Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
துடியானது வார்த்தை

ம.மணிமாறன்

lady_man ராப்பூச்சிகளின் இரைச்சல் கரைந்திருக்கும் பெருமழை நாளின் பின்னிரவு நேரம். அரைகுறை விழி திறப்பில் காலம் காட்டும் கடிகார முட்களின் வழியே விடிய இன்னும் சில நாழிகையே இருப்பதை உணர முடிந்தது.

மழை நாட்களின் ஞாபகங்களுக்குள் சுழன்றது மனம். வீட்டை தன் நீரால் நிறைக்கத் துடித்த மழையை ஈயச்சட்டிகளில் பிடித்த படி தூங்கிப் போவோம் நானும் என் தங்கையும். தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை கையில் இருந்து அகற்றவும், பின் எந்தப் பதட்டமும் இன்றி பாத்திரத்தை எங்களின் கைகளுக்குள் பத்திரமாக சேர்த்திடவுமான விந்தையை அம்மாவுக்கு வாழ்க்கைக் கற்றுத் தந்திருந்தது. பிள்ளைகளின் தூக்கம் கலையச் சம்மதிக்காத தாயின் முகம் நிழலாடியதும் கண்ணீர் முட்டியது. கண்ணீரைத் துடைத்தபடி கதவைத் திறந்தேன்.

மழைக்கம்பிகள் சர்ப்ப விருட்சமென தரையிறங்கி ஊர்ந்து மறைந்தன. தொலைவான வீடுகள் மழைநீரில் மிதப்பதான தோற்றம் பெற்றன. மிதக்கும் வீடொன்றில் ஒளி உமிழ்ந்தது மஞ்சள் விளக்கு. வீட்டினுள் உறக்கத்தையோ, இளமையையோ விலையாகத் தந்து மாணவன் மதிப்பெண்களை விரட்டிக் கொண்டிருக்கிறான். தன்னை மனப்பாடம் செய்வதை சகிக்காத கணிதச் சூத்திரங்கள் வெளியேறி மழைநீரில் கரைகின்றன. அதிகாலை வகுப்புகளுக்கு மழைக்கோட்டுடன் கிளம்பிடும் அயர்வில் தூங்கப்போன குழந்தைகள் விழித்தெழும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இளங்காலை நடையின் போது எதிர்ப்படும் முகங்கள் என்னுள் நிழலாடிட நான் மழையின் கொடிய நாவுக்குத் தலை வணங்கி நிமிரும் மஞ்சள் ரோஜாச்செடியை உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அப்பிக்கிடக்கும் இருளை சுழற்றியெடுத்து அறைந்தது என் மூஞ்சில் காற்று. கதவைச் சாத்தி உள் நுழைந்த பொழுதில் ஊஞ்சலாட்டம் போடும் புத்தகத்தில் காஷ்மீரத்துப் பெண்களின் முகங்கள் காற்றில் அசைந்து அசைந்து படபடத்தன.

நள்ளிரவில் தூக்கம் கலைந்து எழுந்த நாட்களின் பகல்கள் கண்முன் துக்கமென விரிந்தன. ஞாபகங்களை மீட்டெடுக்கும் சக்தியை இயக்கினேன். துயரம் விதைத்த உறக்கம் கலைத்த பகல் ஒன்றில் தான் என் மகள் லட்சுமி ஆப்பிள் நறுக்க ஆசைப்பட்டு விரலை வெட்டிய சேதி கேட்டு அதிர்ந்தேன். மற்றொரு நாளில் பிரியத்துக்குரிய நண்பனின் துர்மரணச் செய்தி துரத்தி வர பாதியில் பயணத்தை முறித்துத் திரும்பினேன். கலைந்த ஞாபகங்களில் தொலைந்த நிம்மதியைத் தேடி புத்தகங்களைப் புரட்டினேன். புகைப்படத்தில் நெளியும், அந்தப் பெண்களின் கண்ணீர்த் துளியை எதிர்கொள்ள மனமில்லை எனக்கு.

