Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கதைசொல்லி

குந்தவை வந்தியத்தேவன்


"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்க.

அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான் பாத்திருக்கேன். நார்த் இண்டியா பக்கமெல்லாம் போனதில்லை." என்று பதிலளித்தாள்.

ரவி ஒரு மென்பொருளியல் வல்லுநன், அமெரிக்காவில் கடந்த நான்காண்டுகாலமாக, ஒரு தலைசிறந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். மிகவும் அமைதியானவன், அவ்வளவு சீக்கிரத்தில் யாருடனும் பழகிவிடமாட்டான், எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து முடிவு எடுப்பவன் எனவும் நட்பு வட்டாரங்களில் பெயரெடுத்திருந்தான். அவன் தாய் தந்தை முடிவுசெய்து வைத்திருந்த, மீனாவை திருமணம் செய்துக் கொள்ள தமிழ்நாட்டிற்கு விடுமுறையில் வந்திருந்தான்.

மீனா மேலாண்மையியல் படித்துவிட்டு ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் உள்நாட்டுக் கிளையில் வேலைசெய்து வந்தாள். அழகும் அறிவும் சேர்ந்த கொஞ்சம் சூட்டிகையான பெண், அவள் உடை உடுத்தும் விதமே, அவளை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டிவிடும். ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்கள் திருமணம் நல்லவிதமாக முடிந்திருந்தது. மீனாவை அமெரிக்காவிற்கு உடனழைத்து செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்திருந்ததால், அவனுடைய எஞ்சியிருந்த விடுமுறையை கழிப்பதற்காகவும் தேனிலவிற்காகவும் குல்லு, மணாலி செல்ல முடிவெடுத்திருந்தான் ரவி.

இதைப்பற்றி அவன் வீட்டில் சொன்னபொழுது அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள், சிலநாட்களில் தான் அமெரிக்கா போகப் போகிறார்களே பின் எதற்கு தனியாக ஒரு தேனிலவென்று. ஆனால் ரவி கொஞ்சம் பிடிவாதமாக வற்புறுத்த ஒப்புக்கொண்டனர். மீனாவிடம் தாங்கள் போகப்போகும் பயணத்தைப் பற்றி சொல்ல நினைத்தவன், அடுத்த நாள் காலையில் எழுந்ததுமே ஆரம்பித்தான்.

"மீனா, மணாலி ஒரு அற்புதமான இடம், நான் வேலை சம்மந்தமாக உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் பறந்திருக்கிறேன். ஆனால் மணாலி போன்ற ஒரு இடத்தை பார்த்ததேயில்லை. முதன் முதலில் டெல்லியில் வேலை பார்த்தபொழுதே நான் தீர்மானித்துவிட்டேன், தேனிலவு மணாலியில்தான் என்று, அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதை அப்புறம் சொல்கிறேன்." கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்தான்.

தன்னுடைய திட்டமிடும் உத்தியை ரவி, மணாலி பயணத்தில் அழகாகக் காட்டியிருந்தான். வீட்டில் உட்கார்ந்தபடியே, சென்னையிலிருந்து டெல்லிக்கும், பின்னர் திரும்பி வருவதற்கும் விமானத்தில் முன்பதிவு செய்தவன். அப்படியே டெல்லியிலிருந்து தனக்கு மிகவும் நெருக்கமான ரஹுமான் என்ற ஓட்டுநரையும் குவாலிஸ் வண்டியையும் பதினைந்து நாட்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தான். டெல்லியிலிருந்து சண்டிகர் வழியாக, முதலில் சிம்லா செல்லவதாகவும்; பின்னர் சிம்லாவில் ஐந்து நாட்கள் தங்கிய பிறகு, அங்கிருந்து நேராய் குல்லுவிற்கு சென்று குல்லுவில் மூன்று நாட்களும், பின்னர் மணாலியில் மீத நாட்களையும் செலவழிப்பதாக திட்டம். இதில் டெல்லி, சண்டிகர், சிம்லா, குல்லு, மணாலி ஆகிய இடங்களில் தங்குவதற்கான ஹோட்டல்களையும் சென்னையிலிருந்தே முன்பதிவு செய்திருந்தான்.

