Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
இளமதி பதில்கள்

எம்.தட்சிணாமூர்த்தி, கடலூர்
அகில இந்திய அளவில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் சேர்ந்தாற் போல வரும் பின்னடைவுகள் பற்றி...?
இந்த இரு கட்சிகளுக்கும் உண்மையான நட்பு கட்சிகளே கிடையாது என்பது நிச்சயமாகிப்போனது. "காங்கிரஸ் மூழ்கும் கப்பல்" என்று வருணித்தார் பிரகாஷ் காரத். அந்த உண்மையை பீகாரின் லாலுவும் உள்ளூர உணர்த்தியிருக்கிறார் என்று படுகிறது. பாஜகவை சார்ந்திருந்ததன் வேதனையை பட்நாயக் அனுபவித்திருக்கிறார். சத்தம் போடாமல் கழட்டிவிட்டுவிட்டார். நம்பகமான அணிவகுப்பு இப்போது மூன்றாவது அணியே. அதுவே மெய்யாலும் முதல் அணி. இண்டியன் எக்ஸ்பிரஸ் ஏடும் இதை ஒப்புக் கொண்டுள்ளது. காங்கிரஸ் - பாஜக அல்லாத ஆட்சி மத்தியில் அமையத்தான் போகிறது. அது இந்திய வரலாற்றில் மகத்தான திருப்பமாய் விளங்கும்.

ஆர்.கே.எஸ். சம்சுகனி, டி.மாரியூர்
கவிதைக்கு உண்மை, பொய், கற்பனை - இம்மூன்றில் எது அழகு?
வெறும் உண்மை தட்டையானது. அத்தோடு கற்பனை கலக்கும்போதுதான் அழகு பிறக்கிறது. தங்கத்தோடு செம்பு கலந்தால் ஆபரணம் பிறக்கிறதே அப்படி. உண்மையும் கற்பனையும் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பிகள். எளிதில் கூடிக் கொள்வார்கள். கற்பனையின் தொலைதூர ஆதாரமே உண்மைதான். பொய் அப்படியல்ல. அது உண்மையின் நேர் எதிரி. இரண்டும் ஒன்றுசேராது. 'பார் சிறுத்தலிற் படை பெருத்ததோ, படை பெருத்தலிற் பார் சிறுத்ததோ" எனும் கலிங்கத்துப் பரணியின் ஆகப்பெரிய கற்பனைக்கும் ஆதாரம் சோழரின் பெரும்படை எனும் உண்மையே.

ரிக்கார்டு டான்சுக்கு தடைவிதித்து இருந்தார்கள். ஆனால், ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறதே? இரண்டும் வேறு வேறா?

அந்தக் காலத்தில் இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வரும்போது திமுதிமுவென்று ஒரு கூட்டம் ஓடி வரும். கேட்டால், "ரிக்கார்டு டான்ஸ் பார்த்துக் கொண்டிருந்த போது போலீஸ் வந்துவிட்டதால் ஓடி வருகிறோம்" என்பார்கள். அவ்வளவு கெடுபிடி. இப்போது தொலைக்காட்சிகள் புண்ணியத்தில் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் அது நடக்கிறது. "மானாட மயிலாட" என்பது மாதிரி பெயர்தான் மாறியிருக்கிறது. விஷயம் அதுதான்.

முதலில் திரையில் வந்தது. பிறகு தரைக்கும் வந்துவிட்டது. சிங்கப்பூர், துபாய் என்று நடிகர் நடிகைகளைக் கூட்டிப்போய் ரிக்கார்டு டான்ஸ் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு கல்யாண வீட்டில் இது நடந்தது கண்டு அதிர்ந்து போனேன். மேடையின் ஒரு புறத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்க, மறுபுறத்தில் நடந்த ஆடல்பாடலை இளைஞர் கூட்டம் கனஜோராய் ரசித்தது. பெரியவர்கள் கூச்சத்தில் நெளிந்து கொண்டே ரசித்தார்கள். திருமண மேடைகளைப் பகுத்தறிவுப் பிரச்சார மேடைகளாக மாற்றிக் காட்டியப் பெரியார் இருந்தால் என்ன நினைப்பார்?

பொன்விழி, அன்னூர்
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கலைஞரின் செயல்பாடு குறித்து?
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற சொலவடைக்கு வாழும் உதாரணம்.

