Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
சிறுகதை
தாய்மை

மொசைக்குமார்

'அவசரத்திற்கு பக்கத்திலேயே யாருகிட்டயாச்சும் கைமாத்து வாங்க முடியுமா?'

யோசித்ததில் ஒன்றும் புலப்படவில்லை! உள் பாக்கெட்டினுள் மறைந்திருந்த நானூறு ரூபாயை நினைக்கையில் அது திருப்திக்கு எட்டாத தூரத்திலிருந்தது.

'இந்தா பாருப்பா... கையகல எடத்தயும் நாலு மாட்டையும் நம்பி ரூவா தர்றது பெருசில்ல.... ஏதோ நீ இம்புட்டு தூரம் சொல்லி இடம் பட்டாவ தர்றதுனால ரூவாயத்தாரேன்.... சொன்னது மாதிரி நடந்துக்க.... மொதலு லேட்டானாலும் மாசமானா வட்டி கரெக்டா வந்துறணுமப்பா...."

'ரோசப்பட்டு போடா மசுருன்னுட்டு போனா நல்ல நாளு அதுவுமா மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் நல்லது பொல்லது ஒன்னுஞ்செய்ய முடியாது.... கல்யாணத்துக்கு போடறேன்னு சொன்ன மோதிரத்தையும், கம்மலையும் இன்னமு போடாததுனால வர்றப்ப போறப்பயெல்லாம் சங்கடமாயிருக்குது... இந்த லட்சணத்தில் தீபாவளிக்கு ஒண்ணுஞ்செய்யலைன்னா சம்பந்தகாரப்பய வீட்ல காறித்துப்பிடுவாங்களே...'

"என்னாப்பா ஒசுன?".

ஒருவழியாக வடக்குத் தெருக்காரரிடம் பதினைந்தாயிரம் வாங்கித் தான் செலவு செய்ய நேர்ந்தது.

தற்போது பொங்கலும், போனநிலையில் மூன்று மாத வட்டியைக் கூடத் தர முடியாமல் அழுத பாடாயிருக்கிறது.

ஒரு பால் மாடும், ஒரு வெற்று மாடும், இரண்டு கன்றுகளும் அந்தக் கூரை வேய்ந்த குறுகிய கொட்டகையின் நிழலிலே குடியிருந்தன. மென்று மிச்சம் போட்ட தட்டைகளும், வைக்கோலும் சிதறிக் கிடந்தன. குளுதானிக்குப் பக்கத்தில் கட்டிப்போட்டிருந்த கன்றில் ஒன்று ஆயாசமாயும் மற்றொன்று தடபுடாவெனக் குதித்துக் கொண்டும் இருந்தது.

சின்ன வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்த மாரியப்பன் கீழே குனிந்து வீட்டுச் சுவரில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்தான். 'பால் பீச்சுகிற நேரமாச்சு'.

கொட்டத்திற்கென்று ஓரங்கட்டியிருந்த தேய்ந்த விரைப்பான கட்டைமாறை எடுத்து சாணியைக் கூட்டி அள்ளி குவியலில் சேர்த்தான். சிதறிய தீவனங்களை மீண்டும் காடிக்குள் போட்டான். அந்த வெற்றுப் பசுவை வலது கையை மடக்கி முழங்கையால் நங்கென அதன் முதுகில் ஒரு குத்துக் குத்திக் கழற்றி வெளியே கட்டினான்.

'டிடி.டிடிங்'....டிடி..டிடிங்' என விதவிதமாய் பெல்லை அழுத்தி ஒலித்தபடி பால் பீய்ச்சுகிற 'பரமன்' கேன்களுடன் சைக்கிளில் வந்து 'சரக்கென' பிரேக் போட்டு இறங்கினான். வேகமாய் ஒருவிசை பின் வந்து முன்சென்று ஹேன்பாரில் தொங்கிய கேன்கள் ஆடின.

"என்னாய்யா இம்புட்டு நேரமா...?"

"வெரசா வந்தா பாலூற வேண்டாமாங்ற... லேட்டா வந்தா இம்புட்டு நேரமாங்ற..." பேசிக் கொண்டே கன்றை அவிழ்த்து விட்டான். அது ஆவல் கொண்டு ஓடிச் சென்று தாய்மடியைக் கொஞ்சி சப்புக் கொட்டியது. மீண்டும் இழுத்துக் கட்டினான்.

