Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatruveli
Maatruveli logo
நவம்பர் 2008
தேரிகாதை
கி. முப்பால்மணி


தமிழில் பௌத்த நூல்கள்

தமிழில் உள்ள பௌத்த மூலநூல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மணிமேகலை, வீரசோழியம் மற்றும் இன்றுகிடைக்கப் பெறாத விம்பிசார கதை என அவற்றை அறிய வருகிறோம். பௌத்தம் பற்றிப் பேசும் நூல்களாக நீலகேசி, அஷ்டாதஸ ரகசியம், சிவஞான சித்தியார், பெருந்திரட்டு, சிவஞான மாபாடியம், நிஜானந்த விலாசம், சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், பிரபஞ்ச விசாரம், அயோத்திதாசர் கட்டுரைகள், பௌத்தமும் தமிழும் என்ற நூல்களை அறிகிறோம். பௌத்த மூலநூல்களின் மொழிபெயர்ப்புகளாகச் சுத்த பிடகத் தொகுதியின் தம்மபதம், தீக நிகாயம், புத்த ஜாதகக் கதைகள் இருந்து வருகின்றன. இப்போது அ. மங்கை தனது பங்களிப்பாகத் தேரிகாதை மொழிபெயர்ப்பை அளித்துள்ளார்.

மூலபௌத்த நூல் - தேரிகாதை – பங்களிப்பு

தமிழில் அகத்திணை, புறத்திணை இலக்கியங்கள் உண்டு. இவற்றிற்கும் முந்திய நூல் தேரிகாதை. பகவான் புத்தர் அறநெறி கூறிய காலத்தினில் வாழ்ந்த பிக்குணிகளது பாடல்கள் கொண்ட நூல் இது. அரசர்குலம், பார்ப்பனர்குலம், அதிகாரிகள், நிலம் உடையோர், கைத்தொழிலாளர் வழி மகளிர், கணிகையர், விலைமகளிர் பிக்குணிகள் ஆவதை இந்த நூல் பேசுகிறது. வேட்டைநிலை மகளிர் துறவு பூணுவது இந்த நூலில் காணப்படுவது விதந்து சுட்டுவதற்கு உரியது. கால்நடைகொண்ட முல்லை நில மகளிர் பிக்குணி ஆவது காணப்படவில்லை. நிலம், மனை, செல்வம் உடைய மருதநில சம்சாரி மகளிர் துறவு பெரிதாக உள்ளது. இந்த மகளிருடைய பாடல்களைத் தந்தைமை ஆதிக்கக் குடும்பம் மற்றும் பார்ப்பனியம் மேலிட்ட சமூகம் ஆகியனவற்றிற்கு மாற்றாக வாசித்து அ. மங்கை மொழிபெயர்த்து உள்ளார். பௌத்தம், பெண்ணியம், பெண் வெளிப்பாட்டு வரலாறு, மதக்கருத்தாடலை விடுதலைக்கான வித்தாகக் காண்பது என்ற கருத்தியல்களை உள்ளே தாங்கி, வெளியே பெண் விடுதலைக் குரலைக் கூர்மை ஆக்கி உள்ளார். இதன் பொருட்டு மணிமேகலையையும், நீலகேசியையும் பயின்றுள்ளார்.

தேரிகாதை பாலிமொழியில் இருப்பது. இதனைத் திருமதி. ரைஸ் டேவிட், கே.ஆர். நார்மன் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த பிரதிகளை நுணுக்கமாக வாசித்து, முன்னவருடைய பிரதியை முதல்நூலாகக் கொண்டு அ. மங்கை மொழிபெயர்த்து உள்ளார். வலுவான நூல்களின் பயிற்சிப் பின்னணியில், நுட்பமான கருத்தியல் தெளிவும் கொண்டு இந்தப் பணி செய்துள்ளார். பெண் என்ற மனிதகுலப் பாலினப் பிறவியை மையப்படுத்திக் கொண்டுத் தேரிகாதையின் ஒவ்வொரு வரியையும், உணர்வையும் தமிழாக்கி உள்ளார். பாலிமொழி யாப்பமைதியைக் கெடாது தமிழில் வழங்கும் புலமை கைவராத நிலையில், இன்றைய புதுக்கவிதை வடிவத்தைக் கையாண்டுள் ளார், என்றாலும் வாசிப்புச் சந்தம் குன்றாது வழி நடக்கின்றது.

