Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
கடிகாரம்
ஜீ.முருகன்


சீட்டு விளையாடுவதற்கு நண்பன் ஒருவனது வீட்டு மொட்டை மாடியை நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். குடித்தனம் செய்வதற்கு லாயக்கற்ற அந்தப் பழைய வீட்டை ஒரு எலக்ட்ரிக் கடைக்காரன் வாடகைக்கு எடுத்து குடௌனாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு கோடை காலத்தின் சாயந்திர வேளையில் எங்கள் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையை இதற்குப் பிரத்யேகமாக ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். கான்கிரீட் தளம் சூடேறி, வெக்கையானது எங்கள் கிளப்பையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுப் பாதாம் மரத்தின் இலைகளில்கூட துளியும் அசைவில்லை. காற்று ஸ்தம்பித்து நின்றிருந்தது. உடல்கள் வேர்வையில் நனைந்து கசகசத்தன. ஆட்டத்தின் தீவிரத்தில் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்தக் கதையின் வில்லன், அறி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் அறிவழகன் மட்டும் சட்டையை கழட்டி ஒரு மூங்கில் கொம்பில் மாட்டிவிட்டு வெற்றுடம்புடன் ஆடிக் கொண்டிருந்தான். புஸ்புஸ்ஸென்று அவன் எழுப்பிய சத்தம் எங்களுடைய அதிகப்படியான சகிப்புத் தன்மையை வேண்டி நின்றது.

நான் எங்கள் ஜமாவில் சேரும்போது அவன் அதனுடைய பழைய வாடிக்கையாளன். நான் அப்போது குடியிருந்த தெருவில் அவனுக்கு சொந்தமான ஒரு வாடகை வீடு இருந்தது. அந்த வீட்டைத் தவிர இன்னும் இரண்டு வீடுகளும், நாலு ஆட்டோக்களும் அவனுக்குச் சொத்துக்கள்.

Wall clock ஒரு நாள் ஏதேச்சையாக அவனை எங்கள் தெருவில் பார்த்தேன். வாடகை வசூல் செய்ய வந்திருந்தான். வீட்டுக்குக் கூப்பிட்டதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். மனைவிக்கு அறிமுகப் படுத்தினேன். அவள் காப்பி தயார் செய்ய உள்ளே போனாள்.

அவன் தேர்ந்தெடுத்து உட்கார்ந்த நாற்காலி தனது அந்திமகாலத்தில் இருந்ததால் ஒரு அசம்பாவிதத்தை எதிர்பார்த்திருந்தேன் நான்.

கேட்டான், “இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை தர்றே?”

சொன்னேன்.

இன்னும் இரண்டு மூன்று மாசம் போனால் இதைவிட குறைந்த வாடகையில் இதைவிட சிறந்த ஒரு வீட்டை அவனே ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னான். அவனுடைய கவனம் மேஜைமேல் இருந்த கடிகாரங்களின் பக்கம் திரும்பியது.

“உனக்கு இந்த வேலையெல்லாம் கூடத் தெரியுமா?” என்று கேட்டான் ஆச்சரியத்துடன்.

“தெரியும்” என்றேன்.

வெகு நாட்களாக சுவர் கடிகாரம் ஒன்று அவனுடைய வீட்டில் பழுதடைந்து கிடக்கிறதாம், அதை சரிபடுத்தித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். பிறகு அவனுடைய அக்கறை என் உத்தியோகத்தைப் பற்றித் திரும்பியது. நான் வேலையை விட்டுவிட்ட விபரத்தை தெரிந்து வைத்திருந்தான்.

“ஏன் நல்ல வேலையை விட்டுவிட்டு வந்தாய்?” என்று கேட்டான்.

“இதுபற்றி இப்போது என்ன? பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றேன்.

