் ஸர்வகலா சாலைத் தமிழ் பேராசிரியருமான எஸ்.வையாபுரி பிள்ளை பி.ஏ., பி.எல்., எழுதி தமிழ் புத்தகாலயம் வெளியிட்ட தமிழர் பண்பாடு - மே 1968ல் வெளியான ஏழாம் பதிப்பு விலை ரு.3.00

26.5.1967 ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் முகாம் இட்டிருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீமுகத்துடன் கூடிய ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்- டி.எஸ்.பார்த்தஸாரதி தொகுத்தது என்று எந்த வகை தொகைக்குள்ளும் அடங்காத புத்தக மூட்டை.

அதோடு கூட பளபளவென்று ஒரு கிராம போன் பெட்டி - அது ரோஸ்வுட் என்றாள்அம்மா. உள்ளே பாகங்கள் உடைந்து உதிரியாய்க் கிடந்தன. அதோடு சேர்ந்து ஒரு அட்டைப்பெட்டி நிறைய கிராமபோன் அரக்குப் பிளேட்டுகள், உடைந்தும், உருப்படியாகவும் மணிமேகலை படத்தின் சிறைச்சாலை என்ன செய்யும் பாட்டு, சிவபாக்கியத்தின் வண்ணான் வராண்டி, ஏவிஎம் தயாரித்த கதம்பக் காமிக் செட், மீரா, சகுந்தலை. கிராமபோனை சரி செய்து சிவபாக்கியத்தின் குரலைக் கேட்க ஆசையாக இருந்தது.

பழைய இரும்புக்கடைகளில் அதை சரிசெய்ய விசாரித்தேன். தமிழ்ச்சங்க ரோடிலிருந்து சந்தைக்கு நுழையும் வாசல்பக்கம்முன்பு ஒரு கிராம போன் ரிப்பேர் செய்பவர் இருந்தாராம். இப்போது இல்லை. தானப்ப முதலி தெருவில் கன்னையா சவுண்ட் சர்வீசும் இருந்த இடமே தெரியவில்லை. தாத்தா ஞாபகமாக அவற்றை அப்படியே கொண்டு வந்தேன். அதோடு கூடவே ஒரு பெட்டி நிறைய டைரிகள்.

அம்மாவிற்கு எல்லாவற்றையும் இங்கு கொண்டு வருவதில் இஷ்டமே இல்லை. எல்லா குப்பைகளையும் (ஆம் இவற்றை குப்பை என்றுதான் குறிப்பிட்டாள்) மதுரையிலேயே தூக்கிப்போட்டு விட்டு வரவேண்டும் என்றாள். அந்த வார விகடனில் 'சேர்த்து வைத்தால் ஆவணம்-தூக்கிப்போட்டால் குப்பை' என்று வந்திருந்த ஒரு கவிதையைக்கூட என்னிடம் காட்டினாள். குறிப்பாக டைரிகள் இருந்த பெட்டி ஒரு அனாவசிய சுமை என்று நினைத்தாள். நான் தாத்தாவின் டைரிக் குறிப்புகளில் இருந்து அந்தக் கால சமூக வாழ்க்கையைப் பற்றி நேரடியாகத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் சமூகவியல் ஆராய்ச்சியாளனாக என்னை பாவித்துக் கொண்டது அம்மாவிற்கு ஏனோ எரிச்சல் மூட்டியது. 'ஆமா! பொல்லாத சிபிஐ டைரிக் குறிப்பு! இன்னக்கி வத்தக்குழம்பு, பூசணிக்காய் கூட்டு, வக்கீல் பிஎஸ்ஆர் அம்மாவுக்கு டிவிஎஸ் தோப்புல பத்தாம் நாள் காரியம்னு எழுதி வெச்சுருப்பார். இதுலேர்ந்து நீ சமூக வாழ்க்கையை ஆராய்ச்சி பண்ணப் போறயாக்கும்!' என்றாள் கிண்டலாக.

அம்மா தாத்தாவைப் பற்றி இப்படிக் கிண்டலாகக் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனது சிறுவயதிலேயே என் அப்பா காலமாகிவிட்டார். தாத்தாதான் தனது பென்ஷன் பணத்தில் என்னையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டார். செலவைச் சமாளிக்க வயலின் டியூஷன் எடுத்தார். இன்று நான் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கான அஸ்திவாரம் தாத்தாதான். அம்மாவிற்கு தாத்தா கடவுள் மாதிரி. அவரது ஆழ்ந்த படிப்பு, சங்கீத ஞானம். எதையும் மிக கவனமாக, நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செய்யும் நிதானம் எல்லாம் எனக்கும் வரவேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். தாத்தாவை மற்றவர்கள் 'அவர் மஹாஞானி' என்று சொல்லும்போது அம்மா பெருமையாக ஆமோதிப்பாள். ஏனோ மதுரையிலிருந்தே டைரி பற்றி பேச்சு வரும்போதெல்லாம் இடக்காகவே பேசுகிறாள்.

