Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruScienceEcology
சுற்றுச்சூழல்

'அப்பன் குதிருக்குள் இல்லை'
பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
ஆதி

Genetic engineering 'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை மறைக்கும் வகையில் களப் பரிசோதனை விவரங்களை வெளியிட அரசு நிறுவனம் மறுத்துள்ளது. 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வது போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை வெளியிட மறுப்பது அவற்றின் நம்பகத்தன்மையை பெருமளவு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பசுமைஅமைதி (கிரீன்பீஸ்) அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநந்தன், நாட்டில் நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு இந்த மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்தியாவில் கத்தரிக்காய், கடுகு, நெல் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு களப் பரிசாதனைகள் நடத்தப்பட்டுள்ளன. களப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடங்கள், அந்தப் பயிர்களில் உள்ள நச்சுத்தன்மை, ஒவ்வாமைத்தன்மை அளவீடு தொடர்பான பரிசோதனைகள் மற்றும் மரபணு மாற்றங்கள் மறுஆய்வுக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி குறிப்பு போன்றவற்றை அளிக்குமாறு திவ்யா கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு எதிராக, மகாராஷ்டிரா கலப்பின விதை கழக நிறுவனம், மத்திய தகவல் கமிஷனுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் 2007 டிசம்பரில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீதிமன்றம் வர்த்தக நலனுக்கே முக்கியத்துவம் தந்து வருகிறது. வர்த்தக நலன்கள்-பொது சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் இடையில், எல்லா நேரமும் வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்கள் மறைக்கப்படும் ஆபத்து அதிகரித்து இருக்கிறது. மருந்து உற்பத்தி தொழிலில் இதுதான் பெருமளவு நடந்து வருகிறது. வர்த்தக நலன் பாதிக்கப்பட்டுவிடும் என்ற போர்வையில் களப் பரிசோதனை முடிவுகளை மருந்து நிறுவனங்கள் மறைக்கின்றன. ஆனால் பொது சுகாதாரமே முக்கியம் என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உண்மைத் தகவல்களை வெளியிட வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இந்த பரிசோதனை முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையில் எதிர்வினை ஆற்றுகின்றன என்பதையும், மருந்துகள் எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்வதும் பொது சுகாதாரத்துக்கு மிக முக்கியம். மனிதர்களிடம் அவை எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய, களப் பரிசோதனை விவரங்கள் முக்கிய ஆதாரம். ஆனால் இந்த விவரங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. மறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. நிறுவனத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'டிரிப்ஸ்' எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் 'வர்த்தக அறிவுசார் சொத்து உரிமை ஒப்பந்தத்தை' மீறி தகவல்களை வெளியிட முடியாது என்று மாஹிகோ நிறுவனம் கூறியுள்ளது.

''இந்தத் தகவல்களுக்கு ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டு விட்டதால், அவை வெளியிடப்படுவது வர்த்தக நலன்களை பாதிக்கும் என்று கூறுவது அப்பட்டமான பொய்'' என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன். உணவு பாதுகாப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்றுதான் திவ்யாவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது எந்த வகையிலும் வர்த்தக நலன்களை பாதிக்காது. பொது நலன் அடிப்படையில் மேற்கண்டது போன்ற தகவல்களை வெளியிடலாம் என்று தகவல் உரிமைச் சட்டம், டிரிப்ஸ் ஆகிய இரண்டின் கீழும் வழிவகை உண்டு. பொது சுகாதாரத்தை பாதிக்கக் கூடிய அனைத்தையும் பொது ஆய்வுக்கு உட்படுத்துவதே சரி என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதற்கு எடுத்துக்கட்டாக அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தை அவர்கள் கூறுகிறார்கள்.

மனஅழுத்த பிரச்சினைக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் போர்சாக் என்ற மருந்து தொடர்பான களப் பரிசோதனை விவரங்கள், அது அளிக்கும் பலனை வெட்டவெளிச்சமாக்கியது. அதன் பிறகுதான் அரசு விதிமுறைகளில் உள்ள ஓட்டைகள் தெரிய வந்தன. போர்சாக் மருந்துக்கு நடத்தப்பட்ட களப் பரிசோதனை விவரங்களை ஆராய்ந்தபோது, அந்த மருந்து நோயாளிகளுக்கு போதுமான அளவு பலனை அளிப்பதில்லை என்று தெரியவந்தது.

இதேபோல ஜெர்மனியில் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வியாபார ரகசியம் என்று மான்சான்டோ நிறுவனம் மறைத்தது. அந்தத் தகவல்களை கிரீன்பீஸ் கோரிக்கை விடுத்து பெற்றது. பரிசோதனை விவரங்களின் அடிப்படையில், மக்காச்சோளத்தை சாப்பிட்ட எலிகளின் கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்பது தெரிய வந்தது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்விளைவுகள் பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள மத்திய அரசு அதைப் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. பொதுமக்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச தகவல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவின் இணையதளத்தில் உள்ள சொற்ப தகவல்கள் மட்டுமே.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இந்தியாவில் ஏற்கெனவே ரகசியமாக அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அதைச் செய்தது மான்சான்டோ நிறுவனம். சாதாரண விதைகளுடன், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மறைமுகமாக கலந்து கொடுத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மாஹிகோ நிறுவனம் சர்ச்சைக்குரிய மான்சான்டோ பன்னாட்டு பயிர் நிறுவனத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளது. திவ்யாவின் மனு 2006 பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எந்த பதிலும் தரப்படவில்லை. தாமதப்படுத்துவதன் மூலம் களப் பரிசோதனைகள் தொடர்பான தகவலை மறைக்க மாஹிகோ முயற்சிக்கிறது. பொது சுகாதாரம் - வர்த்தக நலன்களுக்கு இடையிலான போரில் இந்த மனு முன்னுதாரணமாக திகழும். இதுவரை வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து தகவலை வெளிக் கொண்டுவர வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com