“இந்த விஷயத்தில் நீ இவ்வளவு அநாவசியமாக இருக்கக்கூடாது” என்றவன் “நிரந்தரமான ஒரு உத்தியோகமாக ஏன் தேடிக் கொள்ளக்கூடாது?” என்று கேட்டான்.

எனக்கு இதுநாள் வரை தோன்றாத யோசனை அது! மிக்சரும் காப்பியும் வந்தது.

“உங்க வீட்டுக்காரு இன்னும் விஷயம் தெரியாத ஆளாவே இருக்காரே! நீங்களாச்சும் சொல்லக்கூடாதா? வேலைன்னா அந்த இடத்துல நம்பளமாதிரியே ஆட்கள் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கமுடியுமா? அப்படி ஒத்து வரலேன்னா அங்க இங்க அலையாம வாட்ச் ரிப்பேர் பண்ணியே காசு சம்பாதிக்கலாம்”

என் பக்கம் பார்த்து சொன்னான், “இன்னிக்கி ரிப்பேர் தொழில்ல என்ன காசு தெரியுமா?”

மீண்டும் அவள்பக்கம் திரும்பி, “நாலு காசு கையிலே இல்லேன்னா என்ன இருக்கு சொல்லுங்க? இந்த காலத்துல கை நிறைய சம்பாதிக்கறவனாலேயே தாக்கு பிடிக்கமுடியலை....”

அவன் சொன்னதை ஆமோதிப்பவள் போல புன்னகைத்துவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். நல்ல வேளையாக என் மனைவி அதிகம் பேசும் ரகம் இல்லை. இருந்தாலும் என் புத்திசாலித்தனத்தைப் பற்றி அவளுக்கு அதிருப்தி இருந்து வந்தது உண்மை. வேலை பற்றிய பேச்சுக்கள் எல்லாமே கடும் மனக்கசப்பில் கொண்டு போய் நிறுத்திக்கொண்டிருந்தன.

அவனுடைய அடுத்த கேள்வி, “கல்யாணமாகி எத்தனை வருஷமாகிறது?” என்பது.

சொன்னேன்.

“மூன்று வருஷமாகிறதே ஏன் இன்னும் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை?”

நான் பதில் சொல்லவில்லை. அவனும் அதை எதிர்ப்பார்த்தவனாக தெரியவில்லை. நல்ல டாக்டரை பார்க்கச் சொன்னான். ஒரு டாக்டர் பெயரை பரிந்துரை செய்தான்; மேலும் அவருடைய மகிமைகள்....

உபதேசிகளை சிரச்சேதம் செய்த அற்புதம் எங்கேயாவது நடந்திருக்கிறதாயென்று யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் ஞாபகத்தில் வரவில்லை. ஒரு வழியாக கிளம்பினான். வாசலில் போய் நின்றுகொண்டு என் மனைவியிடம் சொன்னான்.

“நல்ல நேரம்னு ஒன்னு வந்தா, எல்லாம் சரியாப் போயிடும் கவலைப் படாதீங்க”

அந்த நாற்காலிக்கோ அவனுக்கோ எந்த சேதாரமும் ஆகவில்லை. எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணபரமாத்மாவின் முதல்வருகை இப்படி எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் முடிவடைந்தது.

