Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஏப்ரல் 2009
சிறுகதை
கள்ளகோழி

- குறும்பனை சி.பெர்லின்

அந்தோனியாரு குருசடியில ஒரு காலமும் இல்லாம திருவிழா கூட்டம்போல பயங்கர கூட்டம். ஏதோ பாட்டம் முப்பாட்டான் காலத்துல ஒரு கல்லுகுருசு கடலுல மொதந்து வந்ததாம்..... மொதந்து வந்த குருசடி இருக்குத எடத்துக்கு நேர கரையேறுச்சாம்.

"என்னல இது பெரிய அதிசயமாவல்ல இருக்குது. இவ்ளோ பெரிய்ய்ய கல்லுகுருசு எப்பிடி கடல்ல மொதந்து வந்தது? இது ஆண்டவரு செஞ்ச புதுமையா இருக்கும்?"

"இது நம்ம சவுரியாரு புண்ணியவாளன் கையில வச்சிருந்த குருசு போலயில்ல இருக்குது"

"சொன்னவந்தான் சொன்னான். கேட்டவனுக்கு மதியும் விதியும் இல்லையாக்கும்? சவுரியாரு புண்ணியவாளன் வச்சிருந்த குருசு கைக்கு அடக்கமாவல்ல இருந்தது. இந்த குருசு ரண்டாளு ஒசரத்துல இருக்கு... சொல்லுதான் பாரு வேளம்."

"அல சவுரியாருக்கு ஒடம்பு இன்னும் ஒரு மாசுமறுவு கூட இல்லாம அழியாம இருக்குது தெரியுமா? அவரு கையிலஇருந்த குருசு கொஞ்சங்கொஞ்சமா வளர்ந்து இப்பிடி ஆயிருக்கு தெரியுமா?"

"இருந்தாலும் இருக்கும்... இல்லேண்ணா கல்லு குருசு கடல்ல மொதந்து வருமா?"

நடந்த அதிசயத்த மாறி மாறி பேசும்பலே எல்லாருக்கு மயிரும் நெட்டுக்குத்தா நிண்ணுது. அந்த குருசு கெடந்த எடத்துலயே எல்லாரும் முட்டாங்கால்ல இருந்து பிரார்த்தனை செஞ்சிட்டு....

"பாவவாளிவளான நம்மள தண்டிச்சத்தான் ஆண்டவரு இப்பிடி குருசு வடிவத்துல வந்து காட்சி குடுக்குதாரு. அதுனால சாஸ்டாங்கமா விழுந்து நாக்கால குருசு வரையுவோம்.

ஊரு காரிஸ்தன் எண்ட்றி மொதல்ல முட்டாங்கால்ல இருந்து, பெறவு சாஸ்டாங்கமா கல்லு சிலுவைக்க மேல விழுந்து நாக்கால குருசு வரஞ்சாரு. அவரைத் தொடர்ந்து எல்லாரும்.

"நான் பாவி ஆண்டவரே!

என்ன மன்னிச்சு கொள்ளும்"னு சொல்லி நாக்குனால குருசு வரஞ்சாவு.

"ஆண்டவரு எப்பிடியோ நமக்கு காட்சி குடுக்க நம்ம ஊருல வந்திருக்காரு. அவர அப்பிடியே உட்டுட்டா கடல்ல மொதந்து வேற ஊருக்குப் போவுடுவாரு. அதுனால இந்த குருச வச்சு ஒரு குருசடி கட்டுவோம்" 'என்ட்றி' சொன்னதும் எல்லாரும் தலையாட்டி சம்மதிச்சாவு.

கரமடி கம்பால கொண்டு வந்து குருச கட்டி எல்லாருமா இழுத்தாவு.

"ஓடு.... ஐலசா...

ஓவேலா... ஐலசா...

காணிக்க மாதா

வேண்டிக்கத் தாயே

ஒடு.... மாதா..... மாதா.... மாதா.... மாதா...."

