KeetruNovelRimindakam
ரிமிந்தகம்

அரியநாச்சி

அத்தியாயம்-2

ரிமிந்தகனுக்கு, அவனது முன்-கதையை விரித்து வைத்து விரித்து வைத்து மிரட்டிக் கொண்டிருந்த கழுகின் பிம்பம் மறைந்ததும், கடந்து வந்த வாழ்க்கையை ஒரு மீள்பார்வைப் பார்த்த அசதியால் மனம் அழுத்தமாகி கனத்தபடியால் சிந்தனையற்று வெகுநேரம் உத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கழுகின் வரவால் அடிக்கடி அவதியுறுவதை விரும்பாமல், அதனை மீண்டும் தோன்றா வண்ணம் செய்ய ‘என்ன செய்யலாம்?’ என்ற யோசனையில் காலத்தைச் செலவு செய்ய முடிவெடுத்து சட்டென எழுந்து கதவைத் திறந்து வெளியேறினான், ‘இதற்கொரு முடிவைக் காணாமல் உறங்கமாட்டேன்’ என சத்தியம் செய்தவனைப்போல்.

“ஒவ்வொரு சம்பவமுமாக மாறி மாறி வெறுப்பேற்றிச் செல்லும் இந்த உலகின் அமைப்பில் ஏதோ குறை இருக்கத்தான் செய்கிறது. அதை என்னவென்று யாரிடமும் சொல்லி வெளிப்படுத்த முடியாத...., புரியாத, சிக்கல் நிறைந்த நூல்கண்டாக சிக்கலின் சிக்கலைக் குழப்பி குழப்பிக் காண்பித்து மிரட்டுவதால். சிக்கலின் முதல் நுனியின் தோற்றத்திற்குக் காரணமான இந்த சமூக கட்டமைப்பின் காரணகர்த்தாவைத் தேடி அலைந்து அவனது மண்டையோட்டுக்குள் கைவிட்டு என்னத்தைத் தேடி, எதை எடுத்து என்னதான் பயன்? அதனால் நானே ஒரு முடிவை எடுத்துக்கொள்கிறேன். அதன் படி இந்த உலகின் பின்வரும் உயிரினங்களின் மேதாவியான என் சக மக்களின் வாழ்க்கை மிகப்பிரமாதமாக இருக்கத்தான் போகிறது. யோசிப்பது நான் என்பதால்... என் யோசனை ஒருபோதும் தவறியது இல்லையென்பதாலும், நூலின் இறுதிப் பகுதி நான்தான் என்பதாலும். இதுவரையிலான அனைத்துக் கடவுளர்களையும் மறந்துவிட்டு என்னைத் தெய்வமாகப் போற்றிப் போற்றி வணங்கப்போகும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இப்போதே இருப்பதால் சாதித்துவிட்டதை வைத்துக்கொண்டு சாதித்தது எப்படி என்ற ஒரு நாடகத்தை தொடங்கப்போகிறேன். அந்த நாடகத்தின் நாயகனான என்னைச் சுற்றியே கதை நிகழப் போகிறது என்பதால் என் கதை, இதிகாசமாகப்போகிறது.”

சிறிது மூச்சை இழுத்துவிட்டு, தன்னை ஒரு உலுக்கு உலுக்கி, உரத்தக்குரலில், “என்னை உருவாக்கியவர்கள் யாருமில்லை. இந்த உலகம் நான் இல்லாத போது இருந்தது என்ற கருத்துக்கு முற்றிலும் நான் எதிர்ப்பைக் காட்டிவிட்டேன். இன்னும் தொடரப்போகிறேன். ஏனெனில் நானே இந்த உலகை இல்லாமல் செய்யவும் முடியும்... செய்தும் இருக்கிறேன். அதனால் உலகம் என் கட்டுப்பாட்டில். என் அசைவிற்காக கட்டுப்பட்டு காத்திருக்கும் என் ஏவலன், இந்த உலகம். இந்த யுத்தியும் புத்தியும் இல்லாதவர்கள் அனைவரும் என் அடிமைகள். அவர்கள், தம்முடைய வாழ்க்கைக்கே யாரையாவது நம்பி வணங்கி வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருக்கும் வரை என் உலகம் என் மூச்சினைக் கடன் வாங்கி வாழ்வதாக உலகிற்கு மூச்சைக்கொடுத்திருக்கிறேன். என் அனுமதியால் உயிரோடு இருக்கிறது. அப்படி இருக்க. என்னை வருத்தத்திற்குள் கொண்டு போக நினைக்கும் யாரோ கழுகை ஏவி என்னை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிழலையும் கொன்று, மை எடுத்து முகத்தில் பூசிக்கொள்வேன். என்னை வருத்தப்படுத்தும் எதுவும்......, யாரும் இனி இருக்கக்கூடாது. பலரை கொன்று குவித்து நாடுகளை அபகரித்த, அபகரிக்கும் யோசனையிலேயே நான் பயணம் செய்துகொண்டிருந்ததால் என்னை தொந்தரவு செய்யும் இந்த அற்பத்தைப்பற்றி யோசிக்கவில்லை. விடமாட்டேன். எதிரியின் கனவினை இழுத்து வந்து இருளோடு இருளாக புடம்போடுகிறேன் பார்.”

Feared man “என்னைப் பற்றியே எனக்குக் காண்பித்து என் விரலால் என் கண்களைக் குத்திக் குருடாக்கும் வித்தையை கற்றிருப்பதாக பாவனை செய்கிறான். முடியுமா? என்னை அவனால் கொல்ல முடியுமா? எதைக் கொல்ல நினைக்கிறான்? எங்கிருந்து கொலைக்கான யுத்திகளை பிரயோகிக்கிறான்? நொடியில் அழித்துவிடுகிறேன். என் பிறப்பைக் கேலி செய்கிறான். நான் “கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவன்” என்று என்னைக் கேவலப்படுத்துவதாக பிரகடனப்படுத்துகிறான். அதை நானே சொல்கிறேன். நான் கொள்ளைக்காரன் தான். என் பரம்பரை கொள்ளைக்கும்பல் தான். ஏமாளிகளைக் கொன்று குவித்து அவர்களது உழைப்பையும் உழைப்பினால் கிடைத்த சொத்துக்களையும் அபகரித்து அனுபவிப்பவன் தான். என்ன செய்யமுடியும் அவனால்? நான் கொள்ளைக்காரன் என்பதால் எனக்கு அவமானம் உண்டாகும், மன உளைச்சல் ஏற்பட்டு கூனிக் குறுகி உடல் அழுகிப்போக இறந்துபோவேன் என்றா நினைத்தான். நான் அப்படி நினைப்பேனா? என்னால் அப்படித்தான் நினைக்க முடியுமா?