குடிசை இடுக்கில் தொங்கிய விளக்கெண்ணெய் டப்பாவில் விரல் நனைத்து சல்லடைக் கேனை தொடையிடுக்கில் வைத்து மாட்டு மடியின் கீழே குத்தவைத்து காம்புகளை வருட ஆரம்பித்தான். 'சர்..ர்க்...சர்...ர்க்..'கென பால் நுரையுடன் மிதந்து பொங்கியது.

லிட்டரில் அளந்து பண்ணைக் கேனில் ஊற்றிவிட்டு தொட்டித் தண்ணீரில் கையைக் கழுவினான். மீண்டும் கன்றுக் குட்டியை அவிழ்த்துவிட அது தாய்மடியில் மிச்ச மீதியை ராவியது.

"அக்கா, வீட்டுக்குள்ளயா இருக்கு..."

"ப்ச்..ம்...."

"என்னாப்பா ஒரு மாதிரியா தெரியுற....?"

"பண்ணக்காரு வீட்ல இருக்காரா?"

"ம்.... அ...வ...ரு மெட்ராஸ் போயி நாலு நாளாச்சுல்ல. என்னா வெசயம்?"

"ஒண்ணுமில்ல... ஒரு ரெண்டாயிரம் தேவப்படுது... அதா... குடுத்தாருன்னா பால்ல கழிச்சுகிறலாம்னு...."

"என்னாப்பா நீ பேசுறது... ஒனக்கே நல்லாருக்கா... ஏற்கெனவே வாங்குன அட்வான்ஸவே நீ இன்னமு கழிக்கல... என்னைக்கு ரூவா தேவ?"

"நாளக்கி"

"வேற எங்கிட்டாச்சு ஏற்பாடு பண்ணு.. பண்ணக்காரு மொதல்ல மாதிரி இல்லப்பா... இருக்கற சம்சாரிகள பூரா கை கழுவிட்டுருக்காரு. பண்ணாப்பாலு தொழில விட்டுட்டு பாக்கெட் பால் ஏஜண்டு எடுக்கணும்னு பேசிட்ருக்காரப்பா... வந்தாலுஞ்செரமந்தே....."

மாரியப்பனுக்கு இதயம் வேகமாய் அடிக்க குளுதானி விளிம்பில் உட்கார்ந்து முகத்தை மண்நோக்கினான். ஒரு லட்சம் ரூபாயைப் புரட்டி மகளுக்குத்திருமணம் நடத்தியவனுக்கு தற்போது இரண்டாயிரம் ரூபாயைச் சமாளிப்பது பெரும் துயரமாயிருக்கிறது.

"ஓங்கிட்ட ஆயிரமோ, ஐநூறோ எதுவும் இருக்குமாய்யா....? இருந்தா குடேன்... ஒரு பத்து நாள்ல கரெக்ட் பண்ணீர்றேன்...."

"போப்பாஅங்கிட்டு...இப்போதைக்கி அஞ்சு பத்து கேட்டா கூட குடுக்கிற நெலமைல நான் இல்ல... அப்படி என்னய்யா ஒனக்கு ரூபாய்க்கி அம்புட்டு அவசரம்?"

"வெளிய சொன்னா கேவலம்ய்யா.. அந்த வடக்குத் தெருவுகாரெங்கிட்ட வட்டிக்கு வாங்கி நாய் படாத பாடா இருக்குது. மூணு மாசமா வட்டியும் குடுக்க முடியல... மொதலு குடுக்க முடியல...நேத்தெல்லா மானம் போய்ருச்சு.. சட்டைய புடிக்காத கொறையா சவுண்ட் விட்டுட்டானப்பா..... இருந்தாலும் அந்தாளு இப்பிடிப் பேசிருக்கக் கூடாது.... அதான் இப்போதைக்கு வட்டியக்குடுத்தாவது சமாளிக்காம்னு பாக்குறேன்."

"நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல... அந்தாளு மோசமானவன். அவன்கிட்ட வட்டிக்கி வாங்கி எத்தன பேரு சீரழியிறாங்கே...."