கொஞ்சம் ஒயர வந்தாச்சு....

இன்னும் கொஞ்சங்கூட ஒயர இழுக்குவோம். இப்ப கடலு கொஞ்சங்கொஞ்சமா ஊரத்தேடி வருது....

இப்பிடியே போனா மக்க காலத்துல இந்த குருசடி கடலுக்குள்ள போவுடும். அதுனால இன்னும் கொஞ்சம் கூட ஒயர இழுக்குவோம்"

காரிஸ்தன் சொன்னதும்

"ஓடு... மாதா... மாதா..."

திரும்பவும் இழுத்தாவு.

இப்ப இந்த குருசடி இருக்குத எடத்துல வந்ததும் ஒரு பொடி கூட நவுளாம அப்பிடியே நிக்குது குருசு. படிச்சவித்த பதினாறும் பாத்தாச்சு. ஊருல உள்ள ஆணும் பெண்ணும் எல்லாம் சேந்து இழுத்த பெறவும் கொஞ்சங்கூட அசஞ்சு குடுக்கேல...

"இது ஆண்டவருக்க சித்தமாத்தான் இருக்கும் இந்த எடத்துலயே குருசடி கெட்டுவோம்"

இழுத்து இழுத்து தளந்து போனதால காரிஸ்தன் 'எண்ட்றி' இப்பிடி ஒரு முடிவச் சொன்னாரு.

அப்பிடிக் கட்டுனதுதான் இந்த குருசடி. அதுக்குப் பெறவு கோடி அற்புதம் செஞ்ச புனிதரு யாருன்னு தேடிக் கண்டுபுடுச்சு இந்த அந்தோனியாரு சிறுவத்த வச்சு அந்தோனியாரு குருசடி ஆக்கிட்டாவு.

இந்த அந்தோனியாரு குருசடியில எப்பணாவது ஒரு நாளு ஒண்ணோ ரண்டோ பேயாட்டம் நடக்கும். ஆனா இப்ப ஒருமாசமா தெனமும் பத்து பதினஞ்சு போயாட்டம் நடக்குது.

"டேய்... ம்க்கூம் ... அந்தோனி... ம்க்கூம்

பட்டம் வச்ச.... ம்க்கூம்... அந்தோனி....ம்க்கூம்

ஈட்டிகொண்டு... ம்க்கூம்...குத்தாதேடா....ம்க்கூம்

டேய்... ம்க்கூம்... பரிசுகெட்ட.....ம்க்கூம்....

அந்தோணி....ம்க்கூம்...."

குருசடிய சுத்தி சுத்தி பேயாட்டம் நடக்குது.

சாயங்காலம் ஆவுட்டா எல்லாரும் குருசடியில ஆஜராவோம்.

வண்ணாரமாடன், சொள்ளமாடன், யாக்கி, சொடலமாடன், வாத இப்பிடிப்பட்ட பேயெல்லாம் மனுச ஒடம்புல புகுந்து ஒரே பேயாட்டமும், டான்சும், கூத்துத்துந்தான் நடக்கும்.

"என்ன உடுடா... ம்க்கூம்

டேய் அந்தோனி..ம்க்கூம்

பழுக்கவச்ச...ம்க்கூம்

ஈட்டியால...ம்க்கூம்

குத்தாதேடா....ம்க்கூம்

நான் இவள உட்டுண்டு போவுடுதேன்

ஓ....."

சத்தம் போட்டுட்டே ஓடி பொத்துண்ணு விழும். கொஞ்ச நேரம் கழிச்சு பேயாடுன பொம்பள எழும்பி முடிய வாரி கட்டிண்டு, வெலகிக் கெடக்குத துணிய சரிபண்ணிண்டு ஒண்ணுமே நடக்காதது போல ஒழும்பிப் போவும்.

