Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பனித்திரை
பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன்


கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பல நல்ல அம்சங்கள் இருப்பதை, அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். உறவுகளுக்கிடையே உள்ள முழுமையான ஈர்ப்பு உண்மையான இனிமை சரியான அர்த்தம் போன்றவைகளை நான் அனுபவித்தது இந்த கூட்டுக் குடும்ப சூழலில்தான். என்னைவிட நான்கு வயது மூத்த என் அண்ணனுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கூட்டுக் குடும்பமாய் இருந்த அனுபவம் எனக்கு உண்டு.

என் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு, எனக்கு அரசு வேலை கிடைத்தது, நான் நகர்ப்புறத்திற்கு குடி பெயர்ந்தது, அண்ணனுடைய கல்யாணம், என்னுடைய கல்யாணம், அப்பா அம்மா மரணம், அண்ணனுடைய பிள்ளைகளின் திருமணம், இப்படி எவ்வளவோ நல்லது கெட்டதுகள் கடந்த நாற்பது ண்டுகளாக நடந்து முடிந்துவிட்டது. இந்தக் காலங்களிலெல்லாம் இல்லாத பூசல்கள் மூன்றாண்டுகளுக்கு முன் எப்படித்தான் முளைத்ததோ தெரியவில்லை. முதலில் பேச்சுவர்த்தை குறைந்தது. இதை பெரிது படுத்தாமல் விட்டதன் விளைவு, பின்னர் அது பெரிய விஷயமாய் மாறிப் போனதுடன், பாகப் பிரிவினை அளவுக்கு போய்விட்டது.

பாகப் பிரிவினைக்குப் பின்னர் பெரும்பாலான சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை. நானும் என் சகோதரரும் இதில் விதிவிலக்காக இருக்க முடியவில்லை. நானும் என் மனைவி மற்றும் பிள்ளைகளும் சமமான பங்கு தரவில்லை என்று நினைத்துக் கொண்டு அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தோம். அநியாயமாய் நான் அபகரித்துக் கொண்டதாய் நினைத்திருக்கக் கூடுமோ என்னவோ, எங்கள் கண்களில் படுவதை அவரும் தவிர்த்து வந்தார்.

ஒவ்வொரு தீபாவளி, பொங்கல், திருவிழா போன்ற நல்ல நாள் பெரிய நாட்களுக்கு கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்று வந்து கொண்டிருந்த நாங்கள் பாகப்பிரிவினைக்குப் பிறகு அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டோம். எங்கள் மீது இருந்த கோபத்தால் அவரும் எங்களை அழைக்கவுமில்லை. இப்படியாக மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆழ்ந்து யோசனை செய்து பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது எனக்கு. அவர் படிப்பறிவில்லாதவர். என்னைப் பொருத்தவரையில் நான்கு இடங்களுக்கு போய் வருவதுடன் பலதரப்பட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். என்னுடைய உலகம் அவருடையதை விட சற்று விசாலமானதாகவே எனக்குப்பட்டது. எப்படியாவது நானகவே சென்றேனும் அவரை சரி செய்து விட வேண்டும் என்ற மனநிலைக்கு என்னை தயார் செய்து கொண்டிருந்ததுடன் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருந்தேன்.

எதிர்பாராத விதமாக என் மகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கினான். அக்கம் பக்கத்தவர்கள் 'தலைதப்பியது தம்பிரான் செயல்' என்று சொல்லும் அளவுக்கு விபத்தின் தன்மை இருந்தது. மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சைப் பிரிவில் என் மகனை வைத்திருந்தொம். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து 'முகத்திலும் தாடையிலும் எலும்புமுறிவு இருப்பதாகவும், அறுவை சிகிச்சையின் மூலம் அதனை சரிசெய்ய வேண்டும் என்றும், இல்லையேல் முகத்தின் அமைப்பு மாறிவிடும் என்றும் சொன்னதோடு, இந்த காயம் நெற்றியில் ஏற்பட்டிருந்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடும்' என்றும் சொன்னார்கள். என் மகனின் சிதைந்துபோன முகத்தை பார்க்கச் சகிக்கவில்லை. நானும் என் மனைவியும் வெளியிட முடியாத வேதனையில் நொந்து போயிருந்தோம்.

