Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
போராட்டம்

ரேணுகா விசுவலிங்கம்


கடல் அலைகள் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதும் கரையை நோக்கி வந்து கொண்டேதான் இருக்கின்றன. கரை மீது அவைக்கு என்ன கோபமோ.... சீற்றத்துடன் சீறிக்கொண்டு ஆவேசமாக அடித்துக் கொண்டிருந்தன. மணலில் ஒரு சிறிய கடல் நண்டு தன் வளைக்குள் செல்லப் போராடிக் கொண்டிருந்தது. வளையின் அருகில் செல்லும்போது அலை அதைக் கரையை நோக்கித் தள்ளிவிடுகிறது. நண்டும் விடாமல் வளையின் உள்ளே செல்ல முயன்று கொண்டேயிருந்தது.

எதைப் பற்றியும் கவலை இல்லாமல் கடற்மணலில் வீடு கட்டி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த இரு சிறார்களையும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் துளசி. மீண்டும் அந்த கவலை இல்லாத பருவம் திரும்புமா? வாழ்க்கையே கவலைக்கிடமாகி விட்டால் அதை விட்டுவிட்டுத்தான் ஓட முடியுமா? துளசியின் கண்களில் நீர் பெருகியது. அவள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் போராடிப் போராடிச் சலித்துவிட்டது. பெருமூச்சு விட்டு மடக்கியிருந்த கால்களின் மீது தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள். திடீரென்று அவள் கையடக்கத் தொலைபேசி மணி ஒலித்தது. ராதா தான். பேசலாமா? வேண்டாமா? என்று மனதினுள் ஒரு போராட்டம்.

இப்போ பேசாமல் இருந்தாள் மட்டும் ராதா விட்டுவிடுவாளா என்ன? அழைத்துக் கொண்டேதான் இருப்பாள். மிகவும் நெருங்கிய தோழியாச்சே விடுவாளா?

“ஹலோ”

“ஹே.. துளசி. இப்போ நீ எங்கே இருக்கே? வீட்டிற்குப் போன் பண்ணியிருந்தேன். அம்மா எல்லாவற்றையும் சொன்னாங்க. நீ இப்ப..ஈஸ்ட் கோஸ்ட் பாக்கிலயா இருக்கே?”

Sad woman “ஆமாம் ராதா. மணலில் உட்கார்ந்துகொண்டு இருக்கேன். இருக்கவா வேண்டாமான்னு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” கை விரல்களால் மணலில் ஏதோ கிறுக்கிக்கொண்டு பதில் கூறினாள் துளசி.

“முட்டாள் தனமா பேசாதே துளசி. சரி நீ அங்கேயே இரு. நான் கொஞ்ச நேரத்தில் அங்கு வந்துவிடுவேன். நல்ல வேளை அப்பா ஊரில் இல்லை. வாகனச்சாவி என்னிடம் தான் இருக்கு. எங்கேயும் போய்விடாதே. சரியா? அங்கேயே உட்கார்ந்திரு நான் வரும் வரை.. அசைந்தே கொன்னுடுவேன்.”

துளசி லேசாக சிரித்தாள். “சரிடியம்மா. நான் எங்கேயும் போகலே. நீ வரும் வரை இதே மணலில் கடல் மீது விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். ஆமா...அவசரமா நான் செல்லனும்னா, போகலாம் இல்லையா?”

“அய்ய்ய்...”

இருவரும் சிரித்தனர்.

“சரி சரி. நான் வந்திடுறேன்.”

மீண்டும் துளசி கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் அந்த சின்னஞ்சிறிய நண்டை தேடின. நண்டு இன்னும் முயன்று கொண்டுதான் இருந்தது. ராதாவிடம் பேசினது ஞாபகத்திற்கு வந்தது. தன்னையறியாமல் சிரித்து விட்டாள். ராதா. அவள் ஒருத்தி தான் தன்னை முழுசாகப் புரிந்து கொண்டவள். எவ்வளவு நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள் என்று தெரியவில்லை. மீண்டும் தொலைபேசி மணி அடித்தது. ராதா தான்.

“என்ன அசைந்தீயா?”

“இல்லவே இல்லை. ஒரு இன்ச் கூட நகரவேயில்லை தெரியுமா. அவ்வளவு பயம் உன் மேலே.”

“ம்ம்ம்..அது. சரி நீ எங்கே உட்கார்ந்திருக்கே? எப்போதும் போலவே மேக்டோணல்ட்ஸ் பக்கம் தானே?”

“அங்கேயே தான்.”

“நினைச்சேன். நான் மேக்டோணல்ட்ஸில் தான் இருக்கேன். உன் நீண்ட கூந்தல் காற்றில் பறக்கும் கண்கொள்ளா காட்சி தெரிகிறதே.”