மறுநாள் காலையில் ஒரு பெரிய சுவர் கடிகாரத்துடன் தனது ஆட்டோவில் வந்து இறங்கினான். இதற்கு முன்னால் எப்போதும் அப்படி ஒரு கடிகாரத்தை நான் பார்த்ததில்லை. அவனுடைய தாத்தா காலத்திலிருந்தே அது அவனுடைய வீட்டில் இருக்கிறதாம். அனேகமாக ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திலிருந்துதான் அதை அவர் திருடிக் கொண்டு வந்திருக்கவேண்டும். அவன் வைத்திருந்த ஸ்கூட்டர் கூட அப்படித்தான் பாதிநாள் ஒர்க்ஷாப்புகளிலேயே தன் ஆயுளை கழித்துக்கொண்டிருந்தது. அந்த கடிகாரத்திற்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை துளி கூட எனக்கேற்படவில்லை. அதை எப்படியாவது சரி செய்து கொடுத்துவிடுவது என்று அதிக சிரத்தை எடுத்துக்கொண்டேன். அதற்குள் ஐந்து முறை என் வீட்டுக்கு வந்து போயிருந்தான். அதில் இரண்டு முறைதான் நான் வீட்டில் இருந்தேன். என் மனைவி என்னிடம் அந்த கடிகாரத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படியும் அவன் இங்கே வருவதை விரும்பவில்லையென்றும் சொன்னாள். எப்படியோ முயன்று அந்த கடிகாரத்தை நான் ஓடவைத்துக் கொடுத்தனுப்பிவிட்டேன்.

இது நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். அன்று உற்சாகமாக பறந்து கொண்டிருந்த சீட்டுகளுக்கு மத்தியிலும் அவனுடைய கவனம் முழுவதும் என் பக்கமே இருந்தது. அவன் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தை விட முக்கியமான விஷயம் ஒன்று இருப்பதை எனக்கு குறிப்புணர்த்திக் கொண்டிருக்கிறானாம். இதை நான் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

அன்றைய ஆட்டம் முடிந்து புறப்பட்டபோது என்னுடனேயே புறப்பட்டு வந்தான். அவன் ஏதோ பேசும் ஆர்வத்தில் இருந்தது தெரிந்தது. என் பேரிலும் என் குடும்பத்தின் பேரிலும் அவனுக்கு அக்கறை இருப்பதால்தான் இந்த விஷயத்தை சொல்ல வருகிறானாம். அவன் சொல்லப் போகும் விஷயம் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும் நான் நிதானமாக கேட்டு முடிவெடுக்க வேண்டும் - இது பீடிகை. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லும்படி கேட்டேன். குரலை தாழ்த்தி ரகசியம் சொல்வதைப் போல சொன்னான். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் அதற்கு முன் தினம் என்மனைவியுடன் இன்னொரு ஆளையும் பார்த்தானாம். மிகவும் அந்நோன்யமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்களாம். சந்தேகமில்லாமல் அது என் மனைவிதான் என்று சொன்னான். தெருவின் ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டேன். அவனும் வந்து பக்கத்தில் நின்று குழப்பத்துடன் என்னைப் பார்த்தான். மேலும் பேச நான் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. என் மனைவியின் கற்பை பாதுகாக்கும் வேலை அவனுக்கு அவசியமற்றதென்னும் எச்சரிக்கைக்கு பின்னால், அவளுடன் அன்று பேசிக் கொண்டிருந்தது அவளுடைய தம்பி என்றும்; அவனை வழியனுப்பத்தான் அவள் அங்க போயிருந்தாள் என்றும் சொன்னேன். இந்த விளக்கமே எனக்கு அருவருப்பான ஒன்றாகப் பட்டது. ஒரு மடையனிடம் நான் எதற்காக இதை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கவேண்டும்?

“ஸ்....ஓ! சரிசரி நான் வேற யாரோன்னு தப்பா நினைச்சிட்டேன் சரி சரி....” என்றான், ஏதோ ஆச்சரியத்தை கேட்டவனைப் போல. என்னிடம் மட்டுமல்ல என் நண்பர்கள் சிலரிடமும் அவன் இந்த அநியாயத்தைப்பற்றி முறையிட்டிருக்கிறான் என்ற விஷயம் எனக்கு பின்னால்தான் தெரியவந்தது.