மாரியப்பனுக்கு மேலும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

"சரி என்னாதே செய்யப் போற?"

திரும்ப வீட்டுக்குள் நோட்டம் விட்ட மாரியப்பன் ஏதோ மனதைத் திடப்படுத்திக் கொண்டாற்போல் "அடுத்து மேற்கதானப்பா போற...? போனைன்னா சுப்பன பாத்து வரச் சொல்லு..."

"யாரு கறிபோடுறானே அந்த சுப்பனா?1"

"ஆமா தொலஞ்சு இந்த சனியன் இருந்தென்னா.. செத்தென்னா... தெண்டத்துக்கா... அனத அவெங்கிட்ட கறிக்கி போட்றலாம்னு நெனைக்கிறேன். அப்புடியாச்சும் ரூவா தேறட்டும்ய்யா...." கொட்டத்துக்கு வெளியே கட்டிப்போட்டிருந்த வெற்றுப் பசுமாட்டைப் பார்த்துச் சொன்னான்.

"அதுவுஞ் சரித்தே... வெட்டியா வளத்து என்னத்த சாதிக்கப் போற...." என பரமன் சொல்லும் போதே வீட்டுக்குள்ளிருந்து மாரியப்பன் மனைவி ஆங்காரமாய் வந்தாள்.

"மாட்டத் தொட்டீக எழவுதே விழுகும் பாத்துக்கங்க... ஒனக்குத் தெறமில்லைனா இன்னைக்கி மாட்ட கரிக்கி விடுவ... நாளைக்கு என்னய எவெங்கிட்டயாவது போகச் சொல்லுவ..." -கத்தினாள்.

வேகமாய் ஓடிப்போய் பொண்டாட்டியின் தலைமுடியைச் சுற்றிப்பிடித்து முதுகில் முழங்கையால் நங்கென குத்தினான். எத்தினான். ஓங்கித்தள்ளி விட்டான்.

"யேய்... யேய்.... விடப்பா.. சண்ட போடுற வயசா இது..... பக்கத்துல நாலு பேரு பாத்துச் சிரிக்கப் போறாங்கையா...." பரமன் விலக்கினான்.

பொண்டாட்டி மூச்சிரைக்க நின்று முரட்டுப் பார்வை பார்த்தாள். மாரியப்பனைக் காட்டிலும் வலுவான உடம்பு அவளுக்கு. இருப்பினும், 'தொட்டு தாலி கட்டின புருஷன் திருப்பி அடிக்க அவள் மனசு இடம் கொடுக்கவில்லை!

"என்னா பேச்சு பேசுறா பாருய்யா... தெறமில்லாமத்தே இத்தன வருஷமா ஏங்கூட குடும்பம் நடத்துனாளா... வராத கஷ்டம் வந்தா தலய அடமானம் வச்சாவது சமாளிச்சுதாண்டி ஆகணும் அன்னைக்கி ஒம் மகளுக்கு.... மாப்ளைக்கு ஒன்னய ஒட்டி விட்டா எல்லாம் பாத்தே.. இன்னக்கி அந்த கடனுக்கு தானடி அழுகுறது... நாளைக்கு வடக்குத் தெருவுக்காரன் வருவான் பதில் சொல்லணும்..."

"எதுக்கப்பா தேவையில்லாத சண்ட..... மாட்ட கறிக்கி விட வேண்டாம்னு சொன்னா சரின்னு கேட்டுட்டு வேற ஏற்பாட்ட பாக்க வேண்டியது தானப்பா...."

"என்னப்பா நீயு அவளோட சேந்து அர்த்தமில்லாம பேசுற... அந்த மாட்ட ஆறேழுதடவ செனைக்குப் போட்டு ஒன்னுமில்லாமப்போச்சு... மலடுன்னு டாக்டரே சொல்லிட்டான். இனியு அத வச்சு யாரப்பா மேய்க்கிறது... எந்த ஏவாரி அத வாங்குறதுக்கு வரிசைல வந்து நிக்குறான்."

பரமன் கட்டை பஞ்சாயத்து தலைவராய் நின்றான்.

