Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பரிசுச்சீட்டு
அன்டன் செகாவ் - ருஷ்யா ; தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன்

இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.

மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது' என்றாள். 'குலுக்கல் முடிவு வந்திருக்கா பாருங்க.'

Couple 'ஆமா, இருக்கு,' என்றான் டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?'

'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...'

'நம்பர் என்ன?'

'வரிசை 9499 - எண் 26'

'சரி... பாத்திர்லாம். 9499 அப்புறம் 26...'

பரிசுக் குலுக்கல் அதிர்ஷ்டத்தில் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. பொதுவாக குலுக்கல் முடிவுகளை அவன் சட்டை செய்வதும் கிடையாது. ஆனாலும், இப்போது வேறு செய்ய எதுவும் இல்லாததாலும், கையில் பேப்பர் இருக்கிறதாலும், பரிசு பெற்ற எண் வரிசையில் விரலைக் கீழ்நோக்கி ஓட்டினான். அவனது அசிரத்தையைக் கிண்டலடிக்கிற மாதிரி, மேலிருந்து இரண்டாவது வரியிலேயே அவன் கண்கள் சிக்கிக் கொண்டன. 9499! அசந்து விட்டான் அவன். தன் கண்ணையே நம்ப இயலாமல் கை நடுங்கி மடியில் விழுந்தது செய்தித்தாள். மேற்கொண்டு எண்ணைப் பார்க்க முடியவில்லை. உள்ளே சிலீரென யாரோ தண்ணியைக் கொட்டினாப் போல ஒரு குளிர். வயிற்றில் கிச்சு கிச்சு. இதமான அபாரமான தளும்பல்.

''அடி மாஷா 9499 இருக்கு'' மெல்லச் சொன்னான். வெலவெலத்துப்போன திகைப்பான அந்த முகத்தை அவன் பெண்டாட்டி பார்த்தாள். அவர் முகம் பொய் பேசினாப்போல இல்லை.

''9499-தா?'' மேசை விரிப்பைத் தவற விட்டபடி அவள் முகம் வெளிறக் கேட்டாள்.

''ஆமாண்டி ஆமா. நிசம்மா, இருக்குடி இருக்கு!''

''சரி, நம்ம நம்பர்... அது இருக்கா பாருங்க...''

''ஆமாமா. நம்ம சீட்டின் நம்பர், அதுவும்... ஆனால், இரு. இல்லடி... பார்க்கறேன் பார்க்கறேன். ஆனாக்கூட நம்ம வரிசை - அது இருக்கு. அத்தோட... புரியுதா?...''

பரந்த, அர்த்தம் இல்லாத அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி மனைவியைப் பார்த்தான் டிமிட்ரிச். ஜோரான விளையாட்டு சாமானைப் பார்த்ததும் குழந்தை அப்படித்தான் சிரிக்கும். பெண்டாட்டியும் புன்னகை சிந்தினாள். அவள் வாங்கிய வரிசையில் பரிசு வந்திருக்கிறது, என்றாலும் குறிப்பிட்ட அவள் எண்ணுக்குப் பரிசு பற்றித் தேட அவசரப்படவில்லை அவன். ஓராளைக் கிண்டலும் கவலையுமான காத்திருப்புக்கு உட்படுத்தி அதிர்ஷ்டம் சார்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தினா, என்ன சுகம். என்ன சுவாரஸ்யம்...

ஒரு நீண்ட மெளனம். ''நம்ம வரிசைக்குப் பரிசு'' என்றான் டிமிட்ரிச். ''ஆக நாம பரிசு அடிக்க வாய்ப்பு இருக்கு. ஒரு யூகம்தான்... ஆனா அந்த வாய்ப்பு... அது இருக்கத்தான் இருக்கு!''

''நல்லதுய்யா, மேல பாரும்...''

''பொறுமை. நாம ஏமாற இன்னும் நிறைய நேரம் இருக்கு. மேலயிருந்து ரெண்டாவது வரி - ஆக பரிசு 75000. அது வெறும் துட்டு இல்லடி. சக்தி! மூலாதாரம்! இதோ பட்டியலைப் பாத்திர்றேன். ஆ இதோ 26! - அதானா? நாம நெஜமா ஜெயிச்சா எப்பிடி இருக்கும்?''