வாழ்வில் ஒருமுறை நடந்த தற்செயலான சம்பவம் பிறிதொரு முறையும் நிகழும்போதுதான் மனம் பேதலித்துப் போகிறது. எதிலும் கட்டுண்டு கிடக்கும் பலத்தை இழந்த மனம் அதீத துர்நிகழ்வொன்றை எதிர்கொள்ளத் தயாரானது. "என்னாச்சு இன்னைக்கும் தூக்கம் வரலியா?" என்ற என் மனைவியின் உடைந்த குரலின் வேதனை என்னை நகர்த்திட வீட்டிற்குள் நடந்தே இரவைக் கடத்தினேன்.

இருளை சூரியன் எழுப்பிக் கொண்டிருக்கும் போதே ஊர் இயக்கத்திற்கான சக்கரத்தைச் சுழற்றத் துவங்கியது. எதுவும் என் பிடியில் நிற்கவில்லை. முகம் கூட வெட்டுக் காயங்களுடன் தான் தயாரானது. விடிந்த பிறகு எதையோ எதிர்கொள்ளக் காத்திருக்கும் மனநிலைக்குள்ளானேன். வீடகன்றால் போதுமென்று நான் கிளம்பியபோது "நடப்பது யாவும் தற்செயல் நிகழ்வென நம்பு" என என் அறிவு சொல்வதையும் மீறி மனம் என்னை எச்சரித்துக் கொண்டேயிருந்தது.

எவருக்கும் தன் மனம் வசீகரம் கொள்ளும் இடம் உண்டு. சிலருக்கு பார்க்; சிலருக்கு திருட்டுத் தம் அடிக்கத் துவங்கிய டீ கடை; பலருக்கு பாலியலின் ஆதிச்சாவியான சலூன் கடை. நானும் வேப்பமரக் குளிர்ச்சியை தன்னுள் நிறைந்திருக்கும் என் பிரியமான இடம் நோக்கி விரைகிறேன். பஸ் வந்துசேரும் நேரம் மிகத் துல்லியமாகத் தெரிந்த பிறகும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தபடி விரைந்து செல்கிறேன். வெகுநேரம் ஏன் இப்படி தினமும் இங்கே காத்துக் கிடக்கிறேன் என்பதைக் கண்டுணர வேண்டும்.

விரைதலில் எதிர்பட்டது கருப்பு மசியினால் எழுதப்பட்ட விளம்பரம். இஸ்லாமிய தெருவினை அடையாளப்படுத்த இது போதுமானதாயிருந்தது. ரயில் மறியல் டிசம்பர் 6ல். பொதுவான வெளியான்றால் இதற்குள் வரலாற்றின் அகன்ற நாள் இதுவென்ற விளம்பரமும் கண்களில் பட்டிருக்கும். பிரிவினையின் நீடித்த அடையாளமாக தடித்த சுவர்களே இருந்து வருகின்றன. கருப்பு நிற பர்தாக்கள் என்னைக் கடக்கின்றன. தொண்ணூறுகளின் துவக்கத்தில் இதே தெருவில் இத்தனை பர்தா அணிந்த பெண்களைப் பார்த்ததில்லை நான். வாழ்வது குறித்த அச்சம் மிகுந்த நாட்களில் இவர்கள் தங்களுக்குள் நெருக்கமாகி மதம் கட்டியிருக்கும் கூட்டிற்குள் அடைக்கலமாகிறார்கள் என்கிற என் அச்சத்தை நேற்று பெய்த மழையின் சகதிப் பரவலை கடந்திட சர்க்கஸ் ஆடியபடி கடந்தேன்.

காத்திருப்பதற்காக விரைந்த என்னைக் கடந்த பேருந்து என்னை உள் இழுத்தது. தினமும் உடன் பயணிக்கும் என்னை விட்டுச் செல்ல விரும்பாத பஸ்ஸிற்குள் நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி நிறைந்திருக்கிறது. காக்கைகளின் பேரிரைச்சலைக் கிழித்தபடி விரைகிறது என் பெருவாகனம். காத்திருக்கும் நேரத்தை களவாடி விட்டதே பஸ் எனும் எரிச்சலில் திரும்பிய எனக்கு பெருவெளியில் தென்பட்ட வெறுமை சகிக்க முடியாததாக இருந்தது.