"ஆமாக்கா அவரு சொல்றதுலயு என்னா தப்பிருக்குது...? மலடுதான...!"

"நீ பேசாம போப்பா.. மாட்ட கைவைக்கட்டும் அப்புறம் நான் பாத்துக்கறே..." சொல்லிவிட்டு வேகமாய் வீட்டினுள்ளே நுழைந்தாள்.

"காலைல இருந்து இவகூட இதே லச்சதே.. நீ சுப்பன பாத்து வரச் சொல்லுய்யா.. ஆகுறது ஆகட்டும்...."

"நாலு வீட்ல பால் பீச்சவேண்டியிருக்கு.. நாங்கௌம்புறேன்யா...." கேனை மாட்டிக் கொண்டு பரமன் சைக்கிளை அழுத்தினான்.

"மறந்துராம பாத்து வரச் சொல்லுயோவ்..."

மாரியப்பன் தீவனம் அள்ளிப்போட்டு விட்டு 'சின்னகுளம்' வரைக்கும் போய்விட்டான். இனி வீடு வர லேட்டாகும்.

'மாடு வாங்க விற்க...' என சக்கை போடு போட்டு தொழில் பண்ணிக் கொண்டிருந்த மாரியப்பனுக்கு நான்கு வருடத்திற்கு முன்பு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. 'கானம்' நோய் வந்து மூன்று மாடுகள் செத்துப்போக, இருந்த ஒன்றுக்கு வைத்தியம் பார்த்தே செலவழிந்து தொய்ந்து போனான்.

அதற்குப் பிறகு மாடு வாங்கி விற்குமளவுக்கு கையிலே இருப்பு இல்லை. வியாபாரிகளுக்கு தரகராக செயல்பட்டான். பிறகு மனைவியின் ஆலோசனைப்படி இரண்டு 'பொட்டை' கன்றுகளை மட்டும வாங்கி வீட்டிலே வளர்க்கலானான். 'வளர்த்து விற்றால் லாபம் கிடைக்கும் என்ற நோக்கில்..

வளர்த்தான். கொம்புகள் முளைத்து கன்றுகள் மாடாகின. இன விருத்தியில் ஈடுபடுத்தினான்.

ஒரு மாடு இருமுறை கன்றுகளை ஈன்று தாய்மையடைந்தது. மற்றொன்று ஆறேழுமுறை சினைக்கு போட்டும் பலனளிக்கவில்லை."ஏப்பா மாரி ஆராய்ச்சி கீராய்ச்சி எதுவும் பன்றியா!..... செனப்பிடிக்கலைன்னா விட்ருப்பா.. மலட்டு மாடப்போயி.... " மாட்டாஸ்பத்திரி டாக்டர் கூட நக்கலடித்தார்.

அன்றிலிருந்து அதன் மேலிருந்த அக்கறையை நிறுத்திவிட்டான். தவிடு இல்லாத தண்ணீர், புல்லுக்கு பதிலாக வைக்கோல், கோபம் வந்தால் அடி என எல்லா பாடுகளையும் அனுபவித்தது அந்த மாடு.

"ஒனக்கு அது என்னா பாவமா பண்ணுச்சு... மத்ததுகளுக்கு போடுறத அதுக்கும் போட வேண்டியதுதான...."

கடைசியாக மூன்று மாதத்திற்கு முன் கூட சினை ஊசி போட்டான். நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.

மாரியப்பனிடம் சண்டையிட்டுப் பலனில்லை. அவன் முடிவில் உறுதியாக இருந்தான்.

மறுநாள் காலையில் சுப்பன் வந்தான். "ஐயா...."

"ஏ வாப்பா.. ஒன்னயத்தே எதிர்பார்த்துட்ருந்தேன். நேத்தே வரச் சொன்னனுலப்பா....!" பரவசமாய் வந்தான்.

ஊதிக் கொண்டிருந்த பீடியை கீழே நசுக்கினான் சுப்பன். "பால் பீச்சுற பரமன் சொன்னாப்ல எந்த மாடுங்க..."

பாவனைக்கு மாட்டைத் தட்டிப் பார்த்த சுப்பன் "எலும்புதான் தேறும் போல்ருக்கே" என்றான். 'ஒருநாள் வியாபாரத்தையும் தாண்டி கறி நிற்கும் -என மனசு சொன்னது.

