Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கடிகாரத்தை முந்துகிறேன்
எஸ். ஷங்கரநாராயணன்

ராத்திரி என்னவோ படம் டி.வி.யில் போட்டார்கள். ஒரே சிரிப்பு. நிறைய சிரிப்பு நடிகர்கள் அதில் இருந்தார்கள். சிரிப்புக் கூட்டணி... இப்போதெல்லாம் சிரிப்புப் படங்களாகத்தான் அதிகம் எடுக்கிறார்கள். செலவு கம்மி. சட்டென்று எடுத்து முடித்து விடலாம். ஜனங்களும் சிரிக்க விரும்புகிறார்கள்.

வாழ்க்கை மிரட்டுவதாய் இருக்கிறது அவர்களுக்கு. நகர வாழ்க்கையின் அசதி. கிரெடிட் கார்டு பயமுறுத்தல்... ஜனங்கள் சிரிக்க விரும்பினார்கள். யாராவது யாரையாவது உதைத்தாலே அவர்கள் சிரித்தார்கள். அன்றாட வாழ்வியல் நியதிகளில் சிக்கி மிதியும் உதையும் படுகிறவர்கள்- வதைபடுகிறவர்கள் அவர்களே. அவர்கள் அவர்களைப் பார்த்தே பரிதாபமும் சிரிப்பும் கண்டவர்களாக இருக்கிறார்கள். வாலறுந்த பட்டம் போல் பணம் மேல்க்காற்றில் பறந்திறங்குகிறது. எல்லாரும் பாதி தரைகவனமும் பாதி ஆகாயகவனமுமாய் பணம் தேடி அலைகிறார்கள்... பாதி பைத்தியமாய், உள்ளூற ஜுரத்துடன் அவர்கள் நடமாடினாப் போல இருந்தது.

எல்லாம் அவசரம் என்று ஆகிவிட்டது. எதற்கு இந்த அவசரம் என்று தெரியாமலே அவர்கள் எதற்கும் அவசரப் பட்டார்கள். எல்லாரும் என்னவோ உள்ளே கலவரப் பட்டிருக்கிறார்கள்... வாழ - சராசரி வாழ்க்கைக்கே அவர்கள் திறம்பட செயல்பட வேண்டியிருக்கிறது. யோசிக்குமுன் வாய்ப்புகள் விட்டுவிலகி விடுகின்றன. கைமாறி கைநழுவி விடுகின்றன. இழப்புகள். கட்டுப்படியாகாத இழப்புகள்.

Baby எல்லாரும் சிரிப்பை மாட்டிக் கொண்டு நடமாடினார்கள். எதிலோ 'மாட்டிக்கொண்டாப் போல' அவர்கள் நடமாடினார்கள். யாரைப் பார்த்தும் சிரிக்க அவர்கள் ஒருதடவை யோசித்தார்கள். அட சிரிக்க எதற்கு யோசனை, என அவர்கள் யோசிக்கவே இல்லை.

உலகம் நம்புகிற வெளிப்படையில் இல்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விய உலகம். அவர்கள் சூதின் வாய்க்குள்... இருட்டுக்குள் அடைபட்டிருக்கிறாப் போல இருந்தது. சிறிது வெளிச்சமாய் அது இருக்கலாம். இருக்க வேணும் என்கிறதில் ஜனங்கள் எல்லாருக்கும் ஏக்கம். அவர்கள் சிரிக்க விரும்புகிறார்கள். மனம்விட்டுச் சிரிக்க முடிந்தால் உலகம் எத்தனை அழகாய் இருக்கும்.

உலகம் அழகாய் இல்லை.

படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே - சிரித்துக் கொண்டிருக்கிறபோதே கரெண்டு போய்விட்டது. வாசல்கதவு திறந்து கிடக்கிறதை குபீரென ருக்மணி உணர்ந்தாள். அதுவரை அது பயமுறுத்தவில்லை. பயம் கிளைவிரித்து உள்ளமெங்கும் பிசாசுமரம்போல சட்டென உருப்பெருகி விரிகிறது. பயவலை. அவசர அவசரமாய் எழுந்துபோய் வாசல்கதவைத் தாளிட்டாள். திரும்பியவள், ஒருயோசனையில் வாசலைப் பூட்டுவைத்துப் பூட்டினாள். வேணுகோபால் அலுவலகம் விட்டுவர இன்னும் நேரம் இருந்தது. இந்த இருட்டில் தெருவில் அவர் நடந்து வரவேண்டும். ஐயோ, நாயைக் கீயை மிதித்து கலவரப்படுத்தாமல் கலவரப்படாமல் வந்துசேர வேண்டும்.... கவலை உள்ளே மேலும் இருளைப் பூசுகிறது. சிலந்திவலை போல காலம் வலைப்பின்னலை பிசின் உலர்கிறாப் போல இறுக்குகிறது.

குழந்தை கண்மணி தூங்கிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் இந்த இருளுக்கு அதுவேறு அழ ஆரம்பித்து விடும். பயம் கண்வழியே கசிய ஆரம்பிக்கிறது. அழுகை பயத்தின் வெளிப்பாடு. குழந்தைகளோவெனில் சுதந்திரமாக அதை வெளிப்படுத்தி விடுகின்றன- பெரியவர்களுக்கு அதற்கு அனுமதி இல்லை.

