Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பரிணாம வளர்ச்சி ...!!?

பத்மப்ரியா


எப்படி ஏறினேன்...!?

யாருக்கு தெரியும்...?

நிக்க முடியுது என்னால...!!?

நானும்தான் நின்னுட்டு இருக்கேன்...?

பேச வேற பேசறோம்...!!?

இந்தக் கூட்டத்துலயும் .. காத்து வருதே அதபாரு.. எதோ போன ஜென்ம புண்யம்தான். சரி சில்லறையை அனுப்பி டிக்கட் வாங்கு. செக்கிங் ஏறினா கஷ்டம்

பக்கத்தில் நின்ற ஒரு சின்ன பெண்ணிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டி

“ரெண்டு ஸ்பென்சர்ஸ்... கொஞ்சம் பாஸ் பண்ணும்மா .. ப்ளீஸ்” என்றாள் பவித்ரா.

அந்த சின்னப் பெண் பவித்ராவின் கண்களைக் கூட சந்திக்கவில்லை, ஜன்னல் வழியாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. உடல் மொழியாலேயே அளவுக்கு அதிகமாக அலட்சியம் காட்டியது. இந்த வயதில் இவ்வளவு திமிரா..?அதிர்சியாக இருந்தது. மிஞ்சிப் போனால் அதற்கு பன்னிரண்டு வயதிற்குள்தான் இருக்கும். அவளை விட இவள் நிச்சயம் ஒரு எட்டு அல்லது பத்து வயது பெரியவளாகத்தான் இருப்பாள். இவளது வயதிற்கு கூட மதிப்பில்லை. இவளிடம் பணத்தை வாங்கி தனக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் தரக் கூடிய சிறிய உதவியைக் கூட செய்ய மனமில்லை. அப்படி செய்யாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதையும் திடகாத்திரமாய் நின்று .முகபாவத்திலேயே உணர்த்தியது.

தலைமுறை இடைவெளி..!!!? எங்கே போகிறது இளைய சமுதாயம்.? இவளது வயதில் தான் எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தாள். எழுந்து ஓடிப்போய் பயணச் சீட்டு வாங்கித் தந்தது... குழந்தையுடன் வருபவர்களுக்காக எழுந்து இடம் கொடுத்து... பயணம் முழுதும் நின்றுக் கொண்டு வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

பாத்தியா சரண்யா..?

Chennai bus விடு.. ஜென்ட்ஸ் பக்கம் கொடுத்தனுப்பு.

திடீரென "ஏம்ப்பா. எந்திரிங்கப்பா.. லேடீஸ் சீட் காலி பண்ணுங்கப்பா- என்ற குரல். அந்தக் குரலுக்கு உரிமையாளர் கடந்த நிறுத்தத்தில் ஏறிய - வட்டக் கொண்டை போட்ட ஒரு பெரியம்மா. இவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டு எந்த தைரியத்தில் இந்த சென்னை மாநகரப் பேருந்தில் ஏறுகிறார்கள்? அந்த கடைசி நீள இருக்கை முழுதும் அடைத்தார் போல உட்கார்ந்திருந்த ஆண்கள் ஒருவர் கூட அசையவில்லை. அவர்களால் நிற்க முடியும். ஊனமேதும் இல்லை.

“ஐய்ய. சொல்றமில்ல.? எந்திரிங்க. உக்காந்துனே இருக்க.? பொம்பளங்க உக்கார எடம் உடுங்கப்பா."

ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த இருவரும் தூங்குவது போலவும், வாந்தி வருவது போலவும் நடித்தனர். அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவர்களின் உயிர் தோழர்கள் இருவரும் அவர்களின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக காட்டிக் கொண்டனர். நடுவில் உட்கார்ந்திருந்த இருவரும் யாருடைய கண்களையும் சந்திக்காமல், நக்கல் சிரிப்புடன் மையமாகப் பார்த்தனர்.

எத்னி தபா சொல்றது..? எந்திரிங்கடா

இன்னாது..? டா வா? - நடுவில் உட்கார்ந்திருந்தவன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். ஆனால் அதற்காக எழுந்துக் கொண்டான் இல்லை.