உடனே துளசி திரும்பிப் பார்த்து அவளுக்குக் கையசைத்தாள். ராதா அங்கு வந்து சேர்ந்தாள். துளசி பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

“ஏண்டியம்மா கொஞ்சம் பிரச்சனை வந்தாலே இங்கேதான் ஓடி வருவதா? சிங்கப்பூரில் இறுதி எல்லை இது தெரியுமா? தோ பா யோவிலிருந்து வருவதற்கு எவ்வளவு பெட்ரோல் செலவாயிருக்கும் தெரியுமா? ஆ..ஊன்னா ஈஸ்ட் கோஸ்ட் பார்க்தான் கதின்னு ஓடியாந்துடுறியே. நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கொண்டு புருஷன் கூட சண்டை போட்டாலும் இங்கே தான் வருவியாக்கும். பேசாமல் இங்கேயே வீட்டை வாங்கிவிடு.” படபடன்னு பேசினாள் ராதா.

துளசி புன்னகைத்தாள்.

“அது என்னமோ தெரியலே ராதா. இந்த அலைகள் இந்த கடல் எல்லாம் பார்க்க மனதுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு!
ஒய்வே இல்லாமல் கரையைத் தேடிக்கொண்டு வரும் அலைகள். அலைகள் எவ்வளவுத்தான் அடித்தாலும் பொறுமையாக இருக்கும் கரை. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.”

“அது சரி. அலை பிரச்சனையை விடு. உன் பிரச்சனைக்கு வரலாம்.” ராதா துளசியைப் பார்த்தாள். “எத்தனை பாடங்கள் போனது?”

“6”

“எடுத்தது எத்தனை?”

“8”

ராதா பெருமூச்சு விட்டாள்.

“ஏன் ராதா எனக்கு மட்டும் இப்படி நடக்கணும். நான் ஒண்ணும் அவ்வளவு முட்டாள் இல்லையே...! ஓ-நிலை, ஏ-நிலைத் தேர்வு எல்லாம் ஒழுங்காகத் தானே படித்து முடித்தேன். என் வாழ்க்கையை நிர்ணயிக்கும் இந்த பட்டப் படிப்பில் தான் நான் இப்படிப் போராடணும்மா ராதா. நான் வெறுத்துட்டேன். எப்போ எனக்கு விருப்பமில்லா துறை கிடைத்ததோ அப்பவே வேண்டாம்னு சொல்லி வெளியூருக்குச் சென்று எனக்குப் பிடித்த துறையில் சேர வசதி இல்லாமல் தான் விதி விட்ட வழியில் சென்றேன். எனக்குப் பிடித்த துறையில் சேர்ந்தால் இவ்வளவு தூரம் நான் போராட வேண்டியிருக்காதுன்னு தோனுது. எனக்குப் பிடிக்கலை. எப்படியோ இரண்டு வருடங்களைப் பாடுபட்டுக் கடந்துவிட்டேன். இனிமேலும் முடியுமான்னு எனக்குத் தெரியலே.”

“ஏய் துளசி. இப்போ என்ன ஆயிற்று. விட்ட பாடங்களை மீண்டும் முயன்று படி. உன்னால் கண்டிப்பா முடியும்டீ. நீ முட்டாள் இல்லையடி. உனக்குள்ளேயும் சில திறமைகள் இருக்கின்றன. எல்லோராலும் எல்லாவற்றிலும் திறமைசாலிகளாக இருக்க முடியாது. இவ்வளவு தூரம் வந்தாச்சு. இந்தப் படிப்பை முடித்த பின் உனக்கு எதில் விருப்பமோ அதில் சேர்.”

ராதா துளசியின் கரத்தை ஆறுதலாகப் பிடித்தாள்.

“கைவிடாதே துளசி!”

“எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலே. ஒரே பாடத்தைத்தான் எவ்வளவு முறை நான் எடுக்கிறது. இந்த 6-ல் மூன்று பாடங்களை நான் மூன்று முறை செய்திருக்கிறேன் தெரியுமா. சே...நினைக்கவே கேவலமா இருக்கு. ஏ-நிலைத் தேர்வுதான் மிகவும் கஷ்டம். பட்ட படிப்பு மிகவும் சுலபம்ன்னு சொன்னார்களே அவர்களை முதலில் சுட்டுக் கொல்லணும்.”

தனது ஆத்திரத்தை அடுத்தவர்களின் மீது கொட்டினாள் துளசி.

ச்சே..கேவலமா இருக்குடி.. துளசியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.

“இதில் என்ன கேவலம் இருக்கு?”

