Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
பெண்மை என்றொரு கற்பிதம்-12
ஊடகவலையில் சிக்கிய பெண்மை

மனித மனங்களைப் பண்படுத்தும் தொழிலை சக்தி மிக்க முறையிலும் பரந்துபட்ட அளவிலும் நுட்பமான வடிவங்களிலும் செய்யும் பண்பாட்டு நிறுவனமாக ஊடகங்கள் செயல்படுகின்றன.ஊடகங்களில் அச்சு ஊடகங்கள்,மின்னணு ஊடகங்கள்,திரைப்படங்கள் எனப்பலவகை உண்டு.இன்று உலகமயப் பொருளாதாரத்தின் முகமூடியாகவும் கேடயமாகவும் உறைவாளாகவும் இந்த ஊடகங்கள் திகழ்கின்றன.

ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்களின் மிகப்பெரிய அரசியல் யாதெனில் சில துறைசார்ந்த செய்திகளை தவறாமல் மீண்டும் மீண்டும் வெளியிடுவதும் சில துறைசார்ந்த செய்திகளை மறந்தும் வெளியிட்டு விடாமல் இருப்பதுமாகும்.சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி விவசாயிகள் பற்றிய செய்திகளை-தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய செய்திகளை - தேசிய அளவில் வெளியாகும் எந்தப் பத்திரிகையும் எந்த மின் ஊடகமும் வெளியிடுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது கூட அங்கே பிரதமர் சென்ற செய்தியை ஒட்டித்தான் அவை தற்கொலைச் செய்திகளையே வெளியிட்டன.அவை வெளியிடும் செய்திகளில் விவசாயி-தொழிலாளர் பற்றிய செய்திகள் 0.70 சதவீதம்தான்.

பெண்கள் பற்றிய செய்திகளை - நிகழ்ச்சிகளை- எந்த ஊடகமும் புறக்கணிப்பதில்லை.ஆனால் அவை என்னமாதிரியான ‘பெண் செய்திகளை’வெளியிடுகின்றன என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.ஏற்கனவே இந்த ஆணாதிக்க சமூகம் கட்டமைத்து வைத்துள்ள பெண்மை என்கிற பொய்யை-பெண்மை என்கிற கருத்தாக்கத்தை-மேலும் மேலும் அடிக்கோடிட்டுத் திணிக்கும் வேலைதான் ஊடகங்களில் நடக்கிறது.

விவசாயிகள் தற்கொலையை நாட்டின் முக்கியமான செய்தியாகக் கருதாத தினசரிகள் சாமியார்களின் காமலீலை,அழகிகள் கைது,காதலனுக்காகக் கணவனைக்கொன்ற சங்கீதா என்பன போன்ற செய்திகளையும் சினிமா மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள் என்ற பேரில் பெண்களின் உடல்காட்டும் புகைப்படங்களையும் வாரக்கணக்கில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.வார இதழ்களிலோ அட்டை டு அட்டை ஆண் மனதில் காட்சி இன்பம் தூண்டும் லட்சிய வெறியுடன் அச்சிடப்பட்ட பெண் உடல்தான். இவற்றிலெல்லாம் ஊடாடுவது பெண் என்பவள் வெறும் உடல்தான் -வெறும் காட்சிப்பொருள்தான் -ஆண்கள் நுகர்வதற்கான ஒரு போகப்பொருள்தான் -என்கிற ஒரு கருத்தோட்டம்தான்.

பெண்களுக்கான பத்திரிகைகள் சில சாதனைப்பெண்கள் பற்றி அறிமுகம் செய்வது போன்ற மிகச்சில சேதிகளைத் தவிர மற்றதெல்லாம் பெண்மையின் இலக்கணங்களாக நம் சமூகம் சொல்லிவரும் சமையல்,கோலம்,டிசைனிங் என்றே வட்டமடிக்கின்றன.பிற பத்திரிகைகளுக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் இதில் பெண் உடம்பாகக் குறுக்கப்படுவதில்லை.ஆனால் பெண்மையின் பெருமை என்கிற கொடுமை தவறாமல் உண்டு.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் பரவலாகப் பேசப்படுபவை தொடர்கள்.தவிர்க்கவியலாத ரெண்டு பெண்டாட்டிக் கதைகளாகவே அமைந்துவிடுகிற இத்தொடர்களில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் புலம்புகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக விமர்சித்து அவற்றைப் புறந்தள்ளுவது நியாயமான பார்வையாக இருக்காது.கோலங்கள், அரசி,சித்தி,கஸ்தூரி போன்ற தொடர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் ஒரு பெண்ணின் போராட்டத்தை- பல சோதனைகளைத் தாண்டி அவள் வெற்றி பெறுவதைச் சொல்லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். இவற்றை விரும்பிப் பார்க்கும் பெண்கள் மனங்களில் உளவியல்ரீதியாக ஒரு பெருமித உணர்வு சத்தமில்லாமல் பொங்கிப் பெருகுவதை நாம் காணத்தவறக்கூடாது.ஏழை எம்.ஜி.ஆர். பணக்கார வில்லனைத் தோற்கடிக்கிற பழைய சினிமா பாணிதான் இது என்ற போதிலும் இதில் வெல்வது பெண் என்பது முக்கியம்.ஆனால் இத்தொடர்கள் எல்லாவற்றிலுமே வில்லியாக ஒரு பெண்ணே காட்டப்படுவது ஏற்கனவே நம் மனங்களில் அழுந்தப் பதிக்கப்பட்டுள்ள மாமியார்-வில்லி படிமத்தை இன்னும் வலுவாக அடிக்கோடிடும் கேட்டைச் செய்கின்றன.இன்னும் குடும்பப்பொண்ணா லட்சணமாக வாழும் ‘ரோல் மாடல்’ பெண்கள் ஏராளமாக இத்தொடர்களில் மூக்கைச் சிந்துவார்கள்.எத்தனை காலத்துக்குத்தான் பெண்களை ‘குடும்பப்பாங்கு’ என்கிற முக்காட்டுக்குள் மூச்சுத்திணற வைப்பது?பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிற புளித்துப்போன பழைய வாதமும் இத்தொடர்களில் அடிக்கோடிடப்படுகின்றது.

