இலங்கை இனப்படுகொலை - உலகளாவிய கேள்விகளும் உள்ளூர் ஊடகங்களும்
பவா.சமத்துவன்
27.04.2009
காலை 6-00 மணி
சென்னை கடற்கரையில் காலை நடைபயிற்சியை முடிக்கும் நேரம். நண்பர் ஒருவர் அவசரமாக குறுஞ்செய்தியொன்றை அனுப்பியிருந்தார். நம்புவதற்கு வியப்பாக இருந்தது. எதிரில் இருந்த காவல்துறை இயக்குநர் அலுவலகத்தைப் பார்த்தேன். வழக்கத்தை விட சற்றே பரபரப்பாகத்தான் இருந்தது. ஒரே நேரத்தில் நாலைந்து வாகனங்கள் சாலைக்குள் விரைந்தன. இரு சக்கர வாகனத்தில் அண்ணா நினைவிடத்தை நோக்கி விரைந்தேன். வலப்புறம் மகாத்மா சிலை. காந்தியும் இலங்கையை நோக்கி விரைந்து நடைபோடுவது மாதிரி இருந்தது. நினைவிடம் நெருங்கினேன். சைக்கிளை மிதித்தபடி அந்த காலையிலும் விரைந்து வந்து கொண்டிருந்தார் எழுத்தாளரும் தமிழ் உணர்வாளருமான உதயை மூ. வீரையன்.
இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு சதுரஅடியும், செயற்கைக் கோள்களால் மட்டுமே கண்காணிக்கப் படுவதில்லை தொலைக்காட்சி கேமராக்களாலும் கண்காணிக்கப்படுகிறது என்பதற்குச் சாட்சியாய் செயற்கைக்கோள் இணைப்பு வசதி கொண்ட தொலைக்காட்சி வாகனங்கள் இரண்டு மூன்று நின்று கொண்டிருந்தது. ஒரு தீயணைப்பு வண்டியின் அவசரத்தைப் போல, இன்னொரு தொலைக் காட்சியின் ஓ.பி. வேன் எதிர்திசையில் விரைந்து வந்து கொண் டிருந்தது.
கடுமை இல்லாத பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு நாங்கள் இருவரும் உள் நுழைந்தோம். கோபமும் ஏமாற்றமும் முகத்தில் தெரிய ஓரு சிறுமண்டபத்தில் உட்கார்ந்திருந்தார் முதல்வர். அறிவிக்கப்படாத உண்ணாவிரதம். அருகில் தயாநிதி, கனிமொழி, தயாளு அம்மையார், உதவியாளர்கள் சண்மகநாதன் எப்போதும் நிழல்போல் தொடரும் ‘ஆற்காடு’ கூட அப்போது இல்லை. எங்களிருவர் உட்பட பொது மக்கள் பத்துபேர் கூட இல்லை. முதல்வரை மிக நெருங்கிப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு இதுவும் ஒன்று.
எண்பத்தைந்து வயதில் முதுகு வலி அறுவை சிகிச்சை செய்த நிலையில், சக்கர நாற்காலியில் உட்கார்ந் திருந்த முதல்வரின் நடு உடல் பகுதி நாற் காலியுடன் பெல்ட்டால் கட்டப்பட்டிருந்தது. ஈழத்தில் பரிதவிக்கும் தமிழ் இனத்தைப் போலவே அவரின் நிலை யும் பரிதாகமாகத்தான் இருந்தது. ஏனோ, தலைகவிழ்ந்தபடியே நின்றிருந்தார் தயாநிதி. உலகத் தொலைக்காட்சிகளெல்லாம் ஒளிபரப் புகிற ஈழத்தமிழரின் அவலக் காட்சி களை இரண்டு வார காலமாய் ‘சன்’ ஏனோ ஒளிப்பரப்புவதில்லை. மற்ற செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம்பெறுகிற, இனப்படுகொலை பற்றிய செய்திகள் தினகரனில் மட்டும் வேண்டா வெறுப்பாய் எட்டாம் பக்கத்தில் தான் இடம் பெறுகிறது.
தனது இனமானம் குறித்து தயா நிதிக்கு அப்போது வருத்தம் ஏதேனும் வந்ருக்குமோ என எனக்குள் சந்தேகம் எழுந்தது. இனமானம் இல்லாமல் சொந்த விமானங்கள் இருந்தென்ன பயன்.. புற்றீசல்போல பொதுமக்களும் தொண்டர்களும் அண்ணா நினை விடம் நோக்கி விரைந்து வர ஒருமணி நேரத்தில் இங்கு நிலவரம் மாறிவிடும் என்ற நினைப்போடு அங்கிருந்து கிளம்பினோம்.
