Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
நோவானின் உலகமும் செளமியின் பிறந்த நாளும்

இளந்திரையன், கனடா


செளமி என் குழந்தை. நான்கு வயதுக் குழந்தை. தத்துப் பித்தென்று மழலை பேசி எங்களைச் சந்தோஷக் கடலில் மூழ்கடிக்கவென்றே இறைவன் அனுப்பி வைத்த குழந்தை. நோவாதான் யாரென்று உங்களுக்குத் தெரியுமே. இன்றைய உலகத்திற்கு யார் யாரெல்லாம் தேவை என்று நினைத்தாரோ அவர்களையெல்லாம் பெரீய படகில் ஏத்தி காப்பாத்தினவர். எவ்வளவு பெரீய படகாயிருந்திருக்கும். உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு ஜோடியாக ஏத்துவதென்று சொல்லப்பட்டாலும் அதற்கு எவ்வளவு பெரிய படகு வேண்டியிருந்திருக்கும். பிரளயத்தில் எவ்வளவு பெரிய அலை எழும்பக் கூடும். பத்து அடி பதினைந்து அடியென்று கணக்குப் பார்க்க முடியாது தான். இதைவிடப் பெரிய அலைகளையெல்லாம் தாக்குப் பிடித்திருக்க வேண்டும்.

Kid என்னமோ தாக்குப் பிடித்ததும் அதனால் இன்றைக்கு உலகம் என்று ஒன்று இருப்பதும் தான் உண்மையாயிற்றே. அதனால் மிகப் பெரீய்ய படகாய் இருந்திருக்கக் கூடும். அதுவா இப்போ பிரச்சனை. மனிதரிலும் ஒரேயொரு ஜோடி. ஒரே நிறம் குணம் இருந்திருக்க வேண்டும். அப்படித்தான் இல்லையே. எத்தனை நிறம் குணங்களுடன் மனிதர்கள். மனிதர் மட்டுமா ? எல்லாம் தான் அப்படி இருக்கின்றது. நான் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ட்ரக் வண்டியைப் போல. பல வடிவங்களில் பல குணங்களில். ஒரு யானையைக் கட்டி இழுத்துப் போவதைப் போல. அறுபதடி நீளத்தில் இழுபட்டு வருகின்றது.

வீதியில் ஓடுவதில் இதுதான் பெரிய வாகனமாயிருக்க வேண்டும். சமயத்தில் வீதியைத் தாண்டியும் இடம் வேண்டியிருக்கின்றது. எல்லா வாகனமும் நின்று பார்க்க இந்தப் பெரிய ட்ரக் வண்டி சுழன்று திரும்பி வர அதற்குள் நானிருக்க , பெருமையாகத் தானிருக்கின்றது. ஆனால் வாழ்க்கை தான் பெருமையாக எப்பொழுதும் இருக்கின்றதில்லை. மடியில் பிடித்துக் கடனட்டை தந்த கடன் காரர்கள் கழுத்தைப் பிடித்து நெருக்க வாழ்க்கை மூச்சுத் திணறுகின்றது.

செளமிக் குட்டியின் பிறந்த நாள் நெருங்க நெருங்க மூச்சுத் திணறல் அதிகரித்துப் போகும். செளமிக் குட்டியின் உலகம் வேறு. அங்கு ஆடலும் பாடலும் தான் பிரதானம். விதம் விதமான தேவதைகள் இருக்கின்ற உலகம். சிண்ரரெல்லா, லிற்றில் மார்மெயிட், போன்ற தேவதைகளும் வின்னித பூ, மிக்கிமவுஸ் போன்ற குறும்புக்கார மிருகங்களும் இருக்கின்ற உலகம். எங்கள் உலகத்தைப் போல மனித உருவில் விலங்குகள் இருக்க முடியாத உலகம். மிருகங்களே தங்கள் கொடூரம் எல்லாம் மறந்து நட்பாக உலவக் கூடிய உலகம் அது. ஆந்தையும் முயலும் கரடியும் சிங்கமும் சேர்ந்து வாழக் கூடிய உலகம்.

அம்மாவின் மிரட்டலோ அப்பாவின் கர்ச்சிப்போ சாத்தியமாகாத உலகம். ஒரு பிறந்த நாள் முடிந்த ஒரு கிழமைக்குள் அடுத்த பிறந்த நாளுக்கான தேவைகளின் பட்டியல் கணக்கிடப்பட்டுக் கொண்டு போகும் உலகம். அவர்களுக்கு வசதியாகவே கிட்ஸ் சனல்களில் அப்பாக்களின் தலையை மொட்டையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் விற்பனையாகும். ஆடைகள் அணிகலன்கள் என்று உங்களைப் பொறுத்தவரை சதம் பெறாத பொருட்களெல்லாம் ஆனை விலை குதிரை விலைகளில் விற்பனையாகும். செளமியைப் பொறுத்தளவில் அவையெல்லாம் விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள். உங்களுக்கு உங்கள் குழந்தையை போல விலை மதிப்பில்லாத பொக்கிஷமாய் இருக்கும் வரை நீங்களும் செலவு செய்ய தயாராயிருக்க வேண்டும்.

