Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
காலக்கண்ணாடி
கிரிதரன்


என்னிடம் இரண்டு நாய்க் குட்டிகள் இருக்கின்றன. ஒன்று பிரௌனி மற்றது ப்ளாக்கி. சற்றேறக்குறைய ஒத்த வகையைச் சார்ந்ததாகவே உள்ளன. ஒரே நாளில் நாய்கள் பேணுபவரான பேராசிரியர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்தவை. அம்மாவுக்கு செடிகள் மற்றும் நான் மட்டுமே உலகமாதலால், இவைகளுக்கான மதிப்பு சற்று மட்டுபட்டதாவே இருந்தது வீட்டில்.

அடர்த்தியான முடிகள் கொண்ட ப்ளாக்கி சற்று உயரம் அதிகம். சிறு கால்களுடன் அது தத்தித்தத்தி நடக்கும் அழகு, மாலைச் சூரியன் வெளிச்சத்தின் அழகை கூட்டியது எனக்கு மட்டும் தெரிந்தது. இருள் மங்கும் வேளையில், இரண்டு நாய்களையும் வீட்டிற்குள் சேர்த்துவிட்டால் நிம்மதிதான். வீட்டில் அவைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் குறைய மட்டும் இல்லை. சிறு தினங்களுக்குப் பிறகே பிரௌனி விந்துவது அப்பட்டமாகத் தெரிந்தது. கால்நடை வைத்தியரின் வைத்தியம் பலிக்காமல் போனதும், ப்ரௌனி விந்தும் அழகை இரசிக்க தொடங்கிவிட்டேன். அதன் தோலும், ப்ளாக்கியினுடையதைப் போல அவ்வளவு மிருதுவாகவோ, தொட்டால் வலிக்கும் ரகமாகவோ இல்லாமற் போனது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இதைப் பற்றியெல்லாம் சற்றேனும் பிரெஞ்ஞையே இல்லாமல் இரண்டும் ஆடும் விளையாட்டுகள் மனதிற்கு இனிதாகவும், என் குழந்தைப் பருவத்தின் சந்தோசத்தை மீட்டுத் தருவதாகவும் இருந்தது, என் அம்மாவுக்கு ஆறுதலானது. நான் இரசிப்பதை நாள்பட நாள்பட இவை இரண்டும் கண்டுகொண்டு விட்டதோ? ப்ளாக்கி மேல் பாய்ந்து பிரௌனி, அதன் காதை நக்கி, இரண்டும் சேர்ந்து விழுந்து, ஒரே நேரத்தில் என் முகத்தைப் பார்த்து, சுயவிளம்பரத்திற்காககவும், ஒரு கலைஞனின் திறமையைப் பார்த்து இரசிக்கும் இரசிகனின் மனமகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, அதன் முகபாவங்கள் மாறியதையும் வேறெப்படியும் அர்த்தம் கொணர முடியவில்லை.

சமூக விலங்கான மனிதனுக்கும், சுதந்திர விலங்கான ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் பொதுப்பத்தியம் காலச்சக்கரம். வாழ்கையில் மேடுபள்ளங்கள் இருப்பது இவை இரண்டுக்குமே பொதுவாகவே உள்ளது. என் இரு நாய்களுக்கும் மட்டும் இவ்விதி விலக்கு அல்லவே?

இரண்டும் நன்றாக வளர ஆரம்பித்தன. வீடும் நன்றாகப் பழகி, இவ்விரு நாய்களும் தங்கள் உடைமைகளையும், வீட்டின் உடைமைகளையும், வீட்டின் இடங்களையும் வரையறுத்துக்கொண்டன. பிரௌனிக்கு மாடிப்படிக்குக் கீழே உள்ள இடமும், அதைச் சார்ந்த பொருட்களான ஒரு மேசை ஒரு காலி இரும்பு டப்பா. ப்ளாக்கிக்கு பழைய செருப்பு குவிந்திருந்த மரப்படி. சில செருப்புகளைத் தன்னகப்படுத்தி, அதை ஒரு படுக்கும் இடமாக வைத்திருந்தது. இவ்விரு இடங்களில்லாமல், இரண்டும் முக்கால்வாசிநேரம் தோட்டத்தில்தான் ஒன்றாக உலாவும். அது இயற்கை தரும் பாதுகாப்பான ஒரு பகுதியாகவே எனக்குப் பட்டது.

செடிகளுக்கும், பூக்களுக்கும் உணர்வு உள்ளதை இயற்கையில் ஒர் சீரிய விதியாகவே அம்மா பின்பற்றுவாள். பலமுறை கேலி செய்தும், அவைகளுடன் பேசுவதையோ, பூக்களைத் தன் கைகளால் தடவிக் கொடுக்கவோ, அவள் நிறுத்துவதாகவே இல்லை. ஓரறிவுள்ள செடிகளுக்கு உணர்வுகளும், அதற்கான எல்லைக்கோட்டுக்குள் அடங்கி இருக்குமோ? நிறைய முட்கள் உள்ள ரோஜாச் செடி ஒன்று அம்மாவின் செல்லப்பெண். பெயர் விசுவாசி. நான்கைந்து மொக்குகள் ஒரே சமயத்தில் பூக்க ஆரம்பிக்கும். தண்ணீரில்லாவிடினும், சற்றே தோட்டத்தின் சுவர் பக்கத்தில் நிழலில் உள்ளதாலும் பூக்காமல் இல்லை. அம்மாவின் உணர்வுப் பரிமாற்றமே காரணமெனப்பட்டது. பூக்களைப் பார்த்து சிரிப்பதும், இலைகளைத் தடவியபடி பேசுவதுமாய் உணர்வுப் பரிமாற்றம் நடக்கும்.