கோடை வெப்பம் மிகுந்த ஒரு நாளைப் பற்றிதானே நான் சொல்ல ஆரம்பித்தேன்? அன்று அதிர்ஷ்ட தேவதை அவன் கட்சியில் இருந்திருக்கவேண்டும். ஆரவாரத்துடன் உடம்பை அசைத்தும், சிரித்தும் தனது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தான். அவன் நல்ல சிவந்த நிறம். அறிவுதான் கொஞ்சம் கம்மியே தவிர அழகன்தான். அவனுடைய மார்பில் தடிமனான தங்கச் சங்கிலி ஒன்று அசைந்து கொண்டிருக்கும். அவனுக்கு அபாரமான ஞாபகச் சக்தி. குறிப்பாக தனது சூட்சும அறிவையும், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும்படி அமைந்த ஆட்டங்கள்தான் அபாரமாக அவன் ஞாபகத்தில் இருக்கும். அதையெல்லாம் வார்த்தைகளாலேயே திரும்ப ஆடிக் காண்பித்துவிடுவான். சீட்டுக்களின் ஏதேச்சைத்தன்மையின்மேல் நம்பிக்கை வருவது அவன் மோசமாகத் தோற்ற ஆட்டங்களின் போது மட்டும்தான்.

அன்று மாலை திரும்பும்போது என்னுடன் வழி முழுக்க பேசிக் கொண்டே வந்தான். தவிர்க்க முடியாத சில கட்டங்களில் அவன் சொல்வதை நான் ஆமோதித்தேன். ‘என்ன சொல்கிறாய்’ என்றோ ‘அப்படித்தானே’, போன்ற இடங்களில் நான் ‘சரிதான்’ என்று பதில் சொல்வேன். வேண்டா வெறுப்பாகவே எனது குரல் எழுந்தாலும் அவன் திருப்தியடைந்துவிடுவான். நாம் ஏதாவது ஒன்று சொல்ல அது அவனுக்கு வாய்ப்பாகப் போய்விடக்கூடாதே என்ற எனது சாதூர்யம் ஒன்றும் அவனிடம் பலிக்கவில்லை. அன்று பார்த்து அவனுடைய ஸ்கூட்டர் ரிப்பேர் ஆனது என்னுடைய துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். பஸ்நிறுத்தம் வந்ததும் அவனே பேச்சை நிப்பாட்டிக் கொண்டான். என் நன்றிக்குரிய நான்கைந்து பேர் அங்கே நின்றிருந்தார்கள்; இல்லையென்றால் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருப்பான்.

முன்பே முடிவு செய்து கொண்டிருந்தானோ என்னவோ என்னை மது அருந்த கூப்பிட்டான். அன்று நான் குடிக்கும் மனநிலையில் இல்லை. அதிலும் அவனுடன் குடிப்பது நினைத்துப் பார்க்கவே எரிச்சலாக இருந்தது. என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். உடனே வந்துவிடலாமென்றான். எனக்கு வேறு முக்கியமான ஒரு வேலை இருப்paதாகச் சொன்னேன். ‘பரவாயில்லை வா’ என்றான். அவனுடைய குரல் கொஞ்சம் உரத்து ஒலிக்க சிலர் எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். இது என்னை சங்கடத்துக்குள்ளாக்கியது. கையைப் பற்றிக்கொண்டு இழுத்தான். இப்படி ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்.

ஒரு பிராந்திக்கடைக்கு பின் பக்கமாக இருந்த ஒரு ஓட்டுவீடு பாராக அவதாரம் எடுத்திருந்தது. அங்கே அதிக கூட்டமில்லை. ஒரு மேஜையைத் தேர்ந்தெடுத்து எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம். இரண்டு மேஜைகளுக்கு மத்தியில் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறி வெப்பக்காற்றை வெறுமனே தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்ப ஒரு விதமான இறுக்கத்திற்குள் நான் அகப்பட்டுக் கொள்வதாகப்பட்டது.