இந்த விபத்துச் செய்தி மிகவும் விரைவாக எங்கும் பரவி விட்டது. நண்பர்கள் உறவினர்கள் கிரமத்திலிருந்த தெரிந்தவர்கள் எல்லோரும் மருத்துவமனைக்கு பார்க்க வந்தார்கள். என் அண்ணன் குடும்பமும் வந்திருந்ததாய்ச் சொன்னார்கள்.

மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து மாமா மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

"ஒன்னோட அண்ணன்காரனும் அவன் சம்சாரமும் ஆஸ்பத்திரிக்கி வந்திருந்தாங்களாம். நீயும் உன் பொன்டாட்டியும் பேச மாட்டேன்னிட்டிங்களாம். ஊரு முழுக்க ஒரே பொரனியா இருக்கே. என்ன விஷயம்?" என்று கேட்டார்.

"மாமா, நாங்க ரொம்ப வேதனையிலெ இருந்தோம். அவங்க வந்து போனதை நாங்க கவனிக்கலெ. இன்னமும் என்னோட மகன் அவசர சிகிச்சைப் பிரிவுலெ இருக்கிறதால் வருற போற எல்லாரையும் சரியா கவனிக்க முடியாமல் போயிடுச்சு. வேறே ஒன்னும் வஞ்சகமேதும் இல்லை மாமா." என்றேன்.

'ஒருவர் மேல் கசப்பு இருக்கும்போது அவர் சாகசமே செஞ்சாலும் அது சாதாரணமாகக் கூட தெரியாது. ஒருவர் மீது நல்லெண்ணம் இருக்குமானால் அவர் சாதாரண காரியம் செய்தாலும் அது சாகசமாகத் தெரியும்' என்ற உண்மையை இப்போது நடைமுறையில் புரிந்து கொண்டேன்.

"சிங்கப்பூரில் இருக்கிற ஒன்னோட அண்ணன் மகனுக்கு கல்யாணமாம். பொண்ணு பாத்து நிச்சயம் செஞ்சு வச்சிருக்கிற விஷயம் தெரியுமா ஒனக்கு." என்றார் மாமா.

"தெரியாது மாமா." என்றேன்.

"பொங்கலுக்கு முன்னாடி ஒன்னோட அண்ணன் மகன் ஊருக்கு வர்றதா சொல்லிகிடுறாங்க. தை மாசமே கல்யாணத்தை முடிச்சுடுறதாவும் கேள்விப் பட்டேன். உங்க பாகப் பிரிவினைக்குப் பின் ஒன்னோட அண்ணன் ஏங்கூட பெசுறது இல்லெ." என்றார்.

"கெள்விப்பட்டேன். கல்யாணத்துக் குள்ளே எல்லாத்தையும் சரி செஞ்சுடனும் மாமா." என்றேன்.

"சரி சரி. அதுதான் நல்லது." என்றார்.

மருத்துவமனையை விட்டு நாங்கள் வீட்டுக்கு வந்து சேர கிட்டத்தட்ட இருபது நாளுக்கு மேலாகியது. இன்னும் பத்து நாளில் பொங்கல் வந்து விடும். ஊரிலிருந்து எனக்கு செய்தி ஒன்று வந்தது. பாகப்பிரிவினையின் போது என் அண்ணன் எனக்குத் தரவேண்டிய பணத்தில் ஒரு பகுதியை இப்போது தர இருப்பதகவும் அதனை ஊருக்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அது.

'கல்யாணம் ஒரு சில நாட்களில் நடக்க இருக்கும் சூழ்நிலையில் எப்படி அண்ணனிடம் பணத்தை வங்கிக் கொள்வது? கடினமான சூழ்நிலையைக் கூட கணக்கில் கொள்ளாமல் பணத்தைக் கைப்பற்றிக் கொண்டு சென்று விட்டதாய்ப் பேசப் படுமே. என்ன செய்யலாம்.' என்று யோசித்து யோசித்து அயர்ந்து போனேன். 'மனைவி மக்களிடம் பகிர்ந்துகொண்டு கருத்துக் கேட்கலாம்.' என முடிவு செய்தேன்.

