Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
நிறைவுக்காக
சூர்யா


பொதுவாக நமது நாட்டில் அனைவரும் நாளொன்றுக்கு ஒரு முறையாவது மூச்சு பயிற்சி செய்வதுண்டு. எப்பொழுது தெரியுமா? தெருவோர சாக்கடைகளை கடக்கும் பொழுது. அரிசிமாவில் கோலம் போடுவதின் மூலம் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு கூட உணவளித்து பாதுகாக்கும் நாம், பாக்டீரியாக்கள் போன்ற ஒரு செல் உயிரினங்களிடம் மட்டும் என்ன கோபமாகவா? நுடந்து கொள்ளப் போகிறோம். அவைகளுக்கும் வாழ்விடம் தந்து, அவைதரும் இம்சைகளையும் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம் அங்கங்கு மூடப்படாமல் இருக்கும் இது போன்ற சாக்கடைகள் பரப்பும் மணம், மூச்சுப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமே விதிவிலக்கு.

சிலர் இருக்கிறார்கள். தனது சகிப்புத் தன்மை சோதனையில் வெற்றி கண்டவர்கள். சாக்கடை நாற்றத்தால் சிறிதும் பாதிப்படையாதவர்கள். அதுவாகவே மாறிப்போனவர்கள். விவேகானந்தரின் கூற்றை நிரூபிக்கும் வண்ணமாய் நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாகவே மாறிவிடு என்பதை பிராக்டிகலாய் நிரூபித்துவிட்டு, சாதாரணமாக போஸ் கொடுத்து கொண்டிருக்கும் அசாதாரண மனிதர்களாய் பிச்சைக்காரர்கள் என்ற நாமத்துடன்.

அசாதாரணமான மனித குணம் கொண்ட மனிதர்களை உலகெங்கிலுமிருந்து தேடிப்பிடித்தால் அதில் இரண்டு இந்திய பிச்சைக்காரர்களாவது இருப்பார்கள். அவர்களது நோய் எதிர்ப்புத்தன்மை அசாத்தியமானது. மருத்துவ விஞ்ஞானிகளையும் குழப்பக்கூடியது. பலநாட்கள் குளிக்காமல். பல் தேய்க்காமல் ஒரே ஆடையுடன், நோயிலிருந்து அவனது உடல் பாதுகாக்கப்படுகிறது என்றால், அது நிச்சயம் தெய்வச்செயல்தான். வெயில், மழை, பனி என அனைத்தையும் அவன் உடல் தாங்கும். அவனோடு ஒப்பிடுகையில் ஒரு ஜைனத்துறவி தோற்றுவிடுவான்.

நான் பார்த்து வியந்த அந்த இளைஞனின் பெயர் சங்கர். எனக்கு மட்டும்தான் தெரியும் அவனது பெயர். அவன் என்னை முதல் பார்வையிலே கவர்ந்ததற்குரிய காரணம். அவனது அந்த அசாத்தியமான சூழ்நிலைதான் இன்றும் நினைத்துப் பார்த்தால் அந்த இடம், அந்த சூழ்நிலை என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த டிரான்ஸ்பார்மர் பின்னே இவ்வாறு எழுதப்பட்டிருந்தது, ‘இங்கு யாரும் சிறுநீர் கழிக்கக் கூடாது மீறினால் தண்டனைக்குள்ளாக்கப்படுவீர்’. நான் அந்த வழியாக மூச்சுபயிற்சி செய்து கொண்டே கடந்து செல்லும் பொழுது இந்த வாசகத்தை படிக்க நேர்ந்தது. எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும். ‘என்ன கொடுமை இது??? டிரான்ஸ்பார்மர் பின்னே சிறுநீர் கழிக்கக் கூடாது என்று எழுத அவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது’. மூத்திரக்கரைகளுக்கு நடுவே அந்த வாசகம் சிறிது அழிந்திருந்தாலும் நான் அதை முழுவதுமாக படித்து விட்டேன். மற்றவர்களால் இது முடியாது அதற்கு காரணமுண்டு.