7.00 மணி
என்னிடம் இருந்த காலை நாளேடுகளை ஆராய்கிறேன். எல்லா ஏடுகளிலும் விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தம் தலைப்பு செய்தியாய் இருக்கிறது. முல்லைத் தீவிலும் வன்னிப்பகுதியிலும் நேற்று நடந்த வான்படைத் தாக்குதலில் சிக்கி சிதறி ஓடும் பெண்களின் படங்களும் காயம் பட்டு கதறும் குழந்தைகளின் படங்களும் முழு பக்கங்களில் இடம் பெற்றிருக்கிறது. பீதியுடனும் பயத்துடனும் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் நம்மை ஆயிரம் கேள்விகள் கேட்கின்றன.
கடந்த ஆறுமாத கால மாய் வாழ்விடம் இழந்து, ஒவ்வொரு இடமாய் இடம்பெயர்ந்து, மாற்றுத் துணி இல்லாமலும், ஒருவேளை சோறு இன்றியும், பசி-பட்டினியுடனும் நோயுடனும், கீழ்வடியும் தாக்குதல் காயங்களுடனும், காடுகளிலும், மலைகளிலும் நதியோரமாகவும் நகர்ந்து கொண்டேயிருக்கும், இந்த மனிதப் பேரவலம் இதற்குமுன் இரண்டாம் உலகப் போரிலும் காண முடியாதது. இரக்கமற்ற இனப்படு கொலையை, குறுந்தகடுகளாக்கி வெளிச்சம் போட்டு காட்டியதால் இலங்கைத் தமிழர்கள் ஆறுபேர் கைதான தகவலும் இன்றைய செய்தித் தாள்களில் வெளியாகியிருக்கிறது.
இனப்படுகொலைக்கு எதிராக, பாரிசில் பேரணி, சுவிட்சர்லாந்தில் முற்றுகை, இங்கிலாந்தில் தொடர் போராட்டம் என மேற்குலகை அதிர வைக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். அட்டன்பரோவின் காந்தி படம் பார்த்து மட்டுமே அகிம்சை போராட் டம் என்ன என்பதை தெரிந்து கொண்ட இன்றைய இங்கிலாந்து மக்கள், தங்கள் நாட்டுப்பாராளுமன்றம் முன் நடந்து வரும் ஒரு அதிசயம் காண வரிசை வரிசையாய் வந்து ஆச்சரியப்படு கிறார்கள். ஒட்டுமொத்தமாய் அனு தாபப் படுகிறார்கள்.
இனப்படுகொலையை நிறுத்தக் கோரி கடந்த இருபது நாட்களாய் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் பரமேஸ்வரன் சுப்பிரமணியம். இருபத் தெட்டே வயதான இந்த இளைஞரை பரிசோதித்த டாக்டர் செல்லப்பா நல்லநாதன் ‘உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டன. உண்ணாவிரத்தை கைவிடா விட்டால் ஒரு வாரத்திற்கு மேல் உயிர் வாழ முடியாது” என கவலை மேலுறக் கூறுகிறார்.
உலகம் வியக்கும் வீரம் - உயிர் தியாகம் மட்டுமல்ல, துரோகமும் நிறைந்தது தான் என சொல்லாமல் சொல்கிறார், புலிகளின் முன்னாள் தளபதி கருணா. “சர்க்கரை வியாதி இருப்பதால் பிரபாகரன் கடல் வழியாக தப்பிக்க முடியாது” இந்த எட்டப்பணு “இரண்டாம் இட்லர்” அமைச் சரவையில் ‘மந்திரி’ போஸ்ட் கிடைத்தி ருக்கிறது. ஈழத்தமிழர் படும் துயரம் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் மூலம் அகில இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
இந்திய அரசின் கருத்தை ஏற்க மறுக்கும், இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற பாரதிய ஜனதாதலைவர் யஷ்வந்த் சின்கா கருத்தும் நாளேடு களில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்கா - இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் அமைச்சர்கள் போரை நிறுத்தச் சொல்லி விடுக்கும் அவசர அறிக்கைகளும் ஆங்காங்கே நாளேடு களில் நிறைந்துள்ளன. தினந்தோறும் நூற்றுக் கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறது கவலையளிக் கிறது” என தனது பங்கிற்கு அறிக்கை வெளியிட்டு வேறு வேலை பார்க்கிறார் ஐ.நா. அவைத் தலைவர் பான்.கி.மூன்.