எஸ்.வேணுகோபால், வேலூர்
சமீபத்தில் நீங்கள் ரசித்துப் படித்த நூல்...?
பாபர் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதன் பெயர் 'பாபர் நாமா'. அதன் நேர்மை என்னை அசத்தியது. காந்திஜியின் 'சத்திய சோதனை'யை அறிவோம். தனது காமவாழ்வு பற்றிக் கூட ஒளிவுமறைவில்லாமல் எழுதியிருக்கிறார். அது அவரது மனையாளுடனானது. பாபரோ ஒரு சிறு பையன் மீது தனக்கேற்பட்ட காம உணர்வைக் கூட எழுதியிருக்கிறார்."அந்த இளம் வயது முட்டாள்த்தனத்தில், அந்த ஆசையில், வெறியில் வெறும் தலையோடும், வெறும் காலோடும் வீதிகளில், தோட்டங்களில் அலைந்தேன். நானாக விரும்பி அலையவில்லை. போவதா, இருப்பதா என்றும் முடிவு செய்யவில்லை" என்று அப்படியே சித்தரித்திருக்கிறார். அந்தப் பையனின் பெயர் பாபுரி!

த.சத்தியநாராயணன், அயன்புரம்
முதலைக் கண்ணீர், நீலிக்கண்ணீர் என்ன வேறுபாடு?
பேச்சுத் தமிழில் இரண்டும் ஒரே அர்த்தம்தான்.
ஆனால், முன்னது விலங்கின் உடலியல் சார்ந்தது, பின்னது நாட்டுப்புறக்கதை சார்ந்தது. தனது சொந்த உணர்வுகளை வெளிப்படுத்த விலங்குகளைப் பயன்படுத்துகிறான் மனிதன். இந்தப் படியாகவே விலங்குகள் மனிதனைப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? நல்லவேளை அவை விலங்குகள்!

கே.ராஜாங்கம், தென்காசி
பணவீக்கம் மிகவும் குறைந்துவிட்டது. நல்ல செய்திதானே...?
சாப்பிட்டுக் கொண்டே டி.வி.யில் செய்தி பார்த்தேன். பணவீக்கம் 0.44 சதவீதமாக வீழ்ந்துவிட்டது என்றார்கள். சோற்றைப் பிசைந்து வாயில் வைக்கும்போது நினைவுக்கு வந்தது பொன்னி அரிசி விலை கிலோ ரூ.25லிருந்து ரூ.36 ஆகிவிட்டது என்பது. அப்புறம் எப்படி பணவீக்கம் குறைந்தது? அது மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை வைத்து கணக்கிடப்படுவது. சில்லறை விலைகளைக் கொண்டு கணக்கிடப்படுகிற நுகர்வோர் குறியீட்டு எண்களோ இன்னும் எகிறிக் கொண்டுதான் போகிறது. அதிலும் உணவுப்பொருட்களின் விலை வானத்தில் சஞ்சரிக்கிறது. அதுசரி, ஐகேடயவiடிn என்பதை பணவீக்கம் என்கிறார்கள். அடுத்து னநகடயவiடிn வந்தால் தமிழில் என்ன சொல்வது? பணச்சப்பை? அப்போதும் அரிசி- பருப்புவிலை கூடத்தான் செய்யுமோ? போங்கப்பா, நீங்களும் உங்க புள்ளிவிபரமும்!

வி.மருதநாயகம், ராமநாதபுரம்
மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று சொல்லியிருக்கிறாரே விஜயகாந்த்...?
மக்களுக்கு எத்தனை இடங்கள், தெய்வத்துக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கியிருக்கிறாராம்? கேட்டுச் சொல்லுங்கள்!

வி.முருகேசன், தஞ்சாவூர்
உலக நிதி நெருக்கடி இந்தியாவைப் பெரிதும் பாதிக்காததற்கு இங்குள்ள குடும்ப அமைப்பு முறையே காரணம் என்கிறார் குருமூர்த்தி. இது எப்படிச் சரியாகும்?
ஒரு வகையில் இது சரிதான். இந்தியர்களிடம் சேமிப்பு உணர்வு அதிகம் இருப்பதற்கு ஒரு காரணம் குடும்பத்தவர் மீது உள்ள பாசம். அவர்களது எதிர்காலம் கருதி இவர்கள் சேமிக்கிறார்கள். கூடவே இன்னொரு காரணமும் உண்டு. சேமிக்கிற பணத்தை அரசு வங்கிகளில், தபாலாபீசில் போட்டால் பாதுகாப்பு உண்டு என்கிற நம்பிக்கை. சேமிக்கிற பணத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்றால் சேமிக்க மனசு வருமா?
இதுவிஷயத்தில் பொதுத்துறை நிதி நிறுவனங்களின் முக்கியத்துவத்தை ஆர்எஸ்எஸ் காரராகிய குருமூர்த்தி சொல்லமாட்டார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com