வெளிப்படையாகச் சிரிக்கத் தயங்குகிறதைப் போலவே வெளிப்படையாய் அழவும் அவர்கள் தயங்குகிறார்கள் ஏனோ... அம்மாவைக் கட்டிக்கொண்டால் அந்த உடல்சூடு குழந்தைக்குத் தெம்பு. அது அம்மாவைத் தேட ஆரம்பித்துவிடும். ஹா, அதன் உடல்சூடு அம்மாவுக்கு இப்போது வேண்டியிருந்தது. அது 'தன்-பாதுகாப்பாக' ருக்மணி ஏனோ உணர்ந்தாள். நான் தனியே இல்லை... என்கிற உணர்வு. ஒரு இரண்டரை இரண்டேகால் வயதுக் குழந்தை... எவ்வகையில் அவளுக்குப் பாதுகாப்பு... என்றாலும் எல்லாப் பெற்றோரும் குழந்தைகளை... அவை பிறந்த கணத்தில் இருந்து பாதுகாப்பு வளையமாக உணர்கிறார்கள். பயம் சற்று மட்டுப்பட்டாப் போல உணர்கிறவர்களே அதிகம்.

பைத்தியக்காரத்தனமாய் சினிமாக்களைப் பார்த்துச் சிரிக்கிறதைப்போலவே இந்த பைத்தியக்காரத்தனமான பாதுகாப்பு உணர்வு!... ஆனால் அது எவ்வளவு வேண்டியிருக்கிறது!... ஆ- அதிலும் சிலபேர்- பெண்குழந்தை என்று மேலும் இருள் உள்ளே பூசிய கனத்துடன் நடமாடுகிறார்கள். கெட்டாலும் ஆண்மக்கள் ஆண்மக்களே!... ஆண்கள் ஏன் கெட்ட பழக்கங்கள் கற்றுக் கொள்கிறார்கள்? பெண்கள் ஏன் அவற்றைக் கற்றுக் கொள்ளவில்லை? பெண்கள் அதிகம் பேர்... பரவாயில்லை என்று... அழுதுவிடுகிறார்கள். கலவரத்தை ஓரளவு சிறு அளவு சுமையிறக்கி விடுகிறார்கள்.

வெளிச்சத்துக்கு உயிர்போனதில்... மின்சாரத் துண்டிப்பில் திருட்டு இருட்டு உள்ளே நுழைந்து விட்டது. உள்ளறையில் ருக்மணிக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. நகரத்துச் சிற்றறை வீடுகள். வீட்டில் ஆள் இருந்தாலே சதாசர்வ காலமும், இருபத்திநாலு மணிநேரமும் மின்விசிறி மின்விளக்கு தேவைப்படுகிறது. மனுசாளுக்குக் கண் இயல்புப்பார்வை போய்விட்டது. இயல்புக்காத்து போயே போய்விட்டது. வெளிக்காற்று கலப்படக் காற்று. எல்லாவற்றிலும் கலப்படம். பண்டங்களில் கலப்படம். பேச்சில் தூய உண்மை, உலகப்பொது நியாயம் என்றெல்லாம் இல்லை... சுயநலப் பிசாசுகள்... நம்மைப் பிடிக்க பிசாசுகள் வந்தன... எல்லாவற்றிலும் கலப்படம். சிரிப்பிலும் கலப்படம்... இதெல்லாம் மாறவேண்டும் என்கிற ஆசை, ஏக்கம் எல்லாருக்கும். மாற வேண்டுமே என்று கவலைப்பட்டார்கள் எல்லாரும்.

உள்ளே புழுங்க ஆரம்பித்தது. வியர்வை பொங்க ஆரம்பித்து விட்டது. வெளியே வந்து சற்று காற்றாட உட்காரலாம் என்றாலும், வெளியிருளில் எதுவும் நடக்கலாம் அல்லவா? எதற்கும் உத்திரவாதம் இல்லை அல்லவா?... என யோசனை. குழப்பத் திகைப்பு. மொட்டைமாடியில் உட்காரலாம். இவர் - வேணுகோபால் வந்து கதவைத் தட்டினால் திறக்க வேண்டுமே...

மின்சாரம் எப்போ வரும்? வராவிட்டால் தூங்க முடியாது. காலையில் அலுவலகம் கிளம்பி ஓடத் திண்டாடும். அசதி அதிகமாகி விடும். வாழ்க்கை புதிய புதிய பிரச்னைகளைக் கிளர்த்துவதாய் இருக்கிறதே தவிர, ஏனோ விடிகிற சாயல் அதில் தட்டுப்படவே இல்லை.... ருக்மணியிடம் கல்யாணத்துமுன் சிறிது பயத்துடன் சில கனவுகள் இருந்தன. எல்லாம் சரியாகி விடும். ஒரு கல்யாணம் எனது வாழ்க்கையை மேம்படுத்தி விடும் என நினைத்தாள். அதற்கும் நல்ல கணவன் - நல்ல கணவன் என்றால் யார்? எதிர்பார்ப்புப்படி அமைந்த கணவன்... ஆனால் எதிர்பார்ப்புகள் வெறும் கனவு சார்ந்தவையாக இருக்கின்றன. இலட்சியம்... இலக்கு... என்கிற எதிர்பார்ப்பின்படி அமைகிற கனவுகள் சராசரி வாழ்க்கையில் இல்லை. சிறு எதிர்பார்ப்புகள்... வாய்ப்பு அடிப்படையில்... அதிர்ஷ்ட அடிப்படையில் அமைகிறதில்... பயம்... சற்று உள்பூசிய திகைப்பு இருக்கவே செய்யும்.