“ஆமாம். பார்க்கிறவங்க என்ன சொல்வாங்க? இந்த பிள்ளைக்கு ஒழுங்காப் படிப்பு வரலே. அதான் 4 வருட படிப்பை 6 வருடங்களா படிக்குதுன்னு கேவலமா பேசமாட்டாங்களா?”

“இப்போ நீ சொன்னீயே ‘மற்றவங்க’.யார் டீ அவங்க? கடைசியில் வாழப் போறது நீ. அவங்க இல்லை. இது உன் வாழ்க்கை. நீ உனக்கும் உன் மனசாட்சிக்கும் தான் பயப்படனும். அந்த மற்றவங்களுக்கு இல்லை. அவங்களுக்கு என்ன தெரியும். நீ எந்த துறையில் படிக்கிறே. அது ஒன்றுதானே தெரியும். வேறு அதைப் பற்றி என்னத் தெரியும். அந்த பாடங்கள் தெரியுமா? இல்லை அந்த பாடங்களை 12 வாரங்களுக்குள் புரிந்துகொண்டு தேர்வு எழுதுவதே பெரிய விஷயம் என்று தெரியுமா? என்ன தெரியும் அவர்களுக்கு. மற்றவர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் புண்படுத்த மட்டும்தான் தெரியும். இது வீண் குழப்பம் துளசி. தப்பு டீ. அதை விட தப்பு நீ இப்படி எண்ணியது...! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது எனக்கு ஆறுதல் கூறி என்னை முயற்சி செய்யத் தூண்டி வெற்றி பெறச் செய்தவளே நீ தான். நீயா இப்படி பேசுவது.”

“நானே தான் ராதா. போராடிப் போராடி களைத்துவிட்டேன். ஒவ்வொரு செமஸ்டரும் செத்துத்செத்துப் பிழைக்கிறேன். எரிச்சல் எரிச்சலா வருது. மீண்டும் ஏ-நிலைக்கே ஓடிவிடலாமான்னு தோணுது.”

“பைத்தியக்காரத்தனமா பேசாதே. ஓடுவதனால் எதுவும் குறையாது. மீண்டும் எதிர்த்துப் போராடணும். யாருக்குத்தான் இல்லை போராட்டம். பட்டப்படிப்போட கவலைகள் போராட்டங்கள் எல்லாம் முடிந்தன என்று நினைக்கிறீயா? கண்டிப்பா இல்லை. வேலையிலும் போராட்டங்கள் இருக்கும். பல எதிர்ப்புகளை பல சவால்களைச் சந்திக்கணும். அப்போதும் ஓடிப்போக நினைப்பியா? அப்படி பார்த்தால் நீ வாழ்க்கைப் பூரா ஓடிக்கிட்டுத்தான் இருக்கனும்.”

துளசி மௌனமாகவே இருந்தாள்.

“நான் இருக்கேன். உன் குடும்பம் இருக்கிறது. உனக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். நீ விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் போராடனும். நீ படிக்கும் விதம் சரியாக இல்லாமலும் இருக்கலாம். சந்தேகம் இருந்தால் உன் பேராசிரியர்களை அணுகவேண்டும்.”

“நீ சொல்வதும் சரிதான் ராதா. ஆனால் இது வரை அப்படித்தானே செய்து கொண்டு வந்தேன். இதுக்கும் மேலே என்னால் முடியும்ன்னு தோனலே.”

“இதான்... உன்னாலே முடியாதுன்னு நீ மனசுக்குள்ளேயே தடை போட்டிருக்கே பார். இதான் காரணம். நாம் எதையும் நல்லதாகவே பார்ப்போமே. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும். இதை நான் சொல்லவில்லை. கீதையிலே பகவான் கூறுகிறார். இங்கே பார் துளசி கடைசியா ஒன்று சொல்றேன். பாதியில் போராட்டத்தை விட்டு ஓடிவந்த தோழி என்று சொல்வதைவிட எது வந்தாலும் சரி போராடி ஜெயிப்பேன் என்ற வைராக்கியம் கொண்ட தோழி என்று சொல்வதில்தான் எனக்குப் பெருமை. அதுதான் உனக்கும் பெருமை. போராட்டம் தான் வாழ்க்கை. நீ வாழ்வதற்குப் போராடுகிறாய். அவ்வளவுதான். நீ கண்டிப்பா மீண்டு வருவாய் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கு.
தன்னம்பிக்கையுடன் இரு துளசி.”

துளசி மௌனமாகத் தலையசைத்துப் புன்முறுவலித்தாள். இருவரும் அப்படியே சீறி வரும் கடல் அலைகளைப் பார்த்தபடி இருந்தனர். அங்கே அந்த சிறிய நண்டு அலைகளை எதிர்த்துப் போராடித் தன் வளைக்குள் ஓடி மறைந்தது.

- ரேணுகா விசுவலிங்கம் ([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com