தன்மொத்த வசீகரத்தையும் இழந்து வெற்றுக் கூடாகக் கிடக்கும் வெளியிலிருந்து வெறுமையின் காற்று முகத்தில் கசப்பை சப்பென அப்பியது. ஏன் இப்படி? என்ன நடந்திருக்கும்? எங்கே போயிருப்பார்கள்? ஒருவேளை மழையின் துயருக்கு? சே! சே! அப்படியெல்லாம் இருக்காது. நான் ஒரு தடவை பள்ளிவாசலை ஒட்டியிருக்கும் அவர்களின் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நல்ல திடமான வீடுதான். ஜமாத்திற்குச் சொந்தமானது.

அறிவை மீறியது மனம். துர்மரணம் யாரை விழுங்கியிருக்கும். ஷாபிராவையா? அல்லது அவளின் உம்மா பாத்திமாவையா? ஒருவேளை மைதுக்குட்டி வந்திருப்போனா? குழம்பிய மனது தெளியும் போதெல்லாம் பழைய நினைவுகள் கரை புரண்டன.

சகலருக்குமான அரிசியையோ, அப்பத்தையோ தந்திடத் தயாராகிக் கொண்டிருக்கும் குறுநகரின் சிறு மூலை இது. வறுமையை விரட்டும் துணிச்சலை தூக்குவாளிக்குள் அடைத்தபடி கிராமங்களிலிருந்து வரும் எவரும் இங்கு இருந்து தான் கிளம்பிப் போவார்கள் ஊருக்குள். ஒழுங்குபடுத்தப்படாத தாடியுடன் சிரித்தபடியே இருக்கும் சமதின் பெட்டிக்கடை இந்த மூலையில் தான் இருக்கிறது. தன் மதக்கோட்பாடுகள் அனுமதிக்காத போதும் தனக்கு தங்கத்தில் அரைஞாண் கயிறு போட்டு அழகுபார்த்த வாப்பாவை எல்லோருக்குள்ளும் இறக்குவான். தன் பால்ய கால நினைவுகளை விளிக்கும் போதெல்லாம் ஒடுங்கிய அவனின் கண்கள் தெறித்து விழுந்திடுமோ என்கிற அச்சம் எல்லோருக்கும் மிகும்.

அவன் கடையை வந்தடையும் ஆறு தெருவிற்கும் சேர்த்து இரண்டு பள்ளிவாசல்கள். ஸீப்ஹ் தொழுகைக்கான வாங்கு ஒலிக்கத் துவங்கியது. "ஹைருள் மினன்வைம், ஹைருள் மினன்வைம்" - தூக்கத்தை விட தொழுகை மேலானது எனும் அரபு இசையை அலாரம் எனக் கொண்டே தெரு விழிக்கும். தெருவோடு பாத்திமாவும் எழுந்துகொள்வாள்.

"மைதுக்குட்டி", "அல்லாஹூ அக்பர்" என முணு முணுத்தபடி பாதிக்கண்கள் திறக்க தூங்கிக் கொண்டிருக்கும் தன் மகள் ஷாபிராவின் கலைந்து கிடக்கும் ஆடைகளை சரிசெய்தபடி துவங்கும் பாத்திமாவின் காலைப்பொழுது. மண்ணெண்ணெய் ஸ்டவ்விற்கு காற்றடித்து உருவான பேரிரைச்சலில் சூரியனைத் தட்டி எழுப்புவாள் தினந்தோறும். அவளின் வடைக் கடைக்கு பெட்டி எதுவும் கிடையாது. வெட்டவெளிதான். மழையே வராத நாட்களிலும் சாரலிலும் இருந்து தன் வடைகளைக் காத்திட நாலு ஊனு கம்புகளுடன் கித்தான் சாக்கையும் கையோடு எடுத்துக் கொண்டு வெளிக்கிளம்புவாள்.