கலைஞர் தொலைக்காட்சி வந்தபிறகு தொடர்களை விட மானாட மயிலாட போன்ற ஆட்டபாட்டத்தொடர்கள் மற்றும் நேரலை (live shows)
ஒளிபரப்புக் காட்சிகள் மையமான இடத்தைப் பிடித்துள்ளன.இவற்றில் ஆடும் பெண்களின் உடையலங்காரம் மற்றும் ஜட்ஜ்களாக வந்து அமரும் சில ‘மேடம்’களின் உடை பற்றிக் குடும்பங்களில் கடும் விமர்சனங்கள் எழுவதைப் பார்க்கிறோம்.M-டிவியின் ஆட்டங்கள் நம் சேனல்களில் வந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.விமர்சிக்கும் அதே வேளையில் உடையில் ஒருவித கட்டுடைக்கும் சுதந்திரமனோபாவத்தை இந்த ஆட்டங்கள் பெண்களுக்கு வழங்குகின்றன என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். சேலையை விட சுடிதாரும் நைட்டியும் நிச்சயமாக வசதியும் சுதந்திரமும் தந்தன தானே.இப்படியே போனால் என்னாவது என்று சுதந்திரத்தின் எல்லையை அவசர அவசரமாக ஆண்மனம் நிர்ணயிக்கத்தவிக்கிறது.குடும்ப மனம் என்பதே சமூக மனமாகத் திகழும் ஆண்மனம்தானே.

இவை போக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள் பொறுப்பான பெண்கள் கக்கூஸ் சுத்தம் செய்ய சரியான க்ளீனிங் திரவத்தைத் தேர்வு செய்வதையும் துவைப்பதற்கு ஏமாறாமல் ஒரு சோப்பையோ வாஷிங் பவுடரையோ தேர்வு செய்வதையும் குழந்தைகளுக்கும் கணவருக்கும் ஆஹா என்று சொல்லும் வண்ணம் மசாலாப் பொடிப்போட்டுச் சமைப்பவராகவும் மீண்டும் மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டே இருக்கின்றன.

திரைப்படங்களும் இதே வேலையைப் பெரிய திரையில் டிஜிட்டல் சவுண்டுகளுடன் செய்கின்றன.காதலிக்கும் போதெல்லாம் டவுசர், பேண்ட்டுகளில் வரும் பெண்கள் கல்யாணம் என்றதும் பட்டுப்புடவை கட்டித் தழையத் தழைய வருவதை எல்லாத்திரைப்படங்களிலும் பார்க்கிறோம். இவர்கள் எல்லோருமே ஒரே ஆண்மனதின் வேறு வேறு ரூபங்கள்தான்.ஒரே குரலில் பெண்களுக்கான உடைக்கலாச்சாரத்தை நம் மண்டையில் திணிக்கிறார்கள்.

இன்னும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு அதே கயவனைத் தாலி கட்டச்சொல்லும் நாட்டாமைகள்,கதாநாயகன் தன் சமூக சேவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில் கூடச்சேர்ந்து ஆடிப்பாடுவதற்கு என்றே வந்துபோகிற கதாநாயகிகள் என்று திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் கட்டமைக்கிற பெண்மையின் லட்சணங்கள் ஏராளம்.இது ஆண் பெண் இருபால் ரசிகர்களின் மனங்களிலும் ஆழ்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.பெண்மை இன்னும் பல விதங்களில் மீடியாவால்
தகவமைக்கப்படுகிறது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com