புருஷனும் பெண்டாட்டியும் ஒருத்தரை ஒருத்தர் மெளனமாய்ப் பார்த்தபடி புன்னகை செய்து கொண்டார்கள். ஜெயிக்கிற அந்த சமாச்சாரமே அவர்களைத் திக்குமுக்காட்டியது. அந்த 75000 துட்டு அவர்களுக்கு எதற்கு? அதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் வாங்க, எங்கேயெல்லாம் போய்வர... என்றெல்லாம் அவர்கள் பேசவில்லை. கனவு கூடக் காணவில்லை. வெறும் 9499 என்ற எண், மற்றும் 75000 என்ற எண் அவற்றை மாத்திரமே மனதில் நினைத்துப் பார்த்தார்கள். என்னவோ, அந்த எண்கள் கொண்டு வரப் போகிற சந்தோஷங்களை, அதன் விரிவான சாத்தியங்களை அவர்கள் நினைக்கவே இல்லை.

டிமிட்ரிச் செய்தித்தாளைக் கையில் பிடித்தபடி அறையில் மூலை முதல் மூலைவரை நடை பயின்றான். மெல்ல நிதானப்பட ஆரம்பித்தபோதுதான் மெல்ல அவனில் கனவுகாண ஆரம்பித்தான்.

''பரிசு மட்டும் விழுந்திட்டிருந்தா...'' என்றான். ''வாழ்க்கையே புதுசா ஆயிரும். எல்லாமே பூரா மாறிப்போகும். பரிசுச் சீட்டு உன்னிது. என்னிதா இருந்தா, மொதல் காரியமா - ஒரு 25000 எடுத்து பண்ணைநிலம் நீச்சுன்னு போடணும். உடனடிச் செலவுன்னு ஒரு பத்தாயிரம். புது கட்டில், பீரோ, மேஜை... அப்புறம் உல்லாசப் பயணம்... கடன் கிடன் அடைக்க, இந்த மாதிரி. மிச்ச 40000 ஒரு வங்கில போட்டுட்டா வட்டி கிடைக்கும்...''

''ஆமாம், ஒரு பண்ணை - அது நல்ல விஷயம்...'' உட்கார்ந்த வண்ணம் மடியில் கை வைத்தபடி அவள் பேசினாள்.

''துலா அல்லது ஓர்யோல் மாகாணப் பக்கம் எங்கியாவது... இப்ப சத்திக்கு நமக்கு கோடை வாசஸ்தலம்லாம் தேவையிராது. நம்ம தங்காட்டியும், வாடகை கீடகைன்னு வருமானம் வருமில்ல?''

வீட்டில் மாட்டியிருக்கும் அழகழகான புகைப்படங்களை மனசில் பார்த்தான் அவன். முதல் படத்தை விடவும் அடுத்தது சூப்பர் என்கிற தினுசில். எல்லாத்திலும் அவன் அத்தனை அம்சமா ஆரோக்கியமா கொழுகொழுன்னு இருந்தான். அப்பிடி நினைக்கவே நல்ல வெதுவெதுப்பு. அட உடம்பே சூடாயிட்டது.