வேம்பின் தூருக்கும், சமதின் பெட்டிக் கடைக்கும் இடையில் தன் கடைக்கென இடம் அமைத்துத் தந்த அல்லாவிற்கு நன்றி சொல்லியபடி அடுப்பைப் பற்ற வைப்பாள். எண்ணெய்த் திவலைகள் கொதித்தபடியே இருக்க, எப்போதும் வடைகளை சுட்டபடியே இருக்கிறாள் பாத்திமா. வாகாக தன் தலையில் அமர்ந்திட மறுக்கும் முக்காட்டை நிமிடத்திற்கு ஒருமுறை சரிசெய்தபடி ஊருக்கே வடைகளை அன்பென விநியோகித்துக் கொண்டிருந்தாள். வடை வேண்டுவோர் தகரடப்பாவில் காசைப்போட்டு வடையை எடுக்க வேண்டியது தான். நிலத்தில் இருந்து தான் தோன்றியாய் வளர்ந்திருக்கும் தன்மையிலான எண்ணெய்ச் சட்டியில் துள்ளும் வடைகளைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டாள் பாத்திமா. பள்ளிக்கூடக் குழந்தைகளும் பாட்டியின் கடையில் வடை வாங்கும் பக்குவம் அறிந்திருந்தார்கள்.

அன்றைய நாளின் முதல் வார்த்தையடுக்கை "இன்னும் ஷாபிராவைக் காணலியே" என்றே தொடங்குவாள். ஒவ்வொரு நாளும் முதல் குழந்தை தன் கடையைக் கடக்கும் நாளில் "வேத மந்திரத்தைப் போல உச்சரிப்பாள் இவ்வார்த்தையடுக்குகளை. தொலைதூரத்தில் ஷாபிரா கருப்பு அங்கிக்குள் தன்னையும். தன் ரகசியத்தையும் மறைத்தபடி மிதந்து வருவதை இங்கிருந்தே கவனித்து வருவாள்.

நீலம் பாரித்த கண்கள். எதையோ தேடிக் கொண்டேயிருப்பது மாதிரியான தோற்றம். காற்றில் பறந்து வருகிறாளா, மிதந்து வருகிறாளா என அறிய முடியாத நடை. கையில் பள்ளிக்கூடத்துப் பை, பைக்குள் பச்சைநிற தடித்த புத்தகங்கள், நாள் தவறாமல் பஸ் திரும்பும் வளைவில் நின்று விடுகிறது நடை. "மைதுக்குட்டி" "அல்லாஹூ அக்பர்" என பெருங்குரலெடுத்துக் கத்துகிறாள். குரல் சென்று திரும்பித் தன்னிடத்தில் வந்து விட்டதான நிம்மதியை அடைந்த பிறகு நடக்கத் துவங்குகிறாள். நேராக வந்து தன் உம்மாவிற்கு அருகில் உள்ள குத்துக்கல்லில் அமர்கிறாள். அதுவே அவளின் இடம். அங்குதான் அவளின் வாழ்வின் பொழுதுகள் துவங்கி நகருகின்றன.

சாலையை வெறித்த கண்களுக்குள் காட்சிகள் கரைவதில்லை. கால்களே நகருகின்றன. பிஞ்சுப்பாதங்கள், கொலுசணிந்த பாதங்கள், மருதாணி பூசி மேலும் சிவந்த பிஞ்சுக் குழந்தைகளின் பூப்பாதங்கள், இவனின் காட்சி எல்லைக்குள் கால்கள் மட்டுமே கடக்கின்றன. உலகத்தையே ஒரு சின்னஞ்சிறு மலர்ப்பாதமென ஷாபிராவின் எண்ணத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது காலமும். அவளின் நினைவுகளும், கடக்கும் கால்களை உற்றுப் பார்த்தபடி இருக்கும் ஷாபிரா சில பொழுதுகளில் எழுவாள். தன்னை வசீகரித்த குழந்தைகளின் பாதங்களை பின் தொடர்வாள். செருப்பைக் கழட்டி வீசி எறிவாள். புன்னகையோடு பாதங்களை முத்தமிடுவாள். பிறகு இல்லையில்லை இவ இல்ல இன்னும் அழகுல்லா என் மைதுக்குட்டி என்றவாறு குத்துக்கல்லை வந்தடைவாள்.

