Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
முன்னத்தி ஏருக்கு தமுஎச எடுத்தவிழா

காற்றின் அடுக்குகள் அதிர...
- ச.தமிழ்ச்செல்வன்

முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் - முற்போக்கு இலக்கியத்தின் - முன்னோடி தோழர் கு.சின்னப்பபாரதியின் படைப்புகள் குறித்த இரண்டு நாள் அகில இந்திய ஆய்வரங்கை கடந்த ஜூலை 19, 20 தேதிகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாமக்கல்லில் நடத்தியது.

இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், மாணவ - மாணவிகள் என 300 பேருக்குமேல் இருநாளும் பங்கேற்ற அரங்கமாக அது நடைபெற்றது. முதல்நாள் அமர்வுகளுக்கு தமுஎசவின் தலைவர்களில் ஒருவரான தோழர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களும், இரண்டாம் நாள் அமர்வுகளுக்கு தமுஎசவின் மாநிலத் துணைத் தலைவரும், செம்மலர் ஆசிரியருமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களும் தலைமையேற்றனர். கரிசல் கருணாநிதியின் பாடல்களுடன் நிகழ்வுகள் துவங்கின.

இந்த ஆய்வரங்கின் வரவேற்புக்குழுத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். நாமக்கல் கவிஞர் பிறந்த இம்மண்ணில் வாழ்ந்து இலக்கியத் துறையில் சாதனை படைத்து வரும், கு.சி.பா. அவர்களை அவர் வாழும் காலத்திலேயே இந்த மண்ணிலேயே கௌரவிக்க வேண்டும். இம்மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விழா என்று அவர் குறிப்பிட்டார்.

கு.சி.பா. எழுதிய ஆறு நாவல்கள் ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுளளன. இப்படி ஒன்பது மொழிகளுக்குச் சென்ற தமிழின் ஒரே நாவலாசிரியர் கு.சி.பா. மட்டும் தான் என்பது பெருமைப்படத்தக்க சாதனைதான். ஆகவே, ஆறு நாவல்களுக்கும் தனித்தனியாக ஆறு அமர்வுகளும் அவரது சிறுகதைக்கு ஒரு அமர்வும் கவிதைகளுக்கென ஒரு அமர்வும் அவருடைய படைப்புகளை மொழிபெயர்த்த பிற மாநில அறிஞர்களை கௌரவிக்க ஒரு அமர்வும் ஆய்வரங்கச் சிறுப்பு மலர் வெளியீடும் தாகம், சங்கம், சுரங்கம் உள்ளிட்ட அவரது ஐந்து படைப்புகளின் புதிய பதிப்புகள் வெளியீடும் என இருநாள் நிகழ்வுகளும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பெற்றது.

தமுஎசவின் மாநிலத் தலைவர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், மாநிலப் பொருளாளர் கவிஞர் இரா.தெ.முத்து, எழுத்தாளர் பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், பொன்னீலன், ஆய்வாளர்கள் எஸ்.தோத்தாத்திரி, பத்மாவதி, விவேகானந்தன், டாக்டர் துரை, டாக்டர் நஞ்சுண்டய்யா (கர்நாடகம்), சென்னப்பா (கர்நாடகா), ஏ.ஜி.எத்திராஜுலு (ஆந்திரா), மேற்கு வங்க மாநில முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் இந்திரநாத் பேனர்ஜி, ஸ்டாலின் குணசேகரன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் இவர்களுடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.ம.ராஜேந்திரன், பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மு.தங்கராசு ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

மொழி பெயர்ப்பாளர்கள் சௌரிராஜன் (டெல்லி), சு.கிருஷ்ணமூர்த்தி (கொல்கத்தா), ஏ.ஜி.எத்திராஜுலு (சித்தூர்), எஸ்.பாலசுப்பிரமணியன் (டெல்லி) ஆகியோர் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சங்கம்’ நாவல் மலைவாழ் மக்கள் மத்தியில் வாலிபர் சங்க, மாதர் சங்கத் தோழர்களால் இரவுகளில் பல ஆயிரம் இடங்களில் வாசிக்கப்படுவதாக தோழர் ஏ.ஜி.எத்திராஜுலு குறிப்பிட்டது அவையில் பெருத்த கரவொலியை ஏற்படுத்தியது.

கர்நாடகத்திலிருந்து வந்த ஆய்வாளர் சென்னப்பா கு.சி.பா.வை காலனித்துவ காலத்துக்குப் பிந்திய மிக முக்கியமான படைப்பாளி என்று மதிப்பீடு செய்து கட்டுரை வாசித்தது குறிப்பிடத்தக்கது. “அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் தேசத்துரோகம் அரங்கேறுகிறது தேசத்தின் ஜீவநாடியான விவசாயிகள் ஆயிரம் ஆயிரமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். இப்பின்னணியில் உலகமயம் சந்தையை மட்டுமின்றி மக்களின் மனங்களைக் குறிவைத்துத் தாக்குகிறது. இத்தகைய ஒரு கடுமையான சூழலில் வழிகாட்டும் ஒளிவிளக்காக கு.சி.பா.வின் வர்க்க இலக்கியப் படைப்புகள் திகழ்கின்றன. இங்கே வந்திருக்கும் இளம் படைப்பாளிகள் பிரேம்சந்த், சரத்சந்திரர், கு.சி.பா. போன்ற படைப்பாளிகளின் வாரிசுகளாக ஏகாதிபத்திய ஏகபோக, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் படைப்புகளை உயிர்த்துடிப்புடன் படைத்திட வேண்டும்” என மேற்கு வங்கப் படைப்பாளி தோழர் இந்திரஜித் பேனர்ஜி குறிப்பிட்டதுதான் ஆய்வரங்கின் சாரமான செய்தியாக இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

செம்மலரின் முதல் ஆசிரியர், தமுஎசவை உருவாக்கிய முன்னோடி, ஜீவாவின் பாதையில் நடைபோடும் முற்போக்காளர், நாவலாசிரியர், சிறுகதையாளர், கவிஞர், நாட்டுப்புற ஆய்வாளர் தோழர் கு.சி.பா. அவர்களுக்கு முழு அரங்கமும் எழுந்து நின்று காற்றின் அடுக்குகள் அதிர கரவொலி எழுப்பிய உணர்ச்சிகரமான புள்ளியில் விழா நிறைவுற்றது. திரு. கருப்பண்ணன் மற்றும் தோழர் பழனிச்சாமி இருவரும் நன்றி கூறினர்.

- ச.தமிழ்ச்செல்வன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com