அந்தக் கோடை இரவில் அப்போதுதான் சில்லிட்டுப் போன சூப் குடித்து முடித்திருந்தான். மனசினால் அவன் இருந்த இடமே வேறு - நதிக்கரையொன்றின் கதகதப்பான மணலில் மல்லாக்கக் கிடக்கிறான். அல்லது தோட்டத்து எலுமிச்சை மரத்தடி.. இப்போதும் என்ன வெக்கை! பையனும் பெண்ணும் அருகே மண்ணை அளைந்தபடியோ, அல்லது பச்சைப்புல்தரையின் சிறு பூச்சிகளைப் பிடித்தபடியோ. இனிமையான அரைத்தூக்கம். ஒரு யோசனையுங் கிடையாது. இன்னிக்கு அலுவலகம் போக வேணாம் என்கிறாப்போல அவிழ்த்துவிட்ட நிலை. இன்னிக்கு மாத்திரங் கூட இல்லை. நாளை - நாளைமறுநாள் கூட போக வேண்டியதில்லை. சும்மா கெடந்துருவள அலுத்துப் போச்சா, வைக்கப்படப்பு பக்கம் போகிறான். காடுகளில் குடைக்காளான் தேடிப் போகிறான். வலைவீசி சம்சாரிகள் மீன் பிடித்துக் கொண்டிருக்கறதை வேடிக்கை பார்க்கிறான். சூரியன் அடையுதா, துண்டும் சோப்பும் எடுத்துக்கறான்... குளியல் மறைவுக்குள் புகுந்து கொள்கிறான். நிதானமா உடைகளைக் கழற்றிக் கொள்கிறான். மெதுவா நெஞ்சை விரல்களால் நீவிக்கொண்டே தண்ணீரில் இறங்குகிறான். நுரைத்து வழியும் சோப்பு. சிறு மீன்கள் பதறி விலகினாப் போல... நீர்க்கொடிகள் லேசாய் ஆடுகிறாப் போல. குளியலைத் தொடர்ந்து, தேநீர். கூட கடித்துக் கொள்ள பால் மற்றும் கிரீம் பிஸ்கெட்டுகள். அதற்கப்பால் ஒரு உலாவல், அல்லது பக்கத்து¡ட்டு மனுஷாளோடு அரட்டை.

''ஆமாமா, பண்ணை வாங்கறது நல்ல விஷயம்'' என்றாள் பெண்டாட்டி. பார்க்கவே அவளும் கனவுலோகத்தில் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது.

இவான் டிமிட்ரிச் இலையுதிர் காலம் மற்றும் அதன் மழை பற்றி எண்ணமிட்டான். குளிரான அந்த மாலைப்பொழுதுகள். அதைத் தொடரும் இந்தப் பக்கத்து வேனில். இக்காலங்களில் அவன் தனது தோட்டத்தில் மற்றும் நதிப்பக்கமாக அதிகம் நடந்து உடற்பயிற்சி கொள்ள வேண்டியதிருக்கும். அப்போதுதான் உடம்பு முழுசும் தகிப்படங்கும். அதையடுத்து பெரிய டம்ளரில் ஓட்கா மது. சாப்பிட உப்புபோட்ட காளான். பொடிசு பொடிசா நறுக்கிய வெள்ளிரிப் பிஞ்சு... திரும்ப இன்னொரு டம்ளர்... சமையல் அறைப் பக்கத்துச் சிறு தோட்டம். பிள்ளைகள் அங்கிருந்து கேரெட்டோ முள்ளங்கியோ மண்வாசனையுடன் பிடுங்கி வருகிறார்கள். இவன் நல்லாக் கால்நீட்டி சோபாவில் படுத்தபடி, படம்லாம் போட்ட பத்திரிகைகளைப் புரட்டுதல். அதாலேயே முகத்தை மூடிக்கொண்டு இடுப்பு இறுக்கங்களைத் தளர்த்திக்கிட்டு ஹாயான குட்டித் து¡க்கம்.

வேனில் ஓய, வருகிறது மேக மூட்டமான பருவம். ராப்பகலான விடாக்கண்டன் மழை. மொட்டை மரங்கள் திணறும். காற்று சிலீரென வீசும். நாயும் குதிரையும் கோழிகளும் எல்லாமே நனைஞ்சு நொந்து நூலாய் அசமந்தமாய்க் கெடக்கும். நாள்க் கணக்கா வெளிய வர முடியாது. உலாப் போக இடங் கிடையாது. சாத்திக் கிடக்கிற ஜன்னலைப் பார்த்துக்கிட்டு வீட்டுக்குள்ளியே நடை. மகா இம்சை!

சுதாரித்துக் கொண்டு இவான் டிமிட்ரிச் மனைவியைப் பார்த்தான்.

''நான் வெளிநாடு கூடப் போலாம் மாஷா?'' என்றான் அவன்.

இலையுதிர்கால முடிவில் வெளிநாட்டுப் பயணம் - பிரான்சின் தென்பகுதிகள்... இத்தாலி... இந்தியா!... என்றெல்லாம் யோசனை நீண்டது.

''நானும் நிச்சயம் வெளிநாடெல்லாம் போணும்'' என்றாள் பெண்டாட்டி. ''ஆனா பரிசு விழுந்த எண்ணைப் பாருங்க...''