அவன் தன்னுடைய திட்டத்தை மீனாவிடம் விவரிக்க அவளுக்கு வியப்பாய் இருந்தது. பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும், தாங்கள் தங்கப்போகும், சாப்பிடப்போகும் இடங்களைக் கூட திட்டமிட்ட தன் கணவனின் சாமர்த்தியத்தை பார்த்து பிரமித்துப்போனாள்.

"ஏங்க முன்னாடி நீங்க எதுவும் டிராவல் ஏஜென்ஸியில் வேலை செய்தீங்களா?" அவளின் நகைச்சுவை உணர்வை ரசித்தவனாய்,

"இல்லை முன்பே இதேபோல் ஒரு டிரிப் போயிருக்கேன், அதுவுமில்லாம இருக்கவே இருக்கு லோன்லி பிளானட் புத்தகம். அதன் மூலம் தேவைப்படும் மற்ற விவரங்களும் கிடைத்தது. அப்புறம் இன்னொன்னு நான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல, ரஹுமான் அற்புதமான டிரைவர், வாழ்க்கையில என்னை ஆச்சர்யப்படுத்தின ஒரு விஷயங்களில், அவனும் அவனுடைய குவாலிஸம் ஒன்று. ரஹுமான் சொன்னா குவாலிஸ் கேட்கும்னு நினைக்கிறமாதிரி வண்டி ஓட்டுவான். ஒரு விஷயம் மணாலிலேர்ந்து கொஞ்ச தூரம் போனால் ரோதங் பாஸ் அப்பிடின்னு ஒரு இடம்இருக்கு. ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும் அதன் அழகு. நம்ப பயணத்தில பார்க்கப்போற ரொம்ப முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்னு. அப்புறம் அந்தப் பனியும் குளிரும் நமக்கு ஒத்துக்கிச்சின்னா லே வரைக்கும் கூட்டிட்டி போறேன்னு சொல்லியிருக்கான் அவன். சொர்கத்தை நேரில் பார்க்கிறமாதிரி இருக்கும் லே. கொஞ்சம் தீவிரவாத பிரச்சனை இருக்குதுதான்னாலும் நாம போகாட்டி வேறயாரு போவாங்க. உனக்கொன்னும் பயமில்லையே?"

அவன் பேசுவதையே ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் மீனா, இவனுக்குத்தான் எவ்வளவு ஆர்வம் இந்தப் பயணத்தில். அவன் கண்கள் இந்த பயணத் திட்டத்தை சொல்றப்போ எவ்வளவு பிரகாசமா மாறுது என்றவாறு நினைத்துக் கொண்டிருந்தவளை அவன் கேட்ட கேள்வி திசை திருப்ப,

"என்ன கேட்டீங்க?"

couple அழகாய்ச் சிரித்தவன்,

"என்ன அதுக்குள்ள கற்பனையா? இல்லை, லேவில் கொஞ்சம் தீவிரவாதிகளைப்பத்தி பயமிருக்கு அதான் உனக்கு பயமாயிருக்கான்னு கேட்டேன்."

சிறிது யோசித்த மீனா, "உண்மையை சொல்லணும்னா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஆனா நீங்கத்தான் என்ன சொன்னாலும் விடமாட்டீங்க போலிருக்கே?" சொல்லிவிட்டு சிரித்தாள்.

"ஏய் அப்படியெல்லாம் கிடையாது, உனக்கு பயமாயிருந்தா போகவேணாம். இது ஒரு அடிஷினல் பிளான் தான் நம்மளோட முக்கியமான பிளான் மணாலிதான். நேரமிருந்து, உனக்கு மனமுமிருந்தால் போலாம்."