"இதுதான் சமயம். கொடுக்க வேண்டிய பணத்தைத்தான் நாம வாங்கிக்க போறோம். இதுலே தயக்கம் தேவையில்லை." என்றனர் பிள்ளைகள். மனைவியும் இதை உடனே ஆமோதித்தாள்.

"கல்யாணம் கொஞ்ச நாளுக்குள்ளே வரப் போவுது. அதுனாலே கல்யாணம் முடிந்த பிற்பாடு பணம் மிஞ்சினா வாங்கிக்கிடுறேன்னு சொல்லப் போறேன்." என்று நான் சொன்னதும், "உங்க விருப்பம்." என்று சொல்லிவிட்டு சலிப்போடு அகன்றாள் மனைவி.

பின்னர் கிராமத்திற்குச் சென்றேன். பணம் தருவதாக தகவல் தந்தவரின் வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் உட்காரச் சொல்லிவிட்டு "நான் போய் ஒன்னோட அண்ணனைப் பாத்து விஷயத்தை சொல்லிப்புட்டு வாறேன்." என்று கிளம்பினார்.

"நானும் வர்றேன். எனக்கு அங்கே வர்றதில் ஒண்ணும் தயக்கம் இல்லை." என்றேன்.

"அப்படியா? ரொம்பவும் சந்தோஷம். வா போகலாம்." என்றார்.

சில ஆண்டுகளுக்குப் பின் அன்றுதான் என் அண்ணன் வீட்டில் அடி வைத்தேன். நாங்கள் வருவதை வீட்டின் உள்ளே இருந்து அண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என் கூட வந்தவரையும் என்னையும் வாங்கன்னு ஒரு வார்த்தை கூட அழைக்கவில்லை. எங்களைப் பார்த்ததும் எழுந்து அறைக்குள் செல்வது தெரிந்தது. நாங்கள் திண்ணையில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தோம். சற்று நேரத்தில் அவர் உள்ளே இருந்து ஒரு மஞ்சள் நிற பையுடன் வந்தார். வேகமாக பணத்தை எண்ணினார். என்னுடன் வந்தவரிடம் "பாக்கியை இன்னுங் கொஞ்ச நாளில் தந்திடுறேன்னு சொல்லு." என்று நீட்டினார். என் கூட வந்தவர் அதை வாங்க எத்தனிக்கையில், நான் தடுத்தேன்.

"கல்யாணம் சமீபத்துலே நடக்கப் போறதாக் கேள்விப்பட்டேன். இந்த நேரத்திலே நான் வாங்கிக்கிடுறதில் எனக்கு விருப்பமில்லை. திருமணம் முடிஞ்ச பின் மிச்சமிருந்தா வாங்கிக்கிடுறேன்." என நேரிடையாக அண்ணனிடமே சொன்னேன்.

"அதெல்லாம் வேண்டாம். ஒன்னோட காசை நீ வாங்கிகிட்டு போ. கல்யாணத்தைப் பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம்." என்னைப் பார்க்காமலே சொன்னார்.

"மவனுக்கு பொண்ணு பார்க்கிறதுக்கு, நிச்சயதார்த்தம் செய்யிரத்துக்கு என்னே யாரும் கூப்பிடாலே. அதை நானும் தப்பா எடுத்துக்க விரும்பாலே. ஏன்னா கோப தாபங்கிறத்துனாலே தகவல் தராலே. இதுக்காக வேண்டி காலம் பூராவும் ஒதுங்கி போறதுங்கிறது எனக்கு சரியாகப் படலே. இந்தா இப்ப கூட இங்கே என்னே யாரும் வான்னு ஒரு வார்த்தை சொல்லி கூப்பிடலே. நானாத்தான் வந்தேன். நீங்க கொடுக்கிற பணத்தை இப்போ வாங்கிகிட்டுப் போனேன்னா, இந்த பணத்தை வாங்கத்தான் அழைக்காமே பல்லே காட்டிகிட்டு நானா வந்ததா ஊரே பேசிக்கிடும் வாய்ப்பு உருவாகிடும். இல்லையா?" என்றேன்.

