Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
பெண்மை என்றொரு கற்பிதம்
அழுது தீர்த்தது போதுமே
ச.தமிழ்ச்செல்வன்

நாம் வாழும் சமூகங்கள் நம்மை அதாவது ஆண்களையும் பெண்களையும் சில குறிப்பிட்ட விதங்களில் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டுமென எதிர்பார்க்கின்றன.அந்த எதிர்பார்ப்பே பண்பாட்டுத்தளத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான விதிகளாக இறுகி நிற்கின்றன.ஆனால் மனிதர்களாகிய நாம் எப்போதும் விதிகளைக்கட்டிக்கொண்டே சாவதில்லை.அழுத்தம் அதிகமாகும்போது விதிகளை உடைத்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்வோம்.அரசியல்-பொருளாதாரத் தளங்களில் நடப்பதுபோல இந்த உடைப்பு அவ்வளவு எளிதில் பண்பாட்டுத்தளத்தில் நடந்து விடுவதில்லை.

ஒரு சின்ன விசயம்.

முற்போக்கு மேடைகளில் பிரபலமாகப் பாடப்படும் ஒருசில பாடல்கள் பற்றி ஒரு முகாமில் காரசாரமான விவாதம் வந்தது.ஒரு பாட்டு ‘ஆசைப்பட்ட எல்லாத்தியும் காசிருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா ?’ என்கிற பாட்டு.இன்னொன்று ‘ஆத்தா உன் சேலை’ என்கிற பாடல்.இத்தகைய பாடல்களை மக்கள் விரும்பிக்கேட்கிறார்கள்.மேடையில் நம் கலைஞர்கள் பாடும்போது கூட்டத்தில் பலர் கண் கலங்கி அழுது விடுவதும் உண்டு.அவரவர் அம்மா ஞாபகம் வந்து ஏக்கப்பெருமூச்சு விடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.மக்கள் அடிக்கடி விரும்பிக்கேட்கும் பாடலாக சீட்டுக்கொடுத்துப் பாடச்சொல்வதும் உண்டு- இப்பாடல்களை.

ஏற்கனவே அம்மா என்றால் அன்பு-பாசம்-தியாகம் –கண்ணீர் என்று சமூக மனதில் பதிவாகியிருக்கிற- அம்மாக்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று இச்சமூகம் எதிர்பார்க்கிறதோ –என்ன விதிக்கப் பட்டிருக்கிறதோ அதையே கண்ணீரும் கம்பலையுமாக சோகத்தில் தோய்த்தெடுத்து இப்பாடல்கள் காற்றில் பரவ விடுகின்றன.முற்போக்காளர்கள் அதே தியாக அம்மாவையா மக்களின் முன்னால் கொண்டுபோய் நிறுத்த வேண்டும்? நமக்கு இந்த அன்பு பாசம் தியாகம் போன்ற மூடாக்குகளிலிருந்து விடுபட்ட –கார்க்கியின் தாய் நாவலில் வரும் அம்மா போல -கேப்டன் லட்சுமி போல -அன்னை லட்சுமி போல -ஜானகி அம்மா போல-பாப்பா அம்மா போல-ஒரு அம்மாவை அல்லவா நாம் முன்னுதாரணமாக மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்று விவாதம் சென்றது.

பாட்டை எழுதிய கவிஞர் இந்த விமர்சனப்பார்வையை ஏற்றுக்கொண்டு அப்படி ஒரு புதிய பாடலை தானே எழுதித்தருவதாக ஒப்புக்கொண்டார்.ஆனால் கூட்டம் முடிந்ததும் ஒரு தோழர் தனியாக வந்து சன்னமான குரலில் சொன்னார் “ இப்படி எல்லாத்தியும் ராவடியாக பெண்விடுதலைப் பார்வையிலேயே பார்த்துக்கொண்டு போனால் உலகத்தில் அன்பு பாசம் தாயின் அரவணைப்பு என்று மனித வாழ்க்கைக்கு அழகும் அர்த்தமும் தந்து கொண்டிருக்கிற எல்லாமே காலியாகி விடாதா?வாழ்க்கை என்பது எல்லாம் சேர்ந்ததல்லவா? வெறும் பிரச்னைகளின் தொகுப்பல்லவே வாழ்க்கை.ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் ஆத்தாவின் மடியில் நமக்கு ஒரு ஆறுதல் இருக்கிறதல்லவா?அதையும் பறித்துக்கொள்வது நியாயமா? என்று தயக்கத்துடன் ஆனால் ஒரு உள்ளார்ந்த கோபத்துடன் அவர் கேட்டார்.

பெண்களுக்காக யார் எப்போது எங்கே லேசாகக் குரல் எழுப்பினாலும் இப்படி லட்சம் சந்தேகங்களும் கேள்விகளும் வந்துவிடும் என்பதை நாம் அறிவோம்.