இந்த நூலின் சிறப்பம்சமாக இருப்பது உமா சக்கரவர்த்தியின் முன்னுரை ஆகும். புத்தரின் சமகால இலக்கியத்தை, மூலாதார ஆவணத்தைப் பெண்ணிய நோக்கினில் பரிசீலிக்கிறார். வேதாந்தம், உலகாயதம் (மார்க்சியம்) ஆகியவற்றின் பால் சாராது, செமித்திய நோக்கிலான பெண்ணியப் பொலிவு பெற்று அந்த முன்னுரை அமைகிறது. தனது சமகாலப் பெரியவர், தலைமைத் தந்தைமை வாதிகளான ஆண்களைப் பொருட்படுத் தாது, சம்பந்தப்பட்ட நூலின் மரபுத் தொடர்ச்சியைத் தவிர்த்து விட்டு, நூலினை மட்டும் தனித்து வாசித்துப் பெண்ணிய நோக்கினல் அணுகி உள்ளார். பகவான் புத்தரின் பெண்கள் பாலான பாரபட்சமான பார்வையைப் பார்ப்பனிய தந்தைமை ஆதிக்க மறுப்பு நோக்கினில் விவரிக்கின்றார். பெரும்பான்மையர் - சிறுபான்மையர் என்ற மக்கள் பகுப்பினில், மைய விளிம்பு நிலை மக்கட் பிரிவினில் சிறுபான்மையர் பால் நின்று, பெண்கள் நிலையைச் சுட்டி மாற்றுக் குரலை எடுத்து உரைக்கின்றார்.

புத்தரின் நெருங்கிய சீடரான ஆனந்தரின் குரலைச் சிறுபான்மையர் குரலாகக் கொண்டு பெண்ணுரிமைக்கு ஆதரவாகக் காட்டு கிறார். துறவினால் மட்டுமே நிப்பாணம் சாத்தியம் என்ற வழியைப் பெண்ணுக்குக் காட்டியதானது ஆணின் ஆதிக்கத் தலைமையினின்று தப்பிக்க வழியாகலாம். ஆனால் பெண் சமத்துவம், விடுதலைக்கு மாற்றுவழி துறவினில் கிட்டுமா என்ற வினாவே மீண்டும் தொடர்கிறது.செமித்திய வழிப்பட்ட துறவுப் பெண்ணியக் குரலே உமா சக்கரவர்த்தியின் எழுத்தில் உள்ளிழை யாக ஓடுகிறது. பார்ப்பனியத் தந்தைமை மேலாண்மையினைக் குறித்து என்ன முடிவோ அதே முடிவு பௌத்தத்திற்கும் பொருந்தி விடுகின்றது. பாலின சமத்துவம் துறவிலும் இல்லை. கேள்வி கேட்கும் அவரது குரல் மட்டும் பேரொலி ஆகின்றது.

தலித்திய நோக்கில் முதலில் பார்வைக்குத் தென்படுவது இந்து மதப் பார்ப்பனியச் சமூகப் பின்னணியில் இருந்து வரும் பெண்கள் மட்டுமே. மதப் பின்னணி எனில் செமித்திய மதங்கள், சமண சமயமும் தான். இருந்தாலும் தலித்தும், பார்ப்பனனும் மட்டுமே எதிரிகள் ஆவது செமித்திய மரபின் பாதிப்பினாலேயே. செமித்திய மதங்களிலும் பாலின ரீதியாகப் பெண்கள் மகிழ்ச்சியோடு இல்லை. பௌத்த மதச் சங்கத்தில் பலநாடு, பலவயது மக்கள் இணைவது, ஒரே மெய்யியல் வழி நடப்பது ஆகியனவற்றால் சமத்துவம் நிகழ்கின்றது. மற்ற சமயங்களைக் காட்டிலும், இது செழிப்பான ஈர்ப்பு மையம்.