அந்த கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டிதான் அந்தக் காரணம். அப்படி என்னதான் அதில் கொட்டுவார்களோ. அப்படி ஒரு நாற்றம். யாருக்கேனும் அஜீரணமாக இருந்தால் அங்கு சென்று 5 நிமிடம் நின்று விட்டு வந்தால் போதும். குடலை பிடுங்கிக் கொண்டு அனைத்தும் வெளியே வந்து விடும். இந்த வைத்தியம் நான் புதிதாக கண்டுபிடித்தது. நான் முயற்சி செய்து வெற்றியடைந்திருக்கிறேன். அந்த நாற்றத்தையும் மீறி அந்த வாசகத்தை படித்தது வேறு யாராலும் செய்ய முடியாத செயல். மேலும் ஆச்சரியமான விஷயம் அந்த நாற்றத்தை பொறுத்துக் கொண்டு அங்கு சிறுநீர் கழிக்கும் அந்த மனிதர்கள். நமது மக்கள் வாழும் திறன் அதிகம் படைத்தவர்கள் என்பது நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம். இவை எல்லாவற்றையும் விட சங்கர் என்னை கவர்ந்திருக்கிறான் என்றால். அது எவ்வளவு அசாதாரணமானதாக இருக்கும் என்று யூகித்துப் பார்க்க வேண்டும்.

அன்று மதிய உணவை மாரி உணவகத்தில் உண்டுவிட்டு கடுப்போடு வந்து கொண்டிருந்தேன். காரணம். அங்கு சப்ளையராக வேலை பார்த்த அந்த சிறுவன், தனது அழுக்கு விரல்களை உள்ளே விட்டபடி நான்கு டம்ளர்களில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். ஜேம்ஸ் பாண்ட் படமாக பார்த்து பார்த்து நீட்டாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னால் இதை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. படம் பார்த்து வாழ்வது தமிழனின் பண்பு அல்லவா? நான் மட்டும் என்ன விதிவிலக்கா. என்ன?

பெரிய உணவகங்களில் கூட இப்படியா? சண்டையிட்டுவிட்டு வெறுப்புடன் அந்த வழியாகச் செல்கையில்தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது. அந்த கார்ப்பரேஷன் தொட்டிக்குள் நின்று கொண்டு, சங்கர் தனது மதிய உணவை உண்டு கொண்டிருந்தான். ஜேம்ஸ்பாண்டால் கூட இப்படி ஒரு அசாதாரணமான செயலை செய்ய முடியாது. அசாதாரணமான மனிதர்கள் நம்மை கவருவது இயல்புதானே.

சிறுவயதில் எனது அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்தியதுண்டு, ஆக்ஸிஜன் இல்லையென்றால் மனிதன் உயிர்வாழமுடியாது என்று. ஆனால் சங்கர் என்னை குழப்பிவிட்டான். என்னிடம் மட்டும் சற்றுப் பணமிருந்தால் அவனை கின்னஸில் இடம் பெறச் செய்திருப்பேன். என்னால் அடித்துச் சொல்லமுடியும் யாராலும் அந்த கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டியில் நின்று கொண்டு உணவு உண்ண முடியாது. அவனது தலைமுடி இருக்கிறதே ஐயோ!!!, ஒற்றை வரியில் சொல்வதென்றால் அது ராணா டார் முறுக்கு கம்பிகள். எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது. பொதுவாகவே பிச்சைக்காரர்களுக்கு சொட்டை விழுந்து நான் பார்த்ததேயில்லை, குளிக்காமல் இருப்பதில் ஏதோ விஷயம் இருக்கிறது. காப்பி கலரில் நான் யாருடைய பற்களையும பாத்ததேயில்லை. வெகு நாட்கள் கழித்து சங்கருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த சமயத்தில் அவனுக்கு கோல்கேட் பேஸ்ட்டும். பிரஸ்சும் வாங்கிக் கொடுத்தேன். அவன் அவ்வளவு டென்ஷன் ஆகி நான் பார்த்ததேயில்லை. அதை தூக்கி எறிந்துவிட்டான். என்னுடன் 2 நாட்களாக பேசவில்லை. என்ன ஒரு லட்சிய வெறி இருந்திருந்தால் அவன் அவ்வாறு செய்திருப்பான்.

