Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
அமைதியான ஜீலம் நதிக்கரையில் அமைதியற்ற வாழ்க்கை

எஸ்.ஏ.மாணிக்கம்

நல்ல கும்மிருட்டான நேரம். காஷ்மீர் மலை முகட்டிலிருந்து தவழ்ந்து அமைதியாக கலகலவென ஓடும் ஜீலம் நதி. அதை நெருங்கி தடுமாறியபடியே நடுத்தர விதவைத் தாய் நெருங்குகிறாள். ஜீலம் நதி அப்படியொன்றும் அவளுடைய வீட்டுக்குத் தொலைவில் இல்லை நடந்து வரும் தூரத்தில்தான் உள்ளது. இருப்பினும் ஏன் இந்த இருட்டுப் பொழுதில் வருகிறாள். அருகில் நெருங்கியபோது தான் தெரிகிறது அவள் நதியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள இடுப்பில் கல்லை கயிற்றால் கட்டிக் கொண்டு வந்திருக்கிறாள். இறுதியில் மனம் மாறி வீடு திரும்புகிறாள். தற்கொலைக்குத் தயாரான அந்த பெண்ணின் பெயர் சமீம். மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டுள்ள இளம் மகனை ஒரு கணம் சிந்தித்ததே அந்த மனமாற்றத்திற்குக் காரணம். அப்படியெனில் அவளை தற்கொலைக்கு இழுத்துச்சென்றது ஏன்?

சமீமின் கணவன் குலாம் முகமது ஜம்மு நகரில் இரண்டு மருந்துக் கடைகளை நடத்திக் கொண்டிருந்தான். இத்துடன் அரசு மருத்துவமனையில் உதவியாளராகவும் பணியாற்றி வந்தான். அவளுடைய கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கை ஜீலம் நதியைப்போலவே அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. 1991ம் ஆண்டு வரையில் தனது கணவன் காஷ்மீர் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பது தெரிய வரவில்லை. அந்த ஆண்டில் தான் குலாம்முகமது வீட்டுக்கு நடு இரவுகளைத் தாண்டி வருவது என தொடங்கியது. தன்னுடைய மருந்துக் கடைக்கு வரும் நேயாளிகளை அனுப்பிவைத்து விட்டு வருவதில் தாமதமாகிறது என்று சமாளித்தான். பல இரவுகள் குலாமின் படுக்கை காலியாகவே இருந்து வந்துள்ளது. துவக்கத்தில் எல்லை தாண்டிச் செல்லும் போராளிகளை சுதந்திரப்போராட்ட வீரர்களாகக் கொண்டாடினர். அவ்வாறு எல்லை தாண்டிச் சென்று பயிற்சி பெறச் செல்லும் இளைஞர்களை வீட்டுக்கு முன்னால் வைத்து வாழ்த்தி வழியனுப்புவதும் நடந்தது.

இவ்வாறு மூன்று ஆண்டுகள் கடந்தன. தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றிச் சந்தேகித்த ராணுவம் வீடு வீடாக தேடுதல் வேட்டையைத் துவங்கியது. இதில் குலாமின் வீடும் அடக்கம். அப்போது தான் சமீமிற்கு தனது கணவனுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது தெரியவந்தது. கணவன் மனைவிக்கிடையே சண்டை மூண்டது. கணவனை சமாதானப்படுத்தும் முயற்சியினை சமீம் தொடர்ந்து வந்தாள். இந்த நேரத்தில்தான் தீவிரவாதக்குழுக்கள் மத்தியிலேயே கோஷ்டிச் சண்டைகள் வெடித்தன. ஒருவரையொருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் குலாமின் கோஷ்டி சிறுபான்மைக் குழுவாக குறைந்தது. இதனால் இதர குழுக்களால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் குலாமிற்கு எழுந்தது. இராணுவத்திடம் சரணடைவதே பிரச்சனைக்கு ஒரு நல்ல வழி என்று சமீமின் தந்தை ஆலோசனை கூறினார். சரணடைவது என்றால் எந்த தீவிரவாதிகளோடு சேர்ந்து இராணுவத்தை எதிர்த்து சண்டைப் போட்டார்களோ அந்த இராணுவத்திற்கு தீவிரவாதிகள் குறித்த விபரங்களை அளித்து அவர்களின் கையாட்களாக செயல்படவேண்டும். இவர்களை காஷ்மீர் மக்கள் கிர்வானிகள் என்பார்கள். இவர்களைச் சுற்றி இராணுவ பலம், அதிகார பலம் அனைத்தும் இருப்பதால் அராஜக, கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். எனவே இவர்களை காஷ்மீர் மக்கள் வெறுக்கின்றனர். சமீம் தந்தையின் ஏற்பாட்டில் குலாமும் இராணுவத்திடம் சரணடைந்தான். அவனுக்கும் பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு பாதுகாவலர்களும் உதவிக்கு அனுப்பப்பட்டனர்.

