Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
தேடலின் தொடக்கம்
பாஸ்கர்

சுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த இடம் சிறப்பானதாக இருக்கும். இந்தப் பயணம் இவனது பதினைந்து வருடத் தேடுதல். ஏதோ பிரச்சினையில் இவனுடைய சொந்த ஊருக்கே திரும்பிப் போகாத செழியனின் அப்பாவின் கோபத்தின் காரணமறியவில்லை, அறியவும் விரும்பவில்லை இவன். நகரத்தின் நெரிசலிலும், நாகரீகத்தின் செயற்கையிலும் சிக்கித் தவிக்கும் நகர எல்லையை கடந்து வந்தது பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. செழியன் பிறந்து எட்டு வருடத்தில் நகரவாசியாகிவிட்டான்.

செழியனின் அம்மா அவ்வப்பொழுது சொல்லிவிடும் சின்னஞ்சிறு ஊர் ஞாபகங்களையெல்லாம் அவனுகுள் இருக்கும் இதயத்தின் சுகந்த அறையில் பத்திரமாக வைத்திருக்கிறான். பஞ்சு மிட்டாய், திருவிழாத் தேர், கோவில் விசேசம், மார்கழித் தெருக் கோலங்கள், ஊர்க் கிணறு, அதில் தினமும் கூட்டமிடும் துணி துவைக்க வரும் பெண்கள், தாரில்லாதா செம்மண் சாலைகள், அதில் கொஞ்சம் ஆட்டுப் புளுக்கைகள், பச்சைப் பசேலென்ற வயல் வரப்பு, அதில் நடுவே செல்லும் ஒற்றையடிப் பாதை, பாதை கடந்து வரும் மோட்டார் கிணறு, குச்சி ஐஸ், கான்கிரீட்டில் வானம் மறைக்காத வீட்டு முற்றம், அதில் பெய்யும் மழை, இன்னும் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கும் ஊரின் ஞாபகக் கனவுகளை நிசமான நினைவாக புசிக்க செல்கிறான்.

அங்கு செல்ல வேண்டுமென்று வீட்டில் இரண்டு வருடமாக அடம்பிடித்து இப்பொழுது கிளம்பி இருக்கும் செழியனுக்கு வயது 23. "தாத்தா மூக்கைய்யனுக்கும், ஆச்சி பொன்னாத்தாளுக்கும் நான் வரும் சேதியைச் சொல்லிவிடு. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் சொன்ன குறிப்பின்படி அந்த ஊருக்கு வரும் என்னை எந்த ஆராவாரமும் இல்லாமல் என் பாட்டி பிசைந்து தரும் பழைய கஞ்சியை எனக்காகக் கொஞ்சம் மிச்சமெடுத்து வைக்கச் சொல்" என்று காற்றிடம் பேசிக் கொண்டிருந்தான்.

இன்னும் 8 மணி நேரம்தான் இருக்கிறது இவன் கனவுலகத்துக்குச் செல்ல....

விடிந்து விட்ட வானத்தில் வடியாது நிற்கும் அடர்ந்த மேகங்களுக்கிடையில் தெரியும் சூரியனின் கிரணத்தில் தூரத்தில் தெரியும் அந்த தென்னந்தோப்பின் பின்னாடிதான் இவன் தாத்தா ஆச்சி வீடு இருக்க வேண்டும்.

இதோ வழியில் வரும் ஒரு பெரியவரிடம் "ஐயா, இங்க மூக்கையன் வீடு எங்க இருக்கு" என்றான். ஆடம்பர உடையில் இவனைப் பார்த்து அவர் ஆச்சரியப் படுவது அதிசயமில்லை. இருந்தாலும் சரியான வீட்டைக் காண்பித்துவிட்டார்.

"ஆச்சி நீங்கதான் பொன்னாத்தாளா?" என்றான் வாசலில் உரலில் அரிசி போட்டு அரைத்துக் கொண்டிருந்த பொன்னாத்தாளிடம்.

ஏதோ அந்தக் குரலில் அந்நியம் இல்லாதது கண்டு சற்றே வியந்த பொன்னாத்தாள், அருகே சென்று "யாரு அய்யா நீ, நான் தான் பொன்னாத்தாள். உன்னைப் பார்ப்பதற்கு பழக்கப்பட்ட முகம்போலத் தெரிகிறதே. நீ யாருப்பா" என்று பேசி முடிக்க திண்ணையிலிருந்து எழுந்து வந்து விட்டார் மூக்கைய்யன்.

தாந்தான் பேரன் என்றும், எப்படி இங்கு வந்தேனென்றும் சொல்லி முடிப்பதற்குள் கண்கள் குளமாகிவிட்ட பெருசுகளால் அவனை அள்ளி அனைக்காமல் இருக்க முடியவில்லை. அன்பு முத்தங்களும், அவனை கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்து விட்டு கை, கால்களைத் தொட்டு தடவிப் பார்த்தும் தலையில் அடித்துக் கொண்டே பொன்னாத்தாள் புலம்பலானாள். "எத்தனை வருசம்பா, பதினைந்து வருசம் ஓடிப் போச்சே. இந்தப் பாவி மனுசன் வாய வச்சுக்கிட்டு இல்லாம மருமகன்கிட்டே முரண்டு புடிச்சு என் செல்வத்த என்கிட்ட இருந்துப் பிரிச்சுட்டாரே" என்றாள். ஏதோ ஒரு கோபத்துல நான் பேசினாலும் பதினைந்து வருசமா தண்டனைன்னு உறைந்து உட்கார்ந்தார் மூக்கைய்யன்.

பழங்கதைகள் பல பேசி பழைய கஞ்சியும் குடித்துவிட்டு, காலார நடந்தான். வழியில் தென்பட்ட ஒரு சின்ன வீட்டு வாசலில் இவனைக் கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை விட்டு விழிகளை நகற்ற முடியாமல் கேட்டே விட்டான். "நீங்க யாரு, உங்ககிட்ட சின்ன வயசுல பேசின ஞாபகம் இருக்கு, நான் செழியன்" என்றான்.

கையில் வைத்திருந்த சுளகைக் கீழேப் போட்டுவிட்டு ஓடிப் போய் வீட்டு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். உள்ளே இருந்து வந்த ஒருவர் சொன்னார் "வாய்யா மருமகனே. இப்பந்தான் நீ வந்த சேதி தெரிஞ்சுது. அங்கதான் கிளம்பிகிட்டு இருக்கேன். நாந்தான் உன் அத்தை சீதா, அது எம்பொண்ணு பத்மினிதேன், சின்ன வயசுல ஒன்னா வெளாண்டதெல்லாம் மறந்துடுச்சுப் போல" என்று பேசி முடித்தார்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.


- பாஸ்கர்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com