"அவளவிட்டுட்டு பேய் ஓடிரிச்சு. நாளைக்கு இதே நேரத்துல திரும்பவும் பேய் வந்து ஆடும்" இப்பிடி சொல்லிட்டே அண்ணைக்கு உள்ள 'ஷோ' முடிஞ்சதா நெனைச்சு கூட்டம் கலையும்.

செலநேரம் அஞ்சாறு பேய் ஒரே நேரத்துல குருசடியச் சுத்தி ஆடும்.

"டேய்... நொண்டிக்காலா....ம்க்கூம்

அந்தோனி... ம்க்கூம்

என்னோட....ம்க்கூம்

என் அண்ணனும்....ம்க்கூம்

வந்திருக்காண்டா...ம்க்கூம்

ஒன்னோட...ம்க்கூம்

ஈட்டியால...ம்க்கூம்

ஒண்ணும் செய்ய....ம்க்கூம்

முடியாதடா... ம்க்கூம்

"டேய்....நொண்டிக்காலா...ம்க்கூம்

அந்தோனி...ம்க்கூம்"

பேய்கள் கூட்டு சேந்து ஒறவுமொற சொல்லி ஆடும். நெறயநேரம் ஆடியாடி ஒடம்பு தளர்ந்துபோன... ஆடும்தடிய மாத்துவாங்க.. தளர்ந்துபோன பெண்ணை மாத்திண்டு அவுங்களுப்பதிலா வேற ஒரு பெண்ணை கொண்டு வருவாங்க... இப்ப அந்த பேய் புதுசா வந்த பெண்ணுமேல இறங்கி பேயாடும்.

அந்த காலத்துல பேயாட்டம் பாக்குறதுதான் எங்களோட மொத்த பொழுதுபோக்கு. பள்ளிக்கொடம் முடிஞ்சுவந்து சாப்பிட்டுட்டு அதுக்குப்பெறவு கொஞ்ச நேரம் வெளையாடிட்டு ஆறுமணி ஆன ஒடன குருசடிக்கு வந்திடுவோம். பேயாட்டம் பாக்க... இப்பிடி பேயாட்டம் பாக்க வந்ததுல நெய இளந்தாரிகளுக்கும், கொமரிகளுக்கும் காதல் உண்டாகி கல்யாணம் நடந்திருக்கு. எல்லாரும் பேயாட்டத்தப் பாத்திட்டு நிக்க. இந்த எளவட்டங்க அவங்க பரிவாடிவள நடத்துவாங்க....

அப்பவே எனக்கு பேயாட்டத்துல எல்லாம் நம்பிக்க இல்ல... அத வெளியில சொன்னா எல்லாவரும் என்ன அஞ்ஞானியா பாக்குதாவு.

"அல... இவன் யாரு... பைபுளுல ஆண்டவரு பேயோட்டுதாரில்லை... எத்தர எடத்துல பேயோட்டுத வசனம் இருக்கு தெரியுமா? அப்பதான் பாரேன் ராத்திரி எந்த பொம்பள வெளியில வந்தாலும், 'கொட்டேத்தா' பேயாவந்து புடுச்சு ஆட்டுதத... இன்னாபாரு எத்தர பேரு இந்த குருசடியில பேய் ஆடுதாவுண்ணு"

அப்ப 'கொட்டேத்தா' பேயா வ;நது ஏழுமணிக்கு மேல வெளியில வாற பொம்பளைங்கமேல சாஞ்சு பேயாடுத சீசன். தூக்கு மாட்டிண்டு செத்துபோன 'கொட்டேத்தா' பேயா வந்து எல்லாவரையும் பேடிகாட்டுதாம். ஊருமுளுக்க ஒரே பொக்காரமா கெடக்கு. எனக்கு அம்மைக்க மேலயும் 'கொட்டேத்தா' சாஞ்சிருக்கு, அப்பப்ப அம்மையும் பேயாடும். அம்மைக்க உச்சி முடிய கொத்தா கையில சுத்தி புடிச்சி எனக்க

அப்பா, "ம்பேய்... எனக்கப் பெண்டாடிய உட்டுண்டி போறயா இல்லையா... நான் ஒனக்க பெண்டாட்டியாம்ப... இங்க வந்து கெடக்குத... சீ...தேவுடியா.. மரியாத மானமா இவள உட்டுண்டு போவுடுகா... இல்லேண்ணா மந்திரவாதிய கூட்டிண்டு வந்து ஒன்ன மரத்தோட கெட்டி வச்சு ஆணி ஆடுச்சுவேன்."

