Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
சிறுகதை

ஒரு குவளை தண்ணீர்
பிரேம்சந்த்

ஜோகூ அந்தக் குவளையைத் தன் உதட்டருகே கொண்டு சென்றான். ஆனால் அதிலிருந்து சகிக்க முடியாத ஒரு நாற்றம் வீசியது. அவன் கங்கியைப் பார்த்து, “இது என்ன தண்ணீர்? இந்த நாற்றம் வீசும் தண்ணீரை என்னால் குடிக்க முடியாது. என் தொண்டை வறண்டு போகிறதென்று தண்ணீர் கேட்டால், நீ, இந்த நாற்றமடிக்கும் தண்ணீரைக் கொடுக்கிறாயே?” என்றான்.

கங்கி தினம் மாலை வேளையில் தண்ணீர் இழுத்துக் கொண்டு வருவாள். கிணறு வெகுதூரத்திலிருப்பதால், அடிக்கடி போய் தண்ணீர் கொண்டு வருவது அவளுக்குச் சிரமமாயிருந்தது. நேற்று மாலை தண்ணீர் கொண்டு வந்த போது, அதில் ஒருவித நாற்றமுமிருக்கவில்லை. இன்று நாற்றம் எப்படி ஏற்பட்டது? அந்தக் குவளையை எடுத்து தன் நாசி அருகே கொண்டு போனாள். உண்மைதான்; அதிலிருந்து ஏதோ நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. ஏதாவது மிருகம் அந்தக் கிணற்றில் விழுந்து இறந்து போயிருக்கும். இப்போது சுத்தமான தண்ணீரை அவள் எங்கு போய்க் கொண்டு வருவாள்?

தக்கூரின் கிணற்றருகே போக அவளை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். தூரத்திலிருக்கும்போதே அவளை விரட்டிவிடுவார்கள். சாஹுவின் கிணறு கிராமத்தின் மறுகோடியில் இருக்கிறது; ஆனால், அங்கும் அவளைத் தண்ணீர் எடுக்கவிட மாட்டார்கள். இவர்களுக்கென்று கிராமத்தில் ஒரு கிணறும் கிடையாது.

கடந்த பல நாட்களாக ஜோகூ உடல் நலமில்லாமல் இருக்கிறான். சிறிதுநேரம் தன் தாகத்தைச் சகித்துக் கொண்டிருந்தான். கடைசியில் அவன், “என்னால் இனி மேல் தாகத்தைச் சகிக்க முடியாது. அதைக் கொடு! நான் மூக்கைப் பிடித்துக் கொண்டு சிறிது குடித்து விடுகிறேன்” என்றான்.

கங்கி அந்தத் தண்ணீரை அவனிடம் கொடுக்கவில்லை. அந்த அசுத்தமான நீரை அருந்தினால் அவன் உடல்நிலை இன்னும் மோசமாகிப்போகும். அவளுக்கு இந்த மட்டும் விஷயம் தெரியும்; ஆனால், அந்தத் தண்ணீரைக் கொதிக்க வைத்தால், அதிலிருக்கும் கிருமிகள் இறந்துவிடும் என்ற விஷயம் மட்டும், தெரியாது. ஆகவே, அவள், “இந்தத் தண்ணீரை எப்படிக் குடிப்பது? கிணற்றில் என்ன மிருகம் இறந்ததோ, யாருக்குத் தெரியும்? நான் கிணற்றிலிருந்து சுத்தமான தண்ணீரைக் கொண்டு வருகிறேன்” என்றாள்.

ஜோகூ அவளை வியப்புடன் பார்த்து, “சுத்தமான தண்ணீரை எங்கிருந்து கொண்டு வருவாய்?” என்று கேட்டான்.

“இன்னும் இரண்டு கிணறுகள் இருக்கின்றன. தக்கூரின் கிணறும், சாஹுவின் கிணறும், ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் கொள்ளக் கூடவா அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள்?”

