Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
காதல் என்னும் அரசியல்

சதன்

kadhal_feb14 “உன்
கொலுசின் சிணுங்கலில்
அசையும் என் மனம்....”

என்று துவங்கி,

“காடுகள் எரிந்து
மரங்கள் தெறிக்கையில்
சந்தனமே மணக்கும்

என் சடலம்
எரிந்து
எலும்புகள்
தெறிக்கையில்
உன் பெயரே ஒலிக்கும்”

என்பதுவரை நம் ஆண் கவிஞர்களின் காதல் கவிதைகள் பலதரப்பட்டவையாகப் பெண்ணை நோக்கிப் பேசுகின்றன.பெண் கவிஞர்களோ இச்சைக்கிளியாய் இனியும் இருக்கச் சம்மதியோம் எம்மைத் தோழமையோடு காதலிக்கக் கற்றுக்கொள்க என்று குரல் எழுப்புகிறார்கள்.எப்படியாயினும் காதலை ஆண் பெண் இருபாலரும்

(இளமைப் பருவத்திலாவது) கொண்டாடத்தான் செய்கிறார்கள்.அகப்பாடல்களையும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் போலப் படைப்புகள் மட்டுமின்றிக் கற்பு மணம் களவு மணம் இரண்டையும் ஏற்ற சமூகமாக வாழ்ந்தவர்களல்லவா? காதல் போயின் சாதல் என்று சொன்ன பாரதியின் பேரன் பேத்திகளாச்சே.ஆகவே காதலைக் கொண்டாடுவது நமக்கொன்றும் புதுசல்ல.

சமீப ஆண்டுகளாக பிப்ரவரி 14 ஆம் நாளை காதலர் தினமாகக் கொண்டாடும் பழக்கம் தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்கள் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது.விளம்பரங்களுக்காக தொடர்ந்து ஏதாவது ஒரு விழாவை பரபரப்பாக நடத்தியாக வேண்டிய வணிகத்தேவையின் அடிப்படையில் அன்னையர் தினத்திலிருந்து காதலர் தினம் வரை நம்ம ஊர்மக்கள் தலையில் வந்து விடிந்துள்ளது.காதலை வரவேற்கும் நம் சமூகம் ‘காதலர் தினம்’ என்பது புதுசாக இருந்தாலும் உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டது.

உண்மையில் மேற்கில் அந்த நாளுக்குப் பெயர் புனித வாலண்டின் தினம் (Saint Valentines Day)என்பதாகும்.வாலண்டின் என்றால் அன்பைப் பகிர்தல் -ஏதாவது ஒன்றை அளித்து- அது கடிதமாக இருக்கலாம்- வாழ்த்து அட்டையாக இருக்கலாம்- பரிசுப்பொருளாக இருக்கலாம்- அதை ஒரு ஆண் பெண்ணுக்கோ அல்லது ஒரு பென் ஆணுக்கோ அளித்து தன் காதலை வெளிப்படுத்துவது என்று பொருள்.மேற்குலகத்தில் இதற்காக பிப்-14 அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது-போய் காதலைச் சொல்லிட்டு வாங்கப்பா முதல்லே.

வாலண்டின் என்பது முற்காலத்தில் ரோமாபுரி அரசன் க்ளாடியஸ் II வினால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொல்லப்பட்ட ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரின் பெயராகும்.

அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கு விதவிதமான சொல்கதைகள் புழக்கத்தில் உள்ளன.பரவலாக உள்ள கதை , க்ளாடியஸ் மன்னன் தன் ராணுவம் வலுவானதாக இருக்க வேண்டுமானால் தன் படைவீரர்கள் திருமணம் செய்யாத இளைஞர்களாக இருப்பதுதான் சரி என்று நினைத்தான்.குடும்பஸ்தன் பட்டாளத்துக்கு உதவமாட்டான் என்று நினைத்தான்.ஆகவே திருமணங்களை நாட்டில் தடை செய்தான்.ஆனால் அன்று பாதிரியாராக இருந்த வாலண்டின் இதை ஏற்காமல் ரகசியமாக பல இளைஞர்களுக்கு வேதம் ஓதித் திருமணங்களை நடத்தி வைத்தார்.ஒரு கட்டத்தில் இந்த ரகசியம் வெளிப்பட்டு மன்னன் அவருக்கு மரண தண்டனை விதித்தான்.சிறைச்சாலையில் இருந்தபோது வாலெண்டின் பாதிரியார் ஓர் அற்புதத்தை நிகழ்த்தினார்.கண் பார்வையற்ற சிறைச்சாலை ஜெயிலரின் மகளுக்குத் தன் வைத்தியத்தால் முழுப்பார்வை கிடைக்கும்படி செய்தார்.

