Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
சிறுகதை
கனவுகள்...

- அ.லினட்

ஜில்லென்று வீசும் காலைத் தென்றலை சுவாசிக்க, மெல்ல உதித்தது சூரியன். சாலை எங்கும் அடர்த்தியான பனி. பனித் திரையைக் கிழித்துக் கொண்டு வந்த ஆட்டோ "அன்பு" இல்லத்தின் வாசலில் வந்துநின்றது. தன் ஹேண்ட் பேக்கிலிருந்து பணத்தைக் கொடுத்த வண்ணம் இறங்கினாள் வேதிகா. கல்லூரி விடுதியிலேயே தங்கிப்படிக்கும் அவளுக்கு, அவ்வப்போது வீட்டிற்கு வருவது, பாலைவனத்தில் பெய்யும் மழையைப் போன்று இருந்தது. அதுவும் இந்த முறை அவள் முகத்தில் ஒரு தனிப்பொலிவு தெரிந்தது.

ஆட்டோ சத்தைத்தைக் கேட்டவுடன், வீட்டின் கதவு திறக்கப்பட்டது. தன் பையை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வேதிகாவுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. வேதிகாவின் சித்தி, அத்தை அனைவரும் ஆவலோடு அவளை வரவேற்றனர். வேதிகா சிரித்துக் கொண்டே அம்மாவிடம் கேட்டாள்: "என்னம்மா அதிசயம் இது? அத்தை, எப்பவும் பிஸியாக இருக்கிற டாக்டர் சித்தி எல்லாரும் வந்திருக்காங்க? என்ன விசேஷம்?"

"என்னடி எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிற? நாளைக்கு நம்ம எல்லாரும் செந்தில்முருகன் ஜூவல்லர்ஸ்ல உனக்குக் கல்யாண நகை வாங்கப் போறோம்ல?" என்றாள் அம்மா.

'ஐயோ அம்மா! இதுக்குத்தான் என்னை சொன்னீங்களா? போனவாரம் தானே என்னை வந்து பார்த்திட்டுப் போனாங்க? அதுக்குள்ள கல்யாண நகையா?"

"உன்னைப்போய் பிடிக்கலனு சொல்ல முடியுமா? நீ கிடைக்க அந்த அருணா.. அருளா?... கொடுத்து வச்சிருக்கணும்டீ"வேதிகாவின் தோளில் பிரியமாய்க் கை வைத்தபடி பெருமிதமாய்ச் சொன்னாள் சித்தி.

"போதும் சித்தி போதும்! இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி கடைசியா ரணகளம் ஆயிடும். மாப்பிளை வீட்டிலதான் போன் பண்ணிச் சொல்றேனு சொன்னாங்களே. அது வரைக்கும் அமைதியா இருங்க. அப்புறம்... அவர் பெயர் அருள். அருண் இல்லை சித்தி" என்று உதட்டோரம் ஒரு புன்னகையுடன் சொல்லிவிட்டுத்தன் அறைக்குள் நுழைந்தாள்.

"வேதிகாவுக்கு அந்தப் பையனைப் பார்த்த உடனே பிடிச்சிருச்சு. அதுவும் இன்னைக்கு அவள் முகத்தில் ஒரு தனி சந்தோஷமே தெரியுது. எப்படியாவது இந்தச் சம்பந்தமே நல்லபடியா முடிஞ்சறணும். போன வாரம் அவளைப் பார்க்க வந்தபோதே எல்லோருக்கும் வேதிகாவை பிடிச்சிருச்சு. இருந்தாலும், போன் பண்ணறோமுனு சும்மா பார்மாலிட்டக்குத்தான் சொன்னாங்க. சரி நாளைக்கு காலையில சீக்கிரமா நகைக் கடைக்குப் போகணும்" - சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள் வேதிகாவின் அம்மா.