“நீ உன் கால்களை உடைத்துக் கொள்ளப் போகிறாய்; அது தான் நடக்கப் போகிறது. அந்த எண்ணத்தை விட்டுவிடு. பிராமணன் உனக்கு ஆசி கூறுவான்; தக்கூர் கம்பால் அடிப்பான்; சாஹு ஒன்றுக்கு ஐந்தாக வாங்குவான்! யாரும் ஏழைகளின் துயர்களை உணர்வதில்லை. நாம் செத்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் உதவி செய்ய தங்கள் கரங்களைத் தூக்க வேண்டாம். நம் வீட்டு வாசலைக் கூடக் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் உன்னைத் தண்ணீர் எடுத்துப் போக விட மாட்டார்கள்.”

இந்த வார்த்தைகளில் கசப்பான உண்மை இருக்கிறது. கங்கியால் என்ன பதில் தர முடியும்? ஆனாலும், அவனை அந்த அசுத்தமான தண்ணீரைக் குடிக்கவிடவில்லை.


இரவு ஒன்பது மணி இருக்கும். உழைத்து அலுத்துப் போன உழவர்கள் நித்திரையிலிருந்தனர். ஆனால், தக்கூரின் வீட்டருகே இன்னும் கூட சில கவலையற்ற சுகவாசிகள் குழுமியிருந்தனர். யுத்த களத்திலே தங்களுடைய வீரத்தைக் காட்டுவதற்கு இப்போது வாய்ப்புமில்லை, அதற்கு இது காலமுமில்லை. அவர்கள் இப்போது சட்ட சம்பந்தமான யுத்தங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒரு முக்கியமான வழக்கிலிருந்து தக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுத்து எப்படி, சர்வ சுதந்திரத்துடன் விடுதலை பெற முடிந்தது; தன்மேல் கொண்டு வரப்பட்ட சட்ட சம்பந்தமான தாவாவைப் பற்றிய முழு வழக்குக் கட்டையே அவர் கொண்டு வந்துவிட்டார்; குமாஸ்தாக்களும், அதிகாரிகளும் ஒரு பிரதி கூடக் கிடைக்காது என்று மறுத்தனர். ஒருவன் ஐம்பது ரூபாய் கேட்டான்; மற்றொருவன் நூறு ரூபாய் கேட்டான். ஆனால், ஒருவருக்கும் ஒன்றுமே கொடுக்காமல் இவர் நகல் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். இந்த விவகாரங்களிலெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்குள் கங்கி தண்ணீர் எடுக்க அந்த இடத்திற்கு வந்து விட்டாள். ஒரு மங்கிய விளக்கின் ஒளிக்கற்றை கிணற்றின் குறுக்கே விழுந்து ஒளிபெருக்கிக் கொண்டிருந்தது. கிணற்றைச் சுற்றிப் பாவப்பட்டிருந்த திட்டின் பாதுகாப்பில் மறைத்துக் கொண்டு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்தக் கிராமம் முழுவதும் இந்தக் கிணற்றுத் தண்ணீரைத் தான் அருந்தியது. இந்த துர்அதிர்ஷ்டசாலிகளைத் தவிர வேறு யாருக்கும் தடை இருக்கவில்லை.