மதசார்பற்ற நிலையும், சனநாயகமும் ஒருங்கிணைந்தவை. மேலாண்மைச் சமயத்திற்கு உலகு மற்றும் மனிதம் சாராத அப்பாலான கடவுள் தேவைப்படுகிறார். அப்படிப்பட்ட கடவுள் உருவாக்கிக் கொள்ளப்படாமல் இருந்திருந்தால், சமய சனநாய கம் இன்னும் மேம்பட்டிருக்கும். பௌத்தத்தில் அப்பாலான கடவுள் இல்லை. அனைத்தும் உலகு மற்றும் மனிதம் சார்ந்த வையே. எனினும், உடலும், உணர்வும் தனித்தனி எனப் பேசுவ துவும், உலகியல் பொருட்கள் நிலையற்றவை என நிரூபிக்கத் தீவிரம் காட்டுவதுவும் மதசார்பற்ற நிலையை வளப்படுத்துமா என்ற வினா எழுகின்றது. ஒரு வகையினில் உருவாக்கப்பட்டுள்ள எல்லா சமயங்களுக்கும் இது பொருந்தாதா?

மனிதவயப்படுத்தல், சமத்துவம் ஆகியன மையப்படுத்தப் பட்டு, அதீத நிலையில் உள்ள சுதந்திரமான உயர் குழுவினால் வழி நடத்தப்படும் சமயநிலைமைக்கு எதிரிடையானவை. இந்தச் சமயங்கள் உலகையும், மனிதனையும் பாவி ஆக்குகின்றன அல்லது இறைமயம் ஆக்குகின்றன. இப்படியான பெருஞ் சமயத்திற்கு முன் பௌத்தம் சிறுசமயமாக ஆசியாவில் உள்ளது. புத்தர் சுத்தீகரிக்கப்பட்டு வளர்ப்புப் பிராணியாக ஆக்கப்படுவ தற்கு பெருமளவிலான முயற்சிகள் தொடர்ந்து இன்றும் உண்டு. இந்திய அளவினில் பௌத்தத்தின் பல கூறுகள் இங்கிருக்கும் வேதாந்த சமயங்களினால் உட்கொள்ளப்பட்டு உள்ளன. ஆலய விஞ்ஞானம், க்ஷணிகவாதம், அநாத்மம் ஆகியன மாறுபட்ட வடிவங்களில் உட்கொள்ளப்பட்டுள்ளன. மனிதவயப்படுதல் என்பது சாஸ்திரிய வேதாந்தத்தில் அத்தியாசம் அல்லது ஆரோபம் மட்டுமே. அதாவது தோற்றம் மட்டுமே. உலகாயதம் (மார்க்சியம்) சமூகமனித மயமாக்கல் எனக் காட்டுகிறது.

பௌத்தம் தனிமனித மயமாதலுக்கும் பரிந்துரைக்க வாய்ப்புகள் அதிகம். பின்நவீனத்துவம் குறிப்பான தனிமனித மயமாதலையே பெரிதாகச் சித்தரிக்கின்றது. இதன் பண்பு சுவார்த்தம் / தன்னயம் ஆகும். இதனை உள்ளங்கையினில் மூடியபடி தனி மனிதப் பட்ட சமத்துவத்தை அது பரிந்துரைக்கும். பௌத்தத்தில் குறிப்பான தனிமனிதனைப் பேசினாலும், இதன் பண்பு ஏதுமற்ற நிலையே. எனினும் அப்பாலைத் தன்மையற்ற, உலகுக்குரியதான சமத்துவத்தைத் துறவில் காண்கிறது. இது பின்நவீனத்தில் காணக் கிடைக்காதது. என்றாலும் மனிதமயமாக்கலுக்கும், சமத்துவத்திற் கும் கடந்த கால உள்ளடக்கத்துடன் பௌத்தமானது பங்களிக்க வாய்ப்புள்ளது.
புத்தர் கால பௌத்தம் – அதன்பின் இந்தியாவில் பௌத்தம் தனது வரலாற்றை ஐந்து கட்டங்களாகப் புலப்படுத்தியது- புத்தர் காலம் முதல் நாகசேனர் காலம் வரை, பின்பு வசுபந்து அசங்கர் வரை, பின்பு நாகார்ஜுனர் - தர்மகீர்த்தி வரை, பின்பு வஜ்ராயனம் நிலை பெற்றது முதல் இன்று வரை எனப் பகுக்கலாம்.

