Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
பிப்ரவரி 2009
அர்ஜெண்டினா சாம்பல் சதையான கதை

கணேஷ்

இந்த உலகமே கன்னத்தில் கை வைத்துக்கொண்டு சரிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தை கவலையுடன் பார்த்துக் கொண் டிருக்கிறது. அமெரிக்கா தும்மியதால் உலகின் பல நாடுகள் மூக்கு சிந்திக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளின் பொருளாதாரத்தை விட உயர்ந்து நின்றதாகக் சொல்லிக்கொண்ட பல்வேறு பகாசுர நிறுவனங்கள், ச்சீ..சீ என்று சீந்துவாரின்றி விழுந்து கிடக்கின்றன. பிளாக்கில் டிக்கெட் விற்றே பழக்கப்பட்டவருக்கு தியேட்டர் ஈயாடிக் கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ, அந்த நிலையில்தான் அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன.

உலகமே பாதிக்கக்கூடிய நிலையிலும் சில நாடுகள் தங்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்தது ஆச்சரியம்தானே... நம்மூர்க்காரர்கள் “ஆண்பாவம்” பாண்டியராஜனைத் தோற்கடித்து விட்டார்கள். பாதிச்சுதா என்று பார்க்கச் சொன்னால், பாதிச்சுதா... இல்லை, பாதிச்சுதா.... இல்லை என்று சொல்லி வந்தார்கள். கையை விட்டு மீறுகிறது என்று தெரிந்தவுடன், பாதிச்சுருச்சு என்று அலுவாலியா போன்று மக்களுக்கு எந்தவிதத்திலும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத ஆட்களை வைத்து சொல்ல வைக்கிறார்கள். ஆனால் சரியாமல் நின்ற பொருளாதாரத்தில் ஒன்று அமெரிக்காவின் மூச்சுக்காற்று படும் இடத்திலேயே உள்ளது.

தென் அமெரிக்க நாடுகளை தனது கொல்லைப் புறமாகவே ‘பெரிய அண்ணன்’ அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. அமெரிக்கா சொல்வதுதான் நல்லது, கெட்டது எல்லாமே. கேட்கவில்லை என்றால் “தீமைகளின் அச்சு” பட்டியலில் ‘டிக்’ செய்து விடுவார்கள். அந்த நாடுகளில் வறுமை தலைவிரித்தாடுவதாக செய்திகள் வெளியிடப்படும். அந்தச் செய்தி உள்ள பேப்பர் பழையதானவுடன், அதைக் கீழே விரித்து படுத்துக் கொள்வார் அமெரிக்காவிலுள்ள பிச்சைக்காரர். பல நாடுகள் இந்த தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டாலும் இன்னும் சில நாடுகள் அதே நிலையில் உள்ளன.

சாம்பலிலிருந்து எழுந்து வந்ததைப் போன்ற அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியுள்ள நாடு அர்ஜெண்டினா தான். இந்த அற்புதத்தைப் புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டியுள்ளது.

2001 ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகள் பெரும் சிக்கலில் ஆழ்ந்தன. அதில் அர்ஜெண்டினாவும் ஒன்று. உற்பத்தி குறைந்தது. வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களின் கோபம் ஆட்சியாளர்களை ஓட வைத்தது. இரண்டே ஆண்டுகளில் ஆறு அரசுகள் பதவியேற்றன. மக்களின் முற்றுகையிலிருந்து தப்பிக்க மாளிகையின் மொட்டை மாடிக்கு ஹெலிகாப்டரைக் கொண்டு வந்து அதில் ஏறித் தப்பிச்சென்றார் ஒரு ஜனாதிபதி.

இத்தகைய நிலை ஏற்பட்டதற்குக் காரணம் என்ன? ஐ.எம்.எப் என்ற சர்வதேச நிதியம் அளித்த மருந்துச்சீட்டை அப்படியே ஈயடிச்சான் காப்பி போல அமல்படுத்தினார்கள். கிட்டத்தட்ட பாதிப்பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் சென்றார்கள். நோயைப்பற்றி எப்போதுமே கவலைப்படாத ஐ.எம்.எப்பின் சிகிச்சை எதிர்வினையைத்தான் ஏற்படுத்தியது. இந்த நிலையில் மக்கள் முன் வந்த நெஸ்டர் கிரிச்னர், மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக்கூறி உறுதி அளித்தார். இந்த சமயத்தில் வெனிசுலாவில் ஏற்பட்டிருந்த மாற்றங்களும் அர்ஜெண்டினா மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திருந்தது.