அவன் இப்படி சொன்னாலும் மீனாவிற்கு அவன் மிகவும் ஆர்வமாய் இருந்ததாய்ப்பட்டது. போகாவிட்டால் கொஞ்சம் வருத்தப்பட்டதாகவும்.

"இங்கப்பாருங்க நான் சும்மா உங்களை சீண்டினேன். உங்களை மாதிரியே எனக்கும் இந்தியா மேல நிறைய பற்றிருக்கு. நாமெல்லாம் போகாமயிருக்குறதாலத்தான் தீவிரவாதிகள் பிரச்சனை பண்றாங்க. நாம நிச்சயமாப் போலாம்."

ஒருவழியாக இப்படி அவர்கள் மணாலி பயணம் தொடங்கியது. விமானத்தின் மூலம் டெல்லி வந்திறங்கியவர்களை, விமான நிலையத்திலேயே வந்து வரவேற்றான் ரஹுமான். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவன் நெடு நெடுவென ஆறடி உயரமாய் கொஞ்சம் ஒல்லியாய் இருந்தான். ரவியும் ரஹுமானும் இந்தியில் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை, இடையிடையில் லடுக்கி, லடுக்கின்னு அவர்கள் பேசுவது மட்டும்தான் விளங்கியது அவளுக்கு. பார்த்தவுடனேயே அவளுக்கு வணக்கம் சொன்னான். விமான நிலையத்திலிருந்து நேராய் கனாட்பிளேஸ் வந்தவர்கள், அவர்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு சென்று குளித்து உடைமாற்றிவிட்டு, சாப்பிடுவதற்கு நேராய் சரவணபவனிற்கு சென்றார்கள்.

"என்னங்க நீங்க சொல்லவேயில்லை, நம்ம சரவணபவன் இங்கிருக்குன்னு." மீனா குழந்தைத்தனமாய் கேட்க, சரவணபவனைப் பார்த்தும் அவளிடம் தெரிந்த மகிழ்ச்சி, ரவியையும் சந்தோஷப்படுத்தியது.

"மீனா, இங்க ரெண்டு சரவணபவன் இருக்கு. நானிருந்தப்பயெல்லாம் கம்பெனி பார்ட்டி கொண்டாட இங்கத்தான் வருவோம். நார்த் இண்டியன்ஸ்க்கு இந்தச் சாப்பாடு ரொம்பப் பிடிக்கும்."

பிறகு, இரண்டு சௌத் இண்டியன் தாழி ஆர்டர்செய்து சாப்பிட்டுவிட்டு வெளியில் வர, அங்கே மல்லிகைப்பூ விற்றுக்கொண்டிருந்த நபர். மீனா புடவை கட்டியிருந்ததால் அவளிடமும் நீட்டினார். ஆசையாய் ரவியிடம் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டாள் மீனா. அப்பொழுதான் அவனுக்கு மெதுவாய் அலமேலுவின் ஞாபகம் வந்தது. அவளுக்கு மல்லிகைப் பூவென்றாலே பிடிக்காது என்று நினைத்தவன். தன்னைத் தானே கடிந்து கொண்டான் அலமேலுவைப் பற்றி மீனாவிடம் சொல்லாததை நினைத்து, பின்னர் பிறகு சொல்லலாம் என நினைத்து மறந்தும் போனான்.

அங்கிருந்து நேராய் ஹோட்டலுக்கு திரும்பியவர்கள், இரவுப்பொழுதை அங்கேயே கழித்துவிட்டு விடியற் காலையிலேயே சண்டிகருக்கு கிளம்பினர். வழியில் தான் அவளுக்கு புதிதாய் சந்தேகம் வந்தது.

"ஆமாம் இவன் நைட்டெல்லாம் எங்கத் தங்கயிருந்தான். எங்க சாப்பிட்டான்?"

மீனா ரஹுமானைத்தான் கேட்டாள்,

"அவனுக்கு நாம தங்கின ஹோட்டல்லயே ரூம் கொடுப்பாங்க, எல்லா ஹோட்டல்லயுமேயிருக்கும். அதுபோல சாப்பாடும் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்." சொன்னவனிடம் மீனா,

"நேத்திக்கு லடுக்கி லடுக்கின்னு அவன் உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தானே. என்னப்பத்தியா பேசினான்?"