நேரம் கழிந்தது. ஆனால் தன் அறைக்குள் சென்ற வேதிகாவுக்கோ, தன் புத்தகத்துக்குள் வைத்திருந்த அருளின் போட்டோவைப் பார்க்க, பார்க்க நொடிகள் கூட யுகங்கள் போலத் தெரிந்தது. அவன் இமைக்குள், தன் விழியைத் தொலைத்துக் கொண்டிருந்த வேதிகாவை, ஒரு குரல் தட்டி எழுப்பியது: "டிபன் ரெடி" வேதிகா சீக்கிரம் சாப்பிட வாமா"

செல்லமாய்த் தன் தலையில் தட்டிக் கொண்டு போட்டோவை பைக்குள் வைத்துவிட்டு எழுந்து சென்றாள் வேதிகா.

"எல்லாமே உனக்குப் பிடிச்ச டிஷ்ஷஸ். மிச்சம் வைக்காமல் சாப்பிடு. அப்புறம் இன்னைக்கு எல்லோரும் ஷாப்பிங் போகணும். சீக்கிரம் ரெடி ஆயிடு வேதிகா". - அவசரப் படுத்தினாள் அம்மா.

"போங்கம்மா.. நானே ரெண்டு - மூணு நாள்தான் வீட்டுக்கு வாரேன். இன்னைக்கு முழுவதும் நான் வீட்டில்தான் இருப்பேன். என் ரூம் க்ளீன் பண்ணணும்மா. நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க..."

"ஏய்! க்ளீன் பண்ணணுமா, இல்ல அருள் கூட தனியா பேசப் போறியா?" கிண்டலாகக் கேட்டாள் சித்தி.

"சித்தி போதும்! போதும்! இன்னும் பேசவே ஆரம்பிக்கல. அன்னைக்குப் பொண்ணு பார்த்திட்டு போன பிறகு பேசுனதோடு சரி. அப்புறம் நாங்க பேசவே இல்ல சித்தி."

"சரி ரொம்ப கவலைப்படாதே. இன்னைக்கு கண்டிப்பா பையனோட அம்மா போன் பண்றேன்னு சொன்னாங்க. கண்டிப்பா போன் நம்பர் வாங்கித் தரேன், போதுமா கல்யாணப்பொண்ணு?" - சித்தியுடன் அம்மாவும் சேர்ந்து கொண்டாள்.

"அம்மா நீங்களும் கேலி பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?" என்று அவள் உதடுகள் சொன்னாலும், முகத்தில் ஓர் அச்சம் கலந்த நாணம் தெரிந்தது. அவள் வெட்கத்தை முறிப்பது போல் வெளியில் இடிச் சத்தம் கேட்கத் தொடங்கியது.

"அம்மா மண் வாசனை என்னை இழுக்குது. எனக்குரொம்ப பிடிச்ச மழை வர மாதிரி இருக்கு. நான் மாடியில் கொஞ்ச நேரம் இருந்திட்டு வரேன்மா" என்று சொல்லிவிட்டு மாடிப் படிகளை நோக்கி ஓடினாள். அங்கு மண் வாசனையோடு கலந்து வந்த காற்று, அவள் மனதை மேலும் குளிரச் செய்தது. மெல்ல மெல்லத் திறந்த மேகக் கதவுகள் வழியாக, மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. 'கண்டிப்பா அம்மா இன்னைக்குஅருள் போன் நம்பர் வாங்கும்போது என் நம்பரையும் கொடுப்பாங்க. ஒரு வேளை இன்றைக்கு அருள் பேசினா, நான் என்ன பேசுறது?' என கற்பனையில் மூழ்கியிருந்த வேதிகாவுக்கு தன்மீது விழுந்த மழைத்துளிகள் கூட வானம் பூமிக்குத் தரும் காதல் பரிசு போலத் தோன்றியது. சிறிது நேரம் இந்தக் காதல் மழையில் நனைந்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கத் தொடங்கினாள். படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருக்கும்போதே, அவள் அம்மா அதிர்ந்த குரலில் ஏதோ சொல்லிப் புலம்புவதுபோல் இருந்தது. அதிர்ச்சி அடைந்த வேதிகா அங்கேயே நின்று கவனித்தாள்.

