Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
சங்க இலக்கியக் காட்சிகள்

களவும் உடன்போக்கும்...
- வெ.பெருமாள்சாமி

மக்கள் இனக் குழுவாக வாழ்ந்த காலகட்டத்தில் காதலர்களின் காதலுக்கு எவரும் தடை விதிக்கவில்லை. காதலை அவர்கள் போற்றி வளர்க்கவே உதவினர். இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகவே கூறுகின்றன. தினை அறுவடைக்குப் பின் இரவுக்குறியிடத்தில் காதலியைச் சந்திக்க வந்த காதலன், அவளது மனைக்குள் புகுந்துவிட்டான். அதனைக் காதலியின் தாய் பார்த்துவிட்டாள். அவனை அவள் வெகுண்டு விரட்டாமல், வரவேற்று உபசரித்து மகிழ்ந்தாள். அவனது வருகைக்காக முருகனையும் வணங்கிப் போற்றினாள். இதனை,

“துறுகல் நண்ணிய கறி இவர் படப்பைக்
குறியிறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்
மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு
முருகென உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை”
- என்று அகநானூறு (272) கூறுகிறது.

“குன்ற நாடன்
செறு அரில் துடக்கலின் பரீஇப்புரி அவிழ்ந்து
ஏந்து குவவுமொய்ம்பின் பூச்சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர
இல்வந்து நின்றோற் கண்டனள் அன்னை
வல்லே என் முகம் நோக்கி
“நல்லை மன்”என நகூஉப் பெயர்ந்தனளே”
(அகநானூறு: 248)

‘பூக்கள் உதிர்ந்த மாலையானது, காளையின் திமிலில் கிடந்து கிடந்து அசைந்து கொண்டிருக்க, அவன் நம்முடைய வீட்டில் வந்து நின்றான். அவனை அன்னையும் கண்டாள். விரைய என் முகத்தைப் பார்த்து ‘மிகவும் நன்று’ என்று கூறி நகைத்துச் சென்றாள் என்று, இரவுக் குறிக்கண் காதலியைக் காணவந்த காதலன், அவளது வீட்டினுள் வந்து நின்றதைக் கண்ட தாய் அவனது வருகைக்காக மகிழ்ந்த செய்தியினை அந்நூல் கூறுகிறது.

“நீயும்
இயங்கு இருள் யாமத்து இயவுக் கெட விலங்கி
வரி வயங்கு இரும்புலி வழங்குனர்ப் பார்க்கும்
பெருமலை விடரகம் வர அரிது என்னாய்
வர எளிதாக எண்ணுதி அதனால்
நுண்ணிதின் கூட்டிய படுமாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒருநாள்
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே
அன்னை அறியினும் அறிக அலர்வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றியொடு
ஒண்பூ வேங்கை கமழும்
தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே”
(அகநானூறு: 218)

“காதலனே, நீயும் நள்ளிரவுப் போதில் வழி தவறி வருவோரை வரிப்புலியானது கொல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் பெரிய மலைப் பிளவுகள், வருவதற்கு அரியவை என்று கருதாமல், எளியவை என்றே எண்ணுகிறாய். சந்தனம் பூசியதால் குளிர்ச்சியாக மணம் வீசும் நின் மார்பை யாங்கள் ஒரு நாளேனும் இறுகத் தழுவாமல் இருந்தால், அணிகள் நெகிழுமாறு உடல் மெலிகிறோம். அதனால், அந்நிலையினை அன்னை அறியினும் அறிக; அலர் கூறும் வாயினரான பெண்கள் அம்பலும் அலரும் கூறினும் கூறுக. ஊரார் பழிப்பினும் பழிக்க. தோன்றிப் பூக்களும், வேங்கை மலர்களும் மணம் பரப்பும் மலைச் சாரலாகிய இவ்விடத்துக்கு நீ இரவில் வருதலைத் தவிர்த்து பகலில் வருக’ என்று, ஊரின் அலருக்கும் அம்பலுக்கும் அஞ்சாமல், தாய் அறியின் தடுப்பாளே என்று கலங்காமல், பகற்குறியிடத்தும் கண்டு கூடிக் களித்திடக் காதலி காதலனைத் துணிவுடன் அழைத்த நிகழ்வை இலக்கியங்கள் காட்டுகின்றன.