மீண்டும் அம்மா குரல் கொடுத்தாள். நான் குளித்து, பூஜை முடித்து, டிபன் சாப்பிட்டால்தான் அவள் அடுத்த வேலைக்குப் போக முடியும். இந்த பழைய பஞ்சாங்கத்தையெல்லாம் அப்புறம் படிக்கக்கூடாதா? நான் டைரியை மூடிவைத்துவிட்டு, அவள் சொன்ன வேலைகளில் இறங்கினேன். வாஷிங்மெஷின் போடுதல், மத்தியான சமையல் வேலைகளுக்கு என்னால் தாமதமாகக் கூடாது.

டிபன் சாப்பிட்டதும் மீண்டும் டைரி படிப்பு. பிறர் டைரியைப் படித்து அந்தரங்கம் அறிவதற்கான குறுகுறுப்பு மனிதன் எழுதப்படிக்கத் துவங்கிய காலத்திலேயே வந்திருக்குமோ? வயதான கிழவருக்கு அந்தரங்கம் என ஒன்று இருந்திருக்காது. படிப்பதில் தவறில்லை. தாத்தாவும், நைலான் கயிறின் சுனந்தா போல், இந்த டைரியை எனக்குத் தெரியாமல் படிப்பவர்கள் 1000 ஆண்டு நரகத்தில் தலைகீழாய்த் தொங்கக்கடவர்' என நல்லவேளையாக சாபமிட்டு எழுதி வைத்திருக்கவில்லை. அதனால் தாராளமாய்ப் படிக்கலாம். அதுவும் போக, எனது நோக்கம் அவரது அந்தரங்கம் அறிவது இல்லை; அந்தக்கால வாழ்க்கை பற்றி அறிவதுதான் என்றும் மனதிற்குள் ஒரு சமாதானம். 'டேய்! அதற்கு மேல் நீ ஒன்றும் அதில் எதிர்பார்க்கவில்லையா? உண்மையைச் சொல்' என்றும் மனதில் சன்னமாய் ஒரு குரல். அதைக் கண்டு கொள்ளாமல் வேறொரு டைரியை எடுத்தேன்.

'அனுமார் கோவில் சாந்தாபிஷேகத்திற்கு சாமிநாதன் கச்சேரி. அவனுக்கு வழக்கமாய் வாசிக்கும் பாலுவும், கடம் ரங்கநாதனும் அங்குவிலாஸ் முதலாளி பங்களாவிற்குப் போய்விட்டார்களாம். என்னை வந்து கூப்பிட்டான். கடத்திற்கு திருப்பாலைக்குடி நவநீதனைச் சொல்லியிருக்கிறான். 19ம் தேதி. சரியென்று சொல்லியிருக்கிறேன்'.

19ம் தேதி குறிப்பைப் பார்த்தேன். 'காலையிலேயே வனஜா தூரமாகிவிட்டாள். அடியேன் சமையல்தான் இன்னும் மூன்று நாளைக்கு. குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புவது வரை ரொம்ப பரபரப்பாக வேலை. ராத்திரி ஹரிஹரய்யர் கடையிலிருந்து இட்லி வாங்கிக்கொண்டு வந்து சிம்பிளாக முடித்துவிட்டு கச்சேரி. நவநீதன் கஞ்சிராக்கு ஒரு பையனைக் கூட்டிக்கொண்டு வந்தான். பி.டபிள்யு.டியில் வேலை பார்க்கிறானாம். சுமாராக வாசித்தான். சாமிநாதன் அப்படியே குருநாதர் சோமுப்பிள்ளை குரலில், அதே சங்கதிகளோடு, அதே கீர்த்தனைகளைப் பாடினான். மாகேலரா விசாரமு, உபசாரமு சேஸேவா, நின்னுநேர நம்மினானுரா என்று அவரைப்போலவே. கடைசியாக இப்போது ரொம்ப பிரபலமாக இருக்கும் சோமுவின் 'மருதமலை மாமணியே'வை அப்படியே பாடினான். தர்பாரி கானடாவில் அருமையான டியூன். கச்சேரி முடிய 2 மணியானது.