இந்தச் சம்பிரதாயத் தடைகளையும் கொடுமைகளையும் எதிர்த்து கங்கியின் புரட்சிகரமான உள்ளம் கொதித்தது. “நம்மை ஏன் தாழ்ந்தவர்களாகக் கருதுகிறார்கள்? இவர்கள் எப்படி உயர்ந்தவர்கள்? அவர்கள் மார்பில் கயிறு போட்டுக் கொள்ளுகிறார்களே அதனாலா? அவர்கள் யாவரும், ஒவ்வொருவரும் கடைந்தெடுத்த சுயநலமிகள்! அவர்கள் திருடுகிறவர்கள்; பொய்க் கையெழுத்திடுகிறவர்கள்; போலி வழக்குகள் போடுகிறவர்கள். சிறிது நாள் முன்பு தான், இந்தத் தக்கூர் ஏழை இடையனிடமிருந்து ஒரு ஆட்டைத் திருடி, அதைக் கொன்று சாப்பிட்டான். பூசாரியின் வீட்டில் எந்நேரமும் சூதாட்டம் நடந்து கொண்டே இருக்கும். சாஹு நெய்யில் எண்ணெய்யைக் கலந்து, சுத்தமான சரக்கு என்று விற்கிறான். அவன் பேசுவதும் மிகவும் பவ்யமாக இருக்கும். ஆனால், பணத்தை வாங்குவதில் மட்டும் மிகவும் கறாராக இருப்பான்.

இவர்கள் எங்களைவிட எப்படி உயர்ந்தவர்கள்? வெறும் பேச்சுக்குத் தான் அவர்கள் உயர் குடியில் பிறந்தவர்கள். நாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஒவ்வொரு வீதியும் சந்துமாக நாங்கள் கூவிக் கொண்டு திரிவதில்லை. நான் கிராமத்திற்குள் வரும் போதெல்லாம் இவர்கள் என்னை எவ்வளவு பொறாமைக் கண்களோடு முறைத்துப் பார்க்கிறார்கள்? அவர்கள் அப்போது மிகவும் பொறுமையற்றவர்களாக மாறி விடுகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்!”

கிணற்றை நோக்கி யாரோ வரும் காலடியோசை கேட்டது. கங்கியின் உள்ளம் படபடத்தது. அவளை யாராவது பார்த்து விட்டால் மிகவும் ஆபத்தாகப் போய்விடும். எல்லா உதையும் அவள்தான் வாங்க வேண்டும். தப்ப முடியாது. அவள் தன் குடத்தையும் கயிறையும் எடுத்துக் கொண்டு எதிரே இருந்த மரத்தின் நிழலில் போய்ப் பதுங்கிக் கொண்டாள். அவர்கள் யாரிடமும் கருணை காட்டுவதே இல்லை. கட்டாய உழைப்புச் செய்ய மறுத்த மங்கூவை அவர்கள் அடித்த அடியின் விளைவாக அவன் பல மாதங்கள் இரத்தம் கக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே!

இரண்டு பெண்கள் தண்ணீர் எடுக்கக் கிணற்றுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“அவர்கள் சாப்பிட உட்கார்ந்து கொண்டு நம்மைப் போய்த் தண்ணீர் கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார்கள். ஒரு குடம் வாங்கக்கூடக் கையில் காசில்லாதவர்கள்.”

“நாம் நிம்மதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டால் ஆண்களுக்குப் பிடிக்காது போலிருக்கிறது!”

“ஆமாம்; குடத்தை எடுத்துக் கொண்டு வந்து அவர்களே தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியாதவர்களைப் போல, வெறும் உத்தரவுகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர். நாம் ஏதோ அடிமைகளைவிட மேலானவர்கள் அல்ல என்பது போல, ‘போய்த் தண்ணீர் கொண்டு வா’ என்கிறார்கள்.”

“நாம் அடிமைகள் இல்லாமல் வேறென்ன? உனக்கு வேண்டிய உணவும் உடையும் கிடைக்கிறதல்லவா? சமயத்தில் கொஞ்சம் பணமும் கிடைக்கிறது. அடிமைகளுக்கு இதைவிட வேறு என்ன கிடைக்கிறது?”

