Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
றஞ்சனி

எதிர்பாராத நிமிடத்தில் மரங்களை உலுப்பி அங்குமிங்குமாக ஆவேசத்தில் கூத்தாடுகிறது காற்று, கதிரவன் கலவரத்தில் ஒளிந்து கொள்ள கருமுகில்கூடி மாநாடு போடுகிறது, முழங்கிய முழக்கத்தின் கோபத்தில் மின்னல் ஏளனமாக சிரித்துச் செல்கிறது. இரைச்சலுடன் வந்திறங்கும் மழையுடன் காற்று கலக்க நினைக்கையில் அங்குமிங்குமாக அலைகிறது மழை. காற்றின் தாகமடங்க மழை விடாத ஆவேசத்தில் பொழிந்து கொண்டிருக்கிறது.

இயற்கை நடத்திக் கொண்டிருகும் களியாட்டத்தில் எனைமறந்த நான் வீட்டு ஜென்னல்கள் அடித்து மூடியதில் விழித்துக் கொண்டேன். ஜன்னல் கதவுகளை பூட்டிவிட்டு இருள் சூழ்த மதியப்பொழுதில் தேநீருடன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு பால்கனிக்குப் போகும் நீண்ட கண்ணாடிக் கதவருகே தரையில் போர்வையுடன் உட்காருகிறேன். தனிமையின் சுகமும் ஏதோ ஒருவித தவிப்புமாக எனது கனவு நீழ.. கண்ணாடி ஜன்னலூடாக என் கண்கள் பதிகிறது. மழை ஆவேசமாக யாருடனோ கோபித்துக் கொள்கிறது. என் கண்களுடன் இல்லை என்பது மட்டும் தெரியும், சிறுவயதிலிருந்தே மழையின்மேல் அலாதி காதல்.

அன்று மழை பெய்தவுடனே பேப்பரைக் கிழித்து கப்பல்செய்து அது ஓடும் அழகை ரசிப்பதிலும் அல்லது எதாவது கையில் கிடைப்பதை வழிந்தோடும் மழைநீரோடு ஓட விட்டு ரசிப்பதிலும் ஒரு தனி இன்பம். மழையில் நனைவதிலிருந்து மழையில் குளிப்பதுவரை மிகவும் பிடித்தது.

இன்று இங்கு ஜன்னலருகிலிருந்து மழையை ரசிக்கும்போது பல அடிமனதில் உறைந்துவிட்ட நினைவுகள். நான் ரசித்த அந்த மழைக் காதலனைத்தான் என் அம்மாவும் ரசித்தாள். நகரத்தில் இருந்து அந்த காடுகள் சூழ்ந்த வன்னி வீட்டிற்க்கு வந்தபோது அவளுக்கும் ஆரம்பம் ஒரு பயங்கரம் நிறைந்த புதிராக இருந்ததாம். இருளும்போது அந்தக் காடுகள் அந்த வீட்டைச் சுற்றி பெரியகரடிகள் இருப்பதுபோல் தோன்றுமாம். (அவள் அங்கு சென்றபோது அருகில் அதிக மக்கள் இருந்ததில்லை என்பாள். அந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் சென்றால் சிறிய நகரம். அங்குதான் மனிதர்கள் நிறைய இருந்தார்கள். அங்குதான் பெரியபாடசாலைகள் ஆஸ்பத்திரியிலிருந்து எல்லாமே இருந்தது.)

தூக்கமில்லாது கழித்த இரவுகளும் நாடு சுற்றும் வாலிபனாக இருந்த அப்பாவின் துணையில்லாத பொழுதுகளும் அம்மாவுக்கு இருளுடனும் அந்த ஊருடனும் ஒரு நட்பான ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அவளின் தனிமையுடன் பறவைகளும் விலங்குகளும் அவளுக்கு நண்பர்களாகிப் போயின. அந்த ஊர் அவள் சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு உறவாகி அவளுக்குள் இருந்த இயற்கையின் நேசிப்பினால் எல்லா விதமான மரங்களும் பழங்களும் பல வண்ணப் பறவைகள் என்று அந்த வன்னி வீடு அழகிய சோலையாக மாறியது. எங்கிருந்தெல்லாம் அம்மாவைத்தேடி மக்கள் வருவார்கள். அவரின் ஆலோசனைகள் ஆறுதல்களும் உதவியும் அவர்களுக்குத் தேவையாக இருந்தது.

இப்படித்தான் என் அம்மா தன் வாழ்க்கையை வன்னியுடன் அர்ப்பணித்துக் கொண்டாள். எப்போதாவது தோன்றும் அப்பாவை ஒரு விருப்பமில்லாத கடுமையான வாத்தியாரைப் போலவே நோக்கவேண்டியிருந்தது. அவருக்கும் எமக்கும் ஒரு நல்ல உறவு இருந்ததில்லை. அப்பாவுக்கும் அம்மாவிற்கும் ஏற்படும் முரண்பாடுகள் அவளுக்கும் எமக்கும் சந்தோசத்தை தந்தவைகள் இல்லை. ஆனாலும் அப்பாமீது அம்மா கொண்டிருந்த ஒருவிதக் காதலும் மதிப்பும் பாசமும் என்னால் இன்றுவரை புரிந்துகொள்ளமுடியாதது. இதுதான் எமது எல்லா அம்மாக்களினதும் குணமாகவும் இருந்தது, இருக்கிறது என நினைக்கிறேன். எனக்கும் அப்பாமீது ஒரு அன்பு இல்லாமலும் இல்லைதான்.