நான் என் தொழிலையும் அதைச் செய்த என் பரம்பரையையும் பெருமையாகக் கருதுகிறேன். ஏன் தெரியுமா? அவர்களுக்கு களவாடத் தெரியும் என்பதால். அவர்களுக்கு பயமில்லாமல் மற்றவரை ஏமாற்ற முடியும் என்பதால். அவர்கள் அனைவரும் வீரர்களுக்கெல்லாம் வீரர்கள். இரவில் அவர்களது உலகம் பளிச்சென்று இருக்கும். இந்த அற்புதத்தை அறிந்திருக்கிறானா என்னைக் குற்றம் சுமத்துபவன்? பொண்டாட்டியின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் பயந்தாங்கொள்ளி. இருளில் எல்லாவற்றையும் பார்ப்போம். எங்களது கண்களுக்கு இரையாவதிலிருந்து எதுவும் தப்பாது. அதனால் எல்லாம் எங்களுடையதானது. இப்போது என்னுடையதாகியிருக்கிறது. என்னை எதிர்ப்பவனே நீயும் ஒரு நாள் என்னுடையவனாக ஆகப் போகிறாய், தெரிந்துகொள். தெரிந்தே செய்தால் யார் கண்ணுக்கும் தெரியாமல் போய்விடுவாய். அப்படிச் செய்துவிடுவேன்.

நான் நடுக்கடலிலே நிராதரவாய் மிதந்தாலும் எனக்குத் தேவையான வழியை என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதையும் நீ தானே கழுகின் இறகுக்குள் ஒளிந்து கொண்டு எனக்குக் காண்பித்தாய். பார்த்தாயே. சுக்குநூறாய் உடைந்து சிதைந்துபோன கப்பலில் இருந்து இறந்து மிதந்த உடல்களைப் பற்றிக்கொண்டு எத்தனை நாட்கள் மிதந்திருப்பேன். காத்திருந்தேன். அலை மாறும்வரை. புயல் ஓயும் வரை. என்னைத் தெரியுமா? நான் என்னை பல காலத்திற்கு முன் வைத்துப் பார்க்கிறேன். எனக்கு நாளையைப் பற்றித் தெரியும். நாளை மறுநாளைப் பற்றிம் தெரியும். அடுத்த வருடம் எப்படியிருப்பேன் என்றும் அறிவேன். என்னைப் போய் தெரியாத்தனமாக இப்படி செய்ய முயற்சிக்கிறாயே. பாவம் நீ. கடலுக்கடியில் ஒரு சமூகமே புதையுண்ட காட்சியைக் காண்பித்து என்னை நீ என்ன மனமாற்றம் செய்யவா முயற்சித்தாய்? அந்தப் பேய்கள் என் கப்பலைக் கடந்தபோதே எனக்குத் தெரியும் அவற்றின் வாழ்க்கையின்போது, நான் இப்போது இருப்பதைப்போல் இருந்திருந்தால், தன் உடலும் மனம் முழுமையான இன்பத்தையும் தேவையான அனைத்தையும் அனுபவித்திருக்கும் என்ற பெருமூச்சின் வாயிலாக வெளிப்படுதியதை. அதை நீ பாடல் என்கிறாய். பாடலால் உலகம் மயங்கித்தான் கிடக்கும் சுயஉணர்வற்று மயக்கத்தில் வாழும் கணத்தின்போது நீ பிணமாகத்தான் வாழ்க்கையின் அந்தக் கணத்தை கடக்கிறாய்.

பாடல் உன்னை உன் உண்மையை மறக்கடிக்கிறது. அதனால் தான் அந்த பூதங்கள் பாடினதாக உனக்குத் தோன்றியிருக்கிறது. இந்த எச்சரிக்கையோடு உன்னை என்னிலிருந்து விடுவித்துக்கொள், நான் யாரையும் எச்சரிக்காமல் கொல்லமாட்டேன். இப்படித்தான் ஒருவன் ஏகபத்தினி விரதன் என்று பெயர்போனவன் எதிர்த்தான் என்ன ஆனான்.... அவனைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தார்கள். அவன் ஒருவன் தான் உலகின் உயிரா மற்றதெல்லாம் என்ன மண்ணா? தொலைத்துவிட்டேன் அவனை. எல்லோரது ஞாபகத்திலிருந்தும். இப்போது நான் தான் இருக்கிறேன். நான் இருக்கும் வரை நான் தான் இருப்பேன் பின் அவர்கள் என்னைப்பற்றி நினைக்கிறார்களா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. அவர்கள் அப்போது என்ன நினைக்கிறார்கள் என்று என்னால் அப்போது கூட இருந்து பார்த்து ரசிக்க முடியாது. அதனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் எனக்குப் பின்னால். ஆனால் நான் இருக்கும்போது, நான் தான் எல்லாம். என்னைத் தவிர மற்றதெல்லாம் பொது. அதில் நீயும் ஒன்று.

எனக்கு எதிரி என்பவனே இருக்கக்கூடாது. இருந்துவிட்டால் பின் இரண்டு தலைவர்கள் ஒற்றை நாற்காலியில்... அசிங்கம். அதனால் மீண்டும் எச்சரிக்கிறேன் என்னையோ என் மக்களையோ நீ மீண்டும் இதுபோன்ற காரியத்திற்குள் ஈடுபடுத்த முயற்சிக்காதே.”

பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “உனக்கு நான் என் நாட்டில் இடம் தருகிறேன். என் மக்களோடு மக்களாக இருந்துகொள். வந்துபார் என் மக்களை. எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள். அவர்களைவிட உலகில் மிக சந்தோசமானவர்கள் யாராவது உள்ளனரா. இது என்ன கேள்வி? உலகையே ஆளும் நான் அனைவரையும் மக்களாகத்தான் கருதவேண்டும் இல்லையா. உன்னையும் சேர்த்து. நீயும் என் மக்களில் ஒருவன் தானே! போகட்டும். இனி எனக்கு இதுபோன்றக் கனவுகளை ஏற்படுத்தி எனது இப்போதைய மனநிலையை மீண்டும் ஏற்படுத்தாதே. என்ன?”

என சொல்லிவிட்டு அருகிலிருந்து மதுக்குப்பியை அப்படியே வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டு வெகுநேரம் குடிக்கிறான். கண்கள் நரம்புகளைப் புடைத்துக்கொண்டு சிவப்பேற சிவப்பேற கைகால்களும் முறுக்கேறி திமிருகிறது. குப்பியைக் காலி செய்த பின் அவற்றைத் தூக்கி எறிந்தவன் தடுமாறினான். நா குரழ்ந்தது. போதை தலைக்கேற அறையைவிட்டு தட்டுத்தடுமாறி வெளியேறுகிறான். ரிமிந்தகனின் இந்த செய்கை அனைத்து வேலையாட்களையும் மிரட்சியடையச் செய்ய அவனை தாங்கிப் பிடித்து அறைக்குள் கொண்டுவந்து போட முயற்சிக்கின்றனர். முடியவில்லை. அவனை அவனது இடத்திலிருந்து யாராலும் நகர்த்த முடியவில்லை. அவன் அங்கேயே அதே இடத்தில், ஆடிக்கொண்டே இருக்கிறான். வலமும் இடமுமாக. ஆனால் ஒரு அடிகூட அவனாலோ மற்றவர்களாலோ இடம் பெயர்த்த முடியவில்லை.

