தொழில்நுட்பம்
வேண்டும்போது வேண்டிய அளவு வாசனை...
ஜெருசெலேம் ஹிப்ரூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூக்களில் வாசனையை கூட்ட, குறைக்க, புதிதாக உண்டாக்க, இல்லாமல் செய்ய மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வழிவகைகளை கண்டுபிடித்துள்ளனர்.
உயிரினங்களின் வாழ்க்கையில் வாசனைக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. வாசனையைப் பார்த்துத்தான் நாம் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள் இவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கைத் துணையைக்கூட வாசனையைப் பார்த்துத்தான் உயிரினங்கள் தேர்ந்தெடுக்கின்றன. மூக்கினால் அறிவது மட்டும் வாசனை அல்ல. நாவினால் அறிவதும் வாசனைதான் என்கிறார் பேராசிரியர் அலெக்ஸாண்டர் வெயின்ஸ்டீன். உணவை தரப்படுத்துவதில் வாசனைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
தாவரங்களிலும், பூக்களிலும் உள்ள வாசனைதான் மகரந்தச் சேர்க்கையை ஊக்கப்படுத்துகிறது. பூக்களின் வாசனை பல காரணிகளைச் சார்ந்தது. குறிப்பிட்ட நாளின் நேரம், காலநிலை, பூவின் வயது, பூவின் இனம் இவற்றையெல்லாம் சார்ந்ததுதான் வாசனை. ஒரு பூவின் வாசனையை பத்துமடங்கு அதிகரித்து இரவு பகல் எல்லா நேரமும் வாசனை வீசுமாறு செய்யமுடியும் என்று பேராசிரியர் வெயின்ஸ்டீன் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து பயிரிடப்பட்ட பூச்செடிகளில் வாசனை குறைந்து விடுகிறதாம். புதிய தொழில் நுட்பம் மூலம் வாசனையின் பகுதிகளுக்கு புத்துணர்வு ஊட்டமுடியும் என்கிறார் விஞ்ஞானிகள். உலகிலேயே பேராசிரியர் வெய்ன்ஸ்டீனின் ஆராய்ச்சிக்கூடம் மட்டுமே பூக்களின் வாசனையையும் நிறத்தையும் மாற்றியமைக்கும் ஆய்வுகளைச் செய்து வருகிறது. பூக்களில் மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தி வடிவம், நிறம், வாசனை இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் இந்த ஆய்வுக்கூடம் ஈடுபட்டுவருகிறது.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2008/10/081007102847.htm
- மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|