"இல்லம்மா உன்னப்பத்தியில்லை, அது வேற ஒரு பொண்ணைப்பத்தி. உன்கிட்ட அதப்பத்தி ஏற்கனவே பேசணும்னு நினைத்தேன். இன்னிக்கு சிம்லா போனதும் சொல்றேன்." சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் ரவி.

சிகரெட் பிடிப்பதைப்பற்றி மீனாவிடம் முதலிரவிலேயே சொல்லியிருந்தான். அதுமட்டுமில்லாமல் சில மாதங்கள் அவகாசம் கேட்டிருந்தான் அதை நிறுத்துவதற்கு. ஆனால் மீனா அப்பொழுது அதைப்பற்றி கவலைப்படவில்லை அவன் எந்தப் பொண்ணைப்பற்றி சொல்லப்போகிறான் என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.

அன்று மாலை சிம்லா வந்ததிலிருந்தே மீனா கொஞ்சம் சோபையிழந்ததைப் போலிருந்தாள். முதலில் ரவியும் குளிர் மீனாவிற்கு ஒத்துவரவில்லையென்றே நினைத்தான். பின்னர்தான் அவள் தான் சொல்வதாய்ச் சொன்ன பெண்ணைப்பற்றி நினைத்தே இப்படியிருக்கிறாள் எனத்தெரிந்து கொண்டான். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலிருந்த மாலுக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, இரவு அங்கேயே உணவருந்திவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினர். அவளுடைய நிறத்திற்கு அவள் அணிந்திருந்த கருஞ்சிவப்பு நிற ஸ்வெட்டர் வெகு பொருத்தமாய் இருப்பதாய்ப்பட்டது ரவிக்கு.

"ஏய் இன்னிக்கு காலையிலேர்ந்தே நீ சரியாயில்லை. உடம்புக்கு எதுவும் பண்ணுதா?" என்று கேட்ட ரவிக்கு, இல்லையென்ற தலையசைத்தல் மட்டுமே பதிலாய்க் கிடைத்தது. பின்னர் சிறிது நேரத்தில்,

"நீங்க ஒரு பொண்ணைப் பற்றி சொல்றதா சொல்லியிருந்தீங்க?" மீனா கேட்க ரவிக்கு கொஞ்சம் ஆச்சர்யமாய் இருந்தது. அவன் மீனாவை கொஞ்சம் வித்தியாசமாய் நினைத்திருந்தான். ஆனால் இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு பொறாமை இந்த விஷயத்தில் என நினைத்துக்கொண்டவனாய்

"ஆமாம் மறந்துட்டேன் மீனா, நான் டெல்லியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அலமேலு அப்பிடின்னு ஒரு பொண்ணை காதலிச்சேன், அவளும் தான். நாங்க ரெண்டுபேரும் ஒரே கம்பெனியில் தான் வேலைப் பார்த்துவந்தோம். அப்படி ஒரு சமயத்தில் தான் நானும் அவளும் இங்கே இதே மாதிரி ஒரு டிரிப் வந்தோம். இப்ப நாம தங்கியிருக்கிற இதே ஹோட்டலில் தான் தங்கினோம்.

அவள் ஒன்னும் அவ்வளவு அழகாயிருப்பான்னு சொல்லமுடியாதுன்னாலும் பரவாயில்லாம இருப்பா. எப்பவும் எங்களுக்குள்ள ஒரு டிஸ்டென்ஸ் இருக்கும். ஆனா அந்த குறிப்பிட்ட பயணத்தில் அந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு ஒரு நாள் நாங்க தப்பு பண்ணிட்டோம்." ரவி சொல்லிவிட்டு நிறுத்த,

மீனா அங்கே நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஆனால் எங்களுக்குள்ள கருத்துவேறுபாடு வந்து கொஞ்ச நாள்லயே பிரிஞ்சிட்டோம். இன்னமும் எப்பவாவது மெய்ல் அனுப்புவா எப்படியிருக்கேன்னு கேட்டு அவ்வளவுதான். மற்றபடிக்கு நேர்ல பார்த்து ஆறேழு வருஷம் ஆயிருச்சு."