கண்ணிகளில் இருந்து பிய்த்துக் கொண்டு வெளிக்கிளம்புகிற அவசரத்தில் காணும் கனவுகள், எதிர்பார்ப்புகள் எளியவை. சிம்னி விளக்குகளே அவை. உள்ளிருட்டு கூடவே பிறந்த வெளிச்சம் அது. வெளிச்சப் போலிகள். கலப்பட வெளிச்சம். சிம்னி விளக்குகள் கலப்படச் சிரிப்புகள்.

ருக்மணி கல்யாணம் செய்து கொண்டாள். சிறிய அறைகள் கொண்ட கல்யாணச் சத்திரம். தண்ணீர்கூட லாரியில் வரவழைக்க வேண்டியிருந்தது. காசு தண்ணீராய்ச் செலவழித்து ஒரு கல்யாணம். எதற்கெடுத்தாலும் தனிக்காசு. வந்திருந்த கூட்டத்துக்கு எத்தனை மின்விசிறிகள் சுழன்றும் வியர்வை கொப்பளித்தது...

ஆம்பிளைகள் காலரைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். சட்டைக்குள் பனியனுக்குள் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டார்கள். ஊதிக் கொண்டார்கள். இதில் பெண்கள் கனமான பட்டுப்புடவைக்குள் சிறையெடுக்கப்பட்டு திணறிக் கொண்டிருந்தார்கள். எப்படா கல்யாண முகூர்த்தம் முடியும்... இந்தப் பட்டுப்புடவையை அவிழ்த்தெறியலாம் என்கிற உள்ளாவேசம் இருந்தது அவர்களுக்கு.

கல்யாணம் என்கிறது வாழ்வின் நல்லம்சம். சிரிப்பு மடல்விரிக்க வேண்டிய தருணங்கள் அவை. அவர்கள் எல்லாரும் வெளிப்பாய அவசரப்பட்டார்கள். முகூர்த்தம் முடிய, அவர்கள் காத்திருக்கிறார்கள்... மழை ஓய ஒதுங்கினாப் போல!... இதோ தாலி கட்டிய ஜோரில் அவர்கள் சாப்பிட ஓடி, சாப்பாடு முடிந்து, தேவைப்படி பஸ் அல்லது ஆட்டோ பிடித்து அலுவலகம் ஓட வேண்டும். ஆம், நடை என்பதே இல்லை. எல்லாரும் ஏனோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். நாயோட்டம்! அவசரம். அதனாலான தவறுகள். பயத்தினால் தவறுகள் அதிகரிக்கின்றன. தவறினால் பயம் அதிகரிக்கிறது... எதுவும் குறைகிறாப் போகிற சாயலே இல்லை. அறிகுறியே இல்லை.

பகிர்ந்து கொள்கையில் துக்கம் பாதியாகிறது. சந்தோஷம் இரட்டிப்பாகிறது. மனம் விட்டுச் சிரிப்பதைப் போலவே அழுவதும் - மனம்விட்டு அழுகிறதும் முக்கியம். இழவு வீடுகளிலேயே அழுகை குறைந்தாகி விட்டது. விபத்து போன்ற அசம்பாவிதங்கள் கண்ட வீடுகளிலேயே கூட அழுகை அல்ல - திகைப்பே பிரதான உணர்வோட்டமாய் இருக்கிறது. இனி?... என்கிற பயப்பிராந்தி சார்ந்த இருள் அங்கே திரும்ப பாசிபோல் கவிகிறது. எப்படியும் வாழ்க்கை ஓடவே செய்கிறது- அதன் சகல உள்ப்புழுக்கங்களுடனும்.

பிரச்னைகளின் சுமையிறக்கத்துடன் சற்று கண்ணயர்ந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்? (குழந்தை விழித்துக் கொண்டால் என்ன செய்வது?... மெழுகுவர்த்தி எங்கே கடைசியாய் வைத்தோம்... என மேலும் கேள்விகள்.) தூக்கத்தை, வந்து காத்திருக்கும் தூக்கத்தை அவள் ஒத்திப் போட வைக்கிறது. அவளுக்கு வீட்டுவேலை இருந்தது என்றாலும் கட்டிலில் அவளுக்காய்க் காத்திருக்கிற கணவன் போல... தூக்கம் காத்திருக்க நேர்ந்து விடுகிறது. விரும்பினாலும் கடந்து போக... நம்மிஷ்டமாய் நடமாட முடியாதபடி, போக்குவரத்து சிக்னல்கள். சிவப்புகள்... பயமுறுத்தல்கள்.

இருந்த நகரப் பரபரப்புகளின் நடுவே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது... மொட்டைமாடியின் தொட்டிச் செடி. கண்மணி. பெண்குழந்தை. ச், என நினைத்தவள் தலையை உதறிக் கொண்டாள். ஒரு பெண்ணே திகைத்தால் பெண்குழந்தைகளுக்கு ஏது விமோசனம்?... எனினும் ஆண்குழந்தையாய் இருந்தால் தேவலாம்தான்! கல்யாணமும் ஆண்-உடல்சூடும் •பாஸ்ட்•புட் போல அவளுக்குக் கிடைத்தது நகர வாழ்க்கையில். டூ மினிட்ஸ் நூடூல்ஸ். குழந்தை வேணும்தான். ஆனால் எப்படி வளர்ப்பது அதை?