எனக்குத் தேவையான அயிட்டத்தைப்பற்றிக் கேட்டான். நான் சொல்லும் வரை காத்திருப்பவனைப் போல என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் ‘விஸ்கி’ என்றேன். அவனுக்கு அது சரிபட்டு வராதாம். அரைபாட்டில் பிராந்திக்கும் இரண்டு ஆம்லெட்டுக்கும் ஆர்டர் சொன்னான்; கலப்பதற்கு சோடா. இதற்கு என்னை கேட்கவேண்டிய அவசியமில்லையே!

நான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கு பக்கத்திலிருந்த மேஜையில் மூன்று இளைஞர்கள் உட்கார்ந்திருந்தனர். மேஜையின் மேலிருந்த வகையறாக்களை பார்த்தபோது மதுவை எவ்வளவு அற்புதமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது. அவர்களுடைய பேச்சு ரொம்பவும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் இருப்பவர்கள் எப்போதோ அவர்களுக்கு மறந்து போயிருக்கவேண்டும். அதில் தனியாக உட்கார்ந்திருந்த ஒரு ஒடிசலான இளைஞன் மட்டும் மற்ற இருவரின் பேச்சைக் கேட்டு குழந்தையைப் போல சிரித்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது தாடியை அழுத்தமாக தடவிவிட்டுக் கொண்டான்.

எனக்கு எதிரே இரண்டு மேஜை தள்ளி, சுவரில் ஒரு கேலண்டர்தொங்கிக் கொண்டிருந்தது. அது மதுபான கம்பெனி ஒன்றின் விளம்பரப்படம். விஸ்கி பாட்டில் ஒன்று நீளமான ஒரு கயிற்றில் பெண்டுலம் மாதிரி தொங்கவிடப் பட்டிருக்கிறது; நிர்வாண கோலத்திலிருக்கும் ஒருத்தி மூடிக்கு மேலே நின்று கயிற்றை தன் இரண்டு செழித்த முலைகளுக்கிடையே அழுத்திப்பிடித்தபடி உல்லாசமாக ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்த பார் இருந்த இடம் இதற்கு முன் ஒரு வீடாக இருந்து அதில் ஒரு குடும்பம் வசித்திருக்கும் என்பதை யோசிக்கவே பொருத்தமற்றதாக இருந்தது.

இவன் பேசிக் கொண்டிருந்தான். கடிகாரம் குறித்து அவன் ஏதோ சொல்லத் தொடங்கியதும் திரும்பினேன். அந்த சுவர் கடிகாரத்தை என்னிடம் கொடுப்பதற்கு முன்னால் வேறு இரண்டு கடைகளில் கொடுத்திருக்கிறான். காசுதான் செலவானதேயொழிய கடிகாரம் சரியாக ஓடவில்லை என்றான். என்னைப் போல திறமையுள்ள ஆட்களைப் பார்ப்பது அபூர்வம் என்றான். அவனுடைய கடிகாரத்தை ரிப்பேர் செய்து கொடுத்ததற்கு நான் பணம் எதையும் வாங்கிக் கொள்ளாதது அவனுக்கு வருத்தமாம். அதற்கு பிரதி உபகாரமாக இன்று எவ்வளவு வேண்டுமானாலும் எனக்காக செலவழிக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னான். இதுதான் விஷயம் போலும்! இதெல்லாம் அவசியமில்லாதது என்று சொல்லி நான் தலையைத் திருப்பிக் கொண்டேன். இரண்டு உயரமான கண்ணாடி டம்ளருடன் இரண்டு பாட்டில் சோடாவும் அரைபாட்டில் பிராந்தியும் வந்தன. அவனே அளவு பார்த்து ஊற்றினான். சோடா பாட்டிலை குலுக்கி அதன் வாயை விரல்களால் அழுத்திக் கொண்டு டம்ளரில் பீய்ச்சியடித்து கலந்தான். ‘சியர்ஸ்’ சடங்குக்குப் பிறகு குடிக்க ஆரம்பித்தோம். ஆம்லெட் வந்தது. விரைவாகவே நான் போதையின் பிடிக்குள் சிக்கினேன். உடல் சமநிலை தளர்ந்து மயக்கம் கொள்ளத் தொடங்கியது.