இப்படித் தான் எனக்கும் ஒரு பெரிய பட்டியல் தரப்பட்டிருக்கின்றது. எனது உலகப் பிரச்சனைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு கவனிக்கப் பட வேண்டிய முன்னுரிமையை அவை எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஐம்பதினாயிரம் கடனைத் தந்து விட்டு அதில் வரும் வட்டியை வைத்து வேறு என்ன செய்வது என்று இரவு பகலாக தலையைப் பிய்த்துக் கொள்ளும் பொருளாதார விற்பன்னர்களுக்கு இந்த மாதம் வட்டி வரவே வராது என்று எப்படிப் போய்ச் சொல்ல முடியும். செளமியின் உலகத்தில் பிறந்த நாளில் இருக்கக் கூடிய பிறந்த நாள் பலூன்களும் அலங்கரிப்பும் சிண்ட்ரெல்லா அலங்கரிப்புக் கேக்கிற்கும் உள்ள முக்கியத்துவம் பொருளாதாரப் புள்ளிகளுக்கில்லை என்பதை எப்படிச் சொல்ல முடியும்.

அப்பா நெக்ஸ்ட் பேர்த் டே யாருக்கு? என்று ஒரு வருடமாகக் கேள்வி கேட்டு ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்ற குழந்தைக்கில்லாத முக்கியத்துவம் யாருக்கு இருக்கக் கூடும். எல்லோரது ஆசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள மனிதனாகத் தானே நோவா தெரிவு செய்த எனது ஆதி மனித ஜோடி இருந்திருக்கின்றது. இல்லையென்றால் ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லி இந்த உலகத்தை இத்தனை துண்டுகளாக உடைத்துப் போட்டிருக்க முடியுமா ? அந்த ஆதி மனிதனின் குணம் எனக்கும் இருந்த படியால் எட்டு மணித்தியாலமாக இருந்த வேலை நேரத்தைப் பத்து மணித்தியாலமாக உயர்த்தி இந்த உலகம் உய்வடைய கடுமையாக உழைக்கத் தொடங்கினேன்.

செளமியின் உலகம் மகிழ்ச்சியுடனேயே இருக்கவும் என் உலகில் என் மான அவமானங்களை சமாளிக்கவும் இது போதும் என்ற ஒரு கணிப்புடனும் எனது வேலை நேரம் நீண்டு கொண்டிருந்தது. ஆனாலும் எனது உலகின் பிரச்சினையை செளமி தனது உலகத்தைப் புரிந்த அளவிற்குக் கூட நான் புரிந்து கொள்ள வில்லை என்பது விரைவிலேயே தெரிய வந்தது. கம்பனியின் முதலாளி என்னைக் கூப்பிட்டு உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் தேய்வையும் விளங்கப் படுத்தி நீண்ட பிரசங்கம் அடித்த பொழுது ஏன்? எதற்கு என்று எதுவும் புரியாது இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பம் ஏற்பட்டாலும் இறுதி வரிகள் மட்டும் குழப்பமின்றி நன்கு விளங்கியது. " ...அதனால் உனக்கு இனி இங்கு வேலையில்லை. "

நோவாவின் பிரளய காலத்தின் அலைகள் என் மனதில் எழ மூச்சிழந்து நின்றேன். இந்த பொருளாதார ஏற்றமும் தாழ்வும் எனக்குப் பின்னால் வேலையில் சேர்ந்திருக்கக் கூடிய அவர்களைத் தாக்காமல் பெரும் பாலும் என்னைப் போன்ற கறுப்பர்களையே தாக்குவதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுலகத்தில் எத்தனையோ புரியப் படாத விடயங்களைப் போல இதுவும் ஒன்றாயிருக்கக் கூடும். செளமியின் உலகத்தில் அழுகையுடனும் துக்கத்துடனம் கூடிய எவரையும் நான் இதுவரை காணவேயில்லை. அந்த உலகத்துள் நானும் வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். செளமியின் உலகத்தை உருவாக்குபவர்களும் என்னைப் போல நினைப்புள்ளவர்களாய் இருக்கக் கூடும். நோவாவின் உலகத்தில் இருக்கக் கூடிய எந்தவிதக் கரிப்பும் இல்லாத உலகை செளமிக்காக உருவாக்கி வைத்திருக்கின்றார்களே

- இளந்திரையன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com