“என்னை அவமானப்படுத்தாதே அக்கா! உழைப்பிலிருந்து ஒரு கணம் அமைதிக்காக நான் பலநாள் வீணே கனவு கண்டிருக்கிறேன். வேறு யாருக்காவது நான் இப்படி உழைத்திருந்தால், இதை விட நல்ல சுகத்தோடு இருந்திருப்பேன். அவர்கள் தங்களுக்குக் கிடைக்க பெரிய வாய்ப்பாக நினைப்பார்கள். இங்கு நான் உழைத்துழைத்து ஓடாகியும், அதற்குப் பிரதியாக வெறும் திட்டுகளைத்தான் பெறுகிறேன்.”

அந்த இருவரும் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்றதும் கங்கி மரத்தின் நிழலிலிருந்து வெளியே வந்து கிணற்றின் திட்டியை அடைந்தாள். அந்தக் கவலையற்ற சுகவாசிகளும் சென்றுவிட்டனர். தக்கூர்கூட கதவை அடைத்துக் கொண்டு உள்ளே வாசலில் படுக்கச் சென்று விட்டான். கங்கி அந்தக் கணத்தின் மகிழ்ச்சியில் திளைத்தாள். எப்படியோ அவளுக்கு எல்லாத் தடையும் நீங்கிவிட்டன. அந்தக் காலத்தில் அமுதத்தைத் திருடச் சென்ற அரச குமாரன்கூட இவ்வளவு ஜாக்கிரதையாகவும், அக்கறையுடனும் சென்றிருக்க மாட்டான்.

அவள் இதற்கு முன் இவ்வளவு பெரிய வெற்றி உணர்ச்சியை அனுபவித்தது கிடையாது. தன் குடத்தின் கழுத்தில் சுருக்கிட்டாள். இருண்ட இரவில் எதிரியின் கோட்டைக்குள்ளே ஒரு பாதையை வகுக்க முயலும் ஒரு படை வீரனைப் போல, இடது பக்கமும் வலதுபக்கமும் கவனித்தாள். இந்தச் சமயத்தில் அவள் அகப்பட்டுக் கொண்டால், அவளுக்குக் கருணையோ, பரிதாபமோ காட்டுவார்கள் என்று நம்பவே முடியாது. கடைசியில் தன் தெய்வங்களை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, குடத்தைக் கிணற்றுக்குள் விட்டாள்.

குடம் மிகவும் மெதுவாகத் தண்ணீருக்குள் அழுந்தியது. அது ஒருவித சப்தத்தையும் ஏற்படுத்தவில்லை. கங்கி கயிறை மிகவும் வேகமாக இழுத்தாள். குடம் கிணற்றின் வாயருகே வந்துவிட்டது. நல்ல உடற்பயிற்சியுள்ளவன்கூட இவ்வளவு விரைவில் இழுத்திருக்க முடியாது. கங்கி குனிந்து குடத்தை எடுத்து கிணற்றின் திட்டின் மேல் வைக்க ஆரம்பித்தாள். திடீரென்று தக்கூரின் கதவு திறந்தது. ஒரு சிங்கத்தின் திறந்த வாய்கூட அவளுக்கு அவ்வளவு அச்சத்தைக் கொடுத்திருக்க முடியாது!

கங்கியின் கரத்திலிருந்த தாம்புக்கயிறு நழுவியது. குடம் தடாலென்று தாம்புக் கயிற்றுடன் தண்ணீருக்குள் விழுந்து, பல நிமிஷங்களுக்குக் கிணற்றுக்குள் ‘தளதள’வென்ற சப்தத்தை உண்டாக்கியது.

தக்கூர் கிணற்றை நோக்கி, “யாரது?” என்று கத்திக் கொண்டே வந்தான். கங்கி கிணற்றின் திட்டை விட்டு, மிகவும் வேமாக ஓடினாள்.
அவள் வீட்டை அடைந்ததும், ஜோகூ, அதே அசுத்தமான, நாற்றம் வீசும் தண்ணீர் நிறைந்த குவளையைத் தன் வாயருகே வைத்துக் குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

(“பிரேம்சந்த் கதைகள்” எனும் நூலிலிருந்து..)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com