Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
வெட்டியும் முட்டாளும்
எ. சுப்பராயலு


வெட்டி என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் பயனின்மை என்று பொருள் தரப்பட்டுள் ளது. மேலும் இது வ்யர்த என்ற வடமொழிச் சொல்லோடு ஒப்பிடுக என்று குறிப்புள்ளது. அதாவது வ்யர்த என்ற சொல்லிலிருந்து வெட்டி பிறந்திருக்கலாம் என்பது குறிப்பு. வெட்டிக்கு பழையவரி என்ற பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வகராதியில் வெட்டியை வேறு பல சொற்களோடு சேர்த்து கூட்டுப் பெயராகவும் தரப்பட்டுள்ளது. அவையாவன:
வெட்டிக்காசு, வெட்டிச்சோறு, வெட்டிவரி, வெட்டிப் பாட்டம், வெட்டிப்புடவை ஆகிய சொற்களைப் பழையவரிகள் என்றும், வெட்டிமை என்பதை வெட்டியான் ஊழியம் என்றும், வெட்டியான் என்பதைக் கிராம ஊழியன் மற்றும் சவஞ்சுடு வோன் என்றும், வெட்டிப்பேச்சு என்பதை வீண்வார்த்தை என்றும் வெட்டிவேலை என்பதைப் பயனற்ற காரியம் என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளன.

மேலே உள்ள சொற்களில் இறுதி இரண்டும் (வெட்டிப்பேச்சு, வெட்டிவேலை) இன்று வழக்கில் உள்ளவை. இன்று வழக்கில் உள்ள வெட்டியான் கல்வெட்டிலும் உள்ளது. மற்றவை கல்வெட்டுக்களில் மட்டும் வருபவை. 9ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான கல்வெட்டுக் களில் இச்சொற்கள் ஆளப்பட்டுள்ளன. அவையாவும் பழைய வரி என்று குறிக்கப்பட்டுள்ளன. ஆகவே வெட்டிக்கு பயனின்மை என்கிற பொருள் ஒரு முரண்பாடாக உள்ளது. ஆனால் இக் காலத்தில் அப்பொருள் உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.

உண்மையில் வெட்டி என்பதன் முதன்மைப் பொருள் உழைப்பு என்பதாகும். இச்சொல் விஷ்டி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் உருவம் ஆகும். விஷ்டி குடிகள் அரசனுக்கு அல்லது நில உடமையாளருக்குச் செலுத்தும் உழைப்பு என வரலாற்றாசிரியர்களால் கொள்ளப்படுகிறது1. பெரும்பாலும் இது கட்டாய உழைப்பு ஆகும். இக்கட்டாய உழைப்பு 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் குடிகள் மீது மிகுந்த பளுவாக இருந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. தமிழ்க் கல்வெட்டுக்களில் இது வரிச்சொற்களுள் ஒன்றாக வருகிறது என்பதை இணைப்பில் உள்ள சான்றுகளிலிருந்து அறியலாம். இது ஓர் இறை அல்லது கடமை. அதாவது ஓர் அரசாங்க வரி என இச்சான்றுகளில் சுட்டப்படுகின்றது. உழுகுடிகள் (அல்லது குடிகள்) இதைச் செலுத்துவதாகவும் குறிக்கப்படுகிறது. ஆகவே அது குடிமை என்றும் 11ஆம் நூற்றாண்டிலிருந்து பெயர் பெற்றது (பார்க்க இணைப்பு).