அம்மக்க முடிய அப்பா இப்பிடி சிக்கிபுடுச்சு இழுக்கும்ப அம்மைக்கு எப்பிடி வேதன இருக்கும்? எனக்கு கண்ணீரு மலங்கும். அண்ணையில இருந்துதான் அம்மைக்கு மண்டவெட்டு. தலைக்கு காயத்திருமேனியும் தேச்சிட்டு, காயசர்வாங்கத்த குடிச்சிண்டு இருக்காவு.

இப்ப குருசடியில ஆடுத பேயில பாதிபேய் 'கெட்டேத்தா' தான். இந்த அநியாயத்த எங்க போய் சொல்ல....

"உண்மையிலேயே பேயுண்ணு ஒண்ணு உண்டா?" பலமுறை நான் கேட்டுப் பார்த்தேன். அது அது அவுங்கவுங்க மனப்பேடித்தானே தவிர பேயுண்ணு ஒண்ணு இல்லவே இல்லேண்ணுதான் எனக்குப் படுது. காத்துல ஆடுத ஓலையையும், கயித்துல காயபோட்டிருக்குத வேஷ்டியையும் பேயுண்ணு நெனச்சு பேடிச்ச ஆளுவ நெறய உண்டு. ஆனா அவுங்க பேடிய சொல்லாம அதப் பேயுண்ணு சொல்லி எல்லாரையும் நம்ப வச்சிண்டு இருக்காங்க. இதெல்லாம் பேயில்ல வெறும் மனப்பேடிதான்னு எப்பிடியாவது இந்த மக்களுக்கு புரிய வச்சணுமே!

நாங்க நாலஞ்சுபேரு சேந்து திட்டம் போட்டோம். ஒரு ஐடியா கெடச்சது. குருசடியில பேயாடுதவங்களுக்க கூட்டத்துல படங்காட்டிய செட்டப் பண்ணி எறக்கி உட்டோம். படங்காட்டியும் குருசடி மைதானத்துல எறங்கி

டேய்.... ம்க்கூம் அந்தோனி ....ம்க்கூம்

உண்டகண்ணா.... ம்க்கூம்

டேய்...ம்க்கூம்...மிக்கேலு....ம்க்கூம்

வந்தேண்டா....ம்க்கூம்.....வண்ணார மாடன்.....ம்க்கூம்

என்னைய.....ம்க்கூம்......என்ன செய்வ....ம்க்கூம்

குருசடிய சுத்திச் சுத்தி ஓடுதான். ஏற்கெனவே பேயாடுண்டு நிக்க ஒரு பொண்ணு

வந்திருக்கான்...ம்க்கூம்... என் அண்ணன்...ம்க்கூம்

வண்ணாரமாடன்....ம்க்கூம்...நெனச்சகாரியம்....ம்க்கூம்

முடிச்சாம...ம்க்கூம்...உடமாண்டோம்...ம்க்கூம்

இப்பிடி பேசிண்டு படங்காட்டிக்க தோளுல கைபோட்டு ஆடுது. என்னடா இது போலிபேயுண்ணு தெரியாமலா ஒரிஜினல் பேய் போய் சொந்தங்கொண்டாடுது. அப்ப எது ஒரிஜினல் பேய்? கொஞ்ச நேரம் பேயாட்டம் போட்ட படங்காட்சி அதுக்குப் பெறவு சிரிப்பை அடக்க முடியாம வெளியே வந்துட்டான்.