தேரிகாதை புத்தர் முதல் நாகசேனர் வரையான காலத்திய தத்துவங்களைக் கொண்டுள்ளது. ஐந்து கந்தங்கள், ஆரிய சத்தை, ஆறு வழக்கு, நான்கு நயம் ஆகியன அப்போது பெருவழக்காக இருந்தன. அநாத்மக் கருத்தியல் வலுப்பெற்றிருந்த அளவிற்கு க்ஷணிகக் கருத்தியல் எடுத்துரைப்பாக இல்லை எனலாம். உலகியல் சங்கதிகளில் வெறுமை உணர்தல், பற்று நீக்கல், நிப்பாணம் அடைதல் ஆகியன முன்னிலை கடைபிடிகளாக விளங்கின. இதிலிருந்து தேரிகாதை உதயமானது.

தேரிகாதை – மணிமேகலை

இளங்கோவடிகள், திருவள்ளுவர், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கணியன் பூங்குன்றன் போன்றோர் என்னென்ன நூல்களில் புலமை பெற்றிருந்தார்கள் என்பதே ஒரு சுவையான தேடல். சீத்தலைச் சாத்தனார் தேரிகாதையை அதன் மூல வடிவினில் வாசித்து இருப்பார் என்பது உறுதி. தேரிகாதையும், மணிமேகலையும் ஒரே மெய்யியலைத் தாங்கி உள்ளன. பழம்பிறப்புகளை உணர்தல், உலகியல் பொருட்கள், உடல் மற்றும் சம்சாரம் பாலான அருவருப்பு, பௌத்தம் தெளிதல், வீடுபேறு / நிப்பாணம் / பிறவாநிலை அடைதல் என்பன இருநூல்களுக்கும் பொதுவானவை. “எப்படி எப்போது எதெதுவாய்ப் பிறந்தேன், முன்னாளில் எங்கிருந்தேன் என அறிந்தேன்’’ எனத் தேரியான சோனா பழம்பிறப்பு உணர்கிறாள். மணிமேகலை மணிபல்லவத் தீவினில் பழம்பிறப்பு உணர்கிறாள். பழம்பிறப்பு உணர்வது என்பதானது ஒரு தகுதிநிலை. பழம் பிறப்பு உணர்ந்த பின்னர், உலகு, உடல் பற்றிய உண்மை நிலையை அறியப் பத்தொன்பது தத்துவப் பொருள்களை உணரவேண்டும். இவை தேரிகாதை பிக்குணிகளுக்கும், மணிமேகலைக்கும் பொதுவானவை.

ஐந்து கந்தங்கள், ஆரிய சத்தை, ஆறு வழக்கு, நான்கு நயம் பயின்று உணர்ந்தாலேயே உலகப் பொருள்களின் நிலையாமை, உடலின் அநித்தியம் பற்றிய தெளிவு பிறக்கும். இந்தத் தெளிவினால் பிறப்பிறப்பின் துக்கத்தை உணர்ந்து வெறுப்பு முதிரும் போது பிறவாநிலை / நிப்பாணம் கிட்டும். பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதையில் மணிமேகலை இதைத் தான் அறவண அடிகளி டம் உணர்ந்தாள். மேலும் இது தேரிகாதைக்கும், மணிமேகலைக்கும் உள்ள பொதுத்தன்மை. அதே சமயம் புத்தர் காலம் முதல் நாகசேனர் காலம் வரையான பௌத்தத்தின் பொதுத் தன்மையும் ஆகும். உலகை, உடலை மறுப்பதாலேயே பிறவாநிலை / நிப்பாணம் கிட்டும் என்ற இலட்சியமே வாழ்க்கையானது. பெண்வழி மறுஇன உற்பத்தியை நிறுத்திவிட்டால், தனக்கும் பிறக்காமல் இருக்கும் நிலை கிட்டும் என்ற எதிர்பார்ப்பே எல்லாஅறங்களுக்கும், சீலங்களுக்கும் பொன்னிழை ஆனது.