இதுவும் கொஞ்ச காலம் நீடித்தது. 1995ம் ஆண்டின் ஒரு நள்ளிரவில் குலாமின் வாழ்க்கை இருளத் தொடங்கியது. தீவிரவாதிகளின் ஒருகோஷடி குலாமின் வீட்டை நோக்கி சுமார் நான்கு மணிநேரம் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் தொடுத்தனர். குலாமும் தன்னைக் காத்துக்கொள்ள எதிர் தாக்குதலைத் தொடுத்தான். இருந்தபோதிலும் தீவிரவாதிகளின் குண்டுமழையில் குலாமின் இளைய மகளும், சமீமின் இளைய தம்பியும் பலியாகினர். இவர்களோடு குலாமைப்போல சரணடைந்த முன்னாள் தீவிரவாதிகள் நான்கு பேரும் பலியாயினர். குலாமின் மூத்த மகன் மிக மோசமான பாதிப்பிற்குள்ளானான்.

இதுநடந்து ஒரு வருடத்திற்குள் ஒரு காலைப் பொழுதில் சாலையில் குலாம் நடந்து சென்று கொண்டிருந்த போது அவனை மீண்டும் தீவிரவாதக் குழு சுட்டது. இதில் குலாமின் பாதுகாவலர் அதே இடத்தில் பலியானார். குலாமின் ஒரு காலில் குண்டு பாய்ந்தது. கணவனின் குண்டு பாய்ந்த காலை காப்பாற்றிட சமீம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டாள். ஸ்ரீநகரில் மூன்று முறை அறுவைச் சிகிச்சை செய்தும் பலனில்லை. ஒரு காலை எடுப்பதைத் தவிர வழியில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். தனது அன்பான கணவனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று வீட்டில் இருந்த கொஞ்ச நஞ்ச நகைகளையும், சேமிப்பையும் காலி செய்து போராடினாள். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் டில்லிக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்தாள். 7 லட்சம் ரூபாய் செலவு செய்து இறுதியாக ஒருவாறு காலை பாதுகாக்க முடிந்தது. இருந்தாலும் துணையில்லாமல் நடக்க முடியாது. இவர்கள் காஷ்மீரை விட்டு வெளியே வந்த நேரத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சமீமின் தந்தையும், இன்னொரு சகோதரனும் பலியானார்கள்.

1998ல் அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். குலாம் தன்னுடைய பழைய தீவிரவாதக் குழுக்களிடமிருந்து விலகி வந்துவிட்டதாகவும் பொதுமக்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் தற்போது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும் உதவிகேட்டு உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தான். ஆனால் ஒரு இரவு நேரத்தில் மன்னிப்பைஅளிக்க விரும்பாத அவனது பழைய நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அவன் அளித்த உணவை சாப்பிட்டுக் கொண்டு விசாரித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் அவனுடைய இன்னொரு நல்ல நிலையில் உள்ள காலை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். அவனுடைய சிறுவயது மகள் இதை சாட்சியாக பார்த்தாள். தன்னைச் சுட்ட தீவிரவாதிகளைப் பார்த்து குலாம் ஆவேசமாகக் கத்தினான். 'டேய் என்னை நீங்கள் கொல்ல வேண்டும் என்று நினைத்தால் ஒரேயடியாக கொல்லுங்கள். இப்படி காலைச் சிதைத்து குடும்பத்தைக் கொன்று என்னை படிப்படியாகக் கொல்லாதீர்கள். எனக்கு எந்தச் சொத்தும் இல்லை. வேலை செய்து குடும்பத்தைக் கவனிக்கவும் முடியாது. நான் இந்த நிலையில் இருப்பதைவிட நேரடியாக நெஞ்சை நோக்கி சுட்டு என்னை கொன்றுவிடுங்கள்' என்றுகத்தினான். குலாமின் விருப்பப்படியே நெஞ்சை நோக்கி சுட்டுவிட்டு நகர்ந்துவிட்டனர். குலாமும் சடலமாக சின்ன குழந்தையின் காலடியில் வீழ்ந்தான். அவனுடைய இளைய மகன் அடுத்த அறையில் எதுவும் தெரியாத குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தான்.