"இப்பணாவது பேயில்லைண்ணு நம்புதீங்களா?" நான் சொன்னா யாரு கேக்க?

"லேய்... தலைதெறிச்ச பிருதுவளே! ஒங்களுக்கு எதுலயெல்லாம் வெளையாடுததுண்ணு ஒரு கணக்கில்லையா? பேயாட்டத்துலயா ஒங்களுக்கு வெளயாட்டு... வாதஅடிச்சு ரத்தங்கக்கி செத்துபோவுடுவீ...மரியாதையா மன்னிப்பு கேட்டுண்ணு போவுடுங்க பாத்துக்க..."

அப்பவும் அவுங்க நம்பிக்கைய நாங்க கிண்டல் பண்ணுததா நெனச்சிண்டு கிழவிமாரெல்லாம் எங்கள வெரட்டுனாங்க.

"இதுக்குமேல இவுங்கள திருத்தவே முடியாது.... பேய் உண்டு ஆத்தாண்ணு சொல்லிண்டு போவுடுவோம். அவுங்க என்ன பாடும் பட்டுண்டு போட்டு"

'படங்காட்டி' சொன்னான்

ஆனா பேயுண்ணு ஒண்ணு இல்லேண்ணு நிரூபிச்சேலேண்ணா எனக்கு நிம்மதியா ஒறக்கம் வராது. இருந்தாலும் 'கொட்டேத்தா' பேயா வந்து எல்லாரையும் ஆட்டி வச்சுதே! அத எப்பிடி பொய்யுண்ணு சொல்லுதது. என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியேல! இண்ணைக்கு ராத்திரி அதையும் பாத்திட்டா என்ன?

"நான் பந்திரண்டு மணிக்கு 'கொட்டேத்தா'ளுக்க வீட்டுகிட்ட போவுண்டு வந்தேன். அப்பிடி எந்த பேயும் என்ன புடுச்சேல" இப்பிடி எல்லாகிருட்டயும் சொல்லணும்னு நெனச்சுட்டே ராத்திரி பந்திரண்டு மணிபோல ஒறங்கி கெடந்த எடத்தல இருந்து எழும்பி நடந்தேன்.

நடுராத்திரி.... எங்க பார்த்தாலும் ஒரே இருட்டு... ஊருல எந்த எடத்துலயும் வெளிச்சம் இல்ல, பவர் கட்டா இருக்கும்போல... எல்லா வீட்டுக் கதவும் ரெம்ப பெலமா அடச்சி பூட்டியிருந்தது. ஒலகம் இன்னா அழிஞ்சிண்டுவாறண்ணு சொன்னாக் கூட எந்த மனுசரும் கதவத் தெறக்கமாண்டாவு. அந்த அளவு பேய பத்தின பேடி தெருவுல ஒரு ஈகாக்கா கூட இல்ல.

'லொள்...லொள்... லொள்...'

தெருவுக்க ஒரு அத்தத்துல கூட்டமான நாய்வளோட குரைப்புச் சத்தம் மட்டும் கேக்குது. காத்து குளுந்து அடிச்சு உள்ளங்கால்ல இருந்து குளுத்தி ஒடம்புல ஏறி ஒடம்பு நடங்குது. இருட்ட கண்டா அப்பிடி ஒரு பேடி. அதுக்க எடையில நாய் குரைப்பு

நாய் குரைப்புச் சத்தம் நெருங்கி நெருங்கி எனக்க கிட்ட வந்திண்டிருக்கு.

"பேயோட உருவம் நாய்வளுக்குத் தெரியும்னு பெரியவங்க சொல்லுவாங்களே! நெசந்தானா?"

எனக்க காbல்லாம் பயங்கர வெறையல்

அப்ப பாத்து ஒரு வாடகாத்து பெலமா அடிச்சுது.