இதற்கு ஏதுவாக என் கூட வந்தவரும் நிறைய எடுத்துச் சொன்னார். பின் அண்ணனின் பிடி கொஞ்சம் தளர்ந்திருந்ததாய்த் தெரிந்தது.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கொண்டு வந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து அங்கே கிடந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார். கொஞ்ச நேர மெளனத்திற்குப் பின் நேரிடையாக என்னுடைய மகனைப் பற்றி நலம் விசாரித்தார்.

"மத்தியான சாப்பாட்டு நேரமாச்சு, சாப்புட்டு புட்டு போடா." என்றார்.

"சாப்பாடு தயாரா இருந்தா சாப்புடுறேன்." என்றதொடு எழுந்து விட்டுக்குள் சென்றேன். சாப்பாடு போடப்பட்டது. பின்னர் நான் என் வீட்டுக்குக் கிளம்புகையில்,

"மாட்டுப் பொங்கலுக்கு எல்லாரையும் இங்கே அழைச்சுகிட்டு வந்துடு." என்றார். நானும் வருவதற்கு இணங்கி தலையசைத்தேன்.

என் வீட்டுக்கு வந்ததும், நடந்த விஷயங்களைச் சொன்னென். மனைவி மக்கள் எல்லோரும் மெளனமாய் கேட்டுக் கொண்டார்கள். பிள்ளைகள் மாட்டுப் பொங்கலுக்கு கிராமத்திற்குப் போவதற்கு சின்னச் சின்ன கேள்விகளுக்குப் பின் சம்மதித்தார்கள். மனைவி மட்டும் கொஞ்சம் முனகினாள்.

"புள்ளைகளை அழச்சுகிட்டு நீங்க வேணுமுன்னா போங்க. என்னே மட்டும் அழைக்க வேண்டாம்."

"நீ சொல்லுற மாதிரி பிள்ளைகளை மட்டும் அழைச்சுகிட்டு போனேன்னா அது தப்பாப் போயிடும். அப்புறம் நீ மட்டும் அவங்களுக்கு எதிராளியிடுவே."

"அப்புடி ஒன்னும் ஆகாது. நீங்க பொயிட்டு வாங்க."

"நான் சொல்லுறதேக் பொறுமையா கேளு. நடந்த காரியங்களுகெல்லாம் மூல காரணம் நீதான்னு ஊர்க்காரங்க பேச ஆரம்பிச்சுடுவாங்க. தயவு செஞ்சு இதை நல்லா புரிஞ்சுக்கோ."

"கூடப் பொறந்த தம்பிக்கி சரி பங்கு குடுக்க மனசு வராத மனுஷன்தான் உங்க அண்ணன். நீங்க வேணுமுன்னா வழியக்க போய் விழலாம். எனக்கு அது சாத்தியப்படாது."

"நல்ல காரியங்கள் நடப்பதற்கு விட்டுக்கொடுத்துப் போறதில் தப்பில்லே. 'விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான்; கெட்டுப் போறவன் விட்டுக் கொடுக்க மாட்டான்'னு சொல்லுற பழமொழியை நீ கேட்டதில்லையா?"

"விட்டுக் கொடுக்கிறது, தொட்டுக் கொடுக்கிறதெல்லாம் உங்களோட வச்சுகிடுங்க. என்னை இதுக்கு கூப்பிட வேண்டாம்."

கராராக கண்டிச்சு பேசும் மனைவியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போனேன். 'இருந்தாலும் இவளை விடக் கூடாது. எப்படியும் சரிசெய்தாக வேண்டும். நடைபெற இருக்கும் அண்ணன் மகன் திருமணத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ள வேண்டும். இந்தத் தருணத்தை விட்டு விட்டால் பிறகு இன்னும் அதிக சிக்கலாய்ப் போய்விடும்.' என நினைத்துக் கொண்டேன். 'ஏதாவது வழியைக் கண்டுபிடித்தாக வேண்டுமே' என்று முயற்சியைத் தொடர்ந்தேன்.

