Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
நூல் மதிப்புரை
கவிஞர் வெண்புறா எழுதிய தகிப்பின் குரல்

ஓவியர் வெண்புறாவின் தூரிகைக்குத் தமிழகத்தின் எந்த ஊரும் தப்பியதில்லை. கலை இரவுகள் தொடங்கி, மக்கள் ஒன்றிணைந்து கூடும் பல்வேறு தருணங்களிலும் அவற்றை முன்னறிவிக்கவும், அந்த நிகழ்வுகளின் நாளன்று நெடிது எழுந்து மேடை வடிவங்களாய் நிமிர்ந்து நிற்கவும் வெண்புறாவின் ஓவியக்கலைக்கு ஓயாத வேலைதான். ஆனால், வெண்புறாவின் கவி மனசு இங்கே பேனாவையும் இன்னொரு தூரிகையாக்கியிருக்கிறது. 'தகிப்பின் குரல்' அவரின் முதல் கவிதைத் தொகுப்பாக காலம் கடந்தாலும், 'காலம்'வெளியிட்ட நூலாக வந்துள்ளது.

சுயவாழ்க்கை அனுபவமும், புறச் சூழல் முரண்களும் எப்போதும் கவிஞர்களை அலைக்கழிக்கிற விஷயங்கள். வெண்புறாவையும் அவை விட்டுவைக்கவில்லை. அதிலும், அரசியல் தெளிவும், சமூகப் பார்வையில் துல்லியமும் ஒரு படைப்பாளிக்கு வந்துவிட்டால் கவிதைகளுக்கும், கவிதை ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான். அதுதான் வெண்புறா விஷயத்திலும் மெய்யாகியிருக்கிறது.

அறுநூறு கோடி வித்தியாசங்களோடு வெறும் ஆறு அங்குல நீள அகலத்தில் மனித முகங்கள் கைகொட்டிச் சிரிக்கக் காரணமாகிறது வாரப் பத்திரிகையின் ஆறு வித்தியாசங்கள் பகுதி, அவரின் 'அதிசயம்' கவிதையில்.

'நிலைக்கு வராத தேர்' கவிதையில் பங்குனித் தேரோட்டத்தின் நிஜம் தகிக்கிறது.

தேருக்கு மேலே நூலாம் படையாய்
'பட்டர்' பரம்பரை கொடியசைக்க...
தேருக்குக் கீழே அடித்துக் கொண்டு
அங்காளி பங்காளிகள் வடம் பிடிக்க...

- என்று பங்குனித் திருவிழா எப்போதும் போல மாற்றம் காணாத நிலைமைதான்.

மொட்டைமாடிகளற்ற அப்பார்ட்மெண்ட்களில் முற்றம் எங்கே? தோட்டம் எங்கே? என்று பதறுகின்றது வெண்புறாவின் கவிதை ஒன்று. தொலைக்காட்சிப் பெட்டியின் வரவால் வெறிச்சோடிப்போன வீதிக்காக வருத்தம் வெளியிடுகிறது இன்னொரு கவிதை. மனிதம் பேசும் கவிதைகளை வெறும் பிரச்சாரம் எனப் பிரச்சாரம் செய்பவனைக் கண்டிருக்கிறது இன்னொரு கவிதை. அந்தத் தாழ்த்தப்பட்ட வயிரக்கா வீட்டுப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தறியாததன் தெரு சனங்களைக் கண்டு உறுத்துகிறது ஒரு கவிதைக்கு. பிள்ளைப்பருவம் தொலைத்துப் பெரிய மனுஷி ஆகிவிட்ட அந்தப் பெண் குழந்தைக்காகக் கண்கள் பனிக்கின்றன. இன்னுமொரு கவிதைக்கு. வீராப்புக்கு உயர்சாதிப் பெருமையும், பிழைப்புக்கு அரசாங்க சலுகையும் கோரும் சாதிய உணர்வின் இரட்டை நிலையைச்சாடுகிறது மற்றொரு கவிதை.

இப்படி பாசத்தை, நேசத்தை, கண்டனத்தை, கண்டிப்பை எல்லாம் எந்தக் குறையுமின்றி வாரிவழங்குகின்ற இந்தத் தொகுப்பு உண்மையில் ஒரு நல்ல வரவுதான்.

வெண்புறாவின் மனசு காதல் நிரம்பிய மனசு. அதனாலேயே ஈரம் கசியும் இளகிய மனசு. அதேநேரத்தில் அநீதியைக் கண்டால் எரிமலையெனச் சீற்றம் கொள்ளும் ரௌத்ர மனசு. இந்த இருவேறு தன்மைகளையும் ஒரு சேர ஒரு கவிதையில் - 'அமுதமிலம்' கவிதையில் வெளிப்படுத்துகிறார் இப்படி:

அமுதம் என்கிறாய் நீ
அமிலம் என்பேன் நான்
சாதி மதங்களைச்
சுட்டெரிக்கும்
காதலை
வேறெப்படி அழைப்பது?

இதுதான் வெண்புறா. இதுதான் அவரின் இந்தத் தொகுப்பின் அடிநாதம். கவிதை நேயர்களுக்கு ஒரு நல்ல ஆரோக்கிய விருந்தளிக்கிறது இந்த 'தகிப்பின் குரல்' கவிதைத் தொகுப்பு.

- சோழ.நாகராஜன்

காலம் வெளியீடு : 25 மருதுபாண்டியர் 4வது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, மதுரை - 625 002.
விலை ரூ. 40


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com