ஐ.எம்.எப்பின் பேச்சைக்கேட்டு கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்திருந்த நிலையை கிரிச்னர் மாற்றினார். பணத்தைப் போட்டு தொழில் துவங்கத் தயாராக இருந்த உள்ளூர்க்காரர்களுக்கு ஊக்கமளித்தார். சாதாரண மக்களின் நுகர்வை அதிகரித்து தேவையை உருவாக்கினார். உற்பத்தியும் பெருகியது. கந்துவட்டிக்காரர்கள் போல் அர்ஜெண்டினாவை இறுக்கிப் பிடித்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். வட்டி, குட்டி போட்டு எட்டி உதைக்கும் வேலையெல்லாம் இனி நடக்காது என்று கறாராகக் கூறிவிட்டார். ஏற்கெனவே இருந்த கடன்களில் 65 சதவீதம் தள்ளுபடியானது. ஐ.எம்.எப்பிடம் வாங்கியிருந்த கடனை இந்தா.. வெச்சுக்கோங்க என்று மொத்தமாக அடைத்தார்.

ஏன்.. இப்படி மொத்தமாக அடைத்தீர்கள் என்று கேட்டபோது, இனி நாங்கள் சொந்தமாகக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றார். அந்த அளவுக்கு ஐ.எம்.எப்பின் தலையீடு இருந்திருக்கிறது. இவ்வாறு திருப்பி அடைப்பதற்கு சாவேஸ் பெரிதும் துணையாக நின்றார். இவ்வாறு துணை நிற்பதற்கு அமெரிக்கா போல் எந்தவிதமான நிபந்தனையையும் அவர் விதிக்கவில்லை. இந்த நிலையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்ற அன்னிய முதலீட்டாளர்கள் அர்ஜெண்டினாவின் வாசலில் நின்று கொண்டு கதவைத் தட்டினர். உள்ளே வந்தால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கிரிச்னர் தலைமையிலான அரசு கேட்டது. அவர்கள் தலையாட்டுவதை உறுதி செய்து கொண்டுதான் கதவு திறக்கப்பட்டது. இதெல்லாம் நடந்தது 2003ல் இருந்து 2005 வரை.

கடந்த நான்கு ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது. வளரும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சி பெற்ற நாடாக இருந்து வருகிறது. பண்டங்களுக்கான சந்தையின் மவுசு அதிகரித்ததால்தான் இந்த வளர்ச்சி என்று சிலர் கூறுவதில் உண்மை இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் அந்த ஏற்றுமதி 13 சதவீதம் மட்டுமே. இந்த வளர்ச்சிகளின் மூலமாக, இதுவரை காலடி எடுத்து வைக்காத கணினி மென்பொருள் துறையிலும் அர்ஜெண்டினா இறங்கியது. நெஸ்டர் கிரிச்னர் ஆபத்தான பாதையில் அர்ஜெண்டினாவை அழைத்துச் செல்கிறார் என்று அமெரிக்கா காட்டிய பூச்சாண்டி பலிக்கவில்லை.

கடந்த ஆண்டு ஆட்சி மாறியது. கிரிச்னரின் மனைவிதான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றாலும் சில பிரச்சனைகள். விலைவாசி உயர்வு பற்றிய கணக்கு தப்பாகப் போட்டிருக்கிறார்கள். இந்தத் தப்புக்கணக்கால் பொதுத்துறை ஊழியர்களுக்கு போதிய அளவு ஊதியம் உயரவில்லை. அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்கள். அதேபோல், உலகச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியைப் பாதித்துள்ளதால், விவசாயிகளும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். ஆனாலும் ஒரு விஷயம் நிச்சயம். இந்தப் பிரச்சனைகளை சரியான அணுகுமுறையால் தீர்த்து விட முடியும் என்பதை இந்த ஆறு ஆண்டுகால அனுபவம் தெரிவிக்கிறது. இவர்கள் தெளிந்து விட்டார்கள்.

நம் ஆட்சியாளர்கள், போகக்கூடாத பாதையிலேயே இன்னும் வேகமாகப் போக வேண்டும் என்று சாட்டையை சுழற்றுகிறார்கள். ஏற்கெனவே அச்சாணி கழன்று போய் வண்டி போய்க் கொண்டிருக்கிறது. குடை சாய்ந்தபிறகு துண்டை உதறிக்கொண்டு வண்டியை அப்படியே விட்டு விட்டு இவர்கள் போய் விடுவார்கள். வண்டியையும், மாட்டையும் கட்டிக் கொண்டு அழப்போவது மக்கள்தானே...?

படம் - வெனிசுலா ஜனாதிபதி சாவேசுடன் கிர்ச்னர்.

(ஆதாரம்: நெட்ஒர்க்ஐடியாஸ்.ஆர்க் இணையதளத்தில் வெளியான பேராசிரியர் ஜெயதி கோஷ் கட்டுரை)

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com