"முன்பெல்லாம் நான் சொல்லும் வார்த்தைக்கு மனைவி மக்களிடம் நல்ல நம்பிக்கை இருக்கும். எம்மேலே மதிப்பு வச்சிருந்ததாலே என்னுடைய வார்த்தையில் நம்பிக்கை இருந்திச்சு. இப்போ என்னுடைய வார்த்தையிலே நம்பிக்கை தளர்ந்திருச்சு என்பது கண்கூடாத் தெரியுது. எம்மேலே இருக்கிற மதிப்பு கொறைஞ்சிருக்கு என்பதை இது காட்டுது." என்று புலம்புவதுபோல் பாவனை செய்தேன்.

முரண்டு பிடித்த மனைவி அருகில் வந்தாள்.

"இங்கே பாருங்க. நீங்க ஒண்ணும் பொலம்ப வேண்டாம். நான் வர்றேன். ஆனா அங்கே சாப்பிட மாட்டேன்."

'கொஞ்சம் அசைந்து கொடுத்தாலும் திரும்ப திரும்ப முருங்கை மரம் ஏறிக் கொள்கிறதே வேதாளம்' என்று அசந்து போன போது புதிதாய் ஒரு யோசனை தொன்றியது.

"சரி. நீ அங்கே வா. சாப்பிடும்போது நீயும் நம் மகனும் மாமா வீட்டுக்கு சாப்பிடச் சென்று விடலாம். நானும் நம் மகளும் அண்ணன் வீட்டில் சாப்பிட்டு விடுகிறோம்." என்ற பின்பு ஒரு வழியாய் சம்மதம் கிடைத்தது.

மாட்டுப் பொங்கலன்று குடும்பத்தொடு கிராமத்திற்குச் சென்றோம். அண்ணன் வீட்டை அடைந்ததும் அங்குள்ள அனைவரும் வந்து வரவேற்றார்கள். என் மனைவியும் பலகாரம் செய்யும் பெண்களோடு மெதுவாக சங்கமமானாள். குளிப்பாட்டிக் கொண்டு வரப்பட்ட மாடுகளையும் அதற்கு கட்டப்படும் மாலைகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். காளை மாடுகள் மிகவும் குறைந்து போய்விட்டன. மீதமிருப்பதுவும் வத்தலும் தொத்தலுமாக காணப்பட்டது. சில பசு மாடுகள், பாலுக்காக வளர்க்கப்படுபவை, சற்றுப் பரவாயில்லை என்கிற அளவுக்கு இருந்தது. மாட்டுக்கு சோறு ஊட்டி 'பொங்கலோ!... பொங்கல்!' என்று சப்தமும் போட்டாகிவிட்டது. இனி சாப்பிட வேண்டும். சமாளிப்பே இனிமேல்தான். 'என்ன செய்யலம்' என்ற யோசனையோடு வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். மனைவி வெளியே வந்தால், முன்னரே வீட்டில் ஒத்திகை பார்த்த நாடகத்தை நடத்திவிடலாம். இந்த நேரம் பார்த்து யாரும் வீட்டிற்குள் இருந்து வெளியே வரவே இல்லை.

"வா சாப்பிடலாம்." என்று அண்ணன் அழைத்தார்.

திரு திருவென விழித்துக் கொண்டு உள்ளே சென்றேன். வரிசையாகப் போடப்பட்டிருந்த இலைகளின் முன்னே சாப்பிடுவதற்காக என்னுடைய மனைவி, மகள், மகன் மற்றும் அண்ணன் குடும்பத்தினர். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு மூன்று மணி நேரத்தில் இவ்வளவு பெரிய மாற்றமா? ஆச்சரியமாக இருந்தது.

இடைவெளி கூடும்போது சின்ன பூசல்கள் கூட பெரிய பிரச்சினைகளாய் உருமாறி விடுகிறது; உறவின் நெருக்கம் பெரிய பிரச்சினைகளைக் கூட சுலபமாய்ச் சக்தியிழக்கச் செய்து விடுகிறது என்பது அப்போது எனக்கு நன்றாகப் புரிந்தது.

- பட்டுக்கோட்டை சி.வ.தங்கையன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com