குலாமின் மறைவிற்குப் பிறகு வாழ்க்கை இருண்டதாகவே சமீம் உணர்ந்தாள். தன்னுடைய சின்ன குழந்தைகளுக்காக ஓயாது உழைத்தாள். அருகில் உள்ள வீடுகளில், தோட்டங்களில் வேலைகளுக்குச் சென்று குழந்தைகளின் உணவுக்குச் சமாளித்தாள். இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருவேளை உணவு தான் அவளுக்கு. சரணடைந்த தீவிரவாதியின் மனைவி மற்றும் இளம் விதவை என்பதால் அவளுக்கு அரசு அலுவலகத்தில் ஒரு பியுன் வேலைகிடைத்தது. ஆனாலும் அவள் கிராமத்தின் தீவிரவாதக்குழுக்களின் அராஜகத்தால்பாதிக்கப்பட்டாள். பருவம் நெருங்கிய தனது 13 வயது இளைய மகன் ஒருநாள் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பாததைக் கண்டு பதட்டமடைந்தாள். தானும் தீவிரவாதக் குழுக்களுடன் சேர்ந்து விட்டதாகவும் தான் சுதந்திர போராளி என்றும் சமீமிடம் வாதாடினான். மூன்று வாரங்களுக்கு ஒருமுறை இருட்டு இரவில் வந்து செல்பவனாக மாறிவிட்டான். இராணுவத்தால் தனது மகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சினாள். தன்னுடைய மகனை காஷ்மீர் போலீஸ் வசம் ஒப்படைத்தால் அவர்கள் உள்ளூர் அதிகாரிகள் என்பதால் ஓரளவு கருணையுடன் நடந்து கொள்வார்கள். கொஞ்ச நாள் கழித்து அவனுக்கு ஒரு திருமணத்தையும் செய்து வைத்து குடும்பத்தை ஏற்படுத்திவிடலாம் என்று ஆலோசித்து அதன்படி செய்தாள். இப்போது அவனுக்கு வயது 19. திருமணமாகி 4 வயதில் ஒருகுழந்தையும் உள்ளது. ஆனால் அவர்கள் நினைத்தது போல் வாழ்க்கை ஒன்றும் அமைதியாக இல்லை. படிப்பு இல்லாததாலும், வேலையும் கிடைக்காததாலும் அவன் தினசரி குடித்து வெட்டிப்பயலாகத் திரிந்தான். சிறப்பு அதிரடிப்படையால் ஒவ்வொரு முறையும் அழைத்துச் செல்லப்பட்டவன் கடைசிக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு கால் உடைந்த நிலையில் வீடு திரும்பினான்.

சமீமை இன்றளவும் வேதனைக்குள்ளாக்கும் விசயம் அவளது இளைய மகனின் பரிதாப நிலைமைதான். தன் தந்தை படுகொலை செய்யப்படுவதை குழந்தைப் பருவத்தில் நேரில் பார்த்ததால் அந்த வன்முறை பீதியை ஆழ் மனதில் தேக்கி வைத்து மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான். கடந்த முப்பதாண்டுகளில் தொடர்ச்சியான வன்முறையால் துவண்டு போயுள்ள சமீம் தனது கணவன், இரண்டு குழந்தைகள், தந்தை, இரண்டு சகோதரர்கள் அனைவரையும் பலி கொடுத்துள்ளதால், இப்போது அவளின் ஒரே ஆறுதல் அவளது இளைய மகன்தான். அவளின் நம்பிக்கையும், கனவுகளும் அவன்தான்.

அவள் விரும்புவது ஒரு சாதாரண அமைதியான வாழ்க்கை. தனது மகன், அவன் குழந்தைகளுடன் அன்பான வாழ்க்கை. அவர்கள் அனைவரும் சுதந்திரமாக மனித வாழ்க்கையுடன் வாழ வேண்டும் அதற்கு சக மக்களின் நடவடிக்கைகளும் சுமூகமாக இருக்க விரும்புகிறாள். இதற்கான நல்ல நேரம் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்.

("தி இந்து" நாளேட்டில் ஹர்ஸ் மந்தர் எழுதிய கட்டுரையைத் தழுவியது.)

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com