தொழில்நுட்பம்
வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு
இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது.
ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறைகிறது. இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருக்குமானால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள். எப்படி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு? காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு!
ஹைட்ரஜன் பெராக்சைடை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் டிரை அசிடோன் டிரை பெராக்சைடு (TATP) வெடிகுண்டுகளைத்தான் பயங்கரவாதிகள் இப்போது பயன்படுத்தி வருகின்றார்கள்.
"சார், என்னுடைய டூத்பேஸ்ட்டில்கூட பெராக்ஸைடு சேர்க்கப்பட்டிருக்கிறது. என்னையும் விமானத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிடுவார்களா?" என்றொரு குரல் கேட்கிறது. இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் "சில்"லு புத்திசாலித்தனமானதாம். வெடிகுண்டில் சேர்க்கப்பட்டுள்ள பெராக்ஸைடை மட்டும்தான் அடையாளம் காட்டுமாம்.
http://www.sciencedaily.com/videos/2008/0704-sniffing_out_bombs.htm
- மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|