வெகுநேரம் அப்படியே போராடிக்கொண்டிருந்த வேலையாட்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் அலறியடித்துக்கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடுகிறார்கள், உதவி நாடி. அச்செய்தி கேட்டு ராணியார் அவனைத் தேடி வரவும் மற்ற முக்கியஸ்த்தர்கள் வரவும் சரியாக இருக்க, அவன் அதே இடத்தில் இருந்துகொண்டு சப்தமாக ஓலமிட்டுக்கொண்டிருக்கிறான். இடையிடையே அவனது ஒலியில் விநோதமான குரலும் கேட்க அனைவரும் அவனை ஒரு அதிசயமாக கண்கொட்டாமல் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். அந்த பெரிய அரண்மனை மண்டபத்தில் அவன் ஒருவன் நாடக நடிகனைப்போலவும் அவனே அந்த நாடகத்தின் கதாநாயகன் போலவும், அதிலும் அவன் ஒருத்தனே நாடகத்தின் எல்லாக் கதாபாத்திரத்தைப் போலவும் நிகழ்த்தத் தொடங்கினான்.

“வெற்று நிலத்தில் விதைகளை அலசி ஊறவைத்து விதைத்து வந்த நான், விளையும் போது பக்கத்திலேயே இருக்க மறந்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் அதைப் பற்றியான கனவிலேயே என் வாழ்நாளை செலவிட்ட நான் அதன் வளர்ச்சியின் உச்சத்தின் பொது சற்று அயர்ந்துவிட்டேன். விளைவு, நான் என்னையும் நான் விதைத்த முதல் விதையையும் ஒன்றாக இழக்க நேர்த்திருக்கிறதாக சொல்லப்படும் இன்றைய கட்டுக்கதைகளை நானே கேட்கும் நிலை. என்னவிதமான கோர நிலை இது. இந்த நிலையில் என்னை நானே அடிக்கடிப் பார்க்கும் அற்பத்தை இன்னும் தொடரவேண்டுமா. வேண்டாமில்லையா? அதனால் சொல்கிறேன் அந்த நீல நிற மனிதனின் கொட்டத்தை அடக்கிவிடுவோம். அவன் சதா என்னை தொந்தரவு செய்கிறான். அவன் தான் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவன். சொல்லுங்கள். என்ன செய்யலாம். அவனைக் கொன்றுவிடுவோமா? என்ன நீங்கள் தயாரா. எனக்காக எல்லாவற்றையும் கூட இழக்கத் தயாராக இருந்தவர்கள் தானே. இப்போதும் அப்படித்தானே இருக்கிறீர்கள்? வாருங்கள் அவனை நாம் கொன்றுவிடுவோம்.” என அவன் தள்ளாடித் தள்ளாடி பேசுவது அவனுக்கு நிதானத்தோடுதான் தாம் தமது மனக்குமறலை வெளிப்படுத்துவதாகத் தோன்றினாலும், மற்றவர்கள் அனைவரும் அவன் குடியில் இப்படி பிதற்றுகிறான் என்றே நினைத்தனர்.

அவனை மெல்ல அனைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்ற மீண்டும் முயற்சித்தனர். அப்போதும் அவனை அவர்களால் நகர்த்த முடியாமல் தோல்வியுற்றனர். அனைவருக்கும் அதிசயமாயிருந்தது, அவனை அங்கிருந்து ஏன் நகர்த்த முடியவில்லை என்பதை யோசிக்கும் போது, “அவனை ஏன் அசைக்க முடியவில்லை” என்றுதான் யோசனையை ஆரம்பித்து யோசித்துக் கொண்டே இருந்தார்கள். அதற்கு விடையேது. அதற்கு அவன் தான் விடை தரவேண்டும். ஏன் தான் நகர மறுக்கிறேன் என்று. அவனுக்கும் தெரியவில்லை என்றால், அவனும் அவர்களும் அந்த புரியாத நிகழ்விற்காக கடவுளை வேண்ட வேண்டியிருக்கும். யாருக்கும் கடவுளைப் பற்றியான நினைப்பு இல்லை. யாருக்கும் முதலில் கடவுளின் மீது நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் தோல்வியுற்ற மன்னர்கள், வணிக செல்வந்தர்கள். அவர்களுக்கு அவர்களைப் பற்றியான பிரக்ஞையே இருந்தது. அதனால் மட்டுமே ரிமிந்தகனுடன் கூட்டு சேர்ந்தார்கள். இல்லையேல் கடவுளிடம் வேண்டிக் கொண்டு மொட்டைப் போட்டுக் கொண்டு யாருக்காவது நாலுபேருக்கு கையிலிருந்து உதவாத சில்லைரையை வீசியெறிந்துவிட்டு உபகாரம் செய்துவிட்ட சந்தோசத்தில் எல்லாவற்றையும் வெற்றி கண்டதாக கனவு கண்டிருந்திருப்பார்களா? ரிமிந்தகனையும் சேர்த்து.

ரிமிந்தகனை தோற்கடிக்கமுடியாத ஒரே காரணத்தால் ரிமிந்தகனிடம் கூட்டு சேர்ந்திருக்கிறர்கள். அந்த அய்யோக்கியர்கள் இந்த அயோக்கியனுக்கு என்ன புத்திமதி சொல்ல முடியும்? என்ன வழியை காண்பிக்க முடியும்? அதனால் அங்கே ஒரு மயான அமைதி நிலவியது. மயான நெடியும் ஏற்பட்டது.
அப்போது ரிமிந்தகனே தொடர்ந்தான்,

“என்னால் இந்த கோர நிலையில் வாழ்க்கையை ரசிக்கமுடியாது என்பதால் ஒரு முடிவுக்கு வருகிறேன். அடுத்தொரு அடியை நான் எடுத்து வைக்கவேண்டுமானால் அது அந்த நீல நிற மனிதனை அழித்து விட்டப்பின்தான் சாத்தியம். அதனால் என்னோடு என் மக்களாகிய நீங்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து அவனை அழிக்க உதவவேண்டும். இல்லையேல் இப்பேற்பட்ட திறமை வாய்ந்த என்னை நீங்கள் இழக்க நேரிடும். அதே நேரத்தில் உங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலைக்கு புதைத்துக்கொள்ள நேரிடும். என்ன நான் சொல்வது? சரிதானே!” என்றான்.

அனைவரும் அவனது இப்போதைய சொல்லுக்குக்கட்டுப்பட்டவர்களாக அவன் முன் அமைதியாக ஒப்புக்கொண்டதும் அவன் மெல்ல எழுந்து ஒரு அடி அடுத்த நிலைக்கு எடுத்து வைக்கிறான், சுலபமாக அவனால் நகர முடிந்தது. அப்படியே நடந்து நடந்து ராணியின் தோள்மீது சாய்ந்தபடி தன் பிரத்தியோக அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்கிறான்.