தெங்குல உள்ள காஞ்ச ஓலையெல்லாம் சலசலசல-ண்ணும், பச்ச ஓலையெல்லாம் சளசளசள-ண்ணும் சத்தம்போட்டு எனக்க பேடிய அதிகமாக்குது. அந்த வாட காத்தோட சேந்து மல்லிகைப்பூ வாசன எனக்க மூக்கத் தொளச்சிட்டு போவுது. நல்ல வாசனத்தான் ஆனா இந்த நேரத்துல இது என்ன வாசன? ஏழு மணிக்கே எல்லாவரும் வீடுவள பூட்டிண்டு ஒறங்கியாச்சு... கொல நடந்தாலும் தெரியாத ஒரு நெலமயில மல்லிப்பூ மணம் எங்கேருந்து வருது?

'சட்'டுண்ணு நான் திரும்பிப் பார்த்தேன். கொஞ்ச தூரத்துல எனக்க கண்ணு ஓடிப்போன எடத்துல கட்டுக்கரிகறுப்பா ஒரு உருவம். அந்த இருட்டையும் மீறுன கறுப்பான அந்த உருவம். ஆடி அசஞ்சு வாறதுபோல தெரியுது. என்னை அறியாமலே எனக்க நிக்கர் வழியா மோத்திரம் சாடுது. காலெல்லாம் ஓடி நனையுது மோத்திரம்.

"ஆமா பேய்தானே இது! நான் நம்பாம இவ்வளவு நாளா என்னத்தையோ சொல்லிண்டிருந்தேனே! எனக்கு படிச்சு தந்த வாத்தியாரும் பயிற்சி நடத்துனவங்களும் பின்ன பேயில்லைண்ணு சொன்னாவு. இன்னா நான் நேருலயே பாத்தாச்சு. எல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்"

எனக்க காலுவெறயலுல நான் பூமிக்குமேல் நிக்குதது போலயே தெரியேல. அந்த உருவம் என்னைத்தேடிதான் அசஞ்சு வருது. எங்க போறது நான். தலை சுத்துண்டு வந்தது.

"நாளைக்கு நானும் அந்தோணியாரு குருசடியில பேயாட வேண்டியதுதான்"

அப்பிடியே பக்கத்துல இருந்த வளவுக்குப் பின்னால இருந்த பச்சகல்லு சொவத்துல சாஞ்சேன். அப்பவும் எனக்க கண்ணு அந்த கறுப்பு உருவத்த வளைவு செத்தக்க ஓட்டவழியா பாக்குது. நான் நிக்குதத கவனிச்சாம அந்த உருவம் என்னைத் தாண்டி அசஞ்சு அசஞ்சு போவுது.

"பேய்வளுக்கு காலு இருக்காதுண்ணு சொல்லுவாவே! இதுக்கு காலு இருக்கா?"

நெலம் வரை ஒரே கறுப்பாதான் இருக்கு. எந்த வெளிச்சமும் இல்லாததால எந்த மனுச உறுப்புமே தெரியேல... என்னதான் செய்யுது இந்த உருவம்? என்னத்தாண்டிப் போயாச்சே! என்ன நடக்குதுண்ணு பார்ப்போம்னு அசஞ்சுபோற அந்த உருவத்தையே பாத்தேன். அந்த உருவம் நேரே மத்தேசிக்க வீட்டத்தேடிப் போவுது. மத்தேசிக்க வீட்டு கதவுக்க கிட்ட போனதும் அந்தக் கதவு தானா தெறக்குது. அந்த உருவம் உள்ள போனதும் கதவு தானா அடையுது. அந்தஉருவம் போன வீடுதான் 'கொட்டேத்தா'ளுக்க வீடு.

'கொட்டேத்தா' துக்குமாட்டிண்டு செத்துபோனாண்ணு ஊருல எல்லாரும் பேசினாலும், அவளுக்க மாப்பிள்ள மத்தேசிதான் அடிச்சுகொல்லி தூக்குல தொங்க உட்டாண்ணும் ஒரு பேச்சு இருக்கு.