இடைக்காலத்தில் நிலவரி கடமை, குடிசை என இரண்டு பெரும் பிரிவுகளாக இருந்தது. கடமை நிலக்கிழார் தங்கள் நிலத்தின் பேரில் செலுத்தும் வரி: பொதுவாக இது விளைவில் மூன்றில் ஒரு பங்கு ஆக இருக்கும். நிலத்தை உழுது பயிரிடும் குடிகள் அரசுக்கும் உள்ளூர் ஆட்சி மன்றங்களுக்கும் (பெரும்பாலும் உழைப்பாக) செலுத்தும் வரிகளின் தொகுதி குடிமை ஆகும். நிலக்கிழாரே தம் நிலத்தை உழுது பயிரிட்டால் கடமை, குடிமை இரண்டையும் அவரே செலுத்த வேண்டும். இறை, கடமை ஆகிய இரு சொற்களும் பொதுப்பெயராக வரும்பொழுது அவை வரி என்ற பொருளிலும், சிறப்புப் பெயராக வழங்கும் போது முக்கிய நிலவரியையும் குறித்தன.

வெட்டி என்பது கட்டாய உழைப்பாக இருப்பினும், நீர்நிலைகள், கால்வாய் முதலியவற்றைப் பராமரிக்கும் வெட்டி வேலையைச் செய்தவருக்கு (வெட்டியார்) வெட்டிப்பேறு அல்லது வெட்டப்பேறு என்ற மானிய நிலம் ஊர் நிலக்கிழார் களால் ஒதுக்கப்பட்டிருந்தது. வெட்டியார், உழுகுடிகள், பேரிளமை யார் ஆகிய சொற்கள் ஒரே பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை சோழர் காலத்தில் (10_13ஆம் நூற்றாண்டு கள்) பன்மையிலேயே பெரும்பாலும் ஆளப்பட்டுள்ளன. அதற்குப் பின் வெட்டியான் என்று ஒருமையிலும் சில கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. அங்கு ஊர்ப் பொது ஊழியன் என்ற பொருளில் வருகிறது.

முட்டையாள் என்ற சொல் பெரும்பாலும் கல்வெட்டுக்களில் வெட்டியைத் தொடர்ந்து வருவதால் இரண்டு சொற்களையும் சேர்த்து வெட்டி _ முட்டையாள் என்ற கூட்டுச்சொல்லாகக் கொள்ளவும் வாய்ப்புண்டு. ஆனால் இவை பிரித்துத் தனியாகவும் வருகின்றன. 12ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி வரை முட்டையாள் என்றும், அதைத் தொடர்ந்து முட்டாவாள் எனவும், 16ஆம் நூற்றாண்டில் முட்டாள் என்றும் வழங்குவதைப் பார்க்கிறோம். சிலபோது சுருக்கமாக முட்டி என்றும் ஆளப்படுகிறது.

ஆள் என்ற விகுதியிலிருந்து முட்டையாள் ஆட்கள் செய்யும் வேலையை, அதாவது உழைப்பைக் குறித்தது என்பதை ஊகிக்க லாம். இதுவும் உழுகுடிகள் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது. இதேபோல உழைப்பாகச் செலுத்தும் வேறு இரு வரிகளும் ஆள் விகுதியைக் கொண்டுள்ளன: காட்டாள், நெட்டாள். பொதுவாக, இடைக்காலத்தில் ஆள் என்ற சொல் ஏவல் வேலையைச் செய்பவர், அடிமை ஆகிய பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முட்டாவாள் என்ற வடிவத்தை முட்டா ஆள் என்று பிரித்து, தொடர்ந்து பணிசெய்யும் ஆள் என்று கொள்ளலாம். நெட்டாள் (நெடுமை ஆள்) ஏறக்குறைய இதே பொருளைத் தரும். ஆயினும் முதல் வடிவமான முட்டாள் இதே போல் பிரிந்து பொருள் தருமா என்பது சந்தேகம். எப்படிக் கொண்டாலும் முட்டையாள் உழைப்பு செய்யும் ஆள் என்பதில் சிக்கலில்லை. இச்சொல்லின் இறுதித் தீர்ப்பே முட்டாள்.