பெண்களின் காதலுக்கு அக்காலச் சமூகம் தடை ஏதும் விதிக்கவில்லை; தான் விரும்பும் ஆடவனை மணந்து வாழும் உரிமை பெண்ணுக்கு இருந்தது; சமூகம் அவ்வுரிமையை மதித்தது என்ற செய்திகளையும் மேற்குறித்த பாடல்கள் உணர்த்துகின்றன.

“அரி பெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ,
யாயறிவுறுதல் அஞ்சி
வேயுயர் பிறங்கல் மலையிறந் தோளே”
(அகம்: 321)

தன் காதலைத் தாய் அறிய நேர்ந்தால் தடுப்பாள் என்று அஞ்சியவளாய்க் காதலியானவள், அழகிய காற்சிலம்புகளை நீக்கிவிட்டுத் தன் காதலனுடன் மூங்கில் வளர்ந்துள்ள மலைகளின் வழியாகச் சென்று விட்டாள் என்றும்

“அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை
எனக் கெளிதாகல் இல்” எனக் கழற்கால்
மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்
பன்மலை யருஞ்சுரம் போகிய”

‘தாய் தன் காதலை அறிய நேர்ந்தால், இங்குவாழும் களவு வாழ்க்கை எளிதாக இராது’ என்று கருதி, கழல் அணிந்த கால்களும், வேலும் உடைய காதலன் முன் செல்ல, அவன் பின்னால், மலை சூழ்ந்த பாலை நிலத் தின் வழியாக மகள் சென்று விட்டாள் என்றும் மகட் போக்கியதாய் வருந்திக் கூறியதனைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

குறியிறைக் குரம்பையும் புல்வேய் குரம்பையும் ஆகிய குடிசைகளில் வாழ்ந்தோராகிய மகளிர் பொன் அணிகள் எவையும் அணிந்ததில்லை; சிலம்பும் வளையலும் இவர்கள் அறியாதவை. ஆனால், இவர்களின் காதலுக்கு எவரும் தடை விதித்ததில்லை. மனம் விரும்பிய ஆடவனோடு இணைந்து வாழ்ந்தனர்.

ஆனால், சமூக மாற்றத்துக்குப் பின் அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் செல்வர்மனைப் பெண்கள் பொன், வெள்ளி முதலியவற்றால் ஆன சிலம்பு, வளையல் முதலிய அணிகலன்களை அணிந்து மகிழ்ந்தனர். பட்டாலும் பருத்தியாலும் நெய்யப்பட்ட பலவண்ண உடைகளை அணிந்து தம்மை அழகு செய்து கொண்டனர். அம்மகளிர் தம் தோழியருடன் கந்தும் (பந்தாடல்) கழங்கும் ஆடி மகிழ்ந்தனர். இப் பெண்கள் தினைப்புனக் காவலுக்குச் சென்றதில்லை. பிற சாகுபடிப் பணிகள் எவற்றிலும் ஈடுபட்டதில்லை. வெள்ளிக் கிண்ணத்தில் பால் பெய்து மகளை ஊட்டி வளர்த்தாள் தாய். பொன் அணிகளை அணிவித்து மகளை அழகு பார்த்து மகிழ்ந்தாள். ஆனால், காதலிக்கும் உரிமை அவளுக்கு மறுக்கப்பட்டது. தான் விரும்பும் இளைஞனை மணக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை.

காதலில் ஆழங்கால் பட்டிருந்த காதலி, பெற்றோரின் தடையையும் கட்டுக்காவலையும் மீறி காதலுடன் உடன்போக்காகச் சென்றுவிட்டாள். அதற்காக அத் தாய் பெரிதும் வருந்தினாள். செல்வக்குடியினளான தன் மகள் வறியவன் ஆன இளைஞனுடன் ‘ஓடிப் போய் விட்டாளே’ என்பதற்காகத்தான் அத்தாய் வருந்திப் புலம்பினாள்.