என் புள்ள வயசுதான் இருக்கும் உங்க எல்லாத்துக்கும். எந்திரிங்கப்பா. லேடீஸ் நிக்க முடியாம கஸ்டபட்றமில்ல.?

உன்ன மாறித்தான் நாங்களும். டிக்கட் வாங்கி இருக்கோம்

நீ வாங்கு. இல்ல வாங்காதே. அத்த பத்தி இன்னா.? இப்ப எடத்த காலி பண்ணு. இது லேடீஸ் சீட்டு

ஒவ்வொருவவும் வெவ்வேறு திசைகளைப் பார்த்தார்கள்.

"ஆரம்பிச்சிட்டான் சரண்யா. பின்னாடி தடவறான். வாந்தி வருது எனக்கு"

"இப்டி என் பக்கம் வந்துரு பவி"

எந்தவித மாற்றமும் இல்லை. அவன் உரசுவதும். மேலே விழுவதும் அதிகமாகியது. சரண்யாவையும் சேர்த்து உரசினான். திரும்பி பார்த்தார்கள். அவன் ஜன்னல் வழி மும்முரமாகப் பார்ப்பதாய் நடித்தான்.

சனியன். எருமைமாடே தேவலாம் - சத்தமாக சொல்ல நினைத்து. மெள்ளமாக சொன்னாள்.

அந்த வட்ட கொண்டையம்மா. இருக்கைக்காக - சுதந்திரப் போராட்டத்தை விட ஒரு படி அதிகமாக போராடுவது தர்மப்படி நியாயம். இந்த எருமைமாடுகிட்ட இருந்து தப்பிப்பதற்காகவே லேடீஸ் சீட் காலியாக வேண்டும். இதெற்கெல்லாம் காந்திஜீ வரமாட்டார். ஆனால் வந்தால் தேவலை.

அந்த கொண்டை அம்மையார் மட்டும் தனியாகப் போராடுவதும், தானும் சரண்யாவும் ஏதும் பேசாமல் வருவதும் அநியாயம் என மனசாட்சி எடுத்துரைத்தது. மிக நீண்ட மனப் போராட்டத்துக்குப் பின், ஒட்டு மொத்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு, அந்த ஆண்களை (!????) பார்த்து “ நீங்க எல்லாரும் லேடீஸா. இல்ல ஹான்டிகேப்டா.?” என்றாள் பவித்ரா. கொஞ்சமே கொஞ்சூண்டு அசைவு தெரிந்தது அனைவரிடமும். ஆனால் அதற்காக யாரும் எழுந்துவிடவில்லை. இவளைப் பார்த்துக் கொண்டிருந்த சாதாரணப் பார்வையை நீக்கி. வெறுப்பான கடித்துக் குதறும் பார்வையாக மாற்றிக் கொண்டார்கள்.

திடீரென ப்ரேக். கை வழுக்கி அந்த தடியன்கள் மேலேயே விழப் போனாள் பவித்ரா.

"மயக்கமா..? கலக்கமா.?" பாடினான் ஒருவன்.

"ஆக்ட் உட்ராங்கப்பா.."-இன்னொருவன்

சே.. என்ன மனுஷங்க இவங்க..? மனிதாபிமானம். தார்மீக நியாயங்கள் எங்கே போயின? வீக்கர் செக்ஸ் எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகமாகிவிட்டதா.? அறுபது வயதிலும்.. நாலைந்து லேடீஸ் சீட் காலியாக இருந்தாலும், “வேண்டாம்.. திடீர்னு லேடீஸ் ஏறிட்டா. எழுந்துக்கனும். அதுக்கு நின்னுகிட்டே வரலாம்.” என்று சொல்லிய அப்பாவும், கர்பிணியும், கைக்குழந்தைகாரியும் ஏறிய போது, சட்டென எழுந்து தங்கள் இருக்கைகளை அவர்களுக்கு தந்த சித்தப்பாக்களும்.. “லேடீஸ் சீட்டுக்கு ஆளுங்க ஏற வரைக்கும் உக்காருவோம். வந்ததும் எந்திரிச்சுருவோம்” என்று பெண்கள் ஏறியதும் எழுந்துக் கொண்ட அண்ணன்களும் நினைவுக்கு வந்தனர்.