வேதிகா அம்மாவின் அங்கலாய்ப்பான குரல்: "எப்படி நாக்கில் நரம்பில்லாமல் இப்படி பேசுனாங்க அருளோட அம்மா?"

"அப்படி என்னதான் அக்கா சொன்னாங்க.. அவுங்க போன் எப்ப வரும்னு காத்திட்டு இருந்தீங்க. ஆனா போன் பேசுனதுல இருந்து, புலம்பிட்டு இருக்கீங்க?" என்று கேட்கிற சித்தியின் முகத்தில் இருள்.

"வேதிகாவை போட்டோவிலேயே ரொம்பப்பிடிச்சிருக்கு. நிச்சயதார்த்தத்துக்கு முன்னாடி சும்மா பொண்ணுக்கு பூ வச்சிட்டு போறோமுனு சொல்லித்தான் போன வாரம் வந்தாங்க. பங்ஷன் ரொம்ப சிறப்பா இருந்துச்சு. அன்னிக்கு அவ்வளவு தூரம் பேசனவுங்க. இன்னிக்கு கொஞ்சம் கூட தயங்காம என்கிட்டயே, வேதிகாவுக்கு போலியோ அட்டாக் வந்திருக்கானு கேட்கிறாங்க. அவள் கால்களப் பார்த்தால் போலியோ வந்த மாதிரி தெரியுதுனு சொந்தக்காரங்க எல்லாரும் சொன்னாங்களாம்.அதான் கேட்கிறேனு வாய் கூசாம கேட்குறாங்க. அதோட நிறுத்தாம, வேதிகா இன்னும் கொஞ்சம் மெலிவா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமாம். அது மட்டும் இல்லாம, எங்க அருள் நல்ல உயரம். அவன் உயரத்திற்கு, இவ ஒசரம் கம்மிதான்னு என்கிட்டேயே கேட்கிறாங்க. அதனால் எங்களுக்கு ரொம்ப யோசனையாத்தான் இருக்குனு சொன்னாங்க. இதுக்குமேல் என்னால காது கொடுத்து கேட்க முடியல. போனைக் கட் பண்ணிட்டேன்." என்று கொதிப்பும் குமுறலுமாக அம்மா.

அனைத்தையும் படிக்கட்டிலிருந்து கேட்டுக் கொணடிருந்த வேதிகா, தன் இதயம் பாரம் ஆவதை உணர்ந்து அப்படியே படியில் சிறிது நேரம் அமர்ந்தாள்.. அவள் கண்களே அவளைக் காட்டிக் கொடுப்பதற்கு முன் வேகமாய் தன் கண்களைத் துடைத்துவிட்டு சிரித்த முகத்துடன் அம்மாவிடம் வந்தாள். தன்னிடம் என்ன சொல்வது என்று புரியாமல் திணறிக் கொண்டிருந்த அம்மாவைக் கண்ட வேதிகா, "அம்மா நான் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டுதாம்மா இருந்தேன். விட்டுத் தள்ளுங்கமா. இத்தன வருஷமா என் உடம்பில் இவுங்க சொன்ன மாதிரி எந்த ஊனமும் இல்லை. ஆனா இப்ப அவுங்க என்னைப் பத்தி சொன்னதெல்லாம் கேட்கும்போதுதான் என் மனசு ஊனம் ஆயிட்டிச்சுமா" என்ற வேதிகா, சித்தியின் பக்கம் திரும்பினாள்.

"சித்தி- நான்தான் காலையிலேயே சொன்னேன்ல? ரொம்ப உசுப்பேத்தினாக் கடைசியில் ரணகளம் ஆயிடுமினு! நான் சொன்னது சரியாப் போச்சா? சரி, சீக்கிரம் கிளம்புங்க. ஷாப்பிங் போகணுமல்ல? நானும் வரேன். ஷாப்பிங்." என்று ஒரு கேலி தொனிக்கச் சொல்லிவிட்டு வீட்டு வாசல் பக்கம் சென்ற வேதிகா, மழையைக் கவனித்தாலும், மனசுக்குள் கற்பாறைச் சுமை எறிய மாதிரியோர் வலி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com