அவன் அப்படி அறைக்குள் சென்றதும் மற்றவர்கள் அந்த இடத்தைவிட்டு எங்கெங்கோ சென்றுவிட்டாலும் அனைவரது மனமும் அந்த அறையின் வாசலிலேயே தங்கியிருந்தது. அவனும் ராணியும் பேசிக்கொள்வதைக் கேட்பதற்காக. பேசினால் கேட்பதற்காக. பேசாவிட்டாலும் மறுநாள் விடியும் வரை அங்கேயே இருந்து இப்போதைக்கு அனுபவிக்கும் சந்தோசமான எந்த வகையையும் சிதைவுறாமல் காக்கவேண்டுமே என்பதற்காக காத்திருந்தன. காத்திருப்பின் ஒவ்வொரு நொடியும் அதிகரிக்க அதிகரிக்க அங்கே அந்த அறைக்குள் என்ன நடந்தததோ அது வேறு....., ஆனால் அங்கே அவை அனைத்தும் அவனது குரலை தெளிவாகக் கேட்டன. அவன் ராணியிடம்,

“இந்த உலகம் என் கைவசமான நாள் முதலாக நான் எல்லா சந்தோசங்களையும் என் விருப்பப்படி அடைந்து வருகிறேன். உன்னோடு நான் உறங்கிய நாட்களைத் தவிர மற்ற நாட்களெல்லாம் என்னுடைய நாட்களாக இருந்து வந்திருக்கிறது. இனி அப்படியொரு நாள் என்னால் அனுபவிக்க முடியுமோ என்றொரு பயம் தொக்கிக்கொண்டு தொண்டைக்குள் கீறிக்கொண்டிருக்கிறது. இதனை எப்படி நான் காயறுப்பேன். இதனை எப்படி நான் விட்டொழிப்பேன். தெரியவில்லையே. இந்த நிலை எனக்கு எப்போதாவது வந்திருக்கிறதா என்றும் தோண்டித் தோண்டி ஆராய்ந்து பார்க்கிறேன். இல்லையென்ற பதில் தான் வருகிறது. உண்மை அதுதானே. அப்படித்தானே வரும். ஆனால் நான் எனக்கான தீர்வைக் கண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இன்று நான் இப்படி புத்தி பேதலித்ததுபோல் இருந்ததெல்லாம் - ஆமாம் நான் குடித்துவிட்டு போதையில் உளறவில்லை. தெளிவான மனதோடுதான் பேசினேன். உண்மையை கண்டுகொள்ள முடியாத யாரும் இப்படித்தான் இருப்பார்கள், பேசுவார்கள்.

குடிக்க வேண்டிதெல்லாம் இல்லை, சாதாரணமாகவே இப்படித்தான் பேச்சு வரும். அப்படித்தான் பேசினேன். என்ன செய்யச் சொல்கிறாய். எனக்கு வேறு வழி தெரியவில்லை. இப்போது ஒரு உண்மையை உணர்கிறேன். நான் உயிரோடு இருக்கவேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் உயிரோடு பல காலம் வாழவேண்டும் என நாடுகளை வளர்த்து பெரிதாக்கிக்கொண்டு பொண்டாட்டிகள் நூறு பேரென்றால் வப்பாட்டிகள் இருநூறு பேரைக்கொண்டு கனவோடு வாழ்ந்தவர்களெல்லாம் என்ன ஆனார்கள். என்னால் பலியானார்கள். நான் தான் அவர்களுக்கு எல்லாம் காலனாகத் தோன்றி வதம் செய்தேன். இப்போது அந்தக்கதி எனக்கே வருமோ என்ற பயம் வருகிறதே. போகட்டும். ஏன் அப்படி நான் நாக் குழறி எல்லோர் முன்னிலையிலும் பேசினேன் என்றால் நான் அப்படித்தான் குடித்துவிட்டு உளறுவேன் என்று இனி அடிக்கடி நினைத்து நான் சொல்வதை எல்லாம் ஏற்காமல் வெறுமனே ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிடுவர். அப்போது அவர்கள் தவறுகளை அதிகம் செய்வார்கள். அவர்களது இந்த கவனச் சிதறலால் செய்யும் தவறுகளுக்கெல்லாம் தண்டனையை அனுபவிப்பார்கள்.

எல்லோர் முன்னும் ஒருவர் இன்னொருவருக்கு தவறு செய்பவராகத் தோன்ற, அவர் இவரைக் கொல்ல, இவரை இன்னொருவர் கொல்ல இப்படியாக ஒரு குழப்பத்தில் கலகம் ஏற்பட்டு பலர் மாண்டுபோவர். இதில் இறப்பவர்கள் யார் தெரியுமா? யாரெல்லாம் தான் பெரியவன் என்று எண்ணுகிறார்களோ அவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோவர். அப்படித்தானே பெரிய பெரிய புரட்சியாளர்களெல்லாம் மாண்டுபோனார்கள். புரட்சி செய்யப்பட்ட காலத்தில் புரட்சியின் நாயகர்கள், அவர்கள் எதிர்க்கும் எதிரிகளால் கொல்லப்பட்டார்கள். சில புரட்சியாளர்கள் அந்த எதிரிகளைக் கொன்றார்கள். இறுதியில் ஒரு புத்திசாலி அதாவது தாம் மட்டும் தான் இருப்பதாக ஒரு மாயை தமக்குள் ஏற்படுத்திக்கொண்டு நாட்டை ஆண்டார்கள். அதன்பின் காலம் செல்ல செல்ல என்ன ஆனது? அவர்களும் முட்டாளாகளாகி புத்தி மழுங்கிப்போய் யாருடைய தப்பான அல்லது அறியாமையால் ஏவப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிப்போனார்கள். அப்படியாகப்பட்ட சூழலில் என்னை எதிர்ப்பதாகத் தோன்றும் அந்த நீல நிறமாவனும் அடிபட்டு இறந்துபோவான். எப்போது எனக்கு குழப்பம் குறைந்ததாகத் தோன்றுகிறதோ அப்போது நான் இந்த கலகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன். என்ன நான் சொல்வது சரிதானே?”

பிறகு மன்னனின் குரல் கேட்கவில்லை. வெளியே பூட்டிய கதவின் மீது காதை வைத்துக் கொண்டிருந்த அனைத்து மனங்களும் மேலும் அவன் ஏதாவது பேசுவான் அல்லது அவன் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அங்கேயே காத்திருந்தன. வெகுநேரமாகியும் அவனிடமிருந்து எந்த குரலும் வெளிப்படாததால் மனங்கள் அனைத்தும் இனி அங்கே இருப்பது வீண் என்ற முடிவுக்கு வந்து தம் உடல்களை நோக்கித் திரும்ப முடிவெடுத்துத் திரும்புகையில் தான், ஒவ்வொரு மனமும் அங்கே தனியாக இருக்கவில்லை அதனோட வெவ்வேறு உடல்களின் மனங்களும் அவனது குரலைக் கேட்டிருக்கின்றன என்பதை ஒன்றை மற்றொன்றோடு மோதிக்கொள்ளும்போது உணர்ந்தன. மனம் மனதோடு மோதிக்கொண்டபோது விபரீதம் பயங்கரமானதாக இருந்தது. வெளியே, தாம் தமது உடல்களை பாதிப் பிணங்களாக விட்டுவந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு, அரண்மனை மண்டபத்தில் மன்னன் பேசிவற்றைப்பற்றி தர்க்கம் செய்து ஒன்று மற்றொன்றோடு மோதிக்கொண்டன.