இலங்கை இனச்சிக்கலுக்கு தனி ஈழம் தான் தீர்வு என அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா நேற்று கூறிய கருத்துக்கு இன்று பதிலளித்திருக்கிறார் கோதாபயாராஜபட்சே. இவன் இரண்டாம் இட்லரின் தம்பி மட்டுமல்ல, இலங்கையின் இராணுவச் செயலாளரும் கூட. “தனி ஈழம் அமைப்பதாக இருந் தால் வேறு இடம் தேடிக் கொள் ளுங்கள்” சரிதான்! சுடுகாடுகளிலும் - பிணக்காடுகளிலும் மனிதர்கள் வாழ முடியாது அல்லவா... இனி, கொழும்பும் கண்டியும் தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஒரு நாடே சுடுகாடானதை அதை தடுக்க முடியாமல் உலகம் பரிதவிப் பதை படங்களாகவும் செய்திகளாகவும் நாளேடுகள் தெரிவிக்கின்றன. எல்லாம் முடிந்தபின், முடியாத வயதில் ஒரு முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதேன்... நடுநிலையாளர்களின் கேள்விக்கு நாளைய வரலாறு பதில் சொல்லுமா...?
8.00 மணி
கலைஞர் காலவரையற்ற உண்ணாவிரதம் என தொலைக்காட்சிகளில் “Flash news” மின்னுகிறது. தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு, தெருவோரம் வந்து உண்ணா விரத்தில் உட்காருகிறார்கள். அமைச் சர்கள் - தொண்டர்கள். முதல்வரின் வேண்டுகோளையும் மீறி ஆங்காங்கே கட்டாய கடையடைப்பு நடைபெறு வதாகவும், சாலை மறியலில் போக்கு வரத்து பாதிப்பு என்றும் சில இடங் களில் சிறு வன்முறை என்றும் தமிழகம் முழுக்க இருந்து தகவல்கள் வரு கின்றன.
9.00 மணி
புதுதில்லி பரபரப்பாகிறது வெளி யுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தேசிய கட்சிகளின் தலைமை அலு வலகங்களிலும் அவசர ஆலோசனை கள், அமைச்சர்கள் மற்றும் அமைச் சரவை செயலர்களால் பலவெளிநாட்டு அமைச்சர்கள் தொடர்பு கொள்ளப் படுகிறார்கள். தி.மு.க. எம்.பிக்கள் இரண்டாம் இட்லர் இருக்கும் இடம் நோக்கி தந்தி அடிக்கிறார்கள். போரை நிறுத்து... போரை நிறுத்து...! நகல்கள் இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பறக்கிறது.
10.00 மணி
கொழும்பு சற்றே பதட்டமடை கிறது. இலங்கை அரசு, அவசர அவசராய் கூட்டப்படுகிறது பாதுகாப்பு கவுன்சில். அதற்கு தலைமை வகிக்கிறார் “இரண்டாம் இட்லர்” ராஜபட்சே. உலகம் முழுக்க ஊடகங்களில் அடுத்து வரும் செய்தி என்ன என எதிர்பார்ப்பு கூடுகிறது.
11.00 மணி
இலண்டன் பி.பி.சி. தொலைக் காட்சி ஒருமணிக்கொரு தரம் வெளியிடும் உலகச் செய்தி அறிக்கையில் தமிழக முதல்வரின் உண்ணாவிரத்தை சேர்க்கிறது. இந்தியாவில் செயல்படும் CNN/IBN Times Now தொலைக் காட்சிகள் உண்ணாவிரத நிகழ்வை நேரலை காட்சிகளாக இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கிறது. Head line Today-NDTV போன்றவை சிறப்பு செய்தி அறிக்கைகளை வெளியிடுகின்றன. பல கட்சித் தலைவர்களின் கருத்துக்களை தொலைக்காட்சிகள் வெளியிடுகின்றன.
“இறையாண்மையுள்ள வேறு ஒருநாட்டில் நடைபெறும் சிக்கலில் இந்தியா ஓரளவிற்குத்தான் தலையிட முடியும்” என்கிறார் இந்திய தேசிய காங்கிரசின் அபிஷேக் சிங்வி. வங்க தேச வரலாறு தெரியாமல் ஒரு வட இந்தியத் தலைவர். “அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படும் போதும் அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெறும் போதும் பக்கத்து நாடு தலையிட முடியும்” என கருத்து தெரிவிக்கின்றனர் கம்யூனிஸ்ட்கள். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இலங்கை பிரச்சினையை வரவிடாமல் தடுத்த சீனாவை எதிர்த்து கருத்து சொல்ல இவர்கள் தயாரில்லை.