''பொறு! பொறு!''

திரும்ப அறைக்குள் நடக்க ஆரம்பித்தபடி நினைவை நீளவிட்டான். இவளா... வெளிநாடு போயி என்ன பண்ணுவா இவ? தனியாத்தான் நான் போகணும். அல்லது அந்தந்தக் கணங்களுக்காக வாழ்கிற ஸ்திரீகளுடன் போகலாம். சில பெண்கள் பிரயாணம் பூராவும் தொணதொணத்துக்கிட்டே வரும். வாய் ஓயாமல் வேற பேச்சே பேசாமல் தன் பிள்ளைங்களைப் பத்தியே சொல்லிச் சொல்லி அலுத்துக்கும். எதுக்கெடுத்தாலும் விதி விதின்னுக்கிட்டே வரும். இவான் டிமிட்ரிச் தன் பெண்டாட்டி ரயிலில் தன்கூட வருவதாக யோசித்தான். சுத்தி வர பைகள், கூடைகள், பொட்டலங்கள். ஸ்ஸப்பா - என ஒரு சலிப்பு. இந்த ரயிலுல வந்ததுல தலைவலி மண்டையப் பொளக்குது. எம்மாஞ் செலவுடியம்மா... ஸ்டேஷன்ல வண்டி நிக்குதோ இல்லியோ வெந்நித் தண்ணிக்கு, ரொட்டிக்கு வெண்ணைக்குன்னு ஓடணும் அவன். ராப்பொழுதுக்கு அவள் சாப்பாடு சாப்பிட மாட்டாள். ஸ்டேஷன்ல நல்ல சாப்பாடு கிடைக்காதில்லையா?.

என்னியப் போட்டு நப்பி எடுத்துருவா, என அவளைப் பார்த்தபடியே நினைத்துக் கொண்டான் அவன். ஆ - பரிசுச்சீட்டு அவளிது, என்னிதில்ல. அதிருக்கட்டும், இவ வெளிநாடு போயி என்ன செய்யப்போறா! அங்க அவளுக்கு என்ன இருக்குன்னு நினைக்கிறா? ஏதாவது ஹோட்டல்ல போயி முடங்கிக்குவா. வெளிய வரவே மாட்டா. என்னியும் வெளிய விடமாட்டா... எனக்குத் தெரியும்!

தன் வாழ்க்கையிலேயே முதன்முதலா அவன் தன் பெண்டாட்டியை எதுக்கும் லாயக்கில்லாத கிழவியாக நினைத்தான். அவ கிட்ட போனாலே சமையல் நெடி. நான் எப்பிடி இளமையா ஆரோக்கியமா மலர்ச்சியா இருக்கிறேன்! இன்னிக்கும் மாப்ளையாகலாமே...

ஆனா அதெல்லாம் மடத்தனமான கற்பனை, என நினைத்தான். என்னாத்துக்கு அவ வெளிநாடு போறா? அங்க அவளுக்கு என்ன இருக்கு?... ஆனாலுங் கூட அவ போவாள். உண்மையிலேயே நேப்பிள்ஸோ கில்ன்னோ... எல்லா இடமும் அவளுக்கு ஒண்ணுதான். தானும் அனுபவிக்க மாட்டா. என்னையும் அனுபவிக்க விட மாட்டா... ஒண்ணொண்ணுத்துக்கும் நான் அவகிட்ட கையேந்தி நிக்கணும்! எனக்குத் தெரியும் - எல்லாப் பொம்பளைகளையும் போலவே அவளும் கைக்குப் பணம் வந்ததும் எல்லாத்தையும் அப்டியே போட்டு அமுக்கி வெச்சிக்குவா. தன் சொந்தக்காரன் சேக்காளின்னு கவனிச்சுக்குவா. என்னையத் தான் போட்டு நோண்டுவா...