மெய்யியல் நிலையினில், தேரிகாதை விவரிக்கும் அழிவுக் குவியல், நிலையாமைத் தொகுதி (102, 103) ஆகியன மணிமேகலை விவரிக்கும் தொகை வழக்கு (30:199) ஆகியன ஒரு பொருட் தன்மை பெற்றவை ஆகும். அதாவது ஓர் உடல், ஒருதேர், ஒருநாடு, ஒரு குவளை நீர் ஆகியன பலஉறுப்புகளின், பலபகுதிகளின், பலஅணுக்களின் தொகுப்பு / தொகை ஆகும். இது நாகசேனர், -மினாண்டர் ஆகியோரது உரையாடலை நினைவுறுத்துவதும் ஆகும்.

தேரிகாதையில் உணரப்படும் காரண - காரியம் (83,85, 120, 159) என்பது மணிமேகலையில் சுட்டப்படும் தொடர்ச்சி ஆகும் (30: 200). நெல்லின் வித்து, முளை, தாள் எனச் சாத்தனார் அதை விளக்குகிறார். நீரோட்டம், விளக்கின் சுடர் (10, 114, 115) ஆகியன க்ஷணிக வாதத்திற்கு ஒப்பற்ற உதாரண விளக்கங்கள். எனினும் தேரிகாதையில் அந்தப் பொருளில் மேற்கொள்ளப்பட வில்லை. மணிமேகலையிலும் க்ஷணிக வாதம் பற்றிய தரவுகளே இல்லை. இவற்றை எல்லாம் நோக்கும் போது தேரிகாதையானது மணிமேகலைக்கு முன்னோடியாகவும், மணிமேகலையானது தேரிகாதையின் தொடர்ச்சியாகவும் உள்ளது. மணிமேகலைக்கு முந்திய தமிழகப் பௌத்தம் பற்றிய கருத்தியலை தேரிகாதையில் உணர முடியும். இந்தச் சூழமைவினில் அ. மங்கையின் மொழி பெயர்ப்பு ஒளி மிகுந்த ஆவணமாகின்றது.

சம்சாரம் - பெண்கள் – தேரிகாதை

இந்த உலக வாழ்வு பிறப்பு - இறப்பு உடையது. சம்சாரம் மற்றும் பிறவிவாழ்வு என்பது உலக வழக்கு. இது தொடர்ச்சி யானது. ஒரு வழியில் வந்து, பிறிதொரு வழியில் ஏகுதல் போல் மனிதரின் இறப்பு மீண்டும் பிறத்தலுக்கன்றோ (130). இது வெள்ளப் பெருக்கு, சுழற்சி வட்டம் (50,58,111). இதிலிருந்து விடுபட்டுப் பிறவாநிலை நிப்பாணம் அடையவேண்டும். மறுபிறப்பு இல்லை என்பது உலகாயதம். மறுபிறப்பு வேண்டாம் என்பது பௌத்தம். இந்தப் பிறப்பு - இறப்பு என்பதே உலகியல் பொருள் உறவால் உண்டாவது என்பது பௌத்தநெறியின் கருத்தியல். சமணத்திலும் இப்படியே. செமித்திய மரபினில் இப்படி இல்லை. வேதமரபினில் அப்போது பிறப்பு - இறப்பிற்குக் காரண - காரியம் காணப்பட்டு இருக்கவில்லை.