அவளது அன்பிலும் கலப்படம் இருந்தாப் போல ஒரு திகைப்பு அவளை மருட்டியது. அம்மா என்று தன் முந்தைய தலைமுறையைச் சரணடைகிறாள். அம்மா, என் குழந்தையை வளர்த்துத் தா... என்ன பிரச்னை அதில்... என்றால், ஆம், அவர்கள் 'மூதாதையர்கள்'... இன்றைய தலைமுறையின் வாழ்வியல் கூறுகள் அறியாதவர்கள். குழந்தையை 'இன்று' அடிப்படையில் அவர்களால் வளர்க்க முடியுமா? எனினும் வேறு வழியில்லை.

ஆ- இன்றைய குழந்தைகள் நேற்றுக்கும் இன்றுக்குமாய் அல்லாடுகின்றன. தமிழும் ஆங்கிலமுமாய்க் கலந்தே அவை பேசுகின்றன. கலப்படம்... தாய்மொழியில் கலப்படம்! கலப்படம் தாய்ப்பாலில்தான், 'ஒருவேளை இருக்காது' என்று தோணுகிறது. ஆனால்... தாய்ப்பாலே இல்லை பெண்களுக்கு. முதல் சில மாதங்கள் அது குழந்தைக்குக் கிடைத்தது. வேலைவிடுப்பு அனுமதிக்கிற சிறு கால அளவு. அத்தோடு தாய்ப்பால் சுரப்பிகளும் அடங்கி வற்றி விடுகின்றன. மாட்டுப்பால்தான். பெண்கள் அலுவலகம் ஓடுகிறார்கள் பேப்பரைத் தேடி... பணத்தைத் தேடி. நகரத்து மாடுகள் கூட தற்போதெல்லாம் புல் மேய்வதில்லை. புல் ஏது?... அவையும் காகிதம் தின்ன ஆரம்பித்து விட்டன!

கொஞ்சநாள் பாட்டி வளர்ப்பு. உலகம், சுற்றுச் சூழல் எனச் சிறுவளையம் பிடிபடுமுன், குழந்தையுலகம் மாறி விடுகிறது. பிணயக்கைதிகளுக்கு அடையாளங்கள் மாற்றி மாற்றிக் காட்டப்படுவதைப் போல!... பிறகு அலுவலக குழந்தைக்காப்பக வாழ்க்கை... மாட்டுக்கொட்டில் போல இது குழந்தைக்கொட்டில். முட்டிக் குடிக்காத புட்டிப்பால். பிறகு எல்கேஜி யூகேஜி. திணிக்கப் படுகிற கல்வி. திணிக்கப்படுகிற அறிவு.

கற்றுக் கொள்கிறதேயில்லை. சலைன்வாட்டர், குளூக்கோஸ் என்று அவசரநிலையில் ஏற்றப்படுகிற அறிவு. அத்தனைக்கு என்ன 'நெருக்கடி' அதற்கு வந்தது?... அவயத்து முந்த அவை ஆணையிடப் பட்டன. கமான் கமான் என்று ரேஸ்குதிரையாய் கயிறு-சுண்டப் படுகின்றன. மிரட்ட... விரட்டப் படுகின்றன... நர்சரி ரைம்ஸ் என்று, தமிழ்ப்பாடல் கூட... நிலா நிலா ஓடிவா... நில்லாமல் 'ஓடி' வா. நடையே கிடையாது. எல்லாமே ஓட்டம்தான். நடக்குமுன் ஓட அவை நிர்ப்பந்திக்கப் படுகின்றன. விக்கித்துப் போகும் குழந்தைகள். வயிற்றுக்கு அதிகப்படியான உணவுகள். கலப்பட உணவுகள்.

----
கண்மணிக்கு இன்னும் பேச்சு என்று வரவில்லை. உள்நாக்கு புரளப் பழகவில்லை. எழுப்ப எழுப்ப எழாத தூக்கம். ருக்மணி வீட்டில் யாரும் இப்படியில்லை. எல்லாரும் சட்டுச் சட்டென்று பேசியவர்கள். கண்மணி ஒன்றும் சோடையில்லை. நல்ல சூட்சுமம் அதற்கிருந்தது. ருக்மணி மாட்டைக் காட்டித் தந்தாள் அதற்கு.

'மாடு... பாத்தியா? மா...டு. மாடு எப்படிக் கத்தும் ம்ம்மாஆஆஆஆ.'

சட்டென்று அதன் கண்ணில் ஒரு ஒளி. இதற்குப் புரிபடுகிறது. நான் இன்னும் நிதானப்பட வேண்டும். 'நான் யாரு?' என்றாள். குழந்தை அவளைப் பார்த்தது. 'அம்மா' என்றாள். குழந்தையின் கண் சிரிக்கிறது. உதடசைவால் ...மா, என்று சொல்லிக் காட்டினாள். குழந்தை அவளைப் பார்த்தது. ஒரு விநோத உடல் நெளிவுடன் அது அம்மாவைக் கட்டிக் கொள்கிறது. காலால் அவள் இடுப்பை உதைத்தது. அதன் கண்கள் வெட்கமாய்ச் சிரித்தன. உற்சாகங் கொப்பளித்தது அதன் உள்ளில்.

அட, பேசக்கூடாதா?... வயது இரண்டரை. எதிர்வீட்டுக் குழந்தை பேச்சு படுபோடு போடுகிறது. கடுமையான மொழிப்பிரவாகம். சிரிப்பு. அழுகை.