யார் சொன்னாலும் அடங்க மறுக்கும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை, தூதரக உறவு முறிவு போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர் பாரதிய ஜனதா தலைவர்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் தமிழக எம்.பி.க்கள் நாற்பது பேரும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்திலிலேயே இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்திருந்தால், இலங்கை பிரச்சினை எப்போதோ முடிந்து போயிருக்கும். ஏதும் செய்யாத இந்த எம்.பி.க் களை நாள்தோறும் உயிர் விடும் அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் மன்னிக்குமா?
12.00 மணி
சென்னை, அண்ணா நினைவிடம், சற்றே சலசலப்பு முக்கியமானவர்களுக்கு வரும் தொலைபேசிகள் அதிகரிக்கின்றன. சோர்வுடன் படுத்திருக்கும் முதல்வர் எழுப்பி உட்கார வைக்கப்படுகிறார். “இலங்கை அரசிடமிருந்து போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளது. அதனால் உண்ணாவிரதம் கைவிடப்படுகிறது”
சற்றே ஆறுதல்தான். ஆறுமணி நேரத்தில் இந்திய இலங்கை அரசுகளை பணிய வைத்து வெற்றிகொள்கிற முதல்வர் அதை அய்ந்தாண்டுகளுக்கு முன்னர் செய்திருக்கலாமே.. ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்து தமிழர்கள் பெற்ற மண், இன்று பறி போயிருக்காதே.. போனது போகட்டும் அய்ந்து மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தால் ஆறாயிரம் உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியுமே.. இப்படி உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் ஓராயிரம் கேள்விகள் எழுவதை யாரால் தடுக்க முடியும்?
பகல் 1.00 மணி
தமிழ் - ஆங்கிலம் என அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் அறிக்கை படிக்கிறார் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். தரை - ஆயுதங்கள் மற்றும் வான் படை தாக்குதலை நிறுத்திக் கொள் வதாக இலங்கை அரசு கூறியிருக்கிறது. அகதிகளாக உள்ள அப்பாவித் தமிழர் களுக்கான நிவாரணப் பணிகளில் இனி இராணுவம் ஈடுபடும் எனவும் இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. “உண்ணாவிரதம் வெற்றி.. வெற்றி” என்ற கூப்பாடு போடுகிறது ‘சன்’னும் கலைஞரும்..
கபட நாடகம் என Flash news போட்டு பதிலடி கொடுக்கிறது ஜெயா. “தேர்தல் நேரத்தில் அறிவிக்கப் பட்டாத ஒரு உண்ணாவிரத்தின் மூலம் தேர்தல் நெறிமுறைகளையே சீர் குலைக்கிறார் கலைஞர் என அதே தொலைக்காட்சியில் கண்டனம் தெரி விக்கிறார் மார்க்சிஸ்ட் வரதராஜன். முந்தைய நாளின் தாக்குதல் காட்சிகளைப் போட்டு மக்களை கதி கலங்க வைக்கிறது ‘மக்கள்’.
“ஆயுதங்களையும் தளவாடங் களையும், ராடர்களையும் அனுப்பிய தோடல்லாமல் அப்பாவித் தமிழர் களை அழிக்க 265 இந்திய இராணுவத் தினரையும் அனுப்பி வைத்தபோது எங்கே போனார் கலைஞர்” என அதே தொலைக்காட்சியில் கொந்தளிக்கிறார் வை.கோ. அதேவேளை, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில் போர் நிறுத் தம் என்பதற்கான Cease Fire என்ற வார்த்தையைத் தேடி இந்திய இலங்கை அமைச்சர்களையும் அதி காரிகளையும் துளைத்தெடுக்கின்றன ஆங்கில செய்தித் தொலைக் காட்சிகள்.
பகல் 2.00 மணி
உண்ணாவிரத நெருக்கடியிலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் இருந்த தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் அனலைக்கொட்டுகிறார் கோதபய இராஜபட்சே. முந்தைய நாள்தான் அமெரிக்காவும், பிரிட்டனும் அவர்கள் வேலையை பார்க்கட்டும். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என கொக்கரித்திருந்தான். இந்தியா கொடுத்த அழுத்தத்தில் எரிச்சலுற்ற (சோ) கோத பய, அப்பாவித் தமிழர்கள் சாகிறார்கள் என அரற்று கிறீர்களே... யார் அப் பாவி? யார் போராளி...? என எப்படி நாங்கள் பிரித் துக் காண்பது? போர் என்றால் சாவு சகஜம் தான் என்றான்.