"அப்பிடிண்ணா இதுதான் 'கொட்டேத்தா'ளுக்க ஆவியா? என்னால நம்பவும் முடியேல... நம்பாம இருக்கவும் முடியேல... கண்ட கண்ணுல கம்பெடுத்து குத்தவா?

என்ன செய்யணுமுண்ணு தெரியாம அப்பிடியே செவுருல சாஞ்சு நிக்குதேன். காலு எளும்பேல.. அப்ப போய் உள்ளது உண்மைதான்.

நான் ஒரு அரமணிநேரம் அப்பிடியே நிண்ணிருக்குவேன். திடீர்னு எனக்க கண்ணு மத்தேசிக்க வீட்டுக் கதவுல ஓடிப்போச்சு. கதவு தானா தெறக்குது. அந்த உருவம் வெளியே வருது. வீட்டுக்குள்ள சிம்மிணி வெளக்கு வெளிச்சத்துல வேற ஒரு உருவம் அசையுதது தெரியுது. அது ஒரு ஆம்பள உருவம். கதவு பூட்டுது. அந்த நேரம் பாத்து கரண்டு வந்ததுபோல போஸ்டுதூணுல இருந்த டியூப் லைட்டு மின்னி மின்னி எரியுது. இத எதிர்பாக்காத அந்தஉருவம் அவசர அவசரமா அந்த கறுப்பு பொதப்ப எடுத்து தலைவழியா மூடுது.

"அட....இது அந்த றோணிக்கமல்ல. ஆமா றோணிக்கம் தான். இந்த மனுசியப் பாத்தா நான் பேயுண்ணு பேடிச்சேன்?" எனக்கு அந்த உருவம் தெளிவா தெரிஞ்சது.

றோணிக்கத்துக்க மாப்பிள்ள கடலடியில செத்துபோய் இப்பதான் ஒரு வருசம் முடிஞ்சிருக்கு. அப்பிடிண்ணா இந்த நேரத்துல கறுப்பு பொதப்பையும் மூடிண்டு இந்த மனுசி 'கொட்டேத்தா'ளுக்கு மாப்பிள்ள மத்தேசிக்க வீட்டுக்குப் போறதுக்கு காரணம்?

இத வச்சே பேயெல்லாம் இல்ல... கொட்டேத்தாள போல வந்தது றோணிக்கம்தாண்ணு ஊருல சொல்லலாம். ஊரும் அஞ்சு நிமிசத்துல கண்ணு, காது, மூக்கெல்லாம் வச்சு ஊரு முழுக்க பறசாத்திடும். ஆனா

இப்பதான் கொஞ்ச நாளா ஊருல சண்ட சச்சரவுண்ணு எதுவுமில்லாம நிம்மதியா இருக்கு. ஒரு கலவரம் உண்டாக்கி பணம்பிரிச்சு வயிறு வளத்துத கூட்டத்துக்கு ஊரடி நடத்த இதுவே ஒரு காரணமாயிட்டா?

"எனக்க அக்காளுக்க மேல வீணா பழிபோட்டு எங்க மானத்த வாங்குததுக்கு அவனுவ செஞ்ச சதியாகும் இது"ன்னு இந்த கோஷ்டியும்,

"ஓ...வ் மாப்பிள்ள செத்து ஒரு வருஷம் கூட ஆவேல. அதுக்குள்ள ஊரல் எடுத்துப்போய் கள்ள மாப்பிள்ள புடுச்ச நடக்குதா அவனுக்க அக்கா"ண்ணு அந்த கோஷ்டியும் மாறி மாறி சொல்லி ஊருல ஒரு கலவரத்த உண்டாக்கிடும்.

ஒரு தெளிவோட நான் எனக்க எடுத்துல போய் ஒறங்கிட்டேன். அது எனக்கு ஒரு நிம்மதியான ஒறக்கம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com