டாக்டரிடம் கேட்டாள். 'குழந்தை சுறுசுறுப்பாய் இருக்கில்ல?' / 'உடல்ரீதியாய்க் கோளாறு எதுவும் இல்லையில்லையா?' - எதுவும் இல்லைதான். 'அப்ப சரி. அவசரப்படுத்த வேணாம். தானே பேச்சு வந்துரும். நிறைய நீங்க அதுகூடப் பேசணும்... 'நீங்க' ஒரு அம்மாவா அதுங்கூட இன்னும் அதிகமாப் பழகணும். விளையாட்டுக் காட்டணும். பேசணும்' - சரி, என வெளியே வந்தாகி விட்டது.

கணவனிடம் பேசவே அவளுக்கு நேரமில்லை. அலுவலகம் போய், அவன் அலுவலகத்துக்கு அவனுடன் தொலைபேசி எண்ணைச் சுழற்றிப் பேச வேண்டியிருக்கிறது. குழந்தையிடம் கூட 'நாய் எப்பிடிக் கத்தும்?' என்று கேள்வி கேட்டால். மனம் தானே விழித்து... எங்க மேனேஜர் மாதிரிக் கத்தும், என்று பதில் சொல்கிறது.

வயதுசார்ந்த நியதிகள் திணிக்கப்படுகிற உலகம் இது. குழந்தைகளுக்கோ வயதுமீறிய நியதிகளே நிர்ப்பந்திக்கப் படுகின்றன... கண்மணி பள்ளிக்குப் போகிறாள். குழந்தையை அறிவாளியாக்கும் மந்தாரக் கனவுகள் ருக்மணிக்கும் வேணுகோபாலுக்கும்.

புது உடைகள். புது உடை என்றால் வண்ணம் வாரியிறைத்த சந்தோஷச் சிற்றலைகள் அல்ல. பள்ளிச் சீருடை. ப்ரீகேஜிக்கும் சீருடை. தனி தண்ணீர்க்குப்பி. டிபன் டப்பி. சாக்லெட் பிஸ்கெட் என கொறித்தல் சிற்றுணவு.

காலையிலிருந்தே அப்பாவும் அம்மாவும் உற்சாகமாய் இருக்கிறார்கள். குழந்தைக்கும் அது பிடித்திருக்கிறது. புத்துடைகள் கவர்ச்சிகரமாய் கிளர்ச்சிகரமாய் அதற்குப் பிடிபடவில்லை. அதைப் பார்த்து பெற்றவர்கள் பூரித்துக் கொள்வதை அதனால் புரிந்துகொள்ள முடியவில்லை. குளியலும் தலைவாறலுமாய் சிறப்புஅலங்காரங்கள் நல்ல விஷயம்தான். உள்ளூறத் தேன்கசிந்த நிமிடங்கள்.

'நீ நல்ல பிள்ளையில்லையா?... பள்ளிக்கூடம் போக அழுவியா?' விரல் சப்பியயபடியே கண்மணி அம்மாவை ஒருகணம் ஏறிட்டது. அழமாட்டேன் என்ற பதில் நல்லம்சம் என அதற்குத் தெரிந்தது. மாட்டேன், என தலையை ஆட்டியது.

'அடிக்குஞ்சலம்' என அப்பா அதை முத்தமிட்டார். தினசரி காலைகளில் காய்கறி போன்ற அவசரத் தேவைகளுக்கு அவர் வண்டியை வெளியே எடுத்தால் குழந்தை கைவிளையாட்டை மறந்து தானும் வருவதாக ஓடோடி வரும். அவர் ஏற்றிக்கொள்வார். வெளிக்காத்தும் வெளியுலகும் ஸ்கூட்டரின் குலுக்கல்களும் பரவச அனுபவங்கள்.

தெருவில் நாய்கள் மாடுகள் நடமாடுகின்றன. சில மனிதர்களும். அவர்களை அதற்கு அக்கறையில்லை. மாடுகள் ஆடுகள் நாய்கள்... பிராணிகள் உலகம் அதிக சுவாரஸ்யமான தெருக் காட்சிகள். மாடு எப்படிக் கத்தும், அதற்குத் தெரியும். அம்மா சொல்லித் தந்திருக்கிறாள். அதன் கொம்புகளைத் தொட்டுப் பார்த்தால் நல்லது.

'ஐயோ. மாடு முட்டிரும்... நீ தொம் வீழுவே...' என்று அப்பா பயமுறுத்துகிறார். மாடு ஏன் என்னை முட்டவேண்டும். முட்டு முட்டு முட்டு முட்ட்ட்டு... என அப்பா அதன் தொப்பையில் முட்டி சிரிப்பு மூட்டியிருக்கிறார். மாடு முட்டினால் சிரிப்பு வராதா?

சில மனிதர்களை அப்பா அம்மா -போ பக்கத்தில்- என்று முதுகைத் தள்ளி நிர்ப்பந்திக்கிறார்கள். சிலரை... அதற்குப் பிடித்திருக்கிறது என்றாலும் கூட, கிட்டேபோக அனுமதி மறுக்கப்படுகிறது.

வீடு. சுவர்கள். அதில் விளையாட்டு சாமான்கள். பொம்மைகள். என்ன விளையாட்டு என்றாலும்... வெளியுலகம்... அதன் பரந்த தளமே அலாதிதான். வெளிச்சமே காற்றே சந்தோஷம்தான். வெளியுலகின் சப்தங்கள் புதுசு புதுசானவை. ஸ்கூட்டர் எப்பிடிப் போகும்? 'டர்ர்ர்' அதை நன்றாகச் சொல்கிறது குழந்தை. வாய்விட்டு மனசு சிரிக்கச் சொல்கிறது. அழகாக டாடா காட்டுகிறது.