அவளது சொந்தக்காரர்களைப் பற்றி இவான் டிமிட்ரிச் நினைத்தான். அண்ணந்தம்பி அக்கா தங்கச்சி அத்தை மாமா... எல்லாச் சென்மங்களும் பரிசு விழுந்திருக்குன்னு கேள்விப்ட்டாப் போறும் உருண்டு பொரண்டு ஓடி வந்துருவாங்க. பிச்சைக்காரச் சிரிப்பும் கெஞ்சலும். கேடுகெட்ட சனியன்கள். கண்றாவிக் கும்பல்... எதும் குடுத்தியா இன்னுங் குடுன்னுவாங்க. குடுக்கலியா வண்டை வண்டையாத் திட்டுவாங்க. நாசமாப் போன்னு சாபம் விடுவாங்க...

தன் சொந்தக்காரர்களிடம் இவான் டிமிட்ரிச் முன்பு வேற்றுமுகம் காட்டாதவன், இப்போது அவர்களை வெறுப்போடும் எதிர்ரிகளாகவும் பார்த்தான். எல்லாம் மனுஷாளோடவே சேர்த்தி கிடையாது... என்று நினைத்துக் கொண்டான்.

தன் பெண்டாட்டி முகம் கூட அவனுக்குப் பிடிக்காமலும் வெறுப்பேத்தக் கூடியதாகவும் இருந்தது. அவளையிட்டும் உள்ளே ஆத்திரம் கிளர்ந்தெழுந்தது. கடுப்பான கடுப்பு. பணத்தைப் பத்தி இவளுக்கு என்னா தெரியும். பிசினாறிப் பொம்பளை. பரிசு அடிச்சா அவ எனக்கு ஒரு நூறு ரூபிள் தருவா. சொச்சத்தப் பெட்டில போட்டுப் பூட்டிக்குவா.

இப்போது பெண்டாட்டியை கடுமையுடன் வெறுப்புடன் அவன் பார்த்தான். அவளும் அவனை அதே மாதிரியான எதிர்ப்புணர்வுடன் பார்த்தாள். அவளுக்குமே தன் பகல்கனாக்களும், திட்டங்களும், ஆசை அபிலாஷைகளும் இருந்தன. தன் கணவரின் கனவுகள் அவளுக்குத் தெளிச்சியாகத் தெரிந்தது. பரிசுன்னு விழுந்தா அவளிடமிருந்து மொதல்ல யார் லபக்-கிக்குவாங்க என்று அவளுக்குத் தெரிந்தது!

பிறத்தியாள்க் காசில் பகல்கனவுன்னா நல்லாத்தான் இருக்கு இல்லே?... அவள் கண்கள் அதைச் சொல்லிக் காட்டின. அதென்ன அத்தனை தினாவெட்டு இந்தாளுக்கு?

பார்வைக்குப் பார்வை பதிலாய் அமைந்தது அவனுக்கும் புரிந்து விட்டது. அதுவே அவன் ஆத்திரத்தை இன்னும் து¡ண்டிவிட்டது. அவளைப் போட்டுத் தாக்குகிற ஆவேசத்துடன் அவன் நாலாம் பக்கம் செய்தித்தாளை அவசர நோட்டம் விட்டான். உற்சாகமாக வாசித்தான்.

''வரிசை 9499. எண் 46! இருபத்தியாறு இல்லை...''

வெறுப்பு மற்றும் நம்பிக்கை - இரண்டுமே அந்தக் கணமே அவர்களிடம் இருந்து மறைந்தன. அவர்கள் ரெண்டு பேருக்குமே சட்டென்று அந்த அறைகள் சிறியதாகவும் தலையிடிக்கும் கூரையுடனும் இருளடித்துப் போயும் இருப்பதாகப் பட்டன. அவர்களின் ராச்சாப்பாடு பிரயோஜனமேயில்லை. செரிப்பதேயில்லை... நகரவே நகராத அலுப்பான மாலைப் பொழுதுகள்.

''இதெல்லாம் என்ன?''- இவான் டிமிட்ரிச் திரும்ப வெறுப்புடன் பேசினான். ''உள்ளாற வந்தாலே து¡சி தும்பு கிழிச்சிப் போட்ட காகிதம். அறையைப் பெருக்கினாத்தானே? ஆளையே வெளிய வெரட்டிருது... வங்கொடுமையப்பா. நான் செத்துத் தொலையிறேன். வெளியபோயி மொதல் பார்க்கிற மரத்தில் நாண்டுக்கிட்டு சாகறேன்...!''

- தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com