முதலில் பதட்டமடைந்த குழந்தைகள் பின் புரிந்துகொண்டன. இன்னைக்கு அல்லாஹூ அக்பர் அக்கா என் கால்லதான் முத்தினாங்க தெரியுமா எனப் பெருமையுடன் கூறத் துவங்கினார்கள். பின் தொடர்வதும் முத்தம் தருவதும் ஏமாற்றத்துக்குள்ளானதும் திரும்பி வடைகளைப் பிய்த்து காக்கைகளுக்குத் தருவதுமாகக் கழிக்கத் துவங்குவாள் பொழுதை. பிரியம் கொண்ட அவளின் காக்கைகளுக்கு விளையாட்டிடமாக அவளின் தோள்களும் அமைவதுண்டு.

பள்ளிக்கூட துவக்கமணி அடிக்கும் வரை தொடரும் இவளின் பாதம் தேடும் படலம். பிறகு அவள் எங்குச் செல்கிறாள். எதைத்தேடிக் கண்டடையப் போகிறாள் என்கிற குழப்பம் மேலிட காக்கைகளும் அவளைப் பின் தொடர்கின்றன. ஷாபிரா மதிய உணவு இடைவேளையில் வேறு ஒரு பள்ளிக்கூட வாசலில், பள்ளிவிடும் நேரத்தில் ஊருக்கு வெளியே நிற்கும் பள்ளிக்கூட வாசலில் என தனது தினப் பொழுதுகளை அமைத்திருந்தாள். பச்சைப் பைக்கட்டுக்குள் குரானையும், இன்ன பிற தடித்த புத்தகங்களையும் திணித்தபடி காலாதி காலமாக காத்து நிற்கும் இவளின் தொலைந்த காலத்தை ஒரு மழைநாளில் தான் சமது என்னுடன் பகிர்ந்து கொண்டாள்.

மணமான சிலநாளில் கணவன் தன்னை விட்டு விலகிட கைக்குழந்தையுடன் பள்ளி வாசலுக்குச் சொந்தமான குடிசையொன்றில் வாழ்க்கையைத் துரத்தத் துவங்கினாள் பாத்திமா. முன்னாளில் லாட்டரிக் கடையை நடத்தி வந்த ஹாஜி பெரிய ராவுத்தரே இவளின் புருஷன் என ஊரில் மிதக்கும் ரகசியத்தை ஒருநாளும் இவள் மறுத்ததில்லை. ஷாபிரா வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லத் துவங்கியதும், முன்பெல்லாம் மகளை கடைப்பக்கமே வரவிடமாட்டாள். படிச்சுக்கோ, தெரிஞ்சுக்கோ, புரியுதா எனும் தாயின் வார்த்தைகள் ஷாபிராவை அச்சப்படுத்தும்.

வைராக்கியமான பொம்பள எனப் பெயரெடுத்த பாத்திமா மகளே உலகமென வாழ்ந்தாள். கை நிறைய மருதாணி பூசி வந்தநாளில் ஷாபிராவின் கல்யாண ஆசையைக் கண்டுகொண்டாள். ஷாபிராவும் பஷீரைப் பார்ப்பதற்காகவே தன்னுடைய செருப்புகளை அடிக்கடி பிய்க்கத் தொடங்கினாள். செருப்புக்கடை பஷீருடன் அல்லாவின் திருப்பெயரால் நிக்காஹ் நடந்தது. பந்தத்தின் அடையாளமாக மைதுக்குட்டி பிறக்கும் நாள்வரை சிக்கல் எதுவுமில்லை.

பிளாட்பார செருப்புக்கடை தள்ளாடியது. சில நாட்களில் பஷீரும் தள்ளாடியபடி வீடடைந்தான். கடைய விஸ்தரிக்கணும் வடைக்காரிட்ட காசுகேளு என நச்சரிக்கத் தொடங்கினான். பஷீருக்கு முன்பாகவே வீடு வந்து சேரும் சாராய நெடியும். சால்னா வாசமும். இப்படியான நாட்களில் மைதுக்குட்டியை அணைத்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள் ஷாபிரா. தான் புறக்கணிக்கப்படுகிறோமோ என அச்சம் மிகுந்த நாட்களில் அவனை யாராவது தெருவில் இருந்து தூக்கிக் கொண்டு வந்துதான் வீட்டில் போடுவார்கள்.