அன்றொருநாள் நாய் ஒன்று வீட்டுவாசலில் வந்து நின்றது. குழந்தை நாயைப் பார்த்துச் சிரித்தது. நாய் எப்படிக் குரைக்கும் அதற்குத் தெரியும். ஐவிரலாலும் அதை அருகே அது அழைத்தது. வா வா...

'ச்சீ போ' என ருக்மணி நாயை விரட்டினாள். அம்மா உள்ளே போவதைக் குழப்பத்துடன் பார்த்தபடி கண்மணி விரல்சப்ப ஆரம்பித்தது.

அப்பாவுடனும் அம்மாவுடனும் ஸ்கூட்டர் சவாரி. ஜாலி! நிறைய ஸ்கூட்டர்கள். நிறைய அப்பா அம்மாக்கள்... குழந்தைகளுமாக போக்குவரத்து சிக்னலில் நின்றபோது அதன் உற்சாகம் அதிகரித்தது. சிறு இருமல் வந்தது அதற்கு. கண்கள் எரிந்தன... எனினும் பாதகமில்லை. சிக்னலில் காத்திருந்து வண்டி மீண்டும் ஒரு குலுக்- குழந்தை சிரித்தது... வண்டி திரும்பக் கிளம்பியது.

வண்டி அப்படியே போய்க்கொண்டே இருக்கும் என அது நினைத்தது. விரல் சப்பிய உற்சாகம். 'நீ பெரியவளாயாச்சி. இன்னிலேர்ந்து பள்ளிக்கூடம் போறே... விரல் சப்பக் கூடாது' என்று பிரித்து விட்டாள் அம்மா. ஒரு பிடிவாதத்துடன் அது திரும்ப விரலை வாயில் போட்டுக் கொண்டது. 'சரி விடு. ஸ்கூலுக்குப் போற நேரம்... அழ ஆரம்பிச்சிறப் போறது...' என்றார் அப்பா. ஏன் அழ வேண்டும்?

'விரல் சப்பற பழக்கமே போகல இதுக்கு இன்னும். பேச்சே வரல. தூக்கத்ல படுக்கைலியே மூச்சா போறது இன்னும். ஸ்கூல்ல படுத்தாம இருக்கணும். அம்மா அம்மான்னு தேடாம இருக்கணும்...' என்றாள் ருக்மணி கவலையாய். 'அதைவிட நீ கவலைப்படறதுதான் அதிகமா இருக்கு' என்கிறான் வேணு.

தடக்கென்று வண்டி நின்றுவிட்டது. 'ஐ... ஸ்கூல் வந்தாச்சி...' என்றாள் அம்மா. கண்மணி இது அம்மாவுக்குப் பிடித்த இடம் என நினைத்தது.

யாரோ புதுப்பாட்டி ஒருத்தி வெளியே வந்தாள். குழந்தை அந்த வளாகத்தை அவதானிக்குமுன் அது ஆயாவின் கையில் கொடுக்கப் பட்டது. எதுவும் புரியவில்லை. சிற்றறையில் நிறையக் குழந்தைகள் அடைத்துப் போடப் பட்டிருந்தன. சில வாசல்பக்கமாய்க் கம்பிவழியே எட்டிப் பார்த்து அழுது கொண்டிருந்தன. ஒரே சத்த அமர்க்களம். நிறைய ஸ்கூட்டர்கள். அப்பா அம்மாக்கள். சீருடையில் குழந்தைகள் வந்து நிறைந்து கொண்டிருக்கிறார்கள்.

நியதிகள் கிர்ர்ரென்று சுற்ற ஆரம்பித்து விட்டிருந்தது. ஆ- சட்டென்று அது ஆயாவின் கையில். திகைத்து, குபீரிட்ட பயவுணர்ச்சியுடன் அம்மாவை நோக்கித் திரும்பிப் பாய எத்தனித்தது. பேரழுகை. உள்ளே இருட்டினாப் போல இருந்தது. வீறிட்டழுதது குழந்தை.

டாடா காட்டுகிறாள் அம்மா. ஆயாவின் பிடி கெட்டியாய் இருந்தது. அதை மீறி முரண்டுபண்ணி அது அம்மாவிடம் தாவ முயன்றது. என்ன இடம் இது? அம்மா... என்னை விட்ட்டுப் போயிறாதே... குழந்தை கதறியது. 'அழக்கூடாது... அழக்கூடாது...' என்று குலுக்குகிறாள் ஆயா. அதன் பயம் இன்னும் அதிகரித்தது. அதற்கு விக்க ஆரம்பித்தது.

----
அம்மா போய்விட்டாள். அதன் அழுகை அதிகரித்தது. உள்நரம்புகள் விரைத்துக் கொண்டன. ஜெட்டி தன்னைப்போல நனைந்திருந்தது. 'ஐய, bad girl' - என்றாள் ஆயா.

ஆயா பேசும் பாஷை அதற்குப் புரியவில்லை. ஆயாவையே புரியவில்லை. எல்லாமே எல்லாருமே புதியவை. அம்மா அல்லது குறைந்தபட்சம் அப்பா இருந்தால் அவர்களது பாதுகாப்பு-வளையத்துக்குள்ளிருந்து கவனம் செய்யலாம். யாருமே இல்லை அதனுடன்.