எனக்கு நீண்ட நாட்களாக இப்படி ஒரு குரூரமான ஆசை ஒன்று இருந்தது. அவனை மயக்கமடையச் செய்தாவது குளிக்க வைத்துவிட வேண்டும், ஒரு வேளை கோபித்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாலும் செய்துகொள்வான். அவனை வெகு நாட்களாக நாத்திகன் என்றே நினைத்திருந்தேன். அதற்குத் தகுந்தாற்போல் தான் நானும் பேசிக்கொண்டிருந்தேன் அவனிடம். ஏனென்றால் அவனது காஸ்டியூம் பிளாக் அண்ட் பிளாக். பின்னர் தான் தெரிந்தது அந்த ஆடை ஆரம்பத்தில் வெள்ளை நிறத்துடன் இருந்தது. என்று, அவனது உள்ளத்தைப் போவே.

நான் வாங்கிக் கொடுத்த பொருட்களில் ஒன்றை மட்டும் பத்திரமாக வைத்துக் கொண்டான். மற்ற அனைத்தையும் பரிசளித்துவிட்டான் மற்ற பிச்சைக்கார நண்பர்களுக்கு. அந்த கறுப்பு கண்ணாடி, அதை அவன் கழட்டுவதே இல்லை. அது ரேபாண்ட் கிளாஸ். அதை அவன் விரும்பிக் கேட்ட பொழுது என்னால் மறுக்க முடியவில்லை. அவனுக்கு அதன் விலை இன்றும் தெரியாது.

அவனுக்கு வயது 25லிருந்து 30 க்குள் தான் இருக்கும், எனக்கு 27. திருமணமாகாத நிலையில், பல்வேறு மாடர்ன் பெண்கள் எனது இரவுத் தூக்கத்தை கெடுப்பதுண்டு. நான் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட விஷயங்களுள் இதுவும் ஒன்று. அவனுக்கு பெண்கள் மேல் அப்படி ஒன்றும் ஈர்ப்பில்லை. இதை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மகாத்மா காந்தி தனது பிரம்மச்சரிய சோதனையாக பல்வேறு அசாதாரண சோதனைகளையெல்லாம் நிகழ்த்தியதாக படித்ததுண்டு. தனது 70 வயதுவரை சிரமப்பட்டிருக்கிறார். இவன் அப்படி ஒன்றும் சிரமப்படுவதாகத் தெரியவில்லை. அவன் தன் மனதுக்கு தெளிவாகச் சொல்லிவிட்டான். ஒரு பெண்ணுக்கும். துனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று. நான் இன்றும் சிரமப்பட்டுக் கொண்டுதானிருக்கிறேன் அவனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயமிருக்கிறது.

நான் எனது பாலுணர்வு எண்ணங்களிலிருந்து விலகி நிம்மதியாக இருக்க ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவதுண்டு. அது ஆச்சரியப்படத்தக்க வகையில் பலனும் தந்தது. சிரமம் என்னவெனில் செருப்பு போடாமல் இருப்பது. கணுக்காலில் பாளம் பாளமாக வெடித்து விடும். ஆனால் இந்த சங்கர் தன் வாழ்நாளில் செருப்பே போட்டதில்லை. நான் வாங்கிக் கொடுத்த செருப்பை இன்னும் தனது அக்குளில்தான் வைத்துக் கொண்டிருக்கிறான். அதை ஏன் அவன் தூக்கிப்போடவில்லை என்றும் புரியவில்லை.