அதேநேரம், இலங்கையின் நரித்தனத்தை சென்னை பத்திரிக்கை யாளர் மன்றத்தில் அம்பலப் படுத்தினார், இலங்கை பாராளுமன்ற எம்.பி. சிவாஜிலிங்கம். போர் நிறுத்தம் என்று அறிவிப் பதாக சொல்லப்பட்ட இன்று நண்பகல் கூட 1-00 மணிமுதல் 1-30 மணிவரை அம்பலவன் பொக்கனை - புல்லமடுவு பகுதிகளில் விமானம் மூலம் குண்டு வீச்சு நடத்தியது” எனக்கூறி அதிர வைத்தார்.
பிற்பகல் 3.00 மணி
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று “உண்ணாவிரதம்” போர் நிறுத்தம் இவற்றை மனதில் வைத்து பார்வையாளர்களிடம் ஒரு கருத்து கேட்டது. “தீவிரவாதத்தின் மீது இந்தியா இன்னும் இரக்கம் காட்டுகிறதா..” மற்றொரு தொலைக்காட்சி ஆறு சதுரக்கிலோ மீட்டர் பரப்பிற்குள் முடக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கதி இனி என்ன ஆகும்! தலைவர் பிரபாகரன் தப்பிப்பாரா..? கடலில் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை மீறி அது நடக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்வார்களா..? என வரைபடங்களை வைத்துக் கொண்டு அலசி ஆராய்ந்தது.
மாலை 4.00 மணி
“இலங்கை பணிந்தது” உண்ணா விரதம் வெற்றி மாலை நாளிதழ்கள் தலைப்பு செய்தி போட்டது. சோர்வுடன் படுத்திருக்கும் முதல் வரின் படங்கள் பலபேரை சோகம் கவ்வச் செய்தன. “தலைவர் கலைஞரால் மட்டுமே இந்தகைய வெற்றியை சாதிக்க முடி யும்” என தோழமைக்கட்சி தலைவர்கள் அறிக்கைகளில் பெருமிதப்பட்டனர். அதேவேளையில், அங்கே தமிழர் கள் செத்து கொண்டிருந்தபோது, இங்கே இந்தியா தூங்கிக் கொண்டி ருந்தது. எல்லாம் முடிந்து போனபின் உண்ணாவிரதத்தில் என்ன பயன்? என ஆங்கிலத் தொலைக் காட்சிகளில் அங் கலாய்த்தார் பா.ஜ.க.வின் வெங்கய்யா நாயுடு.
மாலை 5-00 மணி
இலங்கைத் தலைநகர் கொழும்பில் CNN/IBN தொலைக் காட்சியின் சிறப்பு செய்தியாளர் வி.கே. சசிக் குமாருக்கு இரண்டாம் இட்லர் இராஜ பட்சே அளித்த சிறப்பு நேர்காணல் வெளிவரத் தொடங்கியது. எங்கள் அரசு வெளியிட்ட அறிக் கையில் போர் நிறுத்தம் என்று எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் பல ஆண்டுகள் பல அழிவுகளை சந்தித்து, புலிகளிடமிருந்து எங்கள் நாட்டை மீட்டிருக்கிறோம். போர் முடியும் தருவாயில் பின்வாங்குவது என்பது புத்திசாலித்தனமா..? சிவிலியன்களின் இறப்பை குறைக்க தரை ஆயுதங்கள் பிரயோகிப்பதையும், வான் வழித் தாக்குதலையும் தான் நிறுத்துவதாக கூறினோம். இது எப்படி போர் நிறுத்தமாகும்.. பிரபாகரனை பிடிக்கும் வரை எங்கள் தாக்குதல் தொடரும்.
CNN/IBN -ன்னில் செய்தி வாசித்த ராஜீவுக்கே பொறுக்க முடியவில்லை. என்ன அரசியல் இது.. ஏன்தான் இந்திய அரசியல்வாதிகள் இப்படித் திரித்துக் கூறுகிறார்கள். மக்களை திசைமாற்றுகிறார்கள் என்பது புரியவில்லை” என அலுத்துக் கொண்டார்.
மாலை 6.00 மணி
இருள் கவியும் நேரம் பீதியுடனும் ஆயிரம் கண்களுடன் பார்க்கும் அப்பாவிக் குழந்தைகளின் படங்கள் நமது நெஞ்சில் நிழலாடுகின்றன. முல்லைத் தீவிலும் வன்னிப் பகுதியிலும் இன்றைய இரவிற்குப் பின் அவற்றில் எத்தனைக் குழந்தைகள் எஞ்சி நிற்கும்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|