“எங்கப்பா..? அந்த கண்டிக்டரு.? ஐய்ய. இத்தக் கேளு. லேடீஸ் சீட் எந்திரிக்க சொல்லு. உங்க அம்மா, தங்கச்சின்னா இப்படித்தான் இருப்பீங்களாடா?” - கொண்டையம்மாத்தான் விடாமல் போராடினாள்.

பெண்கள் படிப்பறிவு பெறாமல் இருப்பதே ஓரளவு நல்லதோ.? படித்துவிட்டால் தேவை இல்லாமல் நாகரீகம், பண்பாடு, நல்ல பழக்க வழக்கம் எனப் பார்த்துப் பார்த்து, கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளைக் கூட கேட்க இயலாமல் கோழையாக்கிவிடுகிறது அந்தப் படிப்பு.
வட்ட கொண்டையம்மா நிச்சயம் படித்திருக்க மாட்டாள். அதனால்தான் கேள்விகளை தைரியமாகக் கேட்டு, தனக்கான உரிமைக்காகப் போராடுகிறாள். கண்டக்டர் பேருந்தின் முன்புறமிருந்து நீந்தி கரைசேர்ந்து தனது இருக்கைக்கு பத்திரமாக வந்தார். அதில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப்பெண்ணை தொடர்ந்து அமருமாரு சைகை காட்டிவிட்டு, கொண்டையம்மாவைப் பார்த்து “இன்னாமா.?” என்றார்.

“லேடீஸ் சீட்டு.. காலி பண்ணி உடு”

“எல்லாம் எந்திரிங்கப்பா. லேடீஸ் சீட் காலி பண்ணி உடுங்கப்பா” என்று சொல்லிவிட்டு வேறு பக்கம் திரும்பி எச்சில் தொட்டு டிக்கட் கிழித்து தன் கடைமயை செவ்வனே ஆற்றினார். கண்டக்டரின் இந்த கடுமையான ஆணையைக் கேட்டு பயந்து அலறி, அடித்து பிடித்து, தட்டு தடுமாறி. வேகமாய் எழுந்து நின்று - அவர்களில் யாரும் அந்தப் பெண்கள் இருக்கையை காலி செய்துவிடவில்லை. பதிலாக கூடுதல் நக்கல் புன்னகையுடன் கொண்டையம்மா, பவித்ரா மற்றும் சரண்யா, இன்ன பிற நிற்கும் பெண்களைப் பார்த்து ரசித்து சிரித்தனர். கடவுள் என ஒருவர் இருக்கிறார். அவர் அவ்வப்போது மனித உருவிலும் வருவார் என நமது இந்திய தாய் திருநாட்டின் முன்னோர் சொல்லி வைத்தது - சத்தியமான தீர்க்க தரிசனம்.

வீறு கொண்டு எழுந்தார் ஒருவர். அவரது தோற்றம் முதலில் கருத்தை நிறைத்தது. ஒன்று அவர் மப்டி போலீஸாக இருக்க வேண்டும் அல்லது எக்ஸ் மில்ட்ரியாக இருக்க வேண்டும். அகன்ற தோள்களும், திடகாத்திரமான கை கால்களும் பேசாமல் பேசின.

" டேய்! இப்ப எந்திரிக்க போறீங்களா.? இல்லயா.? அப்போ முச்சூடும் பாத்துட்டிருக்கேன். சத்தாய்க்ரீங்களா.? எந்திரிங்கடா.” - என்றார்
எருமை மாடுகள் கொஞ்சம் அசைந்தன. அப்படியும். எண்ணி மூன்று பேர் மட்டுமே எழுந்தனர்.