வளாகத்தில் நிறையக் குழந்தைகள் அழுது பெருக்கிக் கொண்டிருந்தன. ஒரு குழந்தை 'வெளிக்குப்' போயிருந்தது. எதோ ஒரு குழந்தைக்கு அழுகையை நிறுத்த யாரோ ஒரு சிறு பெண் - அம்மாசாயலில்... குப்பிப்பால் தந்து கொண்டிருந்தாள். சமாதானம் என்றில்லை. அழுத குழந்தை பசி தாளாமல் துவண்டு விட்டிருந்தது. பாலை அது ஓர் ஆவேச உறிஞ்சல் உறிஞ்சியது. கண்மணி தானறியாமல் அழுகையை மறந்திருந்தது. அழுத காரணமும் ஞாபகத்தில் இல்லை.

அந்தப்பெண் - மற்ற குழந்தைக்குப் புகட்டிக் கொண்டிருந்தவள் கண்மணியைப் பார்த்துச் சிரித்தாள். அவள் தன்னைப் பார்த்ததுமே கண்மணிக்குத் தன்னைப்போல மீண்டும் பயம் உள்திரண்டது. அது மீண்டும் அழ ஆரம்பித்து விட்டது. எதைப் பார்த்தாலும் அதற்குப் புதுசாய் இருந்தது. எதைப் பார்த்தாலும் அது அழ ஆரம்பித்தது. அதன் கண்ணிலிருந்தும் மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் தண்ணீர் கொளகொளத்துச் சொட்டியது.

வாசல் கதவு எங்கே? அது தடுமாறி வாசல்ப் பக்கம் பார்த்தபடி... கம்பியழியோடு கன்னத்தை ஒட்டி - ஜில்லென்றிருந்தது கம்பி... அதன் வழியே அழுதபடி வெளியே அம்மாவைத் தேடியது. காணவில்லை. கன்னத்தை இன்னும் கம்பியில் அழுத்திக் கொண்டது. அழுகை மெல்ல அடங்க, அது வாசலைப் பார்த்தது.

வாசலில் இன்னொரு ஸ்கூட்டர். டர்ர்ர்... என கண்மணி சப்தம் செய்து பார்த்தது. யாரோ புது அப்பா. பரவாயில்லை. அவர்கிட்ட ஸ்கூட்டர் இருக்கே? வா வா... என அவரை அழைத்தது. அவர் கண்மணியைக் கண்டுகொள்ளவேயில்லை. அம்மா இல்லாமல் வந்த குழந்தை. அழாத குழந்தை... அவர் குழந்தையை ஆயாவிடம் தந்து விட்டு திரும்ப ஸ்கூட்டரை இயக்கினார். டர்ர்ர், எனக் கிளம்பியது ஸ்கூட்டர். அவர் போய்விட்டார்.

வண்ண வண்ணமாய் விளையாட்டு சாமான்கள். ஆடுகுதிரை. அவர்கள் வீட்டில் இல்லாதது.

அது ஆடுகுதிரை நோக்கிப் போனது. ஆயா அதை ஊக்கப் படுத்தினாள். அது ஆயாவை சட்டைசெய்யவில்லை. குதிரையில் ஏற முயன்றது. உயரமான குதிரை. ஆயா ஏற்றி விட்டாள். பிறகு என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை. ஆயாவே குதிரையை ஆட்டி விட்டாள். திடீரென ஆட்டப்பட்டதில் ஒரு விக்கல் வந்தது அதற்கு. அழ ஆரம்பித்து விட்டது பயத்தில். சரி சரி... என்று ஆயா இறக்கி விட்டாள். மெதுவா ஆட்டு ஆயா... என்றாள் அந்த மிஸ். அவளது இளமையும் சிரிப்பும்... ஆயாமுகத்துக்கு அந்த முகம் தேவலை. ஆயா குழந்தையைத் தூக்கிக் குதிரையில் வைத்து, அதைக் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொண்டு மெ-ல்-ல ஆட்டினாள். வயிற்றில் குளிரவே இல்லை. ஐ... ஜாலி! குழந்தை கண்மலர்ந்தது.

நல்லாயிருக்கும் போலுக்கே இந்த விளையாட்டு, என்று மற்றொரு குழந்தை இதற்கு சுவாரஸ்யப்பட்டது. கையில் இருக்கிற பந்தை நழுவவிட்டு விட்டு அது ஆடுகுதிரைக்கு வந்தது. கண்மணி குதிரையில் இருந்து இறங்கிவிட நினைத்த கணம் அது குதிரையைப் பார்க்க வந்தது. கண்மணி குதிரையில் இன்னும் இருக்கலாம் என முடிவுசெய்தது. புதுக்குழந்தை அதன் தொடையைக் கீறிய வன்முறையுடன் அதைக் கீழேயிறக்க முயல்கிறது. கண்மணி விட்டுக்கொடுக்க மறுத்தது.

திடீரென்று 'போ' என்று அதைத் தள்ளியது கண்மணி. சப்பென்று கீழே விழுந்த குழந்தை அழுவதை ஒரு திருப்தியுடன் பார்த்தது.


ஆயா அந்தக் குழந்தையை அள்ளியெடுத்துக் குலுக்கினாள். அழுத குழந்தையை ஏன் பெரியவர்கள் குலுக்குகிறார்கள், தெரியவில்லை.

கண்மணி தானே குதிரையாட முயன்றது. உயரம் அதிகம். குதிரை அசையவில்லை. அசைந்திருந்தால் கண்மணி கீழே விழுந்திருக்கும். அசையாத குதிரையால் என்ன பிரயோஜனம். கண்மணி தானே இறங்க முயற்சி செய்தது. அதன் பார்வைக்கு இன்னொரு குழந்தை கவனப்பட்டது. லாலிபாப் சப்பும் குழந்தை. உருட்டுமண்டை லாலிபாப். மகாஈரமாய்ச் சொட்டி வழிகிற லாலிபாப்.