இரண்டு தெரு தள்ளியிருந்த பாத்திமாவிற்கும் காற்றில் கசிந்து வந்தது துயரம். நீண்ட நாட்கள் வீட்டிற்குள் நீடித்திருந்த சண்டை ஜமாத்தையும் எட்டியது. இயலாமையின் வெளிப்பாடு கோபமெனக் கொப்பளித்த நாளில் வீட்டைவிட்டு வெளியேறிப் போனவன் மாதம் பலவாகியும் திரும்பவில்லை.

சகலருக்கும் மகிழ்வைக் கொண்டுவரும் மழைநாள் ஒன்றில் கதவை உடைத்து உள் நுழைந்தான் பஷீர். தூங்கிக் கொண்டிருந்த மைதுக்குட்டியை அணைத்த படியிருந்த ஷாபீராவை வெறித்தான். இவளின் உலகமென வீற்றிருக்கும் மைதுக்குட்டியைப் பிரித்து விட வேண்டும் அப்போது தான் இவள் நம்மை உதாசீனப்படுத்தமாட்டாள் உடனே வெளியேற வேண்டும் என பரபரப்பின் உச்சத்தில் குழந்தையைத் தூக்கினான். அவள் விடவில்லை. கதறினாள். தாயின் கதகதரப்பில் கிடந்த குழந்தை உயிரைப் பிரித்ததான வலியில் கதறியது. துல்லியெழுந்த ஷாபிரா அவனுடன் மல்லுக்கு நின்றாள். குழந்தையை விடவில்லை. கதறலைக் கேட்டு அஞ்சாறு பல்புகள் பளிச்சிட்டன. கதவுகள் தான் திறக்கவில்லை.

சண்டையின் உச்சத்தில் தன் பிரியத்திற்குரிய மைதுக்குட்டி முழுவதுமாக தன்னிடமிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவளின் கைகளில் முழுவதுமாக இருந்த அந்தப் பிஞ்சுப் பாதத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ எனும் பதட்டத்தில் பாதத்தை மெதுவாக நழுவவிட்டாள். பூப்பாதம் கையிலிருந்து நழுவிய அந்த நொடியின் நிழல்கள் ஷாபிராவுக்குள் இறங்கியது. காற்றென வெளியேறும் பஷீரைப் பின் தொடர்ந்தாள். கருப்பு இருட்டில் மறைந்தே போனான் பஷீர். வெறுமை பொங்கும் முகத்துடன் சிவந்து விரிந்த கண்களோடு வீடடைந்தாள் ஷாபிரா. தலைகுப்புற கட்டிலில் விழுந்தவள் இரண்டு நாளாகியும் எழவில்லை. அச்சம் மேலிட பாத்திமா முயற்சித்து மகளை எழுப்பினாள். எழுந்த நாளிலும் ஷாபிரா அவளாக இல்லை. விட்டத்தையே வெறித்தாள்.

மனம் பேதலித்த மகளுக்காக பாத்திமாவிற்கு அவுலியாக்களுக்கு நேர்ச்சை போடவும். தயாரித்து மந்திரித்து கட்டவும் என சுமை கூடியது. அதன்பிறகு ஷாபிரா பேச்சை நிறுத்தினாள். 'அல்லாஹூ' என்றாள். எப்போதாவது `'மைதுக்குட்டி'' என்றாள். இரண்டு வார்த்தைகள் மட்டுமே அறிந்த குழந்தையாகிப் போனாள் ஷாபிரா. அரைகுறைத் தகவல்கள் வந்தடைந்த நாட்களில் பிள்ளையைத் தேடியலைவதும், அல்லா ஏன் இப்படி எம் மகள சோதிக்க, ஏன் இப்படி எங்க வாழ்வில சைத்தான ஏவிவிட்டீரு என புலம்பியபடி கண்ணீர் உகித்த நாளில் துளிகள் பட்டு வடைச்சட்டியின் எண்ணெய்த் திவலைகள் மட்டும் தகிப்பாற்றிக் கொண்டன. சடக்கென வளைவில் பஸ் திரும்பிய நொடியில் என் நினைவலைகள் இன்றிற்குத் திரும்பியது.