“நான் சொல்வதுதான் சரி. இப்படித்தான் இருக்கப்போகிறது. நான் சொல்வதைக்கேள்” என்பதான வாக்குவாதத்தில் மனங்கள் அனைத்தும் மோதிக் கொண்டு மடிந்தன. வெளியே உடல்கள் பாதிப் பிணங்களாகவே மீதிக் காலங்களை தள்ளியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. மனங்களின் போர்க் குணத்தால் உடல்கள் பாதிப் பிணங்களாயின. மனங்களிலில்லாத நிலையில் உடல்கள் பாதி உயிர்களோடு வாழ்ந்தன.

மறுநாள் விடிந்தது. ரிமிந்தகனுக்கு மட்டும். அன்று விடிந்து வெகுநேரமாகியும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தே காணப்பட்டது. அவர்களின் அசதியை ரிமிந்தகன் அறிந்திருந்ததினால், அரண்மனையின் உப்பரிகைக்குச் சென்று அங்கிருந்து நகரத்தை நோக்கி தன் மக்களுக்காக ஒரு அறிவிப்பை காற்றில் தன் அழகழகான வார்த்தைகளால் அனைவருக்கும் கேட்கும், பார்க்கும் அலைவரிசையில் லாவகமாக பதிவு செய்கிறான் இப்படியாக,

“அன்புள்ள என் மக்கா! போருக்குப்பின்னொரு அமைதியைத் தேடி ஆசுவாசப் படுத்திக்கொண்டிருக்கும் நமது இந்த ஓய்வு வேளையில் ....” மேலேத் தொடர முடியாமல் தவிப்பவனாக வார்த்தைகளை தழுதழுக்கும் வகையில் கோர்த்து சிறிது நேரம் நிறுத்துகிறான் தன் பேச்சை. தன்னை சரிசெய்துகொண்டவனாக மீண்டும் தொடர்கிறான்,

“எத்தனையோ போர்களைக் கண்டு எவ்வளவோ சிதைவுற்ற இடங்களையும் கடந்து ஆர்பாட்டமில்லாமல் வாழலாம் என இங்கே வந்திருக்கிறோம். எவ்வளவு நாட்கள் நிம்மதியாக இருந்திருப்போம் என்றுத் தெரியவில்லை. இன்னும் போரின் ஞாபகம் நம்மை விட்டுவிலாக பட்சத்தில் அமைதியை அருந்தியதாக மனம் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் என்னை ஒரு கனவு தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. யார் அந்தக் கனவில் வருகிறார் என்பதை என்னால் ஊகிக்கவும் முடியவில்லை. அவர் ஒருவரா? அல்லது ஒரு பெருங்குழுவா? என்றும் கண்டுகொள்ள முடியாமல் தவிக்கிறேன். நான் மன அமைதியை இழக்கத் தொடங்கிய அடுத்தநொடியே, மக்களே நீங்களும் அவதியுறுவதை எண்ணுவதால்தான் நான் மிகவும் வருத்தத்திற்குள் உழல்கிறேன். இதிலிருந்து என்னை எப்போது விடுவித்துக் கொள்ளப் போகிறோனோ தெரியவில்லை.

நீங்கள் இந்த என் நிலையை பெரிது படுத்தவேண்டாம். இது நான் சந்திக்கின்ற ஒன்று. நான் தான் இதற்குப் பொறுப்பாக இருந்து செயல்பட்டு நீக்கவேண்டும். அதனால் நீங்கள் அசவரப்பட்டு அந்த நீலநிறத்தவனைத் தேடியலைந்து கொலைவெறியோடு மீண்டுமொரு போரைத் தொடங்கிவிடார்தீர்கள். அதனால் சொல்கிறேன். அமைதியாக அவரவர் தத்தமது வீட்டுக்குள் கிடைத்திருக்கும் இந்த சொற்ப காலத்தில் அமைதியை அனுபவியுங்கள். நல்ல உணவுவகைளை உண்டுகளித்து உடலை வளர்த்துக் கொள்ளுங்கள். உடல் வலுவானால் உள்ளம் வலுவாகும். உள்ளம் வலுவானால் உங்களது செய்கைகள் தெளிவாகி இந்தச் சமூகத்தில் முன்பிருந்து பிரிவினை ஏதும் வராமல் நாம் அனைவரும் ஒரு குலம் என்பது தொடரும். அதனால் சொல்கிறேன். அமைதியை அனுபவியுங்கள். நான் என் வேதனையை எப்படி கரைத்துவிட முடியுமோ அது என் பாடு. நான் பார்த்துக்கொள்கிறேன்”

இப்படியாக அவன் “தன்னைப் பற்றி யாரும் கவலைப்படவேண்டாம். இது எனக்கு ஏற்பட்ட வலி. நானே பார்த்துக்கொள்கிறேன்.... ஆனால் நீங்கள் சந்தோசமாக என்னைப் பற்றியான எந்த சிந்தனையும் இன்றி வாழ்க்கையை அனுபவியுங்கள்” என்று அவன் சொல்லிய விஷமத்தனமானது காற்றில் அலைந்து அலைந்து கனத்து அந்த அலைவரிசையின் அகடுமுகடுகளை அதிகப்படுத்தி அதிகப்படுத்தி வலுவாக அதே சமயம் தீர்க்கமாக எல்லோர் மனதிலும் பதிவாகியது. கேட்ட அனைவரும் அவனுக்காக வருத்தப்பட்டார்கள். குறைந்தபட்சம் வருத்தப்பட்டதாக நடிக்கவாவது செய்தார்கள். அவனது மக்கள் பெரும்பாலும் அவனிடம் தோல்வியுற்ற மன்னர்களே என்பதால் அவர்கள் அனைவரது மனதிலும் ரிமிந்தகனின் இந்த பேச்சில் மறைவாக சில விஷமங்கள் மறைத்து வைத்து அனுப்பப்பட்டிக்கிறது என்பதை உணர்ந்தார்கள். ஏனெனில் அவர்கள் தங்களது நாட்டை ஆண்டு வந்த போது சுயநலத்திற்காக மக்களை எப்படி வசப்படுத்தவேண்டுமோ அப்படியெல்லாம் செயல்பட்டிருந்தவர்கள் தானே.

பழங்கதைகள் பெரும்பாலும் போர்களைப் பற்றியானதாக இருக்கும். அந்த கதையின் காரணமே ஒரு மன்னன் இன்னொரு நாட்டு மன்னனின் மனைவியின் மீது ஆசைப்படுவான் அல்லது மகளைக் கடத்திக்கொண்டு வந்து திருமணம் செய்துகொள்வான், அல்லது சும்மா ஆசைக்கு வைத்துக்கொள்வான், எதுவோ அவர்கள் நடத்திய பெரும்பான்மையான போர்கள் எல்லாம் அவர்களது சுயநலத்திற்காகவே இருந்திருக்கிறது. இப்போது மக்களாக அலைந்துகொண்டிருக்கும் மன்னர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது மன்னன் ரிமிந்தகன் நிச்சயம் ஒரு பேரழிவிற்குக் கொண்டு செல்லப்போகிறான் என்பதை. இருந்தாலும் அவரவர்கள் தம் சக்திக்கேற்ற நிலையில் தம்மையே திருப்திபடுத்திக்கொண்டனர். தாம் அவனால் பாதிக்கப்படாமல் தப்பிவிடலாம் என்ற குறுக்கு எண்ணத்தினால்.