தனது வியாபார நுட்பங்களைப்பற்றி அவன் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய வெற்றிகள் குறித்தும், தோல்விகள் நெருங்கிய காலத்தில் அதை எப்படி சமாளித்து வெளிவந்தான் என்பதைப் பற்றியும் அவன் பேசியதாக ஞாபகம்.

என்னுடன் பிணைக்கப்பட்டிருந்த ஒரு கயிற்றின் முனையை பிடித்து தொங்கியபடி ஒரு இரும்பு குண்டைப் போல அவன் ஊசலாடிக் கொண்டிருந்தான். வலி கயிற்றின் வழியே ஏறி விஷம்போல என்னுள் பரவிக் கொண்டிருந்தது. எனக்கு நானே பரிதாபம் கொள்ளக்கூடிய நிலையில், விடுதலை செய்துவிடும்படி அவனிடம் கெஞ்சிக் கேட்கத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

“இந்தா இன்னொரு டம்ளர் குடி” என்றான் அதிகாரத்துடன்.

“எனக்குப் போதும்” என்றேன்.

அவனுடைய முகம் போதையில் நொடித்தது. அவன் இன்னுமொரு கால் பாட்டில் வரவைழத்திருந்தான். என்னை முறைத்துப் பார்த்தபடி சொன்னான். “பேசாம குடி, நீயா காசு குடுக்கப்போற?”. அந்த போதையிலும் நான் குன்றிப்போனேன். அதற்கு மேலும் நான் குடிக்க விரும்பவில்லை. மீதியை அவனே குடித்தான்.

பாரை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது ஒன்பதரை மணிக்கு மேல் இருக்கும். அவன் நிதானம் தவறியிருந்தான். அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்கவேண்டிய பொறுப்பு என் மேல் விழுந்தது. ஆட்டோவில்தான் அவனைக் கொண்டு போக முடியும். ஜோபியிலிருந்த காசு போதுமாவென்று பார்த்து ஆட்டோவைக் கூப்பிட்டேன். ஆட்டோக்காரனுக்கு இவனைத் தெரிந்திருந்தது.

வழியில் உளறிக்கொண்டே வந்தான். தானும் சில ஆட்டோக்களுக்கு சொந்தக்காரன் என்ற உரிமையில் ஆட்டோகாரனின் தன்மானத்தை சீண்டும் விதமாக சில வார்த்தைகளைப் பேசினான். கேட்டருகில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி அவனை கீழே இறக்கி நிற்க வைத்தேன். ஆட்டோக்காரனே கேட்டைத் திறந்து விட்டான். வீட்டிலிருந்து ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வந்தது. கதவைத் திறந்துகொண்டு அவன் மனைவி வெளியே வந்தாள். நாய் பக்கத்தில் வந்ததும் குரைப்பதை நிறுத்திக்கொண்டு வாலாட்டியது. இரண்டு கதவையும் பறக்க திறந்துவிட்டு அவள் கடுமையான முகத்துடன் ஒதுங்கி நின்று கொண்டாள்.

ஆட்டோக்காரனைக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவனை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டுபோய் ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்தேன். எது நடந்து விடக்கூடாது என்று நான் பயந்தேனோ அது அப்போது நடந்துவிட்டது; அவன் வாந்தியெடுக்கத் தொடங்கினான். அவனுடைய மனைவியின் பார்வையை சந்திக்க அச்சப்பட்டு திரும்பும்போது வரவேற்பறையின் சுவரில் இருந்த அந்த ராட்சஷ கடிகாரத்தைப் பார்த்தேன்; மணி பன்னிரண்டு ஐம்பதைக் காட்டியது. பெண்டுலத்தில் அசைவில்லை. கடிகாரம் நின்றுவிட்டிருந்தது.

- ஜீ.முருகன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com