Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
என்றும் நிறம் மாறாத 'புரட்சி வாழ்த்துக்கள்'!

மாநிற மேனி; சின்னதாகத் தொப்பை வயிறு; உதட்டை மறைத்துப் படர்ந்த நரைபூத்த ம.பொ.சி. மீசை. மீசைக்குள் ஒளிந்திருக்கும் சின்ன புன்னகை; சட்டை போடாத திறந்த மேனி; மார்பிலும் முதுகிலும் இரு நுனிகள் தொங்கிப் புரள, கழுத்தைப் சுற்றிப் போட்டுள்ள வெள்ளை கைத்தறித் துண்டு. வீட்டை விட்டுக் கிளம்பினால் எப்போதும் தோழனாய்த் தோளில் தொற்றிக் கொள்ளும் ஒரு குடை!

படிப்பதற்குப் புத்தகங்களும் பத்திரிகைகளும் வைத்துள்ள மஞ்சள் துணிப்பை - எப்போதும் கையில்! முழங்கால் வரை ஏற்றி மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி.- இதுதான் நம் கருப்பையா பாரதியின் தோற்றம்.

தோழர்களைப் பார்த்ததும் அவர் ஆவலோடு சொல்லுவார் "புரட்சி வாழ்த்துக்கள்!" தோழர்களுக்கு அவர் எப்போதும் சொல்லுகிற வணக்க மொழி "புரட்சிவாழ்த்துக்கள்"தான். 'தோழர் புரட்சி வாழ்த்துக்கள்' என்றால் தமிழகமெங்கும் உள்ள தோழர்கள் அறிவது கருப்பையா பாரதியைத்தான். அந்தச் சொற்றொடர் அவரை அடையாளப்படுத்தும் ஒருகுறியீடாகவே அமைந்துவிட்டது.

சட்டையே அணியாத இவருக்கு இயக்குநர் சேரன்தான் சில நாட்கள் சட்டை போட்டுவிட்டார். ஆட்டோ கிராஃப் படத்தில் வெள்ளை கதர்ச்சட்டை அணிந்து பள்ளி ஆசிரியராக நடித்திருக்கிறார் கருப்பையா பாரதி. அங்கேயும் -படப்பிடிப்புக் களத்திலும் கூட எல்லாருக்கும் இவரின் புரட்சி வாழ்த்துக்கள்தான். அந்தப்படத்தின் கதாநாயகி சினேகாவுக்கு இவர் புரட்சி வாழ்த்துக்கள் சொன்னது மட்டுமல்ல; சினேகாவையும் புரட்சி வாழ்த்துக்கள் சொல்ல வைத்துவிட்டாராம்! எவரிடமும் இவரது வணக்கமொழி மாறுவதில்லை.

அந்த நல்ல அடையாளத்தின் சொந்தக்காரர் கருப்பையா பாரதி தமது வாழ்த்துக்களை நிரந்தரமாய் நிறுத்திக் கொண்டார்! நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மார்ச் 15 அன்று தமது 74 ஆவது வயதில் காலமானார்.

மதுரை மாவட்டம் மேலூர் பக்கம் உள்ள தும்பைப் பட்டியைச் சேர்ந்த விவசாயி கருப்பையா பாரதி. இளமைக் காலத்தில், சிலம்புச் செல்வர் எனப் போற்றப்பட்ட ம.பொ.சிவஞானம் அவர்களின் தமிழரசுக் கழகத்தில் அவரது ஒரு சீடராகத் தமது அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். மகாகவிப் பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, கருப்பையா, கருப்பையா பாரதி ஆனார். தமிழரசுக் கழகத்தில் கூட அவர் இடதுசாரி சிந்தனையுள்ளவர்களிடமே அதிக பழக்கமும் நட்பும் கொண்டிருந்தார். இயல்பாகவே பின்னாளில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் தோழராகத் தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மிகச் சிறந்த தொண்டராகப் பணியாற்றினார். இச்சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவராகவும், பொருளாளராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறார். இச்சங்கத்தின் பல நிகழ்ச்சிகளிலும் மாநில மாநாடுகளிலும் அவரது வருகையைக் காண முடியும்.

மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று அறிவிக்க வேண்டுமெனக் கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் டெல்லியில் நாடாளுமன்றத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் கருப்பையா பாரதி பங்கேற்றார் - எப்போதும் போல் சட்டை அணியாத மேனியுடன்தான்!

தோழர்களிடம் பேசுகிறபோது மனதில் மகிழ்ச்சிப்பொங்கிவிட்டால் தம் தொடையை கையால் ஓங்கி ஒரு தட்டுத் தட்டி அவர் சிரிக்கிற சிரிப்பு அட்டகாசமாக இருக்கும்.

நோயினால் உடல் மிக நலிந்திருந்த நிலையிலும் கூட, தமுஎகச சங்கத்தின்பால் வைத்திருக்கும் அழுத்தமான பற்றின் காரணமாகவும், கருத்துரைகளைக் கேட்க வேண்டும், இளம் தோழர்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தாலும் நிகழ்ச்சிகளுக்கு வந்து விடுவார்.

நீண்ட காலமாகவே அவர் செம்மலர், மார்க்சிஸ்ட் விற்பனையாளராகவும், பணிசெய்தார். மேலூரில் வாசகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இதழ்களை விநியோகிப்பார். நெருப்பாய்க் கொதிக்கிற கோடை வெயிலிலும் கூட காலில் செருப்பு போடாமல் தமது 'தோளனாகிய' குடையின் துணையோடு மாதம் ஒருமுறை மதுரைக்கு - தீக்கதிர் அலுவலத்திற்கு வந்து விடுவார்- பத்திரிகைப் பில்லுக்குப் பணம் செலுத்துவதற்கென்று.

தோழர் கருப்பையா பாரதியின் மனைவி ஆனந்த சரஸ்வதியம்மாள் மேலூர் வட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கத்தில் பணியாற்றி வருகிறார். அவர்களிடையே இருந்த மனம் ஒன்றிய அன்பும் பாசமும் மற்றவர்களுக்கு ஓர் உதாரணம். அவர் தமது மனைவியை தலைவி என்றுதான் சொல்லுவார். தீக்கதிர், செம்மலரிலிருந்து செய்திகளையும் கட்டுரைகளையும் கதைகளையும் - படிக்காத தலைவிக்குப் படித்துச் சொல்லுவார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிகழ்ச்சிகளுக்கும், தமுஎகச கலை - இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் தம் மனைவியை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தாம் பெறும் நல்ல அரசியல் கலை இலக்கிய அறிவைத் தம் துணைவியாரும் பெற வேண்டுமென்பதில் அவருக்கு ஆர்வமும் அக்கறையும் இருந்தது.

இளமைக் காலம் முதலே அவர் சாதிப் பாகுபாடுக்கும் தீண்டாமைக்கும் எதிரானவர். தலித் மக்களை அவர் மிகவும் நேசித்தார். தம் ஊரில் தலித் மக்கள் வீட்டு விசேஷங்களில் பிரியமுடன் பங்கேற்பார். வாலிபக் காலத்தில் தலித் நண்பனை சைக்களில் உட்கார வைத்து ஊருக்குள் வலம் வருவாராம். அது சாதி ஆதிக்கக்கட்டுகளை மீறிய- தீண்டாமைக்கு எதிர்ப்புக் காட்டுகிற செயலாக இருக்கும். இவ்வாறு அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரு முற்போக்காளராகவே வாழ்ந்து மறைந்தார்.

கருப்பையா பாரதியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் தந்தி மூலமாகத் தமது இரங்கலைத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும், தமுஎகச தலைவர்களும் விவசாயிகள் சங்க, விவசாயத் தொழிலாளர் சங்க, வாலிபர் சங்க, சிஐடியு சங்க நிர்வாகிகளும் தோழர்களும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் என ஏராளமானோர் நேரில் சென்று, மறைந்த கருப்பையா பாரதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இனி, தோழர்கள் ஒருவருக்கொருவர் "புரட்சி வாழ்த்துக்கள்" பரிமாறிக் கொள்கிற சந்தர்ப்பங்களில் தோழர் கருப்பையா பாரதி நினைக்கப்படுவார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com