கேட்டுக்கொண்டிருந்த மீனா ரொம்பநேரம் எதுவும் சொல்லவில்லை, ரவியும் அதைப்பற்றி மேலும் எதுவும் பேசாமல் கண்மூடிப்படுத்திருந்தான். பின்னர் மீனா அவனை எழுப்ப எழுந்தவன்,

"நீங்க உண்மையை சொன்னதுக்கு நன்றி, நானும் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும். நான் சொல்லவேண்டாம்னுதான் நினைச்சேன். நீங்க என்கிட்ட உண்மையாயிருக்கிறதப்போல நானும் உண்மையாய் இருக்கணும்னுபடுது அதான்..." அவள் சொல்லப்போவதை கேட்க ஆர்வமாயிருந்தான் ரவி,

"அப்ப எனக்கு பதினெட்டு வயசிருக்கும். நான் காலேஜில் படிச்சிக்கிட்டிருந்தேன் எனக்கு ஒரு ப்ரெண்ட் ராஜேஷ்னு, நல்லா படிக்கிற பையன். எனக்கு படிப்பு விஷயங்களில் இருக்கும் சந்தேகங்களை அவன்தான் தீர்த்துவைப்பான். நாங்க காதலிக்கல்லாம் இல்லை, ஆனா ஒரு நாள் நான் அவன் வீட்டில் சந்தேகம் கேட்கப்போனப்ப தப்பு நடந்திருச்சு. இரண்டுபேரும் தெரிஞ்சுத்தான் பண்ணினோம். அதற்குபிறகு அப்படி நடந்ததேயில்லை.

அவன் இப்ப பெங்களூரில் வேலை பார்க்கிறான். இன்னமும் ஒரு நல்ல நண்பன், நான் முதலிரவன்னிக்கே இதைப்பத்தி சொல்லணும்னு நினைச்சேன். ஆனா உங்களைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு சொல்லலாம்னுதான் அன்னிக்கு சொல்லலை. அது நடந்து எட்டு வருஷம் ஆச்சு. இன்னிக்கு வரைக்கும் வேறெந்த தப்பும் பண்ணியதில்லை, இதையெல்லாம் நான் ஏன் உங்கக்கிட்ட சொல்றேன்னா, உங்களுக்கும் அந்த சூழ்நிலை புரியும்ணுதான். அந்த விஷயத்தை நான் மறந்து ரொம்ப நாள் ஆச்சு, நீங்க என்னை நிச்சயம் பண்ணின அன்னிக்குத்தான் திரும்பவும் நினைவிற்கு வந்து உறுத்தத்தொடங்கியது.

நான் சொல்லிட்டேன், இனிமேல் தீர்மானிக்க வேண்டியது நீங்கத்தான்."

உண்மையில் ரவியால் அவள் சொல்வதை நம்பமுடியவில்லை, ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தான். அவள் தான் சொன்ன பெண்ணைப்பற்றி சந்தேகப்பட்டதால் தான் ஒரு அழகான ஊடலுக்காக வேண்டி அவன் அப்படியொரு அலமேலு கதையை அவளிடம் சொல்லியிருந்தான். ரவிக்கு எப்பொழுதுமே அவனிடம் இருக்கும் கதைசொல்லியைப் பற்றிய ஒரு கர்வம் இருக்கும். எப்பொழுதுமே சீரியஸாய் இருப்பதால் அவன் சிலசமயம் அவனுடைய கற்பனைகளை கதையாய் சொல்லும் பொழுது எல்லோருமே நம்பிவிடுவார்கள்.