ரிமிந்தகனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளுக்குமே இந்த பயம் தொடங்கிற்று. போர் என்று வந்தால் இப்போதெல்லாம் எட்டியிருந்து குண்டுகளை எறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்... முதலில் பெரும்பான்மையாக அழிவது மிருக தாவர இனங்கள் தானே. பயத்தால் எல்லாம் தளர்ந்து சோர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன, அன்றைய பூத்தலையும் காய்த்தலையும் மறந்து. காலத்துக்குக்காலம் மாறிவரும் தம் இனத்தின் உடலமைப்புகளை கடைசியாக வாஞ்சையுடன் ஒவ்வொன்றும் பார்த்துக்கொண்டன.

மக்கள் எல்லோரும் தத்தமது வீடுகளுள் புகுந்து கொள்கின்றனர். தத்தமது பெண்டாட்டிப் பிள்ளைக் குட்டிகளோடு ஒன்றாக அமர்ந்துகொண்டு ஒருவரையொருவர் அடிக்கடித் தழுவிக்கொள்கின்றனர், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தால். எதையும் சொல்லமுடியாத ஒரு காலமாக இப்போதையதை அவர்கள் அனைவரும் உணர்வதால்.

அவர்களில் ஒருவன், தென்திசை நாடுவொன்றை ஆண்டுவந்தவன், தன் மகனை அணைத்துக்கொண்டு,

“இந்த நாடு நாமுடையதல்ல.”

“தெரியும்பா”

“நம்முடையது அல்லாத எதிலும் நாம் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. நாம் ஒருகால் நமது நாட்டிற்கு மீண்டும் செல்லலாம் அல்லது ரிமிந்தகனின் அரக்கக்குணத்திற்குள் சிக்கி அழிந்தும் போகலாம்.”

“பயமா இருக்காப்பா”

“ம். என்னைப் பற்றிய பயம் எனக்கில்லை. எல்லாம் உன்னைப் பற்றியும் உன் தங்கை மற்றும் உனது தாயைப் பற்றியதும்தான். நமது நாட்டை ரிமிந்தகன் சுற்றி வளைத்து பீரங்கி மற்றும் போர் விமானங்களால் மடக்கியபின், அவனை எதிர்க்க முடியாமல் கைகள் கட்டப்பட்டு, அவன் என்னைக் கைதியாக்கி எதுவும் செய்ய இயலாமல் செய்வதற்கு முன்பே அப்படியொரு நிலையில் இருந்தேன்.”

“நீங்கள் மன்னன் தானே. உங்களுக்கு மக்கள் துணையிருந்திருப்பார்களே?”

“இருந்திருப்பார்கள், நான் மக்களுக்கான மன்னனாக இருந்திருந்தால். நான் தான் தான்தோன்றித்தனமாக என் ஆசைகளை அனுபவித்தவனாகவே காலத்தைக் கழித்தேனே. அவர்களை நான் எங்கே கவனித்தேன். அவர்களை அவர்களே பார்த்துக்கொண்டார்கள். அந்த என் நிலையின் போதும் அவர்கள் என் நாட்டை விட்டே அகதிகளாக வெளியேறினார்கள். அனைவரும் வெளியேறினார்களா என்றால் இல்லை. அதில் தொண்ணூறு விழுக்காடு வழியிலேயே விமானக்குண்டு வீச்சில் பலியானர்கள். மிச்சமிருந்தவர்கள் அடுத்த நாட்டுக்குள் அடியெடுத்து வைத்ததும் ஒன்றாக திரட்டப்பட்டு ஒரு பெரிய குழியில் போடப்பட்டு விஷவாய்வு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.”

“அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்”

“நான் செய்த பாவம் தான். நான் தவறு செய்தேன். யாரையும் மதிக்காமல் இருந்தேன். என்னை யாரும் மதிக்கவில்லை. என் மக்களையும் மதிக்கவில்லை. நம் இனத்தையே பஸ்ப்பமாக்கினார்கள். அதில் எச்சமும் மிச்சமும் நாம் நால்வர்தான். அதுவும் ரிமிந்தகனின் காலில் நான் விழுந்ததால் தான்.”

“இப்போ ஏன் பயப்படுகிறீர்கள்?”

“இப்போ என் மரணம் நிச்சயிக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. ஏற்கனவே இறந்திருக்கவேண்டிய நான் காலம் தாழ்த்தி இறக்கப்போகிறேன். அவ்வளவுதான்.” கண்கள் கலங்க, உடல் நடுங்கியபடி இருந்தவன், மகனை அனைத்துக்கொண்டு, “நீ எப்படியாவது பிழைக்கவேண்டும். நாம் அரச வம்சம். அரச வம்சத்தின் ஆண்மக்கள் பிழைத்திருந்தால் பிழைத்திருக்கும்வரை நாடு திரும்பும் நம்பிக்கை இருந்துகொண்டே இருக்கும்.” இப்படியாக அவன் பேசிக்கொண்டே இருக்க மகன் மெல்ல எழுந்துசென்று தாயின் மடியில் தலைவைத்து உறங்கிவிடுகிறான். அவளோ கண்ணீருடன் அவனைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தாள், இயந்திரகதியில். தூங்கிவிட்ட மகனை இருந்த இடத்திலிருந்தே பார்த்துக்கொண்டு, “மகனே, புரிந்துகொள் நீ எங்கள் வம்சம். நீ பிழைத்திருக்கவேண்டும். நீ உயிரோடு இருந்தால் நாடும் என்னோடு இருப்பதுபோன்றொரு உணர்வைப் பெறுவேன். என்னை என் நாட்டினை விட்டு பிரிக்காதே. நான் எனது கையாலாகத தன்மையால் நாட்டை இழந்தேன். நாட்டினால் நான் பெற்ற சுகத்தையிழந்தேன். நாட்டினைப்பற்றியான பிரக்ஞையோடு உறங்கு மகனே. பின்னொரு நாளில் நீயும் நாட்டை ஆள்வாய். அப்போது அது தரும் சுகத்தைப் புரிந்துகொள்வாய். இப்போது உறங்கு. உனக்கு எதுவும் வரமால் நாங்க பார்த்துக் கொள்கிறோம்.” என சொல்லிக்கொண்டே எழுந்து வாசலுக்குச் சென்று அமர்ந்துகொள்கிறான்.