சகல நோய்களுக்கும், மனத்தின் வலிகளுக்கும், சந்தோசங்களுக்கும் ஒரு பத்தியம் காலச்சக்கரம். உருண்டால் மறைந்துவிடும். மறந்துவிடும். உணர்வுப் பரிமாற்றங்களும், அதன் பாதிப்பால் உண்டாகும் ரணங்களும், மகிழ்ச்சியும் அவ்வகை சார்ந்ததோ? கடவுளின் படைப்பில் உள்ள முரண்பாடுகளில், ஒரு பொதுப்பத்தியமாக, காலச்சக்கரத்துடன் இதை சேர்த்துக்கொள்ளலாம். அம்மா ஊரில் இல்லாத சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு மொக்குகள்தான் விடும் விசுவாசி. தண்ணீர் விடுவதை அதிகப்படுத்துவேன் நான்.

வீட்டில் ஒரு விசேஷத்திற்காக வந்திருந்த விருந்தாளிகளிடம் எனக்கு உண்டான உறவுடனே, பிரௌனியும் ப்ளாக்கியும் பழகியது ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது. வாண்டுகளிடம் துள்ளி, பந்து விரட்டுவதும், தாத்தாவின் மடியில் உட்கார்ந்துகொண்டும், அத்தைகளிடம் சற்று ஜாக்கிரதையாகப் பழகியதும் ஆரோக்கியமாக இருந்தது. விசேஷம் நல்லபடியாக நடந்து முடிந்து, விருந்தாளிகளுக்கு வந்த இடம் அலுத்துப்போக ஆரம்பித்தது. வந்திருந்த வாண்டுகளில் ஒருவன் பிரௌனியிடம் நன்றாகப் பழகினான். சந்தோஷமாக இருந்தது. ஊருக்குத் தன்னுடன் எடுத்துச் செல்ல அடம்பிடித்தான். கோபமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல அவன் அடம் சற்று அதிகமாக ஆனது. என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியாததால் மனமில்லாமல், மாதமிருமுறை அதை என் வீட்டிற்கு அழைத்து வரும்படி கட்டளையின் பேரில், பிரௌனியைக் கொடுத்தேன்.

பிரௌனி சென்ற பாதிப்பு ப்ளாக்கியிடம் நிறைய தென்பட்டது. தோட்டத்தின் வாழை மரத்தருகே நின்றுகொண்டு தனியாவர்த்தனம் செய்து வந்தது. மாறுதல்களுக்கு பக்குவப்படுத்திக்கொள்ளும் மனது ஜீவராசிகளுக்குப் பழக்கமான ஒன்றுதான். சிலவற்றிற்கு தினங்களில். மனிதனுக்கு தன் எல்லைகோட்டை விஸ்தரித்துக்கொள்ளும் வரை. செடிகளுக்கு தினமும் தண்ணீர்விட ஆரம்பித்தேன். தன்னிச்சையாக கை அவற்றின் இலைகளையும், கிளைகளயும் தடவின. அம்மாவிற்கும் சந்தோசம்.

அன்றும் அப்படியே செடிகளுக்கு சுற்றி மணல்மேடுகள் குவித்தேன். அவற்றைச் செவ்வனே அவைகளின் வேர்களில் சென்று சேர்த்து தண்ணீர் தேங்க வழிவகுத்தேன். விசுவாசியிடம் இந்த வேலை எடுபடவில்லை. அது தோட்டத்தின் சுவற்றின் அருகாமையில் இருந்ததால், வேர்கள் முன்னுக்குபின் வளைந்திருந்தன. ரோஜாக்கள் பூத்துக்குலுங்கி, மிகவும் ஆரோக்கியமாகதான் இருந்தன. கிளைகள் சுவற்றோடு முட்டி வளைந்து முறுக்கி வளர்ந்திருந்தது சற்று வலித்தது. வேர்களை ஆழமாக சுற்றித்தோண்டி மணலை எடுத்தேன். சற்றேனும் வேரையோ செடியயோ சேதப்படுத்தாமல் முழுவதுமாகத் தோண்டி, தோட்டத்தின் நடுவே முன்னைவிட ஆழமாக வேரூட்டினேன். மற்ற செடிகளைப்போல மணல்மேடுகள் அமைத்து தண்ணீரூட்டி அதன் புது சூழலை இரசித்தேன்.

நாள்பட நாள்பட ரோஜாவின் தேக ஆரோக்கியம் தேய ஆரம்பித்தது. இலைகள் முன்போல முறுக்கிக்கொண்டு நர்த்தனமாடவில்லை. சற்று பூமி நோக்கியே இருந்தன. ஒன்றிரண்டு பூக்கள் தன் விலாஎலும்புகளான மொட்டுகளுடன் பாதி வளச்சியோடு நின்றன. விவசாயியும் பொன் முத்து முட்டை கதை ஞாபகம் வந்தது. மாறுதல்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை முழுவதுமாக நிராகரித்தது என் விசுவாசி. என் முரட்டுத்தனத்தை காரணம் காட்டினாள் அம்மா.

மழை வலுக்க ஆரம்பித்தது. மாறுதல்களுக்கு உணர்வு ஒர் காலக்கண்ணாடி. பொதுப் பத்தியம்.

குடையில்லாமல் பிரௌனியை அழைத்து வந்தேன்.


- கிரிதரன் ([email protected])நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com