தாயின் அரவணைப்பை நாம் மறுக்கவில்லை.அதில் உயிரியல்ரீதியான அம்சம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறது.தாய் மட்டுமே தியாகியாவது அயோக்கியத்தனமான ஏற்பாடு அல்லவா என்பதுதான் நாம் எழுப்பும் ஒரே கேள்வி.தாய்க்குத் தியாகம் செய்கிற ஒரு டூட்டி மட்டுமே கொடுப்பது எந்த உலகத்து நியாயம் என்பதுதான் நம் கேள்வி.இருக்கும் கதகதப்பை – அனுபவித்துக்கொண்டிருக்கும் அரவணைப்பை இழந்துவிடச்சொல்கிறார்களே என்கிற ஆண் மனப்பதட்டமே இத்தகைய கேள்விகளுக்குப் பின்னால் துடித்துக்கொண்டிருக்கிறது.ஏன் பதட்டப்பட வேண்டும் ?.இப்போதிருக்கும் இந்த ஒருதலைப்பட்சமான ஏற்பாட்டுக்கு மாற்றாக அரவணைப்பு-அன்பு-பாசம்-என்பதற்கான புதிய வரையறுப்புகளை உருவாக்குவோம்.அப்புதிய சூழல் இன்னும் ஜனநாயகமான ஒரு காதலை- கதகதப்பை வழங்கும்.நாம் இன்னும் நல்ல ஒரு வாழ்வை நோக்கிச் செல்லலாம்.

எத்தனையோ விசயங்களில் முற்போக்கானவர்களாக இருக்கும் நண்பர்கள் தாய்மை-பெண்மை என்கிற இடம் வரும்போது மட்டும் வெறும் உணர்ச்சி மனிதர்களாக வரலாற்றுணர்வற்றுப் பின் தங்கி விடுகிறார்கள்.மிகப்பெரிய உடைப்பு உணர்வு மட்டத்திலும் அறிவுத்தளத்திலும் நடக்க வேண்டியிருக்கிறது. அதுவரைக்கும் செத்தாலும் என்னைப் பொத்த ஆத்தாவின் சேலை வேண்டும் என்று அழுது மூக்கைச் சிந்திக்கொண்டிருப்போம் என்று சொல்வது நியாயமா?

இதில் இன்னொரு கொடுமையும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டைக் கேட்டு அம்மாக்களுக்காக நாலு சொட்டுக் கண்ணீர் விட்டு ரெண்டு சிலிண்டர் பெருமூச்சும் விட்டுக்கொள்வதில் நம் குற்ற உணர்வுகள் கரைந்து போய் மீண்டும் வழக்கமான ஆண்களாக நிம்மதியாக வலம் வந்து விடுகிறோம். நாம் சுத்திகரிக்கப்பட்டு விடுகிறோம்.சடங்குகள் எப்படி உளவியல்ரீதியாக இயங்கி குற்ற உணர்வுகளில் இருந்து நம்மை விடுவிக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலக் கலை இங்கே அப்பணியைச் செய்துவிடுகிறது.அன்பின் பேராலும் பாசத்தின் பேராலும்தான் ஆணாதிக்கம் நம் சமூகத்தில் அமலாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொண்டால் எந்த அளவுக்கு சமரசமற்ற இடைவிடாத போரை நாம் நமக்கு உள்ளேயும் சமூகத்திலும் நடத்த வேண்டியிருக்கிறது என்பதை உணரலாம்.

பெண்மை என்கிற இட்டுக்கட்டப்பட்ட கற்பனையின் மீது நாம் பல கனவுகளையும் கடமைகளையும் ஏற்றி வைத்துக்கொண்டே போகிறோம்.உயிரியல் ரீதியான ஆண் பெண் வேறுபாடுகளைத் தவிர மற்ற எல்லாம் பண்பாடு என்ற பெயரில் இச்சமூகம் நம் தலையில் திணித்தவை என்னும்போது மாற்றுப்பாதையை நாம் சமைக்க வேண்டும்.

சென்ற மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி அலைவரிசைகளில் பலருடைய கருத்து உதிர்ப்புகள் ஒளிபரப்பப்பட்டன.ஒரு திரைப்பட இயக்குநர் கூறினார் “ பெண்களுக்கு சமத்துவம் சென்னை போன்ற மாநகரங்களில் கிடைத்துவிட்டது.down south இல் கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்கவில்லை “ (ஈவ் டீசிங்கில் இளம் பெண்கள் செத்தது எல்லாமே பெருநகரங்களில்தான் என்பது காலப்போக்கில் எளிதாக மறந்துபோகிறது)

வேறு பலருக்கு முன்னே மாதிரி இல்லே இப்போ பெண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க என்கிற கருத்து இருக்கிறது.

எதெல்லாம் பெண் அடிமைத்தனம் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தயார் செய்து – தீண்டாமைக்குச் செய்வது போல-சர்வே எடுத்து-பரவலாக மக்களிடம் கொண்டு சென்று பெண்நிலை குறித்துப் பெரும் கல்விபுகட்டல் நடைபெற வேண்டியுள்ளது.

(அடுத்த இதழில் முடியும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com