இந்தக் கருத்தியல் உண்டாகி இருக்கும்போது பௌத்தம் பரவிய மக்களிடையே உழவு வழக்கினில் இருந்தது. முல்லைத் திணை கால்நடை மேய்ப்புச் சமூக மக்கள் தேரிகாதையில் காணப்படவில்லை. குறிஞ்சித்திணை வேட்டை வாழ்வு சார்ந்த ஒரு கிராமமக்கள் இடம் பெறுவது குறிப்பிடத் தகுந்தது(291-131). அதிலும் ஆண் துறவே காணப்படுகின்றது. அங்குப் பெண் விடுதலை உணர்வு காணப்படவில்லை.

பிறவித் தொடர்ச்சிக்குக் காரணமான உலகியல் பொருட்கள் என்பன நிலம், மாடு, மனைவி, மக்கள், சுற்றம் ஆகும். இவை மருதநில உழவுசமூக உறுப்புகள். இந்த உலகினில் விளைநிலத்தை உழுது, பூமியில் விதைத்து, அறுவடை செய்து, பெற்ற பலனால் மனைவி, மக்கள் பேணுவர். பொருட்செல்வம் தேடிக் குவித்து மனைவி, அன்புடை மக்கள் பேணுவர் (112, 117). பொருட் செல்வம் தேடி, முலைதாண்டிச் சென்று, நன்கலம் ஈட்டி, குதிரை பூட்டிய தேரினில் திரும்பி வரும் தலைவனை அகநானூற்றுத் தலைவி கார்காலத்தில் எதிர்பார்த்துக் காத்து இருப்பாள். விளைநிலமும், வாணிகமும் சங்ககாலத்தில் முன்னிலையாக உருவாகி வரும்துறைகள். அது மக்களால் போற்றுதலுக்கு உட்பட்டன. தேரிகாதையில் மாரனும், மன்மதனும் இந்தத் துறைகளைப் போற்றினர். புத்தர் கால அரசர்களான அஜிதகேச கம்பளரும், பயாசியும் இப்படியே. அதாவது உலகியல் வாழ்வு, பொருள் தொடர்பு, ஆண்-பெண் பிணைப்பு, சந்ததி மற்றும் பொருள் தொடர்ச்சியைப் போற்றி நின்றனர்.

பெருக்கத்தை நாடி வாழ்ந்தனர். உடலில் உணர்வு உண்டு. தனித்தனி, வேறுவேறு அல்ல என்றனர். பிரிக்க முடியாதவை என்றனர். தேரிகாதை புத்தர்கள் உடலும், உணர்வும் தனித்தனி, வேறுவேறு என்றனர். புறவய உடல் தாழ்ந்தது, அகவய உணர்வு உயர்ந்தது. முப்பது கடவுளருக்கும் முதல்வரான புத்தர் வழியினில் பத்தொன்பது பொருள் கற்று உணர்வினைப் பக்குவப்படுத்தி னால், பிறவாநிலை / நிப்பாணம் அடையலாம் என்றனர். ஒருவர் பிறந்தது முதல் இறப்பது வரையான வாழ்வினை மட்டும் கண்டு இவ்வாறு உரைத்தனர். தனிஆள் வாழ்வினை மட்டும் விதந்து கூறிச் சந்ததித் தொடர்ச்சி நேர்ந்து விட்டாலும் தாம் தொடர்ந்து பிறக்காது இருக்க விழைந்தனர் என்பதுவே தேரிகாதையின் குரல்.

பொருளானது பேராசை பெருக்கும், ஆணவம் தரும், உடல் சார்ந்த சிற்றின்பங்களில் நாட்டம் உண்டாக்கும், இழப்பின் அச்சம் தரும். நிலைபெற்ற உறுதிக்கான இடம் உலகியல் பொருள் அன்று எனவும், பொருள் தழுவிய உணர்வினுக்கு அடிமையானால் மரணம், தளைகள், அழிவு வரும் எனவும் புத்தர்கள் ஆண்களுக்குச் சொன்னார்கள் (343, 345), மணமாகி, சந்ததி கண்ட இல்லுறை மகளிர், கணிகை மகளிர் (252), விலைமகளிர் (25), பலகணவமகளிர் (400_-447) என்ற அனை வரும் பொருளை, உடலை, சந்ததியை வெறுத்து பிக்குணி ஆகின்றனர். தாயும், மகளும் ஒரே ஆணுக்கு மனைவியராக வாழ்ந்து பிக்குணி ஆகின்றனர். இல்லுறை மகளிர் உலகு, இல்லம், குழந்தை, நட்பு, சுற்றம் விடுத்து உயரிய நெறிகண்டனர். அதிலும் குழந்தை இழப்பானது சந்ததி இழப்பாகும். மரணம் பொதுவானது என்ற போதத்திற்கு ஆட்பட்டுப் பிக்குணி ஆகின்றனர். திருமண வாழ்வில் இருந்து, பிறப்பிக்கும் வாழ்வில் இருந்து வெளியேறுவது அன்று சமணத்திலும் இருந்தது.