"சும்மா நொர நாட்டியம் பண்ணாதப்பா... நல்ல ரேட்டா சொல்லி கழட்டீட்டுபோ.. சனியன வளத்து என்னத்த கிழிக்கப் போறேன்...."

முடிவாக ஆயிரத்து அறுநூறு வட்டிப் பணத்துக்கு சரியாப்போச்சு. இதுவே பால் மாடாக இருந்தால் பத்தாயிரம் வரைக்கும் போயிருக்கும். 'வளர்த்த கூலி கூட மிஞ்சலை.'

ஐநூறு ரூபாயை நீட்டிவிட்டு மீதித் தொகையை கறியப்போட்ட பிறகு மதியம் வந்து தருவதாகச் சொன்னான்.

"ஆமாய்யா மறந்துறாத வட்டிக்காசு குடுக்கணும்..."

பசுமாடு தெருவுக்குப் போனது. கடைக்குப்n பானது.. கறியானது. அந்த கறி பல ஹோட்டல்களுக்கும் வீடுகளுக்கும் போனது.

"அடி மாட்டுக்கு போட்டுட்டைல.. இந்தப் பாவம் ஒன்னய சும்மா விடாதுய்யா... இன்னுங்கொஞ்சநாளு பாத்துட்டு பெறகு அந்த வாயில்லா சீவன வெளியேத்திருக்கலாம்... நா அம்புட்டு சொல்லியும் நீ கேக்கலைல....?"

"நா என்னாடி செய்யிறது.. என்னா தரித்திரமோ தெரியல கொஞ்சநாளா குடும்பத்த இந்த ஆட்டு ஆட்டுது... வட்டிக்காரனுக்கு பதில் சொல்லணும்ல...." சமாதானமாய் இறங்கும் பாவனையில் சொன்னான்.

"என்னமோ செய்யி...." -அவள் எழுந்து அடுப்படிக்குப் போனாள்.

'மணி ரெண்டாகப் போகுது இன்னமும் சுப்பன காணோமே.... எங்கிட்டுந்தண்ணிய போட்டுட்டுப் படுத்துட்டானா -வட்டிக்காரன் வேற வந்துருவானே மனம் அங்கலாய்த்தது.

பணத்தை வாங்குவதற்கு மேற்குத் தெரு கறிக்கடைக்குப் போவதற்கும் மனசில்லை! "ஏஞ்சாமீ... நீங்களா மாட்ட கறிக்கி போட்டீக"ன்னு யாராவது கேட்டால் சங்கடமாக இருக்கும்.

பால் மாட்டைக் கழட்டி குளுதானியில் தண்ணி காட்டிக் கொண்டிருந்த போதுதான் 'சுப்பன்' வந்தான்.

"ஐயா...."

"வாப்பா.. என்னா இம்புட்டு நேரம்?" "குளுதானியில் தவிடு கலக்கிய கையை உதறிவிட்டு எழுந்தான்.

வாயில் வெற்றிலை மென்றவன் 'புர்...ரீ...ர்ச்'சென காடி சாக்கடையில் சாரை துப்பிவிட்டு 'அன்டிராயர்' பாக்கெட்டில் ஒதுக்கிய பணத்தை எடுத்து எண்ணிக் கொடுத்தான் சுப்பன்.

"சரி வாரனுங்க" என போக எத்தனித்தவன் திடுமென ஆவலாய் "ம்..... சொல்ல மறந்துட்டேன்ங்கய்யா..." எனத் திரும்பினான். உள்ளிருந்த அவளும் எதார்த்தமாக வெளியே வந்தாள்.

"மாட்ட செனைக்கி எதுவும் போட்ருந்தீகளா...?"

அவனது கேள்வியிலேயே அவன் பாதி அதிர்ந்தான்.

"ம்... போட்டதுதே ஒண்ணும் ஆகலையே..."

"அவசரப்பட்டுட்டீகளேய்யா.. அது வயித்துல மூணுமாசத்து கருவு இருந்துருக்கு... அடிச்சு அறுத்தப் பெறகு பாக்கவும் எனக்கே பாவமாப் போச்சு...."



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com