அவன் என்னிடம் அதிமாகப் பேசியதில்லை பெரும்பாலும் சைகைதான். அவன் தன் பெயரை மணலில் எழுதிக் காட்டிய பொழுது அவன் சிறிது படித்திருக்கிறான் என்று புரிந்தது. ஒரு மாத முயற்சிக்கு பின்னரே பெயரை தெரிந்து கொள்ள முடிந்தது. அன்று நான் சங்கரை படம் பார்க்க அழைத்து சென்றிருந்தேன். படம் அந்நியன். நன்கு வசதியாக உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தோம். எங்கள் பக்கத்தில் உட்கார யாருக்கும் தைரியம் வரவில்லை. என்னதான் எனது துவைத்த ஆடைகளை சங்கர் போட்டு வந்திருந்தாலும் எப்படியோ கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஒரு வேளை அந்த வாடை எனக்கு மட்டும் பழகிவிட்டதோ என்னவோ படம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று சங்கருக்கு கோபம் வந்துவிட்டது. எழுந்து சென்றுவிட்டான். அவனுக்கு அடிக்கடி பாரதியை போல் கோபம் வந்து விடுகிறது. திரும்பிக் கூட பார்க்காமல் எழுந்து சென்று விடுவான். படத்தில் அந்நியன் சார்லியை கொல்லும் காட்சியில் தான் எழுந்து சென்றான். நான் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

இந்த விஷயம் சம்பந்தமாக மற்றொருநாள் அவனிடம் விவாதித்தேன். உங்களுக்கு ஒரு கை ஓசையை பற்றித் தெரியுமா? ஓஷோவின் புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஆம். அவனுடன் விவாதிப்பது அத்தகையது தான். நான் மட்டும் தான் பேசிக்கொண்டிருப்பேன். அவன் என்ன பேசினாலும் ஒரே லுக் தான் கொடுப்பான். அதில் அப்படி என்னதான் புரிகிறதோ. நான், தான்தோன்றித்தனமாக பேசிக்கொண்டிருப்பேன். கேள்வியும் நானே பதிலும் நானே. ஆனால் மற்றவர்களுடன் என்னுடைய உறவு அப்படி இருந்ததில்லை. எனது கேள்விக்கு யாராவது பதிலிறுக்கவில்லை என்றால் சுள்ளென்று கோபம் வந்துவிடும். என்னை அவமானப்படுத்தியதைப் போல உணர நேரும். ஆனால் சங்கரிடம் மட்டும் அப்படி இல்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை.

ஒருவேளை ஒழுங்கற்ற தான் தோன்றித்தனமான வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறதோ என்னவோ, என்னுடைய வாழ்க்கை முறை அப்படியில்லை. எந்நேரமும் டென்ஷன்தான். இதயம் எப்பொழுதும் வேகமாகத்தான் துடித்துக் கொண்டிருக்கும். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை என் இதயத்துடிப்பு ஆரோக்கியமாக துடிக்க அன்று மட்டும் தான் அனுமதி. என்னிடம் பணம் இருக்கிறது. வேலை இருக்கிறது. சமுதாயத்தில் மரியாதை இருக்கிறது. ஆனால் படபடப்பான வாழ்க்கை, தெரிந்தே என்னை கடந்து போகும் எனது வாழ்க்கை, எப்படி என்னால் வேதனைப்படாமல் இருக்க முடியும். எனக்கு கூடிய விரைவில் இதய நோய் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆம், நான் சங்கரை பார்த்து பொறாமைப்படுகிறேன். அது தான் உண்மை அவன் என்னை ஏங்க வைத்துவிட்டான். ஒரு பிச்சைக்காரன் என்னைக் கவர்வதற்கு அப்படி என்ன காரணம் இருக்க முடியும் என வெகு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இழக்கப்பட்ட வாழ்க்கையை, சங்கரின் சுதந்திரமான வாழ்க்கையுடன் நட்பு என்கிற பெயரில் சேர்த்துக் கொள்வதன் மூலம் என்னை நானே நிறைவு செய்து கொள்ள பார்த்திருக்கிறேன். வெறும் போலி நிறைவுதான். இருப்பினும் சிறிது சுகம் கிடைக்கிறது. ஒரு வகையில் இது எனது சுயநலம்தான். சங்கர் என்னை மன்னிப்பானாக.

- சூர்யா([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com