ஆனால் அவன் இன்று அலமேலுவைப்பற்றி சொன்னது அத்தனையும் கற்பனைகிடையாது. அலமேலு உண்மை அந்த பயணம் உண்மை அந்த நிகழ்ச்சியும் உண்மை, ஆனால் உண்மையான அலமேலுவின் காதலன், அவன் கிடையாது அவர்களுடன் வேலைசெய்யும் இன்னொருவன் பிரபாகரன். அந்த சம்பவம் அத்தனையும் உண்மை ஆனால் நடந்தது அலமேலுவுக்கும் பிரபாகரனுக்கும். கொஞ்சம் சோர்ந்திருந்த அவர்களை சமாதானப்படுத்தியது ரவிதான். இன்னமும் அந்த வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறது. ரவி அலமேலுவை தங்கச்சின்னு தான் கூப்பிடுவான். அதைப்போலவே அலமேலுவும் அண்ணா அண்ணான்னு உயிரையே விடுவாள்.

அவர்களுக்குள் இருந்த இனக்கவர்ச்சியில் அன்று தவறு நடந்துவிட்டதால், அவர்களை சமாதானப்படுத்தி அந்தப் பயணத்தை தொடர்ந்து நடத்த உதவியவன் ரவிதான். அதன் பிறகு அந்தப் பயணத்தில் அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தைப் பார்த்ததாலேயே அவனுடைய தேனிலவை இங்கே நடத்த தீர்மானித்திருந்தான். பின்னர் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருவரும் தனித்தனியே கல்யாணம் செய்துகொண்டார்கள். அலமேலுவின் திருமணத்தை அண்ணனாக முன்னின்று நடத்தித் தந்தவனே அவன்தான். அவனால் அலமேலுவை தவறாக நினைக்கவே முடியவில்லை. இன்றைக்கு அவளுக்கு இரண்டு குழந்தைகள் அற்புதமான குடும்பம் என்று அழகாய் வாழ்ந்து வருகிறாள். இன்னமும் அவனிடம் அந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி அவள் சிரிப்பதுண்டு. அவனும்தான்.

அதனால் மீனா சொன்னதைப் பற்றி யோசிக்க எதுவும் இருப்பதாக படவில்லை ரவிக்கு. அதற்கு அவன் சில ஆண்டுகளாய் பழகிவந்த அமெரிக்க சூழ்நிலையும் காரணமாயிருந்தது. உண்மையில் அவள் செய்தது ஒரு பெரிய தவறாக அவனுக்கு படவில்லை, ஏதோ சின்னவயசு தவறு நடந்துவிட்டது என்றே நினைத்தான். ஆனால் தான் அலமேலுவைப் பற்றி மீனாவிடம் சொன்னது பொய் என் சொல்லலாமா வேண்டாமா எனத்தான் வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் அப்படி சொல்லிவிட்டால், மீனா அவளைப்பற்றி கில்டியாக நினைக்கலாம். தன் கணவனும் தவறுசெய்துவிட்டான் தானும் செய்திருக்கிறோம் சரியாய்ப்போய்விட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பவளிடம் தான் போய் உண்மையைச் சொன்னால் தவறாய்ப்போய்விடும் என பயந்தான்.

பின்னர் அவள் தன்னைப்பற்றி இன்னும் நன்றாக புரிந்துகொண்ட பின்னர் மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தவனுக்கு, அப்பொழுதுதான் தான் பால்கனிக்கு வந்து இரண்டுமணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்த விஷயமே உணர்வில் வந்தது. பாவம் மீனா பயந்துவிடப்போகிறாளென நினைத்தவனாக காலணி அணிய கீழே பார்த்தவனின் கண்களில், இரண்டு மூன்று பாக்கெட் சிகரெட் பட்ஸ் பட்டது, முதலில் இந்த சனியனை ஒழிச்சுக்கட்டணும்னு நினைத்தவனாய் மீனாவை சமாதானம் செய்ய உள்ளே சென்றான்.

- குந்தவை வந்தியத்தேவன் ([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com