தொடர்கதை படிப்பது மாதிரி வரிசையாக, தேதி வாரியாகப் படிப்பதில் எனக்கு இஷ்டமில்லை. வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு நாட்களின் சம்பவங்களை விட்டுவிட்டு, இடையிடையில் படித்தால்தான் சுவாரசியமாக இருக்குமென்று தோன்றியது. படித்துக் கொண்டிருந்ததை வைத்துவிட்டு வேறொரு டைரியை எடுத்தேன்.

'காலையிலிருந்து மைக்செட் குழாய் அலறிக் கொண்டிருந்தது. காய்கறி வாங்கிக் கொண்டு வரும்போது ஜனதா கட்சி ராமனைப் பார்த்தேன். ஜனதா கட்சி மன்ற ஆண்டுவிழாவாம். மத்திய தொழிலாளர் நல அமைச்சர் ரவீந்திர வர்மா வருகிறாராம். 'மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்' என்று ஒரே பாட்டை திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த பாட்டிற்கு நடித்திருக்கிற ஸ்ரீகாந்த் என்பவர் ஜனதா கட்சிக்காரராம். 'ஐயா மாதிரி பழைய காங்கிரஸ்காரங்க எல்லாம் நம்ம கட்சிக்கு வரணும்' என்றான் ராமன். ரவீந்திர வர்மா ஒரு திறந்த ஜீப்பில் வந்து கொடியேற்றினார். கூட வந்திருந்த குருசாமி நாடார் என்னைப் பார்த்து கையசைத்தார். பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இப்போது அவர்தான் மதுரை மாவட்ட ஜனதா கட்சித் தலைவர். ஜீப்பின் பின்னால் என்னைப் போன்ற கிழவர்கள் சிலரும். சின்னக்குழந்தைகள் சிலரும். ஜனதா கட்சியை பகவான்தான் காப்பாற்ற வேண்டும்.

தாத்தா ஜனதா அனுதாபியாக இருந்த காங்கிரஸ்காரர் போலும். பழைய குப்பைகளை காலி செய்யும்போது அன்னிபெஸன்ட் அம்மையார் (அவரை ஏன் எப்போதும் 'அம்மையார்' அடைமொழி சேர்த்தே சொல்கிறோம்?) படம் பிரேமிட்டு இருந்தது. தாத்தா பூஜையறையில் சாமி படங்களுடன் காந்தி படம் வைத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. வெள்ளி, செவ்வாய்களில் ஒரு முழம் கதம்பம் வாங்கி கிள்ளிக்கிள்ளி வைக்கப்படும் பூவில் காந்திக்கும் ஒரு பங்கு உண்டு.

தாத்தாவின் டைரிகளில் உள்ள குறிப்புகள் ரொம்ப சுவாரசியமாகத்தான் இருந்தன. எந்த நூலகத்திலும் எளிதில் தேடிக் கண்டுபிடிக்க முடியாத அபூர்வமான தகவல்கள்.

'வியாசராயபுர அக்ரஹாரத்தில் ஸ்ரீராமநவமி உற்சவத்தில் ஏ.கே.சி.நடராஜனின் கிளாரினெட் கச்சேரி நடக்கிறது. சென்ட்ரல் பெரியார் பேருந்து நிலையமாக பெயர் மாற்றம் பெறுகிறது. இம்பீரியல் டாக்கீஸ் இடிக்கப்படுகிறது. தேவி டாக்கீஸ் வாசலில் பாட்டுப்பாடி காசு கேட்கும் சிறுவனை இளையராஜா அழைத்துச் சென்றுவிட்டதாக மதுரை மக்கள் பேசிக்கொள்கிறார்கள். சேதுபதி பள்ளியில் கைத்தறிக் கண்காட்சியில் ஏ.எம்.ராஜா-ஜிக்கி கச்சேரி. யாரும் ஒரு சின்ன துண்டுகூட வாங்காத அந்தக் கண்காட்சியில் கக்சேரிக்கு மட்டும் கூட்டம் கூடி விடுகிறது. கலெக்டர் ஆபீஸ் தாண்டி அந்தப்பக்கமாய் ஒரே இடத்தில் சினிப்ரியா, மினிப்பிரியா என்று இரண்டு சினிமா தியேட்டர் கட்டியிருக்கிறான். இவ்வளவு தூரம் போய் யார் படம் பார்ப்பார்கள்? கொஞ்ச நாளில் நஷ்டப்பட்டு மூடப்போகிறான். சிந்தாமணி தியேட்டர், ஆப்பரேட்டர் ராகவன் ரொம்ப கம்பல் பண்ணியதால் தாத்தா கௌரவம் படம் பார்க்கிறார். இந்திராகாந்தி சிடி சினிமா வாசலில் தாக்கப்படுகிறார். டிவிஎஸ் ஆபீஸ் இருந்த இடத்தில் இன்னும் புதிதாய் இரண்டு சினிமா தியேட்டர். மதுரை நாசமாகப் போகப்போகிறது. சோமசுந்தரம் காலனி, ரயிலார் நகர், அழகர் நகர் என்று ஊருக்கு வெளியே சொந்தபந்தங்கள் வீடு கட்ட தாத்தா சிரமப்பட்டு கிருஹப்பிரவேசங்களுக்கு சென்று வருகிறார்.