பஷீர் வந்திருப்பான். குழந்தையை மீட்கச் சொல்லி பாத்திமா ஜமாத்திற்கு போயிருக்கும். நேரில் பார்த்துக் கொள்வோம் என உழன்ற என் மனதை ஆற்ற முடியாததற்கு என் அதிகாலை மனநிலையே காரணம். பஸ்ஸிற்குள் கொதிப்பாற்ற வழியின்றி வேர்த்துக் களைத்த எனக்குத் தற்செயலாக தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் பாதம் கண்களில் பட்டது. நானறியாது பாதங்களை வருடினேன். முடிவிற்கு வர இயலாத பெருந் துக்கத்துடன் வேம்படியில் இறங்கினேன்.

பார்க்கச் சகிக்காத வெறுமை என்னைப் பிய்த்துத் தின்றது. காகங்கள் தரையிறங்கியது தலைக்குச் சற்று மேலே வட்டமிட்டபடி கரைந்து கொண்டிருந்தன. பதட்டத்தின் சூழலை என் முகரேகையில் உணர்ந்த சமது உரைக்கத் தொடங்கினான். ராத்திரி ரொம்ப நேரமான பிறகு ஷாபிரா வீடு திரும்பல. நானும் பாத்திமாவோட சேர்ந்து தேடித்தான் பார்த்தேன். எந்த ஊருல எந்தப் பள்ளிக்கூட வாசல்ல குழந்தைகளைப் பார்த்திக்கிட்டு அதுக காலடிக்காகத் தவம் கிடக்காளோன்னு கதறியபடி போச்சுது பாத்திமா. இப்ப அதையும் காணோம். வீடும் பூட்டிக் கிடக்குது. லேசாக எனக்கு கால் நடுங்கியது. ஏதோ நடந்து விட்டதென என் மனம் அச்சமுறத் துவங்கியது.

என் பயத்தை ஊர்ஜிதப்படுத்தும் கதறலோடு பாத்திமா தலைவிரி கோலமாக வருகிறாள். ''அல்லா எந்தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்டாரு சமீது. எம்மவள போலிசு பிடிச்சிருச்சாம். மழையில நனைஞ்சபடி பக்கத்து ஊரு பள்ளிக்கூடம் போயிருக்கா. வாசல்ல நின்னு குழந்தைக பின்னாடியே போயிருக்கா. அதுக பாதத்தைத் தொட்டு பாத்துருக்கா. அதுக செருப்ப விசிறியடிச்சிருக்கா. பிறகு என்ன இவ நிலைமைய பாத்துட்டு ஊர்க்காரங்க பிள்ளை பிடிக்கறவளா இருக்கும்னு பிடிச்சு போலிசுல விட்டுட்டாங்களாம். இப்பத்தான் சாக்குவியாபாரி வந்து சொன்னாரு.''

நிமிடம் கூடத் தாமதிக்காது ஆட்டோ ஏற்பாடு செய்தோம். மூவரையும் சுமந்தபடி ஆட்டோ காக்கைகள் வழிகாட்டி விரைந்தது. இறங்கிய எங்களை மௌனத்தோடு எதிர்கொண்டன காக்கிகள். அந்தக் கேஸா அத ராவோடு ராவா மகளிர் காவல்நிலையம் அனுப்பியாச்சு'' என்றார் ரைட்டர் என அறியப்பட்டவர். ஷாபிராவிற்கு எதுவும் ஆகியிருக்காது என பாத்திமாவைத் தேற்றிய நாங்கள் மகளிர் காவல் நிலையத்தில் இறங்கினோம்.

பதில் சொல்ல மறுத்தபோலீஸ் ஸ்டேசன் நாற்காலிகள் அச்ச மூட்டன. யாரு? என்னவேணும் எனத் தெறித்த குரலுடன் உள் நுழைந்த குரலுக்குரியவர் இன்ஸ்பெக்டர் பாத்திமாவை நெற்றிச்சுருக்கி பார்த்த இன்ஸ்பெக்டர் `ஓகோ' அந்த முஸ்லிம் பொண்ணு கேசா? நீங்க யாரு அந்த பெண்ணுக்கு? என்று கேட்கும் தோரணையில் முறைத்தாள்.. அந்த பார்வையில் வெளிப்பட்ட அலட்சியம் போதுமானதாக இருந்தது. நடந்திருக்கும் சம்பவத்தின் அகோரத்தை உணர்ந்து திசையெங்கும் சுற்றிப்பார்த்தேன். ஷாபிராவின் தடமற்று இருந்தது. அறிவை வென்றிடுமா மனம் என்றவாறு விடியாத காலையின் துக்கம் என்னைப் பிசைந்தது.

