Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
சினிமா

சுப்ரமணியபுரம்
- ஸ்ரீரசா

தாதாக்களையும் அடியாட்களையும் பற்றிப் படமெடுப்பது, அதிலும் அவர்களை நாயகர்களாக்கிப் படமெடுப்பது தமிழ் சினிமா உலகத்தினருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அல்வாவும் கொடுப்பது மாதிரி. சுவையான அடிதடி, நைட் கிளப்புகளில் நடக்கும் வேக இடுப்பசைவு அழகிகளின் போதை கலந்த நடனம், குத்துப்பாட்டு, குத்துப்பாட்டையே கும்பலோடு கதாநாயகிகளோடும் ஆடுவது, அப்புறம் விதவிதமான பஞ்ச் டயலாக்குகள், என்கவுண்டர்கள், துப்பாக்கி முழக்கங்கள், ரவுடி போலீஸ், போலீஸ் ரவுடி, ஆர்ப்பாட்டமான அரசியல்வாதிகள், நீச்சல் குளங்கள், ஒளிவீசும் பார்கள், நட்சத்திர ஓட்டல்கள், விதவிமான வாகனங்கள், குண்டுகள் வெடிக்கும், தீப்பறக்கும் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள், கனவுக் காட்சிகள், நம்ம ஸ்பெஷல் கவிஞர்களின் அட்டாலங்கடி உட்டாலங்கடி பாட்டு வரிகள், அதற்கு அதிரடி இசையமைக்கும் இசையமைப்பாளர்களின் நவீன துடிப்புகள், அவைகள் ரிங்டோன்களாகி உலகம் முழுக்க ஒலிப்பது, இத்யாதி.... அப்பப்பா எத்தனை விதமான சினிமா ‘அயிட்டங்களுக்கு’ இத்தகைய கதைகள், அல்லது நிஜவாழ்வுச் சம்பவங்கள் தமிழ்சினிமாவின் வன்முறைப் பிரம்மாக்களுக்கு உதவியுள்ளன. சுப்ரமணியபுரமும் அத்தகையதொரு கதைதான். மதுரையில் சுப்ரமணியபுரம் பகுதியில் எழுபதுகளில் நடந்த சில நிஜ சம்பவங்களின் சாயலில் இயக்குநர் சசிகுமாரால் உருவாக்கப்பட்ட கதைதான். இதன் தயாரிப்பாளர்களும் மதுரையைச் சேர்ந்த சில வியாபாரப் பிரமுகர்களே.

வேலையற்ற இளைஞர்கள் தங்கள் கனவுகளோடும், சாதாரண ஆசைகளோடும் சுற்றித் திரிகையில் சுயநலம் மிக்க வளர்ந்து வரும் கீழ்மட்ட அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கிக் கத்தியெடுத்துக் கொலை செய்ய நேர்கிறது. பின்னர் அது அவர்களின் வாழ்வு முழுக்கக் கொலைகளாகத் தொடர்கிறது. இவர்களைப் போன்ற வேறு சிலர் இவர்களையும் கொல்கிறார்கள். இவர்களின் ஒருவனுக்கு ஒருத்தியோடு வரும் காதலும் கொலையாகிறது. வாளெடுத்தவர்கள் வாளால் மடிந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கதையின் ஊடாக இயக்குநர் சசிக்குமார் தம்மை வேறுபடுத்த, தம்மை ஒரு வித்தியாசமான கதைசொல்லியாக வெளிப்படுத்த முயற்சித்து அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளார். கதையின் ஊடாகத் திரியும் மனிதர்களின் மொழி, உடை போன்ற கலாச்சார விஷயங்களில் எழுபதுகளை நம் கண்முன் நிறுத்த முயன்று சாதித்துள்ளனர். கதிரின் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையையும், இசைப்பாணியையும் தழுவி அந்த எழுபதுகளை ரசிகருக்குள் இறக்குமதி செய்ய புதிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் நறுக்காக உதவியுள்ளார்.

நண்பர்களில் ஒருவராக இயக்குநர் சசிகுமாரும், மற்ற மூவர்களாக ஜெய், கஞ்சா கருப்பு, மாரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் நாயகியாக நடித்துள்ள ஸ்வாதி தம் முகபாவங்களாலேயே பேசி ஒரு தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகிக்கும் நாயகனுக்கும் இடையிலான காதலை ரசிகருக்கு இயக்குநர் முதன் முதலில் வெளிப்படுத்தும் இடம் அழகிய கவிதை. ஆனால் படம் முழுக்க ரத்த வாசனை அதிகம். சண்டைக்காட்சிகளை சரியாகச் சொன்னால் மோதல் காட்சிகளை வெகு இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அவற்றிற்கான களங்களாகப் பெரும்பாலும் திருவிழாச் சூழல்களைத் தெரிவு செய்திருப்பது கதை உருவாக்கத்தின் சிறப்பம்சம்.

இப்போது முதலில் ஆரம்பித்த இடத்திற்கு வருவோம். அதில் சொன்ன சினிமா ‘அயிட்டங்களை’ நம்பாமல் சினிமாவை நம்பிக் கதைசொன்ன சசிகுமார் தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநராக மிளிரும் வாய்ப்புகள் அதிகம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com