புதிய அனுபவங்களை தாத்தா மிக அழகாக, இப்போது நாம் நேரில் பார்ப்பதுபோல் எழுதி வைத்துள்ளார். தாத்தா முதன்முதலில் டேப் ரிகார்டரில் பாட்டு கேட்டது பற்றி ஒரு நாள் எழுதியுள்ளார். தாத்தாவின் நண்பருக்கு நண்பர் ஒருவர் சென்ட்ரல் பாங்கில் ஆபீசராக இருக்கிறார். தாத்தாவும், நண்பரும், அவர் வீட்டிற்கு வைகாசி விசாக உற்சவத்திற்கு வசூலுக்குச் செல்கிறார்கள். பாங்க் ஆபிசர் டேப் ரிகார்டர் வாங்கியது பற்றிச் சொல்லி, ஒரு பாட்டு கேளுங்கள் என்கிறார். இவர்கள் சரி என்று சொல்ல, ஆபீசர் பளபளவென்று ஒரு குட்டி ஸ்டூலைக் கொண்டுவந்து சுவிட்ச்போர்டுக்குக் கீழே போட்டுவிட்டு, மனைவியை அழைத்து டேப் ரிகார்டரை எடுத்துவரச் சொல்கிறார். அவர் மனைவி ரூமில் பீரோவைத் திறந்து தனது பழைய புடவையொன்றில் பத்திரமாய் சுற்றிவைக்கப்பட்டுள்ள டேப் ரிகார்டரை வெளியே எடுத்து ஸ்டூலில் வைக்கிறார். பளபளப்பாய் கறுப்புத்தோல் உறையிட்ட பிலிப்ஸ்டேப் ரிகார்டர். படுக்கை வசமாய் இருக்கும் பெட்டைப். கூடவே கோட்டோவியமாய் தியாகராஜரும், புகைப்படமாய் பாலமுரளி கிருஷ்ணாவும் உள்ள கேஸட். பாலமுரளி கிருஷ்ணா உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனை பாட அப்படியே மெய்சிலிர்க்கிறது. வேறு கேஸட் ஏதேனும் போடுங்கள் என்கிறார் நண்பர். கேஸட் 45 ரூபாய் என்பதால், ஒன்றே ஒன்று மட்டும் வாங்கியதாகவும், நிறைய வாங்கிக் கட்டுப்படியாகாது என்றும் பாங்க் ஆபீசர் சொல்கிறார். மூவரும் கேஸட் விலை குறைந்தால் நல்லது என்று கருதுகிறார்கள்.

தாத்தாவின் குறிப்புகளை முடிவில்லாது படித்துக் கொண்டே இருக்கலாம் போல். ஒவ்வொருநாளும் வசீகரமான குறிப்புகளால் நிறைந்திருந்தது. ஆடிவீதியில் கதாகாலட்சேபம் நடக்கிறது. வெங்கட்ரமணராவ் என்பவர் அற்புதமாக கதை சொல்கிறார். ஆர்தாஸர், நாமதேவர், துக்காராம் பற்றியெல்லாம் நாமறியாத கதைகள். கதைக்கு நடுநடுவே மராட்டிய அபங்கங்கள் பாடுவது இவர் மட்டுமே.

சம்பந்த மூர்த்தித் தெருவில் பிராமண இளைஞர் சங்கத்தில் வேதம் சொல்லித் தரப் போகிறார்கள். இது சம்பந்தமாக கீரைப்பட்டி சங்கர வாத்யாருக்கு சிருங்கேரி மஹாஸ்வாமிகளிடமிருந்து நேரடியாக உத்தரவு வந்திருக்கிறதாம். இந்த வேதக் கிளாஸ் செல்வதற்காக, சர்வோதய இலக்கியப் பண்ணையிலிருந்து ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட தைத்ரிய மந்த்ரகோஷம் என்ற புத்தகத்தை தாத்தா வாங்கி வருகிறார். அந்தப் புத்தகத்தில் பொருளடக்கம் என்பதற்குப் பதிலாக விஷயானுக்ர மணிகை என்று போட்டிருந்ததாக தாத்தாவின் டைரி சொல்கிறது.