'தா' என்றது கண்மணி. அந்தக் குழந்தை கண்மணியைப் பார்த்தது. சட்டென்று லாலிபாப்பை வாயில் ஒரு கடி. கரகரவென்று மிட்டாய் வாயில் அரைபடுகிற சத்தம்.

'தா' என்றது கண்மணி. 'போ' என்றது அந்தக் குழந்தை.
ஆயா கண்மணியை வந்து தூக்கிக் கொண்டாள். புது ஆயா அல்ல அவள். முகம் பழகிய ஆயா-

கண்மணியின் சிறிய கூடையில் இருந்து ஆயா புதிய சாக்லெட் ஒன்றை எடுத்துப் பிரிக்க முயற்சித்தாள். சட்டென்று பிடுங்கிக் கொண்டது குழந்தை. தானே பிரித்துக் கொள்ள அது விரும்பியது. மிஸ் சிரித்தாள். குழந்தை மிஸ்ஸைப் பார்த்தது. சிறிது தயங்கியது. பிறகு அதுவும் சிரித்தது.

'சாக்லெட்டா?' என்று கேட்டாள் மிஸ். அது மிஸ்ஸைப் பார்த்தது. என்ன அழகாய்ச் சிரிக்கிறாள். தலையாட்டியது.

'எனக்குத் தருவியா?' விலுக்கென்று இழுத்துக் கொண்டது கையை. 'வேணாம் வேணாம் நீயே வெச்சிக்க...' என்றாள் மிஸ்.

அவள் மடியில் கிடந்த குழந்தை உறங்கி யிருந்தது. மிஸ் குழந்தையை தரையில் சிறுபாய் விரித்துக் கிடத்தினாள்.

கண்மணியை வா... என அழைத்தாள் மிஸ். ஒரு விநாடி தயங்கி, பின் அருகே வந்தது கண்மணி.

மிஸ் அதன் மூக்கைத் துடைத்தாள். 'you are a good girl' என்றாள் மிஸ். சிரித்தாள். குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது.

அதற்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. கண்மணியை மடியில் கிடத்தி காலை ஆட்ட ஆரம்பித்தாள் மிஸ்.

திடீர் திடீரென்று அதற்கு அம்மா ஞாபகம் வந்தது. பயமும் விக்கலும் உள்ளே கேவலாய் வெடித்துவரும். அப்போதெல்லாம் மிஸ் சிரித்தாள்... ஒரு பாடல் மிஸ் பாடினாள். அந்தப் பாடல் புதியது. புரியாத பாஷை. என்றாலும் அதன் அலைபோன்ற தாலாட்டு சூப்பர். டீச்சர் கண்மணியின் கைதட்டித் தட்டி இப்படியும் அப்படியும் அதை ஆடச் சொல்லிச் சொல்லி ஊக்கப் படுத்தினாள். ஒரே சிரிப்பு.

மாலைவெயில் அறைக்குள் வந்திருந்தது. வாசலில் டர்ர்ர்... என்று சப்தங்கள் நிறைய ஆரம்பித்தன. எல்லாக் குழந்தைகளும் கம்பிவழியே எட்டிப் பார்க்கப் போட்டியிட்டன. எதோ ஓர் அப்பா.

'வா' என்று கூப்பிட்டது கண்மணி. 'டாடா' என்றது. 'வா' என்றது.

அவர் இதைக் கண்டுக்கவேயில்லை. அவரைக் கண்டதும் அவரது குழந்தை ஓர் எழுச்சியுடன் அவரை நோக்கி ஓடியது. கண்மணி அதைப் பார்த்தது. அந்தக் குழந்தையுடன்தான் கண்மணி குதிரையேறச் சண்டை போட்டிருந்தது. தற்செயலாக அந்தக் குழந்தை கண்மணியைப் பார்த்தது. டாடா காட்டியது அது. கண்மணியும் டாடா காட்டியது.

ருக்மணியும் வேணுவும் தூரத்தில் வருகையிலேயே கண்டுபிடித்து விட்டது குழந்தை. வா வா... என எழுச்சி கொண்டது. சந்தோஷம் உள்ளே பெரும் அலையென உயர்ந்தது. உலகம் எத்தனை உற்சாகமாய் இருக்கிறது. 'என் செல்லமே' என்று அம்மா ஓடி வந்தாள். மிஸ் கண்மணிக்கு பவுடர் கிவுடர் போட்டு தலையெல்லாம் வாரிச் சீரமைத்திருந்தாள்.

'மா?' என்றது குழந்தை.

அம்மா பரவசத்தில் திக்குமுக்காடிப் போனாள். என் குழந்தையா இது- அப்பாவைக் காட்டினாள்- 'இதாரு? சொல்லுடிக் குட்டி...' குழந்தை வெட்கப்பட்டு அம்மாவை உதைத்துப் புடவையை வாயில் கவ்விச் சுருட்டிக் கொண்டது.

'-ப்பா' என்றாள் அம்மா. குழந்தை அம்மாவைப் பார்த்தது. பேசவில்லை. என்றாலும் முயற்சி செய்து அதன் உதடுகள் அசைந்தன...

'டர்ர்ர்' என்றது குழந்தை. 'டாடா... போ'

'அப்டியாடி?' ஓடுகிற வண்டியிலேயே, குழந்தையை இறுக்கித் தழுவி முத்தமிட்டாள் ருக்மணி.


- எஸ். ஷங்கரநாராயணன்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com