சாக்கடல் கும்ரான் முனிவர் (முந்தைய கிறித்தவர்) இதனைப் போற்றினர். இவர் நெறியினில் வந்த புனித தாமஸ் இல்லறம் என்பது பாவம் எனத் திருமணம் அற்ற வாழ்வை உபதேசித் தனர். அதைக் கேட்டு, தட்சசீலத்தின் அரசி, மகள் மற்றும் அரசகுல மகளிர் திருமண உறவைத் துறக்க விழைந்தனர். இது கண்ட அரசன் மிஸிடேயுஸ் புனித தாமஸ்ஸின் உயிரைத் தட்சசீலத்தில் வைத்துப் போக்கிவிட்டார். பௌத்த உபதேசி களுக்கு அப்படி சேர்ந்ததாகத் தரவுகள் இல்லை. தேரிகாதையில் அரசகுலம், வாணிகம், அந்தணர், அதிகாரிகள், நகரம் மற்றும் கிராமப்புறம் சார்ந்த மகளிர் சம்சார நிலையினில் இருந்து விடுதலை பெற்றுத் தாமாகவே சுயதேர்வாகத் துறவறம் பூண்டனர். பௌத்தத் துறவிகளை அலெக்சாண்டிரியா நகரத்து கிளெமெந்து (கி.பி. 150_218) கலந்து உரையாடி உள்ளார். அப்போது தட்சசீலத்தில், நாளந்தாவில், கரூரில், காஞ்சியில் அவர்கள் பௌத்த தர்மம் சொல்லியபடி நிலவினர்.

அப்போதைய புத்த சங்கத்தினர் தமிழகத்திலும் நிலவினர். அகத்தையும், புறத்தையும் ஒன்றாக்கி உலக வாழ்க்கையை அணுகினர். அவர்களுக்குத் தினசரி வாழ்வும், ஆன்மிக வாழ்வும் எதிரும் புதிருமாக இல்லை என்பது அ. மங்கையின் மதிப்பீடு. இந்தக் கூற்று சங்ககால இலக்கண ஆசிரியர்கள் வகுத்த அகத்திணை - புறத்திணைக்கு இணையானது. அவர்கள் புறத்தில் இருப்பதுவே அகத்தில் உள்ளது. அகத்தில் இருப்பதுவே புறத்தில் உள்ளது என்ற கருத்தியலின் பாற்பட்டுச் சிந்தித்தனர். ஐந்து மகாபூதங்களின் பண்புகளே மனித அகத்திலும் உள்ளன, மனித அகத்தின் பண்புகளே மகாபூதங்களின் பண்புகளாக உள்ளன (புறம். 2). அகமும், புறமும் எதிரும், புதிருமான இல்லை. என்றாலும் உள்ளகத்தை முன்னிலையிலும், வெளிப்புறத்தை பின்னிலையிலும் கருதும் போக்கு பெரிது பட்டது.