பேதங்கள் ஏதுமில்லாத மனிதநேயத்தை நான் அவளிடம்தான் கற்றுக் கொண்டேன். அவளிடமிருந்து தோல்விகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு வாழும் திடமான மனதை இன்றுவரை என்னால் அவளிடமிருந்து கற்கவும் முடியவில்லைதான். அவளை நினைக்கும்போது பெருமையாக கண்கள் பனிக்கும். அவளிடம் நிறைய கதைகள் இருந்தன. சொல்வதற்கென்று தனது சிறுவயது ஆசைகள், தான் படிக்கவேண்டுமென்று இருந்தும் தன் திருணம் ஒரு விபத்தாக முடிந்ததுபற்றி, தன் சகோதரர்களைப் பற்றி, அவளின் சிறுவயதில் தாயை இழந்து தனது அம்மம்மாவுடன் வாழ்ந்தது பற்றி இப்படி பல. நான் சிறுபெண்கனவுடன் இருந்ததால் அன்று அவளின் கதைகளைக் கேட்கும் நிலையில் இருந்ததில்லை.

5 வருடங்களுக்குமுன் அவளைப் போய்ப்பார்த்தபோது பிள்ளைகளைப் பிரிந்தசோகம் அவளை வாட்டியிருந்தது. அப்போதும் அவளிடம் நிறைய கதைகள் இருந்தன. ஆவலுடன் என்னிடம் பகிர்ந்துகொண்டாள். அன்று நான் அவளிடம் அறியாத விடயங்கள் இன்று என் மனப்பக்குவத்தால் ஆறுதலாக புரிந்துகொள்ள முடிந்தது. அது அவளுக்கும் எனக்கும் ஒரு ஆறுதலைத் தந்தது.

படிப்புக்காக அவளைப் பிரிந்து வெளியூர்போனது, அதன்பின் அவளை முழுதாகப் பிரிந்து புகலிடம் வந்தது எல்லாமே மின்னல்வேகத்தில் நடந்த அதிசயமான உண்மைகள். வன்னி வீட்டில் மழைவந்தால் செம்மண் வாசனையும் அடர்ந்த மரங்களில் விழுந்து வழியும் மழையின் சத்தமும் பார்த்துக் கொண்டிருக்க அழகாகவும் சந்தோசமாகவும் இருக்கும். எமது வீட்டின் பின்புற நான்கு சதுர முற்றத்தில் வந்து வழியும் மழைநீர் அருவிபோல் இருக்கும். அதில் குளிப்பதே ஒரு புத்துணர்ச்சியானது. எல்லாமே நெஞ்சில் வலிக்கும் நினைவுகளின் தருணங்கள். இந்தச் சூழலில் அந்த நினைவுகள் வதைநிறைந்த சுகந்தருபவை.

தொடர நினைக்கையில் தொலைபேசி அழைப்பு குலைத்துப் போகிறது. பெரிய பெருமூச்சொன்று என்னிடமிருந்து விடைபெற கண்கலங்க போர்வைக்குள் தஞ்சமாகிறேன். மீண்டும் ஜன்னலுக்குத் திரும்புகையில் காற்று சிறிது அமைதியாகி மழை ஒரே கோட்டில் நேராக பெய்ய போராடிக் கொண்டிருந்தது. எனது ரசனைகளை ஆராதிக்கும் அந்த காதலன் அருகிருந்தால்...
உண்மையில் மழையா அல்லது உள்ளுக்குள் மழையா? அவனது கேள்வி.

அவன் ஆசையுடன் எனை அணைத்து என் கவலைகளையும் கற்பனைகளையும் தனதாக்கி என் வலிகளை வருடிக்கொடுத்தான்.

‘உண்மையில் மழைதான்’ இது எனது பதில்.

அவனின் வார்த்தைகள் என் வலிகளுக்கு இதமாக இருந்தது. போர்வைக்குள் பெருகிய வியர்வை எமைக் கரைக்க... நிமிடங்களும் அவனும் மறைந்து நான் சுயத்தை அடைந்தபோது இயற்கை ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கைசாத்திட்டிருந்தது. சூரியன் கலவரம் நீங்கி மெதுவாக வெளிக்கிறான். அறையில் மெல்லியதாக இசைத்துக் கொண்டிருந்த ‘கண்ணீரே... சந்தோஷக்கண்ணீரே... பெண்ணே பெண்ணே வாராய் பெண்ணே உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழைகொண்ட சொந்தம்...’ இந்தப் பாடல் வரிகள் மழையில் துள்ளி எழுவதுபோல் வரும் அப்பாடலின் தொடக்க இசை எல்லாமே இந்த சூழலிற்கேற்ப எனக்காகவே இசைத்ததுபோல் மனம் சிலிர்த்தது .


- றஞ்சனி([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com