Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஆகஸ்டு 2008
அப்போ அரிசி... இப்போ மண்...!

பி.யூ.சின்னப்பாவின் தூரத்து உறவினர் மதுரையைச் சேர்ந்த ஏ.எஸ்.வேல்முருகன். தனது 12 வயதில் நாடகத்தின் மீது ஏற்பட்ட காதலால் சின்னப்பாவுடனேயே கிளம்பி விட்டார் நடிப்பதற்கு. வேல்முருகனின் தந்தையும் கரகக் கலைஞர் என்பதால் அவரே வேல் முருகனின் கரக ஆசிரியராகவும் ஆனார். 1982 வரை வேல்முருகனின் சலங்கை ஒலி கேட்காத தமிழக ஊர் ஏதுமில்லை, அவரின் பாதம் படாத தமிழகப்பகுதி இல்லை எனும் அளவுக்குக் கலைப்பணி செய்துவந்த வேல்முருகனின் இன்றைய வாழ்க்கை மிகவும் பரிதாபமானது. அச்சகங்களில் காலண்டர்கள் தயாராகும் காலங்களில் அவற்றுக்கு ‘பின்’ (pin) அடிப்பது முதலான வேலைகளைக் கூலிக்குச் செய்து கால்வயிற்றைக் கழுவும் நிலை. மற்ற நாட்களில் அதுவும் இல்லை.

59 வயது ஆகிவிட்ட இன்றைய நிலையில் தனது ஒரே மகளுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டோம் என்ற சின்ன நிறைவுமட்டும் அவரிடம் கொஞ்சம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது இரண்டு ஆண் வாரிசுகளும் கூலி வேலை செய்வதுகூட அவருக்குக் கவலை தரவில்லை. ஆனால், தனக்குப் பிறகு தன் கலைக்கு ஒரு வாரிசு இல்லையே எனும் கவலைதான் அவரின் நெஞ்சை என்னவோ செய்கிற விஷயமாக இருக்கிறது. “என் தலைமுறையுடன் இந்தக் கரகக் கலை முடிந்து போகப்போகிறதை நினைத்தால் ரொம்ப வருத்தமா இருக்கு சார்” என்கிறார் தன் வறுமைக்கு எந்த வழியும் சொல்லாத கரகக் கலைமீது இன்னமும் காதலும் பிரியமும் கொண்டிருக்கும் வேல்முருகன்.

“அந்தக் காலத்தில் ரிக்கார்டு டான்ஸ் ரொம்பப் பிரபலம். அப்பக்கூட எங்க கலைக்கு எந்தச் சேதாரமும் வரலை. இப்போ சினிமாப் பாட்டுக்கு இளைஞர்கள் ஆடுறாங்க. ஆபாசமும் அநாகரீகமும்தான் அதில இருக்கு. எங்க கலைக்கு மரியாதையில்லை. அப்பல்லாம் தூத்துக்குடி தசராவில் ஏழு நாளுக்குப் போட்ட வேசத்தைக் கலைக்காம ஆடுவோம். ராமநாதபுரத்தில் 5 நாள் முளைப்பாரி கரைக்கிறவரை. மதுரையில ஒரு நாள் ராத்திரி முழுசும் ஆடுவோம். கோயில் விசேசங்களுக்கே இப்ப கிராமியக் கலைகளைப் பயன்படுத்துவது குறைஞ்சுபோச்சு. கும்பகோணத்தில் எங்கள் ஆட்டக் கலைஞர்களை நிறைகும்பத்துடன் ரயிலடிக்கு வந்து வரவேற்று அழைச்சிட்டுப் போவாங்க.” - இப்படித் தனது ஆதங்கத்தைப் பெருமூச்சுடன் வெளிப்படுத்தும் வேல்முருகன், “ஊர்க்கிராமத்துத் தலைவர் வீட்டிலிருந்து கரகத்துக்குள் நிரப்ப அரிசி வரும். திருவிழா முடிந்து, முளைப்பாரி கரைத்துமுடித்ததும் கரகத்துக்குள் போட்ட அரிசியை ஊர்ப் பொங்கலில் சேர்ப்பார்கள். இப்பல்லாம் அரிசிக்கு பதிலா மண் வந்துவிட்டது. அரிசியோட ஆடுறதுக்கு அதிகத் திறமை வேணும் தெரியுமா?” என்று சொல்லும்போதே வறுமை வரைந்துவிட்ட கோடுகளையும் மீறி ஒரு பெருமிதம் அவரின் முகத்தில் பளிச்சிடுகிறது.

‘இப்பல்லாம் அரிசிக்குப் பதிலா மண் வந்துவிட்டது’ என்று அவர் சொன்னது கரகத்துக்கு மட்டுமா, இத்தகைய கலைஞர்களின் வாழ்க்கைக்கும்தானே?

சந்திப்பு: சோழ. நாகராஜன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com