மனைவியும், மகளும் இந்தவித பேச்சால் மிகவும் நிலைகுலைந்து போய் காணப்பட்டார்கள். ஆண்கள் இருவரையும் வெறுத்தார்கள். இதே நிலை எல்லா வீடுகளிலும் ஏற்பட்டது. எல்லாப் பெண்களும் ஆண்களின் இந்த போக்கை வெறுத்தார்கள். எல்லா வீடுகளின் வாசலிலும் ஆண்கள் காவலுக்கு இருக்கும் விதத்தில் கொட்டக் கொட்ட விழித்தபடி வானையும் வழியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருக்க, பெண்கள் உள்ளே அடுக்களையில் பிள்ளைகளை வாரியணைத்த நிலையிலிருந்து அனைவரது மனத்திரையிலும் எண்ணங்கள் காட்சிகளாக,

“எல்லாப் போர்களிலும் ஆண்கள் அவசரப்பட்டு ஒருவர் மீது மற்றவர் கோபத்தை ஏற்படுத்தி அடித்துக்கொண்டு இறந்துபோவதும்; ஊருக்குள் பெண்கள் உற்பத்தியில்லாமல், உணவில்லாமல், பெண்டு பிள்ளைகளை பசியிலிருந்தும் நோய்நொடியிலிருந்தும் தன் குருதியை பிழிந்து பிழிந்து கொடுத்து வளர்த்து வந்ததையும்; அவர்களில் ஆண்பிள்ளைகள் போருக்குச் சென்றவர்களின் வீரசாகசக் கதைகளைக் கேட்டுக் கேட்டு தெருவில் அடித்து உதைத்துக்கொண்டு உடலில் பல காயங்களோடு அலைந்ததையும்; காயங்களில் ஈக்கள் மொய்க்க, அதை விரட்டும் தாய்மார்களின் கைகள் வலுவிழந்து தொங்கிவிட்டதும்; எல்லையில் பிணங்களை பெண்களும் பிள்ளைகளும் ஏற்றி வந்து ஊருக்குள் புதைப்பதும் எரிப்பதும்; அடுத்த நாள் போருக்குத் தேவையான அனைத்தையும் பெண்கள் பகலிரவு விழித்து ஏற்பாடு செய்து தந்ததும்; காப்பாற்றப்படும் சூழல் ஏற்படும் போது அவர்களை, ஆண்கள் கண்டுகொள்ளாததும், தம் ஆண்பிள்ளைகளை மட்டும் காப்பாற்ற தேர்ந்தெடுப்பதும்; பெண்கள் அனைவரும் சருகாய் ஊதித் தள்ளப்படுகின்றதும் ஆக காட்சிகள் திரையில் வந்துவந்து போயின.

மறுநாளும் விடிந்தது. அந்தக் காலை வேளையில் யாரும் எழுவதற்கு முன்பாக படுக்கையிலிருந்தபடியே அனைவரும் எல்லையிலிருந்து போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டதும், அடித்து வாரிச் சுருட்டிக்கொண்டு ஒலி வந்த இடம் நோக்கி விரைந்தனர். அங்கே ரிமிந்தகன் பெரிய ஒரு ஆலமரத்தின் தடித்தக் கிளையொன்றில் ஏறி நின்றுகொண்டு முரசை ஆக்ரோசமாக யாரையும் கவனிக்காமல் அடித்துக் கொண்டிருந்த விதத்தில், ஏதோ மிகப் பெரிய திட்டத்தோடு அவன் வந்திருப்பதை அனைவரும் உணர்ந்தாலும், அவர்களை ஒருவித பொதுவான அதிர்வுக்குள் கொண்டு வருவதற்காகவே இப்படி முரசை அடிக்கிறான் என ஆரம்பத்தில் உணர்ந்தவர்கள் பின் அவனது நோக்கத்திற்கு இணைந்தவர்களானார்கள். அனைத்து புத்திசாலிகளும் முண்டங்களும், போர்பறையின் வசீகரத்தால். மரத்தைச் சுற்றி பெருங்கும்பல் சேர்ந்தது. அவ்வளவுதான் கும்பல், இனி நகருக்குள் யாரும் இல்லை என உணர்ந்ததும் ரிமிந்தகன் வாசிப்பின் தாளத்தை மாற்றியமைத்து வாசிக்க அது இதுவரை “அவன் நினைத்தது நடந்துவிட்டது இனி நடக்கப் போவதைச் சொல்ல எல்லோரையும் தயார்படுத்த முனைகிறது” என்ற நிலையில் ஒலி வெளிவந்துகொண்டிருந்தது.

அங்கிருந்த அனைவரும் அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை அறிவார்கள். அவன் எதற்காக இங்கே அனைவரையும் கூட்டியிருக்கிறான் என்பதையும் அறிவார்கள். ஆனால் தாம் அவன் நினைப்பதைத்தான் நினைக்கிறோமா என்ற சந்தேகமும் எல்லோரிடமும் இருந்ததுதான் அவர்கள் இன்னமும் அவனை நம்பும்நிலையிலேயே வைத்திருக்கிறது. அந்த சந்தேகம். அந்த பயம் அவர்களை அவனது நிழலில் எப்போது அவனுக்காக அவனைச்சுட வரும் அனைத்து நெருப்புக்கங்குகளையும் விழுங்கிக்கொண்டே சிரிக்கிறார்கள், வலியோடு. இது அவனுக்கும் தெரிந்தது. அந்த புரிதல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அப்படியே தொடர்கிறான். வெகுநேரம் இந்த மாற்று இசை தொடர்கிறது. அந்த ஒலியின் தொடர்ச்சியினால் யாரும் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு அப்படியே கிடக்கின்றனர், புத்தியை பூமிக்குள் புதைத்தவர்களாக. அந்த கணம் பார்த்து சட்டென தன் வாசிப்பை நிறுத்துகிறான். அனைவரும் கழுத்தப்பட்டுவிட்டதோ என்ற பயத்தால் பதறியடித்துக்கொண்டு எழுந்து சுற்றுமுற்றும் புரியாமல் விழிக்கின்றனர், பாதிக்கனவில் விழித்தக்குழந்தையைப்போல். படுக்கையிலேயே மூத்திரம் போன குழந்தை குளத்தில் மூழ்கின கனவிலிருந்து விடுவித்து மூச்சுத் திணறுவதுபோல்.

நிசப்தம் குடியேறியது. அமைதியை அனைவரும் உணர்ந்தனர். இலை, கிளை, சருகு என எதுவும் அசையாமல் காட்டுத்திரையில் வரையப்பட்டதின் ஒரு பகுதியாக அனைத்தும் ஓவியமாக கிடந்தன. உட்கார்ந்தும், மண்டியிட்டும், நின்றும் சாய்ந்தும் இருந்தவர்கள் அப்படியே அதேநிலையில் தடுமாற்றமில்லாமல் ரிமிந்தகனை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவர்களுள் ஆயிரமாயிர இயக்கங்கள் நடந்துகொண்டுதான் இருந்தன, அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம் எந்தப் பிரக்ஞையும் தராமல். ரிமிந்தகன் அனைவரையும் ஆராய்கிறான். அனைவரையம் ஊடுருவிப் பார்க்கிறான். அனைவரின் உடலும் மனமும் அவனது அறுவைக் கூடத்து பலகையில் ஒன்று மாற்றி மற்றொன்றாக வைக்கப்பட அவன் அதை அறுத்து அறுத்து பிரித்து ஆராய்கிறான், சலிப்பில்லாமல், மிகமிக கவனத்தோடு அவன் இப்படியாகத் தொடர்ந்த செய்கைக்கு உட்பட்ட அனைவரையும் அவன் நினைத்ததைச் செய்து முடிக்கும் வரை தொடர்ந்தான். இறுதியாக எல்லா ஆராய்ச்சிகளும் முடிந்தபின் அசையாதிருக்கும் தம் கூட்டத்தினரைப் பார்த்து,