உலகியல் பொருள் மற்றும் உடல் ஆகியனவற்றை விட அகவய உணர்வுகள் தமிழக சிந்தனையில் தனித்து மேலோங்கின. காலத்திற்கும், இடத்திற்கும் மேலாக, தமிழக உள்ளூர் தெய்வம் உள்ளிட்ட கருப்பொருள்களுக்கும் மேலாக, உடல் சார்ந்த உரிப்பொருள்களுக்கும் மேலாகத் தானாகவே இருக்கும் ஒரு படைப்புக் கடவுள் யவன வணிகரிடையே அப்போது வழக்கில் இருந்தது. இந்தக் கடவுளை அலெக்சாண்டிரியா நகரத்து ஞானி ஃபிலோ பிரபலமாக்கி இருந்தார். பெண் என்பவள் உண்டாவ தற்கும், அழிவதற்கும் ஒதுக்கப்பட்டவள் எனக் கூறி, கணவனின் சிறப்பே மனைவிக்குப் போதுமான அணிகலன் என்று பெண்ணின் சுய இருப்பை மட்டுப்படுத்தினார். (இவர் புனித பேதுருவின் உயிரைப் போக்கிய கிரேக்க அரசன் அக்கிரியப்பா வின் ச«£கதரர். இவர்கள் இருவரும் மகா அலெக்சாண்டரின் பேரன்மார். இந்த அரசனுடைய காசுகள் யவனருடைய வாணிகம் நடந்ததால் தமிழகத்தில் நிறையக் கிடைத்துள்ளன).

யவனரது படைப்புக் கடவுளுக்கு எதிர்வினையாகத் தமிழகத்தில் பௌத்த சங்கத்தினர் தமது பத்தொன்பது தத்துவங்களையும் பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாததாய்,
முடித்தலும், முடிதலும் இன்றி, தானே ஆகி நித்தியமாக இருப்பன என உயர்த்திக் காட்டினர். இப்படிக் கூறி மணிமேகலை ஓர் அடி முன் வைத்தது (30, 37-44). இதனால் பொருள் தீயவை, உணர்வுகள் கேடானவை, உறுப்பு, குணம் நீக்கினால் எதுவும் மிஞ்சாது, போலிஉரு, ஜாலவித்தை, எதுவும் நிசமானவை அல்ல, உண்மையற்றவை என்ற கருத்தியல்கள் தோற்றம் கொண்டன (தேரிகாதை 152, 169, 179, 180, 293, 398). சுற்றம் மற்றும் குடும்பம் பற்றிய எதிர்மறைக் கருத்தியல்கள் துறவறவியலுக்கு ஊக்கம் தந்தன. இது வரலாற்றுச் சிறப்பு உடையது.

சமயத்துறையில் காலத்திற்கும் இடத்திற்கும் மேலாக, புறத்திற்கும் அகத்திற்கும் மேலாக, பொருளுக்கும் உணர்விற்கும் மேலாக அனைத்தையும் படைக்கும் நித்தியமான கடவுள் உருவானதும், சம்சாரம் மற்றும் பெண்கள் நிலைமை மோசமானது. அந்தக் கடவுள் மேல் பற்று, உலக வாழ்வு மற்றும் பெண்கள் பால் வெறுப்பு, நாயகி - நாயக பாவம் வழியான பக்தி ஆகியன சமய உலகில் பெருவழக்கானது. பௌத்தத்தில் நிப்பாணம் அடையும் இலட்சியம், சம்சார வெறுப்பு, வஜ்ராயன வழிப்பட்ட தாந்திரிக ஒழுகலாறுகள் கோலோச்சின.

இப்படியான வரலாற்றில் தொடக்க காலப் பௌத்தத்தில் புலப்படும் வாழ்க்கைத் துன்பம், ஆணின் மேலாண்மை ஆதிக்கம் இவைகளால் துயருண்ட பெண்ணின் குரலை, எதிர்க்குரலாக்கு வது இன்றைய பெண்ணியத்தின் விடுதலைக் குரலுக்கும், மாற்றுப் பண்பாட்டு ஆக்கத்திற்கும் துணைபுரிய அ. மங்கையின் பணி வேருக்கு நீராகின்றது. காரணம் பௌத்தத்தில் அப்பாலைத் தன்மைகள் இல்லாததே.

வெளியீடு: சந்தியா பதிப்பகம், ப்ளாட் ஏ, நியு டெக் வைபவ், 57, 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை. விலை ரூ.100


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com