“பெரும்பெயர் வழுதி கூடலன்ன தன்
அருங்கடி வியனகர்ச் சிலம்பும் கழியாள்
சேணுறச் சென்று.....................................................
.............................................................................................
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
அகலிலைக் குவித்த புதல்போல் குரம்பை
ஊன் புழுக் கயரும் முன்றில்
கான்கெழு வாழ்னர் சிறு குடியானே”
(அகநானூறு : 315)

‘தந்தையின் பெரிய வளமனையானது புகழ்மிக்க பாண்டியனது கூடல்நகர் போன்ற சிறப்புடையது; அரிய காவலையுடையது. சிறப்புமிக்க அம்மனையில் சிலம்பு கழி நோன்பும் செய்யப் பெறாமல், என் மகள் காதலனாகிய இளைஞன் பொய் கூறி அழைக்கவும் அவனுடன் நெடுந்தொலைவு சென்று விட்டாள். தற்போது, அவள் தேக்கின் அகன்ற இலையில் புழுக்கிய ஊனைக் குவித்து உண்பார் வாழ்வதும் காட்டின்கண் உள்ளதுமான சீறூரில் காதலனது புதர் போன்ற குடிசையின் முற்றத்தில் தங்கியிருப்பாளோ?’ என்று தாய் மனம் வருந்திக் கூறினாள்.

“கடலந்தானைக் கைவண் சோழர்
கெடலரு நல்லிசை உறந்தையன்ன
நிதியுடை நன்னகர் புதுவது புனைந்து
தமர்மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக்காழ்நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெருமடத்தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர் ஆயாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ
மேயினள் கொல் என நோவல் யானே”
(அகநானூறு : 369)

கடல் போன்ற பெரும்படையும் வள்ளன்மையும் உடைய சோழர்களின் அழியாத நல்ல புகழையுடைய உறையூரைப் போன்ற செல்வம் மிக்கது எம்வளமனை. அம்மனையில் புத்தாடைகள் அணிவித்துப் புத்தணிகள் புனைவித்து நம்மவர்க்கு மணம் செய்வித்தலை என் மகள் விரும்பாள் ஆயினாள். கவர்த்த அடியினையுடைய ஓமை மரங்கள் உயரமாக வளர்ந்துள்ள நெடிய காட்டிலே, மணிகள் பதித்த பரிசையும் நீண்ட வேலும் துணிவுமிக்க உள்ளமும் வலிய உடலும் உடையவனும், அறியாத நாட்டில் அரிய பாலை வழியில் அழைத்துப் போனவனும் ஆன இளைஞனை என் மகள் விரும்பினாள்.

தற்போது அவள், சீரும் சிறப்பும் இல்லாத சிற்றூரில் புல்லால் வேயப் பெற்றதும் ஒற்றைத் தூணில் ஒரு பசு கட்டப்பட்ட முற்றத்தையுடையதும் ஏதும் அற்றதும் ஆன ஒரு வறிய மனையின் கண் தன் சிலம்பைக் கழித்து, வறுமையுற்றவளான ஒரு பெண்ணின் மகனுடன் மணம் பொருந்தினாளே என யான் வருந்துகிறேன் என்று மகட்போக்கிய தாய் மனம் வருந்திப் புலம்பினாள். தந்தையினது வளமனை சோழரது உறையூருக்கு ஒப்பான செல்வச் செழுமை படைத்தது. அத்தகைய வளமனைக்கு உரியவளான தம் மகள், புல்லால் வேயப்பட்டதும், ஒற்றைத் தூணில் ஒரு பசு கட்டப்பட்டுள்ளதும் ஆன குடிசைக்கு உரியவளான ஒரு வறிய பெண்ணின் மகனுடன் உடன் போக்காகச் சென்றமை அத்தாயின் உள்ளத்தைப் பெரிதும் வருத்தியது.

வேட்டைச் சமூகத்து இளைஞன் இரவுக் குறிக்கண் காதலியைச் சந்திக்க அவளது குடிசையுள் புகுந்தான். அவனை அவளது தாய் பார்த்தவிட்டாள். அந்நிலையில் அவள் அவனை வெறுத்துவிரட்டாமல் வரவேற்று உபசரித்தாள். மகளின் காதலனது செல்வ நிலை குறித்து அத்தாய் ஆராயவில்லை. ஆனால், அடிமைச் சமூகத்திலும், நிலப்பிரபுத்துவச் சமூகத்திலும் மகளது காதலனின் செல்வ நிலை குறித்து அவளது தாய் ஆராயத் தொடங்கினாள். அந்த ஆராய்ச்சியில் அவன் “நல்கூர் பெண்ணின் மகன்” எனத் தெரிந்ததும் “சிறியோற்கு ஒத்த பெருமடத்தகுவி” (சின்னப்பயலோடு ஓடிப்போன பெரிய அறிவிலி) என்று அவர்களை ஆத்திரத்துடன் பழித்துப் புலம்பினாள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com