முதலாவதாக இந்த ஆவேசப் போராட்டத்தில் வீரமுடன் தலைமை தாங்கிய தானைத் தலைவி தருமமிகு சென்னைத் தலைமகள், தன்னிகரற்ற வட்ட கொண்டையம்மா, அடுத்ததாக - திடீர் மரணத்துக்கும் துணிந்து “லேடீஸா .?” என்று நறுக்கென தீனக் குரலில் கேள்வி கேட்ட துணைத்தலைவி பவித்ரா மற்றும் வெறுமனே நின்று கொண்டிருந்த சரண்யா ஆகிய மூவருக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனவே. மக்களே.. படிப்பறிவு -தேவையில்லாத மனத் தடங்கல்களைத் தருகிறது. போராடும் குணத்தை குறைத்து பெண்களை கோழையாக்குகிறது. ஆனால் படிப்பறிவில்லாத, போன தலைமுறை பெண் எப்படி விடாமல் போராடி, தனது உரிமையைப் பெறுகிறாள் என்பதே இச்சிறுகதையின் (!!!!???) வாயிலாக நான் சொல்ல வரும் நீதி என நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து, முதல் பரிசையும் இரண்டாவது பரிசையும் ஒரு சேர வழங்க கிளம்பினா, சாரீ மாக்கான்ஸ். மன்னிச்சுடுங்க. நீங்க இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவே இல்ல. இன்னும் மேஜர் சுந்தர்ராஜனாவே வாழ்ந்துட்டு இருக்கீங்க. போன தலைமுறை ஆளாவே இருக்கீங்களேய்யா. அப்பிராணிகளா..! உங்களை என்னத்தை சொல்ல?

இக்கால இளைய தலைமுறை பழக்க வழக்கங்களுக்கும், வளர்ச்சியடைந்து விட்ட கலாசார (!!!!), பண்பாட்டு (!?) மறுமலர்ச்சி மாறுதல்களுக்கும் நீங்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்பதை நான் சொல்லித்தான் ஆகணும். அப்டேட் ஆகணும்னா. மேற்கொண்டு படியுங்க..அப்ப புரியும்

வட்ட கொண்டையம்மா வெற்றிப் பெருமிதத்துடன் ஜன்னலோரமாய் அமர்ந்தாள். ஆட்சேபிக்க முடியாது. போகட்டும். போராட்டத் தலைவி வேணுங்றத எடுத்துக்கிட்டு மிச்ச மீதியை மத்தவங்களுக்கு தரலாம். தப்பில்லை. அடுத்ததாக. எங்கிருந்தோ திடீரென நீந்தி வந்திருந்த மற்றொரு குண்டம்மா உட்கார்ந்து விட்டாள். அதைப் பார்த்து அதிர்ந்த பவித்ரா மீதமிருந்த கொஞ்சமே கொஞ்சுண்டு இடத்தில் உட்காரலாமா, உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவன் எது வேணும்னாலும் செய்வானே. அதுக்குப் பேசாம சரண்யாவுக்கு ஆறுதலா நின்னுட்டே வரலாமா என பலவிதமாக யோசித்து, சிறிதே அசையும் போது,

“அட இரும்மா. சுரேசு.. சுரேசு. இங்க உக்காரு. பக்கத்துல ஆம்பளைங்கதான் உக்காந்திருக்காங்க” என்று பாசத்துடன் அழைத்தாள் வட்ட கொண்டையம்மா.

அந்த சுரேசு எனப்பட்டவன் வேறு யாருமில்லை. தானைத் தலைவியாக இல்லாவிடாலும் ஓரளவு துணைத் தலைவியாக போராடிய பவித்ராவையும், பவித்ராவுக்கு பக்க பலமாக, தளரா உறுதுணையாக வெறுமனே நின்ற சரண்யாவையும் பின்பக்கம் உரசிக் கொண்டிருந்த அதே எருமை மாடுதான். உட்கார்ந்திருந்த எருமைகள் எழுந்து நின்றன. உரசிக் கொண்டிருந்த எருமை உட்கார்ந்துக் கொண்டது.

எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ. யாரோ. அறிவாரோ.?

- பத்மப்ரியா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com