அம்மா வீட்டு விலக்கானபோது, தான் செய்த சமையல்களை விரிவாக எழுதியிருக்கிறார். அப்போது அறிமுகமான திடீர் புளியோதரைப் பொடியை வாங்கிப் பயன்படுத்திப் பார்க்கிறார். மெட்ரோ என்ற கம்பெனிக்காரன் தயாரித்ததாம். மற்றொரு சமயம், தீபாவளி நேரத்தில் அம்மா வீட்டுக்கு விலக்காகிவிட, திண்டுக்கல் ரோடு சுமங்கலியில் பட்சணம் வாங்கி வருகிறார். வீட்டில் பட்சணம் செய்யாது, அங்கு வந்து பாக்கெட் பாக்கெட்டாக பட்சணம் வாங்கிச் செல்லும் மக்களின் சோம்பேறித்தனத்தை, பணத்தின் அருமையை உணராத ஆடம்பரத்தை டைரியில் வன்மையாகக் கண்டிக்கிறார்.

அம்மா மதியச் சாப்பாட்டிற்குக் கூப்பிட்டாள். "ஏண்டா, காலைலேர்ந்து என்னமோ நாவல் படிக்கற மாதிரி படிச்சுண்டே இருக்க?" என்றாள். "இண்டரெஸ்டிங்கா எழுதியிருக்கார். எல்லாத்தையும் ரொம்ப நுணுக்கமா எழுதிவெச்சுருக்கார். நீ டைரி எழுதினா இன்னக்கி என்ன சமையல்னு எழுதுவியா? அவர் எழுதியிருக்கார். நீ தூரமா இருந்தபோது அவர் சமையல் செஞ்ச எல்லா நாளுக்கும் என்ன மெனுன்னு எழுதியிருக்கார்" என்றேன். அம்மா, 'அவர் டைரி எழுதினதே என்னோட தூரத்து நாளையெல்லாம் கரெக்ட்டா குறிச்சு வெக்கத்தான்' என்றார். எனக்கு ஒரு கணம் என்னவென்றே புரியவில்லை. 'என்னம்மா சொல்ற?' என்றேன்.

'உங்க அப்பா சின்னவயசுலயே போய்ட்டார். உங்க தாத்தாவுக்கு நம்ப ரெண்டு பேத்தயும் பாத்துக்குற பொறுப்பு. எனக்கும் அப்போ சின்ன வயசுதானே! நா தப்பு பண்ணிடுவேனோன்னு அவருக்கு ரொம்ப பயம். என்னோட தூரத்து நாள கரெக்டா குறிச்சு வெப்பார். அதுலேர்ந்து 27ம் நாள் நா பழையபடி ஒக்காரல்லன்னா ரொம்ப டென்ஷன் ஆய்டுவார். ஒருதரம் 30 நாளாயிடுத்து. நேரடியாகவே ஒண்ணும் தப்புத்தண்டா பண்ணிடல்லயே! லேடி டாக்டர பாத்துடறயான்னார். எனக்கு ரொம்ப துக்கமா, கோபமா வந்தது. நீங்களும் கூட வந்து சந்தேகத்த தீர்த்துக்கோங்கோன்னேன். டாக்டர் ஒண்ணுமில்ல-ரொம்ப வீக்கா இருக்கா-ரத்த சோகைன்னு சொல்லி மருத்து மாத்திரை தந்தா. டைரில அதையும் எழுதியிருப்பார்-வடக்குமாசி வீதில கிருஷ்ணன் கோவிலுக்கு எதுத்தாப்ல கமலான்னு ஒரு லேடி டாக்டர்ன்னு விபரமா எழுதியிருப்பார்' என்றாள். அவள் குரலில் இருந்தது கோபமா, வருத்தமா என்று தெரியவில்லை. 'தாத்தா மஹாஞானின்னு சொல்லுவியேம்மா' என்றேன். 'அப்படியே ஞானியாவேவா பொறந்தார்? நெறைய படிப்பார். ஞானியாய்ட்டார். ஞானிகளும் சமயத்துல மனுஷானா இருப்பா. சில சமயம் அதுக்கு கீழயும் இறங்கிடுவா' என்றாள்.

பிறகு நான் அந்த டைரிகளைத் தொடவேயில்லை.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com