அந்தப் பாதிரி இளைஞன் கொல்லப்படுவதற்கு முதல்நாள் அந்த ஜெயிலரின் மகளுக்குத் தன் காதலை மனம் திறந்து வெளிப்படுத்தி ஒரு கடிதம் எழுதினான். இப்படிக்கு உன் வாலண்டின்.. .. என்று கடிதத்தை முடித்தான்.மறுநாள் மன்னன் அவன் கதையை முடித்தான்.மக்கள் மனங்களில் அவன் கதையாய்ப் பதிந்தான்.வரும் வரும் தலைமுறையெல்லாம் இப்படிக்கு உன் வாலண்டின் என்று கோடிகோடிக்கடிதங்கள் எழுதிட அவன் வழி ஏற்படுத்திச்சென்றான்.

இல்லை இல்லை. கதை இப்படி இல்லை.க்ளாடியஸ் மன்னன் பாதிரி வாலண்டினை மதம் மாறச்சொல்லிக் கட்டாயப்படுத்தினான்.ஆனால் புனித வாலண்டின் மன்னனைக் கிறித்தவானாக்கிட முயற்சி செய்தார். ஆகவே ஆத்திரத்தில் மன்னன் பாதிரியைக் கொன்றான்.வாலண்டின் ஒரு கத்தோலிக்கத் தியாகி என்ரு அறிவித்தது கத்தோலிக்க மடம்.பல்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்ட பாதிரியார்களுக்கெல்லாம் புனித வாலண்டின் என்று பட்டம் கொடுத்துப் பார்த்தது.ஒன்றும் நடக்கவில்லை.காதலிடம் கத்தோலிக்க மடம் தோற்றது.பின்னர் கத்தோலிக்க மையக் காலண்டரிலிருந்தே பிப்- 14 வாலண்டின் தினம் என்பதை எடுத்து விட்டார்கள். மேதினத்தை மறைக்க கத்தோலிக்கம் அதே நாளை புனித ஜோசப் தினம் என்று அறிவித்துத் தோற்றதை இது நினைவு படுத்துகிறதல்லவா?

இப்படியாப்பட்ட காதலர் தினம்தான் நம்ம ஊருக்கு வந்துள்ளது.இது வந்த நாளிலிருந்து இந்துத்வாவாதிகள் இதை எதிர்த்து வருகிறார்கள்.ஆகவே கட்டாயமாக இது நல்ல விசயமாகத்தான் இருக்க முடியும் என்று மக்கள் முடிவுக்கு வந்து கொண்டாடுகிறார்கள்.நாமும் வரவேற்கலாம்.

காதல் என்பது ஆடி மாசத்து நாய்களைப்போல பொம்பளப்பிள்ளைகள் பின்னாடியே ரவுண்டு அடிப்பதும் ஈவ் டீசிங் செய்வதும் பல தமிழ்ச் சினிமாக்களில் போல கொச்சைப்படுவதும் அல்ல.காதல் என்பது சாதி கடந்தது. மொழி கடந்தது.நாடு கடந்தது.ஆகவே இந்துத்வாவுக்கு எதிரானது.மனு அதர்மத்துக்கு எதிரானது.வர்ணாசிரமத்துக்கு எதிரானது.

சாதி மீறிய காதலுக்காகக் கொல்லப்பட்ட மதுரை வீரனும் முத்துப்பட்டனும் காத்தவராயனும் தெய்வங்களாகக் கொண்டாடப்படும் தமிழ் நாட்டுப்புறப் பண்பாட்டில் வேர் கொண்டு நின்று தினைக்களத்தில் குறவள்ளியைக் காதல் மணம் கொண்ட தமிழரின் ஆதிக்கடவுள் முருகனின் ( பிற்காலத் திணிப்பான சுப்ரமணியனை மறந்து தொலைப்போம்) பாதையில் நின்று --காத்திருந்து சாதிமறுப்புக் காதல் மணம் புரிந்த தோழர் பி.இராமமூர்த்தியின் பாதையில் சென்று நம் இளம் தலைமுறை காதல் செய்க காதலர் தினத்தைக் கொண்டாடுக என்று வாழ்த்துவோம்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com