முட்டாளுக்குத் தமிழ் அகராதி (ப.3237) மூடன், அறிவில்லாத வன் எனப் பொருள் கொண்டுள்ளது. மூட என்ற வடசொல்லி லிருந்து பிறந்திருக்கலாம் என்று நினைத்தது, மூட முதலில் முட்டன் ஆகி அதிலிருந்து முட்டாள் வந்தது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக முட்டு ஆள் என்று பிரித்து வாகனத்தைத் தாங்கும் பிரதிமை என்ற ஒரு பொருளும், கொத்துவேலைச் சிற்றாள் என்று இன்னொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொத்துவேலைச் சிற்றாள் என்ற பொருள் பணவிடுதூது என்ற சிற்றிலக்கியத்தில் வரும் செங்கலுக்கு நீறெடுத்து முட்டாளாய் நிற்பாரும் என்ற அடியிலிருந்து பெறப்பட் டுள்ளது. இந்தப் பொருள் உழைப்பு தரும் ஆள் என்ற பொரு ளோடு தொடர்புடையதைக் காணலாம். மூட என்ற வடசொல்லி லிருந்து பிறந்தது என்பது ஊகமே. மூடன் என்ற உருவம் முட்டாள் என்று திரிவது பொருத்தமாக இல்லை. ஆனால் பொருளைப் பொறுத்தவரையில் அறிவில்லாதவன் என்ற இக்காலத்தில் வழங்குவதை மறுக்க முடியாது.

மேலே குறிப்பிட்ட செய்திகளிலிருந்து வெட்டி, முட்டாள் இரண்டுமே உழைப்பு மற்றும் உழைக்கும் ஆள் ஆகியவற்றைக் குறித்தன என்பது தெளிவு. காலப்போக்கில் அதே சொற்கள் முறையே பயனற்ற செயல், அறிவில்லாதவன் என்னும் பொருள் களைப் பெற்றதன் அடிப்படை என்ன? வெட்டி என்பது கட்டாய உழைப்பு ஆதலால் பெரும்பாலும் ஊதியம் பெறாத உழைப்பு அல்லது குறைந்த ஊதியம் பெற்ற உழைப்பு என்று கொள்ள இடமுண்டு. ஆகவே அந்த உழைப்பாளிக்கு அதனால் எந்தப் பலனுமில்லை. இந்தக் காரணத்தினால் வெட்டி பயனற்ற செயல் என்ற கருத்துக்கு இடம் கொடுத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் முட்டையாள் அல்லது முட்டாளுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுக்க இயலாது.

சமூக வளர்ச்சிப் பார்வையில் இந்தப் பொருள் மாற்றத்துக்கு விளக்கம் தரலாம். உலகில் பரவலாகப் பண்டைக்காலத்தில் நாகரிகம் பெற்ற சமூகங்களில் ஆள்பவர் ஆளப்படுவர் என்ற இருவேறு படிநிலைகள் இருந்தன. ஆள்பவர் (அரச குலம், படைத்தலைவர், நிலக்கிழார், பெருவணிகர்) தங்கள் வசதிக்காகத் தங்களுக்குக் கீழ் இருந்த ஆளப்படுபவரைத் தாழ்த்திப் பார்ப்பது இயல்பாக இருந்தது. இந்தப் போக்கு காலப்போக்கில் முதிர்ந்து வந்ததையும் காண்கிறோம். இந்தியாவில் வருணாசிரமக் கோட்பாடு வேரூன்றிய நிலையில் நான்காம் வருணத்தினரும். வருணங்களிலிருந்து புறந்தள்ளப்பட்டவரும் மேல் வருணத்தாரால் தாழ்வாக நினைத்து நடத்தப்பட்டனர் என்பது வரலாற்றுண்மை. குறிப்பாக கி.பி.3, 4ஆம் நூற்றாண்டு முதல் மனு முதலிய தர்மசாத்திரங்கள் வருணாசிரமக் கருத்தியலை முறைப்படுத்தி ஆள்பவருக்குத் துணைசெய்தன. சாதிச் சமூக வளர்ச்சிக்கு இக்கருத்தியல் தூண்டுகோலாக அமைந்தது. தமிழ்நாட்டில் 10 - 13ஆம் நூற்றாண்டுகளில் சாதிச் சமூகம் முழுமையடைந்தது. அந்த நிலையில் உடல் உழைப்பானது தாழ்வு என்ற எண்ணம் வளரத்தொடங்கியது. உழைப்பவர் கீழ்ச் சாதியினராக வெறுத்தொதுக்கப்பட்டனர். இந்தக் கருத்தியல் வளர வளர உழைப்பு குறித்த சொற்கள் இழிவான பொருள்களைப் பெற்றன.