“இதோ, இந்த கானகத்தின் ஒரு பகுதியில் பல மிருகங்கள் ஒன்றுகூடி தினமும் ஏதோ பேசிக்கொள்கிறதாம். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் நீங்கள் நானாகவும் நான் நீங்களாகவும் மாறி இருந்திருப்போம். போகட்டும் ஒன்றும் அறியாத உங்களுடைய நல் வாழ்விற்காக நானே சொல்கிறேன்”, சிறிய ஒரு நிறுத்தத்திற்குப்பின் அவனே தொடர்கிறான்,

“உலகம் முழுவதும் அழிந்துவிட்டது. இனி உயிர் வாழ எந்த சாத்தியக்கூறும் இங்கே இல்லை.... நாம் அனைவரும் வேறொரு கிரகத்திற்குச் சென்று வாழ முயற்சிப்போம். அங்கே நம்மைத் தவிர வேறெந்த உயிரினமும் வரப்போவதில்லை. குறிப்பாக இந்த மனிதர்கள் அங்கே வரப்போவதில்லை.... நாம் மட்டும் அங்கே இருந்து நமது சந்ததியை வளர்த்துக்கொண்டு புதிய ஒரு உலகை ஏற்படுத்திக்கொள்வோம். ஏற்கனவே பனிநில நாட்டான் அந்நிலத்திற்கு அனுப்பிய நாயின் செய்தியொன்றை கேட்க நேர்ந்தது. அதுவாவது, ‘நான் வாழும் போதே உலகில் மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரும் வாழ முடியாத நிலை இருந்தது. ஆனால் மனிதர்கள் தம் மூளையினால் என்னை ஆராய்ச்சி செய்கிறேன் பேர்விழி என்ற பெயரில் முதலில் இந்த கிரகத்திற்குள் என்னை கொண்டு வந்து விட்டுவிட்டான். இங்கே நாம் வாழ்வதற்கான அற்புதமான சூழல் இருக்கிறது. ஆராய்ச்சிக்கு கொண்டு வந்து விட்டுவிட்டுப்போனவன், திரும்பி ஊருக்குள் போக முடியாமல் அண்டதிலேயே எங்கேயோ ஒரு கிரகத்திற்கு அருகாமமையில் வெடித்துச் சிதறி இறந்துவிட்டதாக அறிந்தேன். அதனால் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வருவதாக இருந்தால் எனக்கு 00330044008800110099 என்ற எண்ணை மனதில் பதின்மூன்று முறை சொல்லுங்கள், நான் உடனே உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துக்கொள்கிறேன்’ என்பது. இந்த எண்ணைக்கொண்டு நாம் இவர்களை இங்கே விட்டுவிட்டுச் சென்றுவிடுவோம் என்பதாகப் பேசிக்கொண்டன.

ரிமிந்தகன், தன் முன் இருப்பவர்களை ஆழமாக ஒரு பார்வைப்பார்த்துவிட்டு மீண்டும் தொடர்கிறான்,

“என்ன நான் சொன்னது. இதுபோல் மிருகங்களெல்லாம் பேசிக் கொள்வதைக்கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“நமக்கு எதிராக இதில் ஒன்றும் இல்லை. அவற்றிற்கு இங்கு வாழப் பிடிக்கவில்லையென்றால் எங்கு வாழப் பிடிக்கிறதோ அங்கே செல்லட்டுமே. அதில் என்ன தவறிருக்கிறது?”

“ஆம் தவறில்லை. அவையெல்லாம் நம்மைவிட்டுச் சென்றுவிட்டால் நாம் எப்படி வாழ்வது?”

“அவை இல்லாமல் வாழ்ந்துவிட்டுப்போவோம்”

“அவையில்லாமல் வாழ்வது கடினம். அவற்றின் இருப்பினால் தாம் நம்மால் வாழவே முடிகிறது”.

“அப்படியானால் அந்த நாயை நமது கிரகத்திற்குக் கொண்டு வந்துவிடுவோம்.”

“சரி. எப்படிக் கொண்டுவருவது.”

“எப்படியாவது.“

“அந்த எண்ணை நம்மில் யாராவது பதின்மூன்று முறைச் சொல்லி அங்கே சென்று அந்த நாயைக் கொன்றுவிடலாம்.”

“பிறகு?”

“பிறகென்ன நாய்தான் இறந்துவிட்டதே.”

“நாய் இறந்துவிட்டது. நாயைக் கொல்லச் சென்றவன்?”

“அவனையும் கொன்றுவிடுவோம்.”

“எப்படி?”

“அதே எண்ணை மீண்டும் பதின்மூன்று முறைச்சொல்லி...., இன்னொருவர் அந்தக் கிரகத்திற்குச் சென்று.”

“அவரும் தங்கிவிட்டால்.”

“நாம் அனைவரும் அங்கே செல்வோம் அவர்களை கொன்றுவிட்டு, மீண்டும் நமது உலகிற்குத் திரும்பிவிடுவோம்”.

“அப்படியானால் நமக்கு எதிரியொருவன் இருப்பதை உணர்கிறீர்கள்!”

“ஆமாம். நமக்கு எதிரானவன் எதிரி. நாய் எதிரி, இந்த மிருகங்கள் எதிரி, நாயைக் கொல்லாமல் அங்கேயே தங்கிவிட நினைக்கும் நம்மவனும் எதிரி.”

“ஆதலால்?”

“ஆதலால் நாம் இதற்கொரு திட்டத்தினைத் தீட்டுவோம். நமது எதிரியை அழிப்போம்.”

“நாயையா?”

“இல்லை.”

“இந்த காட்டு மிருகங்களையா?”

“இல்லை.”

“வேறு யார்? அங்கே அனுப்பப் போகிறவனையா அல்லது அனுப்பியபின் அங்கேயே தங்கி விடுபவனையா?”

“இல்லை.”

“யார்.”

“சொல்கிறேன்.”

“போருக்குத் தயாராகுங்கள். நமது எதிரியைக் கொன்றுவிட்டு நம் நிம்மதியை மீட்போம்.” என்று சொல்லிவிட்டு கிளையிலிருந்து இறங்கி போர்ப்பறையை அருகிலிருந்து ஒருவனிடம் கொடுத்துவிட்டு விடுவிடுவென அரண்மனை நோக்கி விரைந்தான்.

அவன் சென்ற திசையைப்பார்த்து மக்கள் ஒவ்வொருவரும் அவனைக் கேள்விக் கேட்பதாகவும், அவனையே தம் கேள்விக்கான பதிலாகவும் பார்த்துக் கேட்கின்றனர்.

“யார் அந்த எதிரி?”

“யார் அந்த எதிரி?”

“யார்?”

“யார்?”

“யார் அந்த எதிரி?”

முந்தைய அத்தியாயம்அடுத்த அத்தியாயம்

- அரியநாச்சி ([email protected])



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com