``ஏதோ பிள்ளைகளைப் பிடிச்சுட்டுப் போயி குருடாக்கி பிச்சை எடுக்கிற கேசுன்னு சாதாரணமாக நினைச்சுட்டு இருந்தோம். ஆனா கேசு ரொம்ப பெரிசு. விசாரிக்க, விசாரிக்க அதிர்ச்சியாயிட்டோம் நாங்க. ரொம்ப அழுத்தமான பொண்ணு. என்ன கேட்டாலும் காலைத்தான் பார்க்குறா பாதத்துல எதைக் கண்டுக்கிறாளோ தெரியல. அவ முழிச்ச முழியும் சரியில்ல. முன்னுக்குப் பின் முரணா எதுவும் பேசல. அடிச்சாலும், அதட்டுனாலும் ரெண்டே பதில்தான். மைதுக்குட்டி, அல்லாஹூ அக்பரு அவ்வளதான்.''

அடப்பாவிகளா! தன்னோட குழந்தையத் தேடிக்கிட்டிருக்கிற குழந்தைங்க அவ என்கிற குரல் எதுவும் ஆய்வாளரை எட்டவில்லை. பாத்திமா புலம்பினாள். "தாயி, அவ எம்மக, பிள்ளைய பறிகொடுத்துட்டு புத்தி பேதலிச்சுக்கிடக்கா அவள விட்டுறங்க"

``எங்களுக்குத் தெரியாதா பைத்தியம்யாரு? தீவிரவாதி யாருன்னு? கேசு ஸ்ட்ராங்கா ஆயிடுச்சு. கேரளாவில மைதுக்குட்டின்னு ஒரு பார்ட்டி சிக்கியிருக்கு. தீவிரவாத குரூப். இவளும் அந்த குரூப்தான்னு ருசுவாயிருச்சு. விசாரிக்கிறதுக்கு மதுரைக்குக் கொண்டு போயாச்சு. நீங்க இப்ப கிளம்பலாம்" என தொப்பியைத் தட்டி தலையில் வைத்தவாறு வெளியேறினாள் ஆய்வாளர். நிலைகுலைந்தோம் சமதும் நானும்.

துளியில்லாது அழுது ஓய்ந்திட்ட கண்களில் துக்கம் மேலிட குழந்தையான பாத்திமாவின் குரல் உடைந்து வெளியேறியது. "சமது எனக்கு யார் இருக்கா? மதுரைக்குப் போகணும் எப்படியும் ஷாபிராவைக் கூட்டியாரணும், எம்மகள மீட்டிரணும், அவ பாவம்" எனும் பாத்திமாவின் கண்களில் மகளைத் தேடிக் கொண்டிருக்கும் தாயும், தாயைத் தேடிக் கொண்டிருக்கும் மகளும் நிறைந்த காஷ்மீரத்துப் பனி படர்ந்திருந்தது. எப்படிச் சொல்வது அம்மா இனி ஷாபிராவை ஒருநாளும் நீ பார்க்க முடியாது என்று கதற துடித்த என்னைக் கண்ணுற்ற சமது என் தோளில் அழுத்தியபடி பாத்திமாவிடம் "எப்படியும் ஷாபிராவை மீட்டிரலாம். கவலைப்படாத" என்றான். சமதின் தோளில் சாய்ந்தாள் பாத்திமா. "பாவம் சார், கிழவி இன்றைக்கு ஒரு நாளாவது நிம்மதியா தூங்கட்டும்" என்றவாறு ஆட்டோவில் ஏறினான். காகங்கள் மதுரை செல்லும் வெளியில் கரைந்து வெளியேறின.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com