இணைப்பு

1. தென்னிந்தியக் கல்வெட்டுகள், 3: 12 (கி.பி.941) -_ இவ்வூர் ஏறின குடிகளை வெட்டியும் வேதினையும் வாலக்காணமும் கொள்ளப்பெறாதோமாகவும்.

2. தென்னிந்தியக் கல்வெட்டுகள், 4:555(1049) _ இன் நிலம் உழுங்குடிகளை சில்லிறை சோறுமாட்டும் வெட்டி அமைஞ்சியும் உள்ளிட்டன எப்பேர்ப் பட்ட இறைகளும்.

3. தென்னிந்தியக் கல்வெட்டுகள், 7: 97 (1125) _ வெட்டி முட்டையாள் சில்லிறை சோறுமாட்டுச் செந்நீரமஞ்சி மற்றும் எப்பேற்பட்ட திருக்கொற்றவாய்தல் ஏறிபோந்த குடிமை சொல்லப்பெறாததாகவும்.

4. தென்னிந்தியக் கல்வெட்டுகள், 7: 1034 (1147) _ வெட்டி முட்டையாள் வெள்ளான்வெட்டி மற்றும் எப்பேர்ப்பட்ட திருவாசல்குடிமை.

5. தென்னிந்தியக் கல்வெட்டுகள், 6: 50, 58 (1238) நம்மூர் இந்நாள் முதல் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி தேவை செய்யுமிடத்துக் காவேரிக் கரையில் நம்மூர்க் கோலறை செய்யுமடத்து நில ஒபாதிக்குக் குடிப்பற்றான நிலத்துக்கு வெள்ளாழர் கரை செய்யவும் அல்லாத திருமுகத்தேவையாய் வரும் ஆளும் பண்டமும் ஊணொபாதி படவும் சென்னீர் வெட்டி செய்யுமடத்து ஆளாகச் செய்யவும் இராராபுரத்துக்கு காசு பண்டாரமுள்ளிட்ட நெட்டாள் செய்யுமடத்து ஆட்டைக்கு மாத்தால் ஓராளாக வந்த ஆள் போகவும் இதுக்கு மேற்படப் போகாதொழியவும் இராராபுரத்துக்கு குறைவறுப்பு எடுக்குமடத்து எடுக்க வேண்டுவது குறைவறுப்பு எடுக்கவும் அல்லாத ஆளுக்குப் பொதிக்கூலி என்று கூட்டுக் கொள்ளாதொழியவும்.

6. ஆவணம் 7: ப.60-61 (1339) மாவடை வெட்டியானுக்கிடும் பணம் ஓலைச் சம்படம் வாசல்வரி கீற்றுவரி பல உபாதிகளும் பல வரிகளும்.

7. இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கை, 1936 - 37: 113 (1428) அதிகாரி சேவைபோவர் அங்கசாலைகள் விட்டி வேகாரி காடுவெட்டு அமஞ்சி இவைகள் என்று இத்தானங்களில் உவத்துரோகம் பண்ணாதபடி

8. புதுக்கோட்டைக் கல்வெட்டுகள்: 733 (1520) எற்சோறு கூற்றுஅரிசி வெட்டி முட்டாளும் நாட்டிலே மேற்போட்டுக்கொண்டு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com